இராகுவும் கேதுவும்

திரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம்?

மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகைமை உண்டாயிற்று. இதனால் இருவருக்கும் எப்பொழுதுமே ஒத்துப் போகாது. கடுமையான யுத்தங்களும் ஏற்படும். தேவர்களுக்கு குரு பிரஹஸ்பதி . அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் . சுக்கிராச்சாரியார் சண்டையில் இறந்த அசுரர்களை தன்னிடமுள்ள சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் உயிர்ப்பித்து தேவர்களுக்கு இடையூறு செய்துவந்தார். தேவர்களின் குரு பிரஹஸ்பதியிடம் அப்படி ஒரு மந்திரம் இல்லை. இவ்வாறன சூழ்நிலையில் தேவர்கள் பிரஹஸ்பதி மகனாகிய கசனிடம், சுக்கிராசாரியாரும் அவர் மகளான தேவயானியும் மகிழ்வடையும் படி நடந்து கொண்டால் சஞ்சீவி மந்திரத்தை பெறுவது எளிது என்று கூறி சுக்கிராசாரியாரிடம் அனுப்பினர். அது வேறுகதை. அதுதான் மகா பாரதத்தின் தொடக்கம் .அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்கிடையில் தேவர்கள் சஞ்சீவி மந்திரம் வேண்டி பிரம்மனிடம் சென்றார்கள். பிரம்மன் தேவர்களிடம்,”உங்களுக்கு அந்த மந்திரத்தை விட அற்புதமான வழி ஒன்றுள்ளது அதைச் சொல்கிறேன்”என்றார்.தேவர்களும் சரி கூறுங்கள்,என்றனர். உங்கள் அனைவருக்கும் சாகா வரம் கிடைக்க திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் தேவாமிர்தம் கிடைக்கும் அதை உண்டால் சாகா வரம் தான் ஆகவே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

பாற்கடலை கடைவதற்கு நாரதரிடம் வழி கேட்டபோது," அதற்கு அசுர பலம் வேண்டுமே! ஆகவே நீங்கள் எம் பெருமான் திருமாலை பாற்க்கடலை கடைவதற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டு, அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு எம் பெருமான் உதவி செய்வார்" என்றார்.

தேவர்களும் அசுரர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதென்றும், அதனால் கிடைக்கும் அமுதத்தை இருவரும் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்தனர். நாகராஜன் எனப்படும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், , மேரு மலையை மத்தாகவும், அந்த மத்தாகிய மேரு மலையை தாங்கும் ஆதாரமாக (Fulcrum) இருக்க ஆமை வடிவெடுத்து தன் முதுகில் தாங்கி உதவுவதாகவும் திருமால் உறுதிஅளித்தார்.


ஒரு சுக்கில பட்ச (வளர்பிறை) தசமி திதி யன்று பாம்பின் வால் பக்கம் தேவர்களும் தலைப்பக்கம் அசுரர்களும் இருந்து கொண்டு கடைய ஆரம்பித்தனர். அவ்வாறு கடையும் பொழுது இலட்சுமி, ஐராவதம், காமதேனு, அட்சயபாத்திரம் ஆகியவை கிடைத்தன. அதில் இலட்சுமியை திருமாலும், மற்றவற்றை இந்திரனும் பங்கிட்டுக் கொண்டனர்.

இரண்டாவது நாளான ஏகாதசியன்று பாற்கடலில் நீல நிறத்தில் திரவ வடிவில் ஒரு பொருள்
தோன்றியது. அதனுடன் வாசுகி மெய்வருத்தம் மிகுதியால் உமிழ்ந்த. நஞ்சும் கலந்து இரண்டும் சேர்ந்து ஆலகாலமாகியது. அந்த விஷமானது கடலில் தோன்றியதால் முதலில் ஆமை வடிவில் இருந்த திருமாலைத் தாக்கியதால் நீல வண்ண மேனியனாக மாறிவிட்டான். அதைக்கண்டதும் நாரதர் ஏதோ பிளாக் மேட்டரைக் கண்டது போல், ஐயோ அது தான் ஆலகால விஷம் என்று அலறி ஓடினார்.

அது முழுவதுமாக வந்து எல்லோரையும் விரட்டி தாக்கத் தொடங்கியது. ஈஸ்வரனை இவர்கள் வலமாகச் சுற்றினால் விஷம் இடமாகச் சுற்றி விரட்டியது. இவர்கள் இடமாகச்சுற்றி ஓடினால் அது வலமாகச்சுற்றி விரட்டியது.ஆகவே இப்பொழுதே ஏதாவது செய்தாக வேண்டும். என்று அலறினார்கள். உடனே தேவர்கள் ஈஸ்வரனை வேண்டி நின்றனர்.அவரும் பரிவுடன் வந்து, ஆலகால விஷத்தை அப்படியே வாரியெடுத்து விழுங்கி........... விழுங்கவில்லை தொண்டை வரை சென்றவுடன் நிறுத்தி விட்டு முழித்தார். ஏனென்றால் அங்கு உமா மகேஷ்வரி விழியை உருட்டி, மிரட்டினார் அதானால் தான் நிறுத்திக் கொண்டார். மிரட்டியதோடு அல்லாமல் உனக்கு ஏனய்யா இந்த வீண் வேலை என்று கடிந்து கொண்டு விஷத்தை தொண்டைக்கு கீழே இறங்க விடாமல் கழுத்தை அழுத்தியதால் விஷமானது கழுத்து முழுவதும் பரவி நின்றது. நீலநிற ஆலகாலம் அந்த ஆலமர்ச் செல்வனை, தட்சிணாமூர்த்தியை ஏதும் செய்யமுடியாமல் கண்டத்தில் நின்றுவிட்டது. ஆகவே அன்று முதல் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.

ஒரு வழியாக தேவர்களும், அசுரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வேலையை தொடர்ந்தனர். துவாதசியன்று அமுதம் வெளிவந்தது. அமுதத்தை வாரியெடுத்து குடத்தில் வைத்தனர்.அமுதம் முழுவதும் எடுத்தபின்பு தேவர்கள் ஈஸ்வரனை மறந்து ஆட்டம் போட்டனர். ஆதலால் ஈஸ்வரன் அமுதம் கிடைக்காமல் போக சாபம் இட்டார். சாபத்தின் பலனாகத்தான் தேவர்களின் கையிலிருந்த அமுதக் குடத்தை சமயம் பார்த்து அசுரன் ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஒடி விட்டான். இதனால் தேவர்கள் தங்களது தவற்றை உணர்ந்து சாப விமோச்சனம் வேண்டி நின்றனர். அதனால் ஈஸ்வரன் ,”நாளை நான் நந்தி தேவனுடன் இருக்கும் போது என்னை வந்து தரிசனம் செய்யுங்கள் உங்கள் கவலை மறையும்” என்றார். மறுநாள் திரயோதசி அன்று தேவர்கள் ஈஸ்வரனை விஷேமாக வழிபட்டனர் அதைத்தான் பிரதோஷ வழிபாடு என்கிறார்கள்.

இந்த இடத்தில் பிர என்பதன் மகத்துவத்தை சொல்லியே ஆக வேண்டும். சவம் என்பதற்கு பிர போட்டால் பிரசவம், தோஷம் என்பதற்கு பிர போட்டால் பிரதோஷம் ஆக ”பிர” அதாவது "Bra"போட்டால் அர்த்தம் எதிர்மறை ஆகி, மோசமானது சிறப்பானதாகி விடுகிறது.

இப்பொழுது தேவர்கள் திருமாலை வேண்டி நின்றனர். திருமாலும் மோகினி வேடம் எடுத்து ஒரு வழியாக அசுரனிடம், தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் எனப் பேசி,.தானே பரிமாறு வதாகவும் கூறி அமுதத்தை, வாங்கிக் கொண்டு வந்தார். தேவர்களும் அசுரர்களும் இருபுறமாக அமர்ந்தனர்.

மோகினி வேடத்தில் இருக்கும் திருமால் தனது சக்கர ஆயுதத்தை கரண்டியாக மாற்றி அமுதம் பரிமாறிக் கொண்டிருந்தார். ஸ்வர்ணபானு என்ற அசுரன் தேவர்கள் நம்மை அமுதம் தராமல் ஏமாற்றி விட்டாலும் விடுவார்கள் என்ற பயத்தில் தேவராக உருமாறி தேவர்கள் வரிசையில் சூரிய சந்திரர்களுக்கு அருகில் உட்கார்ந்து விட்டான். உருமாறும் கலையாகிய மாயை அசுரர்களுக்கு கைவந்த கலைதானே. அமுதத்தையும் வாங்கி அருந்தி விட்டான். ஆனால் சூரிய சந்திரர்கள் ஸ்வர்ணபானுவை இவன் அசுரன் என திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர் . திருமாலும் தனது கையில் வைத்திருந்த சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை வெட்டியதால் தலை வேறு முண்டம் வேறாக வீழ்ந்தான்.

ஆனால் அமுதம் பருகிய காரணத்தினால் சாகா வரம் பெற்றதால் தலையும் உடலும்
தனித்தனியே உயிருடன் இருந்தது.திருமாலின் சக்ராயுதத்தால் வெட்டினால் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான் அதற்கு மாற்று கிடையாது.ஆகவே ஒட்டுவதற்கும் வாய்ப்பு கிடையாது. ஆனால் திருமாலின் பாற்கடலில் கடையப்பட்ட அமுதத்திற்கும் அதே மரியாதைதான். மரணமும் கிடையாது. இப்பொழுது அசுரனின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகி விட்டது.
அசுரன்(கள்) திருமாலிடம் சரணடைந்து தனக்கு விமோச்சனம் வேண்டி நின்றான்.திருமாலும் அண்டி வந்தவனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு பாம்பை அதே அமுதம் பரிமாறிய சக்ராயுதத்தால் இரண்டாக வெட்டி அசுரனின் தலைக்கு பாம்பின் உடலையும், பாம்பின் தலைக்கு அசுரனின் உடலையும் சேர்த்துக் கொள்ளுமாறு அருளினார். இங்கு அமுதத்தின் பலன் பாம்புக்கும் கிட்டியது.

ஒருவனாக இருந்த அசுரன் இருவராக மாறிவிட்டான். ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு ,கேது என சாகா வரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.இப்பொழுது அவர்கள் சூரிய சந்திரர்களை பழி வாங்கும் பொருட்டு தவம் இருந்தனர்.முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும் சூரியனையும் சந்திரனையும் விழுங்கு வதற்கான வரத்தைப் பெற்றனர்.

இதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் நீங்கள் வெளிவந்துவிடலாம் என்று அருளினார்.

ஆகவே அது முதல் அந்த அசுரன் இருவராக மாறி ராகு, கேது என இரு பெயர் பெற்றான். எப்பொழுது எல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுதெல்லாம் சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடு வார்கள். அந்த விளையாட்டுக்கு பெயர்தான் சூரிய, சந்திர கிரகணம். அமிழ்தத்தால் சாகா வரம் பெற்றதால் சூரிய சந்திர தேவர்களைப் போல் அசுரனாகிய ஸ்வரணபாணுவும் அழியாப் புகழ் பெற்றான்.

திரும்பவும் ஒருமுறை இந்தக்கதையை முதலில் இருந்து படியுங்கள்,இதில் ஏதாவது மாற்றி எழுதியிருந்தால் அந்த இடத்தை சுட்டிக் காண்பியுங்கள். ஏனென்றால் நான் இந்தக் கதையை செவி வழியாக கேட்டதுதான்.அதிலும் வானியல் அறிவு குறைந்தவர்களிடம் இருந்துதான் கேட்டது.ஆனாலும் இந்தக் கதையின் தோற்றம் கண்டிப்பாக 2000வருடங்களுக்கு முந்தியதாகத் தான் இருக்கும்.

இக்கதை பற்றிய உங்களது கருத்துக்களை பதியுங்கள் அதற்குப் பிறகு எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு இதன் இரண்டாவது பாகத்தையும் அதைப் பொறுத்து அதன் பிறகு மூன்றாவது பாகத்தையும் பதிக்கிறேன். ஆகவே உங்களது பொன்னான கருத்துக்களை அவசியம் பதிவு செய்யுங்கள்.


தமிழில் பதிவு செய்ய
NHM Writer என்று கூகிளில் தேடவும். அல்லது இந்த தொடர்பை சொடுக்கவும்.


 http://software.nhm.in/products/writer

இந்த மென்பொருளை தரவிறக்கம் ( Download ) செய்து உங்களது கணினியில் நிறுவவும் (install). நிறுவும் போது தமிழ் மொழியை தேர்வு செய்யவும். இப்பொழுது bell போன்ற ஒரு சின்னம் task barல் கடிகாரம் அமைந்துள்ள இடத்தில் தோன்றும். அதைச் சொடுக்கி அதில் தேர்வு செய்யலாம். அல்லது Alt + 1, Alt+2, Alt+3, Alt+4 என்று இதில் ஏதாவது ஒன்றை சொடுக்கி உங்கள் விருப்பமான கீபோர்டு முறையை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். மீண்டும் அதையே (Toggle)சொடுக்கினால் ஆங்கிலத்திற்கு மாறிவிடும்.


இரா.சந்திரசேகர்,
பழனி.
இரண்டாவது பாகம்

மேலும் படிக்க...!

தமிழில் தட்டச்சு செய்ய

தமிழில் தட்டச்சு செய்ய
புதியவர்கள் பலர் இந்த வலைப் பூவை படிக்கிறார்கள்.தமிழில் தங்களது கருத்துக்களை சொல்லத் துடிக்கிறார்கள். ஆனால் எவ்வாறு பதிவு செய்வது எனத் தெரியாமல் சென்று விடுகிறார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு.முயற்சி செய்யுங்கள்.தமிழில் நிறைய எழுதுங்கள்.பாராட்டுங்கள், மாற்றுக்கருத்துக்களை துணிவாக பதிவிடுங்கள்.கீழே கொடுக்கப் பட்ட வலைத்தள முகவரியில் சொடுக்கவும்.இந்த வலைத்தளத்திற்கு சென்றால் தமிழை எளிதாக 2 நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவலாம்.
http://software.nhm.in/products/writer
அல்லது NHM Writer என்று கூகிளில் தேடவும். அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து தமிழ் மொழியை தேர்வு செய்து நிறுவவும். ஐஸ் கேண்டி போன்ற ஒரு சின்னம் கடிகாரம் அமைந்துள்ள இடத்தில் தோன்றும். Alt + 1, Alt+2, Alt+3, Alt+4 என்று சொடுக்கி உங்கள் விருப்பமான கீபோர்டு முறையை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். Phonetic முறையிலும் தட்டச்சு செய்யலாம்
அப்படியே நீங்கள் நினைக்கும் தமிழை ஆங்கில கீ போர்டில் ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் எழுத்துக்கள் வந்து விடும்.

மீண்டும் ஆங்கிலத்தில் டைப் செய்ய, எளிதாக அதே பட்டன்களை( உ.ம் Alt+2) தட்டி மாறிவிடலாம்.
மேலும் படிக்க...!

ஆத்திகன் vs நாத்திகன்

இளமையில் எனது தந்தையும் நாத்திகர்தான். ஆதலால் நானும் நாத்திகன்தான். ஆனால் இப்பொழுது நான் யார் என்று உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால் முழுவதையும் ஒருமுறை படித்துவிட்டு நீங்களே முடிவு பன்னுங்கள்.
குரங்கிலிருந்து வந்த மனித இனத்தின் பரிணாமம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு மேலானது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளது அதில் சந்தேகம் வேண்டாம்.
தனி மனிதனது பரினாமம் அல்லது வளர்ச்சி என்பது அவனது அதிக பட்ச ஆயுள்காலாமாகிய 100 வருடங்களுக் குட்பட்டது. இதில் கடந்த காலங்களில் பெரிதும் மாற்றமில்லை. மனிதனது ஆயுளை இன்றைய காலத்திற்கு தகுந்தவாறு பல பருவங்களாக பிரிக்கலாம்.
குழந்தைப் பருவம்................................0 ---1வருடம்
(அறியாப் பருவம்)மழலைப்பருவம்.................1----5வருடம்
(நாத்திகப் பருவம்)பள்ளிப்பருவம்..................5---20 வருடம்
(சமூகப்பருவம்)வாலிபப்பருவம்............... 20---40 வருடம்
(ஆத்திகப்பருவம்)வயோதிகப்பருவம்...............40---60 வருடம்
முதுகிழப் பருவம்................................60---100 வருடம்
பருவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது மாற்றங்கள் என்பது தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நிகழ்ந்து கொண்டிருப்பது நன்கு தெரியும். ஆகவே அறிவும், உடலியல் மாற்றமும் அந்தந்த பருவத்திற் கேற்றவாறு பரிணமிப்பதைத்தான் சரியான வளர்ச்சி என்கிறோம். ஆனால் மனதில் ஏற்படும் மாற்றங்களால் பருவ மாற்றங்களில் சில வித்தியாசம் ஏற்படுவது உண்டு.
மேலே குறிபிட்டுள்ள பருவங்களில் பள்ளிப்பருவத்தை நாத்திகப் பருவம் என்று கூறுவதில் தவறு ஏதும் இல்லை எனச் சொல்லலாம்.
இந்தப் பருவத்தில் தான் மனிதன் கேட்கத் தெரிந்த, கேட்ககூடாத கேள்வி எல்லாம் கேட்டு பெற்றோரையும், மற்றவரையும் சிலசமயங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட நிறுத்துவர். அந்த கேள்விகளில் சில கீழ்கண்டவாறு இருக்கலாம்.

நான் எங்கிருந்து வந்தேன்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? அப்பா என்றால் யார் ? அம்மா என்றால் யார்?
கடவுள் யார்? எங்கிருக்கிறார்? ஏன் கும்பிடவேண்டும்?கடவுளைக்காட்டுங்கள்
செத்துப் போறது என்றால் என்ன? செத்து எங்கே போகிறார்கள்?
அப்பா நீ எப்ப செத்துப் போவாய்?
சிலர் வசதியாக, சிலர் ஆரோக்கியமாக, சிலர் ஊனமாக, சிலர் பிச்சைக்காரராக ஏன் இருக்கிறார்கள்?
பாவம் என்றால் என்ன?புண்ணியம் என்றால் என்ன? கடவுள் இருக்கிறாரா? எங்கு இருக்கிறார்?
இந்த மாதிரி வரையறுக்க முடியாத புதுமைகள், சமயத்தில் கோமாளித்தனம், நிறைந்த கேள்விகளாக இருக்கும்.

அவற்றில் மேற்கூறியவைகள் தான் கேட்கப் படுகின்ற கேள்விகளில் முக்கியமானவை ஆகிவிடுகின்றன. இந்தப் பருவத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் சரியான பதில் கிடைக்கிறதா என்பது வேறு விஷயம். ஏனென்றால் சிலருக்கு முதுகிழப் பருவத்தில் கூட பதில் கிடைக்கவில்லை. இப் பருவத்தை கடந்த முதியோர்கள் எல்லோரும் இப்பொழுதும் கூட ஒருவர்க்கொருவர் முரண்பாடான பதிலையே தான் கூறுகிறார்கள். சிறந்த கல்விமான்கள், அறிவியலார்கள் கூட இந்தக் கேள்விகளுக்கான பதிலில் வேறுபாடு கொள்வார்கள்.

நாத்திகர்கள் பெரிதும் நம்பும் பௌதிகவியலார்களும் அறுதியிட்டு கூறுவதில்லை. ஏன் அவர்கள் நம்பும் பௌதிகமும் சில விஷயங்களில் முட்டுச் சந்தில் நின்றுகொண்டு இன்னும் தெளிவான பதிலைக் கூற முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறது.

கேள்விக்கான பதில்கள் அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேடலும் விரிவாகிறது. பதில்கள் சில சமயங்களில் புதுப்பிக்கப் படுகிறது. பெரும்பாலோருக்கு கல்வி மற்றும் அனுபவத்தின் மூலம் பதில்கள் கிடைக்கிறது. சோதனை செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறரது அனுபவங்களாகிய கல்வியும் இங்கு கைகொடுப்பதற்கு பதில் மேலும் குழப்புகிறது.. அது மட்டுமில்லாமல் இது ஒரு என்றும் தீர்க்கப் படமுடியாத பிரச்னையாக பல்லாயிரம் வருடங்களாக இருக்கிறது.

கல்வியறிவில்லா பாமரர்களிடையேயும், அறிவியல் வித்தகர்களிடையேயும் ஆத்திகம், நாத்திகம் பேசும் இருபாலரும் உண்டு. ஆகவே நாத்திகம் பேசுபவர்கள் மட்டும் பகுத்தறிவு வாதி எனச் சொல்வதும் நகைப்புக்கு இடமானது. இதிலிருந்து ஒருவிஷயம் தெளிவாகிறது இன்னும் முடிவுக்கு வராத, வரமுடியாத விஷயம் இது என்று.

சராசரி மனிதன், வாலிபப் பருவம் அதாவது சமூகப் பருவமெட்டும் போது அதாவது பெரும்பாலும் வாழ்க்கையை தொடங்கும் போது கேள்வி கேட்பதை நிறுத்திக்கொள்கிறான். கிடைத்த அனுபவங்களை கொண்டு வாழ்ந்து பார்க்கத் தொடங்குகிறான். பதில் கிடைக்காத கேள்விகள் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

சோம்பேறிகளுக்கு கேள்விகள் இருக்கும் பதில் கிடைக்காது பதிலில் ஆர்வமும் இருக்காது.. முட்டாள்களுக்கு கேள்விகளே இருக்காது , பதிலைப் பற்றிய அக்கறையும் இருக்காது. ஆனால் முட்டாள்களும், சோம்பேறிகளும் பருவம் மாறினாலும் கேள்விகளை ஒதுக்கி வைக்காமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள் . ஆனால் புத்திசாலியோ பதில் கிடைக்காத கேள்விகளை ஒதுக்கி வைத்து மனதுக்குள் ஆராய்வார்கள், சரியான பதில் கிடைக்கும் வரை அமைதி காப்பார்கள்.

ஒரு ஐந்து வயதுச் சிறுவன் தன் தந்தையைப் பார்த்து அப்பா நீ எப்பொழுது சாவாய்? என்றுகேட்டால் தந்தை சிரித்துக் கொண்டே பதில் கூறலாம். இதே கேள்வியை பருவம் மாறிகேட்டால் விபரீதமாய் போய்விடும்.

இருபத்திஐந்து வயதில் ஒருவன் தன் தந்தையைப் பார்த்து இக்கேள்வியை கேட்டால் தந்தை சிரித்துக் கொண்டே பதில் கூறமுடியாது, சிந்தித்துத் தான் பதில் சோல்லவேண்டும்.
இந்த வயதில் இரண்டு விதமான பேர்தான் இக்கேள்வியைக் கேட்கமுடியும்.

1)மூளை வளர்ச்சியற்ற உடம்பால் வளர்ந்த இருபத்திஐந்து வயது இளைஞன் கேட்கலாம். தந்தை விதியை நொந்துகொண்டு சிரித்துக் கொள்ளலாம் அல்லது அழுது கொள்ளலாம்.

2)தந்தையின் உடமைகளையும் சொத்துக்களையும் முழுவதுமாக தானே அனுபவிக்க துடிக்கும் கொடூர எண்ணம் கொண்ட மகன் கேட்கலாம். இப்பொழுது தந்தை தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்று உயிரை விடவேண்டும் அல்லது சொத்துக்களையும் உடமைகளையும் துறக்க வேண்டும்.

கேள்வி ஒன்றுதான். ஆனால் கேட்கப்படும் பருவம் மாறும் போது அர்த்தம் மாறி விபரீதமாகி விடுகிறது.

நாற்பது வயதுக்கு மேல் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டு தீவிர நாத்திகம் பேசுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ மூளை வளர்ச்சியற்ற இந்த மாதிரி இளைஞன் தான் நினைவுக்கு வருகிறான் .

அது போன்று நாத்திகப் பருவத்தில் (பள்ளிப்பருவம்) நாத்திகம் பேசவில்லை என்றாலும் ஒருவனது மூளையைப் பற்றிய சந்தேகம் வரத்தான் செய்யும். நாத்திகம் என்பது மனித வாழ்க்கையில் ஆனோ,பெண்னோ இருவருக்கும் ஒரு பருவம்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தப்பருவம் கண்டிப்பாக வரவேண்டும். அந்தப் பருவத்தை கடந்து வந்தால் தான் மனிதன். ஆனால் அங்கேயே நின்றுவிட்டால் மூளை வளர்ச்சியற்றவன் தான். முறையாகப் பருவங்களை கடந்தால் தான் மனிதன். ஒரே எட்டில் 2,3 பருவங்களைத் தாண்டினாலும் பிஞ்சிலே பழுத்த கதையாகி விடும்.

குழந்தைகள் மழலை பேசினால் ரசிக்கலாம் ரசிக்கவேண்டும். ஏனென்றால் மழலை கேளாதவருக்குத் தான் யாழோ குழலோ இனிதாக இருக்கும் என்று வள்ளுவர் சொல்லியுள்ளார். ஆனால் வளர்ந்த மனிதன் மழலை பேசினால் அவனுக்கு உளறுவாயன் அல்லது ஊமையன் என்றுதான் பெயர்.

யார் நாத்திகன்?

கடவுளை நம்பாமல் கோவிலைப் பூட்டி வைப்பவன்.
கடவுளை நம்பாமல் மருத்துவமனைக்கு செல்பவர்கள்
கடவுளை நம்பாமல் சோதிடம் பார்ப்பவர்கள்
கடவுளை நம்பாமல் மூன்று வேளையும் சாப்பிடுபவர்கள்.
கடவுளை நம்பாமல் கடினமாக உழைப்பவர்கள்

இப்படி ஆராய்ந்தால் உலகத்தில் எல்லோருமே நாத்திகர்கள்தான், கடவுள் நம்பிக்கை யற்றவர்கள் தான். அல்லது கடவுளை வேறு மாதிரி நினைக்கத் தொடங்கி விட்டனர் அல்லது கடவுளைப் பற்றி தெளிவடைந்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் தெரியும், கும்பிட்டவுடன் கடவுள் நேரில் வந்து பதில் சொல்லமாட்டார் என்று, ஏனென்றால் எந்த பக்தரும் நான் கடவுளை நேரில் வரவழைக்கிறேன் என்று இது வரை சவால் விட்டதில்லை. கடவுளைப் பற்றிய வரையறையும் (definitions) ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டுகிறேன் என்றார், விவேகானந்தரும் பார்த்தார் அல்லது உணர்ந்து கொண்டேன் என்று சொன்னார் .இங்கு கடவுள் என்பது தனிநபர் மனநிலை சம்பந்தப்பட்டதாகி விடுகிறது. சராசரி மனிதன் தன் அன்றாட காரியங்கள் எதற்கும் கடவுளை நம்புவதில்லை என்பது கண்கூடு. ஆகவே அவனும் நாத்திகன் தான்.

இதற்குத்தான் சொல்வார்கள் ” மசூதிக்குள் செல்லும் முன் ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு செல்” என்றும் ”கோவிலுக்கு செல்லுமுன் செருப்பை பத்திரப் படுத்து” என்றும். ஆகவே உலகத்தில் நூற்றுக்கு நூறு சதவீத மக்கள் நாத்திகர்கள் தான். ஆனால் இந்த உளுத்துப்போன நாத்திக வாதத்தால் கால விரயமும், சமூக ஒழுக்கக் கேடும் தான் மிச்சம் என்பது இந்த சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதை அறியாமல் சிலர் நாத்திகத்தை இவர்கள் தான் (Reinventing the wheel) சக்கரத்தை புதிதாக கண்டுபிடித்த அறிவாளிகள் போல் மேடையில் பேசும் போதும், எழுதும் போதும் சிரிப்புத் தான் வருகிறது.

மனிதர்களின் சிறு வயதில் நேர்மையை விதைத்து, அதன் மூலம் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும், கேளிக்கை, திருவிழாக்களுக்கும் தான் இன்றைய மனிதன் கடவுளை பயன் படுத்துகிறார்கள் என்ற உன்மை புரியாமல் இவர்கள் ரொம்ப சீரியஸா பேசுவதைப் பார்க்கும் போது இவர்களின் பேதைமை புரியும். உலகத்திலே இதற்கு ஒரு கட்சி வைத்திருப்பவன் தமிழனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டான். இந்துமத நாத்திக வாதிகள் என்ற போர்வையில் பிறமதத்தவர், இந்துமதத்தை ஒழிக்க நாத்திகவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் அல்லது நாத்திகம் பேசுபவர்களை ஆதரிக்கிறார்கள்.

நாத்திகர்களின் சதவீதம் சுதந்திர மக்களாட்சித் தத்துவத்தில் என்றுமே 5 சதவீதத்திற்கு மேல் செல்வதற்கு வழியும் வாய்ப்பும் இல்லை. அதிலும் அந்த ஐந்து சதவீதத்தில் 90 சதவீதம் 15 லிருந்து 20 வயதுடை யோரின் ஆர்வக் கோளாறும் அறிவுப் பசியும்தான் காரணம். அதனால் தான் மதவாத அடிப்படை அரசுகள் எளிதாக நாத்திகத்தை ஒழித்துக் கட்டி விடுகிறார்கள். இதனால்தான் இந்தப் பகுத்தறிவு வாதிகள் அரசியலுக்கு வர முடியவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் வந்ததற்கு காரணம் அண்ணாவின் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற பசப்பு வார்த்தையும் அதற்கு எம்.ஜிஆர் கொடுத்த திரையுலக அழுத்தமுமே காரணம் ஆகும். இஸ்லாமிய நாடுகளில் நாத்திகம் பேசமுடியாது, கிடையாது.ஏனென்றால் அங்கு அது தேசத் துரோகம்

எனக்குத் தெரிந்தவர்களில் தீவிர நாத்திகர்கள் உட்பட 99 சதவீதத்தினர் அதாவது பகுத்தறிவு வாதிகள் கூட ஒரு காலகட்டத்தில் நாத்திக வாதத்தை நழுவ விட்டு சமூகச் சடங்குகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சமூகப் பொறுப்புள்ளவர்கள் யாரும் நாத்திகர்களாக இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் ஆத்திக வழியில் சென்று தங்களது பங்கை செவ்வனே செய்கிறார்கள்.

வயதான காலத்திலும் தீவிரமாக நாத்திகம் பேசுபவர்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1) பிழைப்புக்கும் புகழுக்கும் அது வழியாக இருக்கவேண்டும்.

2)வாழ்க்கையின் முழு விஸ்தீரனங்களையும் சந்திக்காதவராகவும் இன்ப துன்பங்களை முழுமையாக அனுபவிக்காதவராக இருக்க வேண்டும். வாழ்வியலின் நுனிப்புல் மேய்ந்தவராகத்தான் இருக்கமுடியும்

3) சமூக அக்கறையில்லாத அரை வேக்காட்டுத்தனமான அறிவுடையவர்களாக இருக்கவேண்டும்.

4) மூளை வளர்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டும்.

ஆத்திகம் பேசுபவர்களையும் வகைப்படுத்த முடியாது ஏனெனில் இவர்களில் 90% பேரின் வாழ்க்கை முறையாகி சமூக ஏற்புடையதாகி விட்டது ஆத்திகம் தான்

மனிதனை விலங்கிலிருந்து வேறு படுத்துவது கடவுளைப்பற்றிய கேள்வியும் அறிவும் தான். ஏனென்றால் விலங்குகள் அனைத்தும் நாத்திகவாதிகள்தான். மனிதன் கடவுளை படைத்தாக கூறுகிறவர்கள் அறிவிலிகள். கடவுளைப் படைக்கவில்லை, மாறாக அறிந்து கொண்டான் அல்லது அவனைப் பற்றிய சந்தேகம் கொண்டான், அதனால் தான் மனிதன் ஆனான்.

” முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை
முதல் இடை கடை நம் வசத்திலில்லை.”

என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க வாழ்க்கை என்பது நமது கையில் இல்லை என்பது கண்கூடு
நீங்கள் ஏற்கனவே உங்களது திட்டப்படி இங்கு வந்து பிறக்கவில்லை. உங்களை நீங்கள் அறிந்து கொள்ளவே மிகக் குறைந்த பட்சமாக இருபது வருடங்கள் தேவைப்படும். எதற்கு வந்தோம், ஏன் வந்தோம்,எங்கு செல்வோம் எனத் தெரியாத நிலையில் பாதி வாழ்க்கையை கழித்துவிட்டு மீதி வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தெரியாமலும் எங்கு சொல்வோம்? எப்பொழுது செல்வோம்? எப்படி செல்வோம்? என்று அறியாத நிலையில் எல்லாம் அறிந்தவர் போல் எது வேண்டுமானாலும் பேசுவது அறியாமையின் உச்ச நிலை அல்லவா?

ஆறுகோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஒப்பாரிதான் வைக்க முடிந்தது. நம்மால் ஏதும் செய்யமுடியவில்லை என்கிற போது வருகிற கண்மூடித்தனமான ஆத்திரத்திற்கு யார் பொறுப்பு? நீங்களா? நானா? அதற்குப் பெயரோ அல்லது காரணமோ கூட கடவுளாக இருக்கலாம்.

கணிதவியலில் தீர்வு காணப் பயன்படுவது X ஆகும். ஆனால் X க்கும் கணிதத்திற்கும் சம்பந்தமில்லை ஆனால் தீர்வைத் தருவது X. எப்படி என்று பார்ப்போம். கணக்கில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படியுங்கள். ஆர்வம் இல்லாதவர்களும் படியுங்கள் எளிய முறைக் கணிதம் தான்.

மூன்று பேர் சேர்ந்து மீன் பிடிக்கிறார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு மடத்தில் களைப்பில் பிடித்த மீன்களை வைத்து விட்டு சற்று கண்ணயர்ந்தனர்.சற்று நேரத்தில் ஒருவன் எழுந்தான் இருட்டில் இருந்த மீன்களை நேர்மையாக மூன்றாகப் பிரித்தான் ஒருமீன் மிச்சமானது அதை தூக்கி எறிந்து விட்டு தனக்கு சேரவேண்டிய ஒரு பங்கை எடுத்துக் கொண்டுஅவர்கள் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணி சென்று விட்டான். அடுத்து எழுந்தவனும் முன்னவனைப் போல் இருந்த மீன்களை நேர்மையாக மூன்றாகப் பிரித்து மிச்சமான ஒரு மீனை தூக்கி எறிந்து விட்டு தனது பங்கை எடுத்துக் கொண்டுஅவர்கள் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணி சென்றுவிட்டான் . அதை போன்று மூன்றாமவனும் இருந்த மீன்களை நேர்மையாக மூன்றாகப் பிரித்து மிச்சமான ஒரு மீனை தூக்கி எறிந்து விட்டு தனது பங்கை எடுத்து கொண்டுஅவர்கள் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணி சென்றுவிட்டான்.

மொத்தத்தில் அவர்கள் மூவரும் பிடித்த மீன்கள் எவ்வளவு? அதை ஒரு எளிய முறையில் கணக்கிடுவோம்

மூவரும் பிடித்த மொத்த மீன்கள் = X எனக் கொள்வோம்.

அதில் ஒரு மீனைதூக்கி எறிகிறார் = X-1

முதலாமவருக்கு கிடைத்தது, அதில் மூன்றில் ஒரு பங்கு = (X-1)/3

முதலாமவர் விட்டுச் சென்றது தனது பங்கைப் போல் 2 மடங்கு =2*(X-1)/3 = (2X-2)/3

இரண்டாமவர் அதில் ஒரு மீனைதூக்கி எறிகிறார் ={(2X-2)/3}-1 = (2X-5)/3

இரண்டாமவருக்கு கிடைத்தது, அதில் மூன்றில் ஒரு பங்கு = {(2X-5)/3}/3= (2X-5)/9

இரண்டாமவர் விட்டுச் சென்றது தனது பங்கைப் போல் 2 மடங்கு= 2{(2x-5)/9}= (4X-10)/9

மூன்றமவர் அதில் ஒரு மீனைதூக்கி எறிகிறார் = {(4X-10)/9}-1 = (4X-19)/9

மூன்றமவருக்கு கிடைத்தது, அதில் மூன்றில் ஒரு பங்கு (Y)= {(4X-19)/9}/3 = (4X-19)/27


மூன்றாமவருக்கு கிடைத்ததை "Y " எனக் கொண்டால் ஒரு சமன் பாடு கிடைக்கும்
அதாவது Y =(4X-19)/27
அதை இவ்வாறும் எழுதலாம். 4X = 19 +27Y அல்லது X= (19+27Y)/4

இங்கு இந்தச் சமன்பாட்டை பார்க்கும் போது இரண்டுவிஷயங்கள் தெரியவருகிறது,Y என்பது ஒற்றைப்படை எண் என்பதும்,(ஏனெனில் அதை 27 ஆல் பெருக்கி அதனுடன் 19ஐ கூட்டினால் அது 4ஆல் வகுபடத்தக்க இரட்டை படை எண்ணாக இருக்க வேண்டும் என்பதால்) .எண் வரிசையில் சிறிய ஒற்றைப் படை எண் ஆன 1 பிரதியிட்டால் இங்கு செல்லாது ஏனென்றால் 4 ஆல் வகுபடாது. ஆனால் அந்த வரிசையின் அடுத்த எண் 3 ஐப் பிரதியிட்டால் சரியாகிவிட்டது கணக்கின் விடை வந்து விட்டது.

முதலாமவர் எடுத்துச் சென்றது 8
இரண்டாமவர் எடுத்துச்சென்றது 5
மூன்றமவர் எடுத்துச்சென்றது 3
மூன்று பேரும் தூக்கி எறிந்தது 3
மிச்சம் உள்ளது 6
மூவரும் பிடித்த மொத்த மீன்கள் 25

சரி இப்பொழுது அடுத்த ஒற்றைப்படை எண்ணான 5 ஐ பிரதியிட்டால் என்ன? 4ஆல் வகுபடவில்லை அதற்கு அடுத்த ஒற்றைப்படை எண்ணான 7 ஐ பிரதியிட்டால் என்ன? ஆஹா! இன்னொரு விடை கிடைத்துள்ளது, 52. சரி இப்படி எத்தனை விடைகள் வரும். 3,7,11,15,...................என நான்கின் வித்தியாசத்தில் வரும் வரிசை எண்கள் அணைத்தும் விடையைக் கொடுக்கும். அதற்கும் ஒரு சமன்பாடு உருவாக்கலாம்.
Y = (3+a4) என்ற சமன் பாட்டில் a க்கு பதிலாக 1,2,3,4,5,6. ........... ............ என வரிசையாக எத்தனை எண்களை பிரதியிட்டாலும் Y க்கான மதிப்பு கிடைக்கும். இந்த மதிப்பை X= (19+27Y)/4 இதில் பிரதியிட்டால் X இன் மதிப்பாக கணக்கிலடங்கா விடைகள் வரும்!!.

இங்கு குறிப்பிட்டது போல் X இன் அனுமானத்தின் கற்பனையால் எண்ணிலடங்கா விடைகள் கிடைக்கிறது. உங்களது கற்பனையிலோ அல்லது பேப்பரிலோ இந்த X இன் அனுமானம் இல்லாவிடில் ஒரு விடைக்கே உங்களது தாவு தீர்ந்துவிடும். கணிதம் வெறுத்துவிடும். உங்களைச் சுற்றி புதிர்கள் தொக்கி நிற்கும்.
ஆகவே உங்களது தீர்வுகளுக்கு கடவுளைப் பயன் படுத்துங்கள். ஆத்திகம் மனதிற்குள் நம்பிக்கையை விதைத்து வாழ்க்கையை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிகபட்ச நேர்மையாளர்களுக்கு வழி வகுக்கிறது. நாத்திகம் மனதிற்குள் விரக்தியை உருவாக்கி வாழ்க்கையை சீரழிக்கக்கூடியது. அதிகபட்ச மனிதர்களை நேர்மை யற்றவனாக்குகிறது.
பேச வேண்டிய வயதில் நாத்திகம் பேசுங்கள். பருவம் மாறி பேசாதீர்கள் பைத்தியம் என்பார்கள். உங்கள் நாத்திகவாதத்தை இருபத்திஐந்து வயதிற்குள் மூட்டை கட்டி விடுங்கள்.ஏனென்றால் அதற்கு மேலும் பேசினால் ஒரு விஷயத்திற்கு தீர்வு கண்டு பிடிக்க முடியாத முட்டாள் எனக் கருதப் படுவீர்கள்.

நாத்திகம் என்பது A.K 47 போன்றது.ஆத்திகம் கைத்தடி போன்றது.
A.K 47 சீருடை அணிந்தவரிடம் (ராணுவத்தினரிடம்) இருக்கும் வரை மற்றவர்களுக்குப் பாதுகாப்பு. தீவிரவாதிகளிடம் (வயிறு வளர்க்கும் கூட்டத்திடம்)சிக்கினால் நாட்டுக்கும் தனிமனிதனுக்கும் ஆபத்து. A.K 47 வைத்துக் கொண்டால் தூக்கம் வராது ஏனென்றால் அசந்தால் நமக்கே எமனாகி விடும். வயதும், தோட்டாக்களும் இருக்கும் வரைதான் அது பயன் படும். வயதான காலத்தில் ஊன்றி நடக்க கூட பயன்படாது. ஆகவே தனி மனிதனுக்கு தேவையில்லாத ஒன்று. A.K 47 வைத்துக் கொள்வது சமூக விரோதச் செயல்,சமூக விரோதியாய் அடையாளம் கொள்ளப் படாதீர்கள்.

கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.

மேலும் படிக்க...!
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்

எனக்கு ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்கள் வலைப் பதிவுகள் ஏன் கறுப்புக்கலரில் இருக்கிறது. கறுப்புதான் உங்களுக்கு பிடித்த கலரா? என்று. கறுப்பை ஒரு கலர் என்றே கருதமாட்டேன் ஆனாலும் ஒரு காரணமாகத்தான் வைத்துள்ளேன்.
உங்களது மானிட்டரில் முழுத்திரையும் வெண்மையாக இருந்தால் மானிட்டர் அதன் 100% மின் சக்தி செலவில் வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திரையில் முழுவதும் கறுப்பு வண்ணம் இருந்தால் 30% மின்சாரம்தான் செலவாகும். உங்கள் திரையில் வெண்மை வந்தால் உங்கள் பைசா அதிகமாகச் செலவாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த எளிய முறையை பின் பற்றி ஆப்ரேட்டிங் சிஸ்டம், மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதிலும் குறிப்பாக மைக்ரோசஃப்ட், தங்களது தயாரிப்பு பயன் படுத்தப் படும் பொழுது உதாரணமாக MS Office,MS Word,எக்ஸ்புளோரர், பிரவுசர், கூகுள் சர்ச்,ஒர்குட், ஃப்பேஸ்புக், டிவிட்டர்,G-mail,hotmail,Yahoo, மற்றும் பிரபல் வெப்சைட்டுகளின் ஹோம்பேஜ், ஸ்டாண்ட் பை மோட் ஆகியவற்றிற்கு அதிகமாக கறுப்புத்திரை அமையுமாறு பார்த்துக் கொண்டால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வாட்ஸ் மின்சாரம் மிச்சமாகும்.மேலும் மானிட்டரின் ஆயுளும் கூடும். கண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது மின் தடை ஏற்படுகிறது. இப்பொழுது உங்கள் கணினி, யுபிஎஸ்சில் உள்ள மின்சாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது. யு பி எஸ் புதிதாக இருந்தால் 15 நிமிடமும், பழசாகி விட்டால் 5 நிமிடமும் வேலை செய்யும். என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு 30% மினசாரம் மிச்சப் படுகிறது. 15 நிமிடம் வேலை செய்யும் யுபிஎஸ் என்னுடைய பதிவை படிக்கும் போது கூடுதலாக 5 நிமிடங்கள் படிக்கும் வரை வேலை செய்யும்.

என்னுடைய வலைப்பதிவிற்கு நீங்கள் வருவதால் உங்களுக்கு என்னால் ஆன சிறு உதவி, எப்பொழுதும் உங்களது மின் செலவில் 30% மிச்சம் ஆகும். ஆகவே தவறாது அடிக்கடி வாருங்கள்

மேலும் படிக்க...!
பூகம்பம்

”பூகம்பத்தைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை திறந்தவெளியில் இருக்கும் வரை”

உலகில் பூகம்பம் ஏற்படும் நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் கொண்டு இது வரை ஏற்பட்ட பூகம்பங்களை கணக்கிட்டு மூன்று முக்கிய பூகம்பப் பகுதிகள் அடையாளம் கண்டுள்ளனர்.இங்குதான் இது வரை ஏற்பட்ட பூகம்பங்களில் 99% நடந்துள்ளன.

1) சர்கம் பசிபிக் சீஸ்மிக் பெல்ட் 81%
2) ஆல்பைட் பெல்ட் 17%
3)மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் 1%


1) சர்கம் பசிபிக் சீஸ்மிக் பெல்ட்

தென் அமெரிக்காவின் தென் முனை தொடங்கி மேற்கு கரை யோர நாடுகளான சிலி, பெரு ஆகியவை வழியாக வட அமெரிகாவின் மெக்சிகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கலி போர்ணியா,அலாஸ்கா வழியாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியுகினியா, நியூஜிலாந்து, ஆகிய நாடுகளை கடந்து ஆஸ்திரேலியாவில் முடிவடைகிறது. இந்த பெல்ட்டில்தான் 81% பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மெக்சிகோ, அமெரிக்கா, ஜப்பான், ஆகிய முன்னேறிய நாடுகள் நவீன தொழில் நுட்ப உதவியுடனும், மக்களின் விழிப்புணர்வுடனும் சேர்ந்து பூகம்பத்தை எதிர் கொள்கிறார்கள். வானாளவிய கட்டிடங்கள் எதிர்ப்பு சக்தியுடன் கட்டப்பட்டுள்ளன. இங்கு பூகம்ப விழிப்புணர்வு அதிகம்.



2) ஆல்பைட் பெல்ட்

ஜாவா சுமத்ரா தீவுகளில் தொடங்கி சீனா வழியாக இந்தியாவின் அஸ்ஸாம், பூடான்,நேபாளம் ,பீகார், டெல்லி, குஜராத், (கட்ச்ரன்) ,பாகிஸ்தான், ஈரான், துருக்கி, வழியாக மத்திய தரைக் கடலில் முடிவடைகிறது. இங்கு 17% பூகம்பங்கள் ஏற்படுகிறது. இந்த பெல்ட்டில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் பூகம்ப விழிப்புணர்வு குறைவு. ஆதலால் உயிர்ச் சேதம் அதிகம்.


3) மிட் அட்லாண்டிக் ரிட்ஜ்

இது அட்லாண்டிக் கடலில் முழுவதுமாக உள்ளதால் இதனால் பாதிப்பு ஏதுமில்லை.

அளவு

பூகம்பத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் குறிப்பிடப் படுகிறது. இதன் ஒரு எண்ணிக்கை கூடுதல் என்பது 10 மடங்கு அதிக அதிர்வும் 30 மடங்கு அதிக சக்தியுடனும் இருக்கும். இதுவரை உலகில் அதிக பட்சமாக பதிவானது 9.5 ரிக்டர் ஆகும்.

பூமி பந்தானது ஒரு உடைந்த முட்டைக்கு ஒப்பாக உள்ளது. பூமியின் மையத்திலிருந்து 3500 கி.மீ அளவுக்கு உருகிய மாக்மா என்னும் குழம்பும் அதன் மீது முட்டை ஓடுகளைப் போல் மிதக்கும் பூமித்தகடுகளும் கொண்டதுதான் பூமி. பூமியின் மேற்பரப்பு இது சுமார் 70 கி.மீ ஆழம் கொண்டது.இது கிட்டதட்ட 12 தட்டையான தகடுகளால் ஆனது. இந்த தகடுகளின் மாறுபட்ட இயக்கங்களால் பூகம்பம் மற்றும் எரிமலை ஏற்படுகிறது. தகடுகளின் இடை வெளியில் எரிமலை வெடிக்கிறது.

இந்தியத் தகடு என்னும் இந்தியப் பகுதியின் பயணம் தென் ஆப்ரிக்காவின் அருகிலிருந்து தொடங்கி ஆசியக் கண்டத்தை முட்டி மோதி தொடர்வதால் தான் இமயமலை உருவாகி, வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியத் தகட்டின் வேகம் வருடத்திற்கு 5 செ.மீ என்ற கணக்கில் உள்ளது. இதன் மோதலால் ஏற்படும் அதிர்வுகள் வெளிப்படும் இடங்களே பூகம்ப மையங்கள் எனப் படுகிறது. இந்த தகடு ஆசியாவில் மோதி பல்லாயிர்க் கணக்கான வருடங்கள் ஆனாலும் அதன் இயக்க வேகம் இன்னும் குறைய வில்லை.

நாடு

பூகம்பம் இந்தியாவிற்கோ அதன் மாநிலமான குஜராத்திற்கோ புதியது அல்ல.1935 ஆம் வருடத்திய நில அதிர்வு சர்வேப் படி பூகம்பம் தாக்க அதிக வாய்ப்புள்ள பகுதி குஜராத்திலுள்ள கட்ச்ரன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 1994ல் ஐ.நா வின் திட்டத்திற் கிணங்க மத்திய நகர்ப் புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழில் நுட்ப முன்னேற்ற கவுன்சில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கை சீற்ற ஆபத்து பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தியது. இதன் முடிவுகள் 1998ல் வல்னரபிலிட்டி அட்லஸ் ஆப் இந்தியா என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்டது. நாட்டின் வெவ்வேறு கட்டுமானங்களால் ஏற்படும் ஆபத்துகளை அது விவரித்து ஒவ்வொரு பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நுட்பங்கள், விதிமுறைகள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கான பரிந்துரைகள் இதில் அடங்கியுள்ளன். வேறு எந்தநாட்டிற்கும் இப்படியொரு மேப் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மாநிலம் குறித்தும் இரு சிறு தொகுதி நூலகள் அந்தந்த அரசுகளுக்கு அனுப்பபட்டன. இது வரை ஒரு மாநிலம் கூட இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

குஜராத்தின் கட்ச் பகுதி பூகம்ப மேப்பின் V Zone என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (அதாவது அதிக தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதி). டில்லி, மும்பை, மற்றும் பல நகரங்கள் இந்த ஆல்பைட் பெல்ட்டில் உள்ளது என்னும் உன்மை பயங்கரமாக உள்ளது. வட இந்தியாவில் இமய மலைப் பகுதியில் 300 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனிடையே 20 வருடங்களுக்கு ஒரு முறை 8 ரிக்டர் அளவுள்ள பூகம்பம்மும் ஏற்படும் என்றும் கூறப் படுகிறது. வட இந்தியாவில் கங்கைச் சமவெளிப் பகுதியில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வேண்டிய காலக் கெடு கடந்து விட்டதால் அது எந்நேரமும் ஏற்படலாம் என்று கொலடாரோ யுனிவர்சிட்டியின் பேராசிரியர் டாக்டர் ரோஜர் பில்காம் கூறியுள்ளார். மேலும் அதன் அதிர்வு 7.8 லிருந்து 8.3 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ஏற்படுவதால் அதன் அழிவும் பெரிதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

கட்ச் பகுதியில் வந்த பூகம்பம் முன் அறிவிப்போடுதான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24 ஆம் தேதி கட்ச்ரன் பகுதியில் 4.3 அளவுள்ள பூகம்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து புவனேஸ்வரிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டது. காந்தி நகரில் வாழும் நிபுணர் பி.என் நாயரின் குரலுக்கு செவி மடுத்து ஒரு சில கோடி செலவிட்டு ஒரு நில அதிர்வு சர்வே நடத்தியிருந்தால் இன்றைக்கு ஏற்பட்ட விலை மதிப்பற்ற உயிர்ச் சேதத்தையும் பொருள் இழப்பையும் தவிர்த்திருக்கலாம்.

பூகம்பம் ஒரு போதும் மக்களை கொல்வதில்லை. மோசமான கட்டிடங்கள் தான் கொல்கின்றன. பாதுகாப்பு சட்டங்களை அமலாக்க மக்களிடையெ விழிப்புணர்வு தேவை. அரசாங்கத்தின் கடமையும் , மக்களின் உணர்வும் மங்கும் போது இயற்கையின் சீற்றம் உயிர்ச் சேதமாய் உணரப் படுகிறது. அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் மக்கள் தங்கள் சமாதிகளை தாங்களே கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. கட்ச் பகுதியில் இரண்டு மாடி கட்டிடங்களுக்கு மேல் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. மக்கள் செவி சாய்க்கவில்லை, அரசாங்கம் வலியுறுத்தவில்லை, விதி விடவில்லை.

1906 ல் காங்க்ரா 20000 பேர் 8.0 R
1930 ல் துப்ரி 100 பேர் 7.1 R
1934 ல் பீகார் 14000 பேர் 8.3 R
1950 ல் அஸ்ஸாம் 1500 பேர் 8.6 R
1958 ல் அஞ்சார் 115 பேர் 7.0 R
1967 ல் கொய்னா 200 பேர் 6.7 R
1988 ல் பீகார் 1005 பேர் 6.6 R
1991 ல் உத்தரகாசி 215 பேர் 6.6 R
1993 ல் லாக்தூர் 10000 பேர் 6.3 R
1999 ல் சாமோலி 105 பேர் 6.8 R
2001 ல் புஜ் 1,00,000 பேர் 6.9 R

உலகின் மிகப் பெரிய பூகம்பம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி சீனாவில் ஏற்பட்டது. இதன் அளவு 9.5 R. இந்த பூகம்பத்தில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் இரண்டு நிமிடங்களில் உயிர் இழந்தனர்.

வீடு

பூகம்பத்தால் ஏற்படும் உயிரிழப்பிற்கு வீடுகளே காரணம்.ஆகவே வீட்டை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நில நடுக்கத்தால் மூன்று வெவ்வேறு திசைகளில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் கட்டிடங்கள் தாறுமாறாக ஆடுவதால் விழுகிறது.ஆகவே வலுவான கான்கிரீட் தூண்களும், அஸ்திவாரமும் முக்கியம். சுவர்களும் கான்கிரீட் அமைப்புடன் பின்னப் பட்டிருக்க வேண்டும். அடுக்கு மாடி கட்டிடங்கள் பூகம்ப பகுதியில் கட்டக் கூடாது. கட்டிடங்கள் நடுவில் எடை கூடியும் ஓரங்களில் எடை குறைவாகவும் உள்ள முறையில் கட்டப் பட வேண்டும். சுத்தமான ஜியோமிதி வடிவ முறையில் (சதுரம், செவ்வகம், முக்கோணம் ) உள்ள கட்டிடங்கள் அதிச்சியை தாங்கக் கூடியவை. துருத்திய வடிவங்கள், ஒழுங்கற்ற வடிவஙகள், அஸ்திவாரமில்லாத இணைப்புகள் பூகம்பத்தால் அதிகம் பாதிப்படையும். வீடுகளின் வாசல்கள் எளிதான முறையில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விரைந்து வந்து சேரக் கூடியதாக இருக்க வேண்டும்.

மக்கள்

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. நமது வசிப்பிடத்தின் பூகோள ரீதியான பாதிப்புகளை தெரிந்து நீர், காற்று, நெருப்பு, பூகம்பம் ஆகியவற்றால் பாதிக்காதவாறு வீட்டை அமைக்க வேண்டும். திறமையான என்ஞீனியரின் மேற்ப் பார்வையில் வீட்டை கட்ட வேண்டும். பூகம்ப அறிகுறிகள் ஏற்பட்டால் மினசாரம், தண்ணீர் கேஸ் ஆகியவற்றை நிறுத்தி விட வேண்டும். செல்லப் பிராணிகளின் விநோத நடவடிக்கைகளை கூர்ந்து கவணிக்க வேண்டும்

தமிழகத்தில் திருப்பூர் அருகில் பூலாத்தூரில் உள்ள நிபுணர் டி.எஸ் ஆனந்தன் என்பவர், “ நான் பூகம்பத்தை பற்றி குறந்தபட்சம் 2 மணி நேரத்திற்கும் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு முன்பும் அது எங்கே ஏற்பட போகிறது என்று அறிவிப்பேன்” என்று சவால் விடுகிறாரே. அவரது கூற்றில் உள்ள உன்மையை அரசு ஆராய்ந்து அறிந்து பயன் படுத்த முன்வர வேண்டும்.இன்னொரு பேரழிவு ஏற்படாதிருக்க பாடு படுவோம்.

பழனி போட்டோ கிளப்பிற்காக,
கட்டுரையாளர்:
திரு ஆர் சந்திரசேகர்
விக்னேஸ் ஸ்டூடியோ,
பழனி.





இந்தக் கட்டுரை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்காக நிவாரண நிதி திரட்டும் முகமாக பழனியில் 2001ல் போட்டோ கிளப்பினர் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது வந்திருந்த மக்களுக்கு பூகம்ப விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அளிக்கப் பட்ட செய்திக்குறிப்பு.



மேலும் படிக்க...!
ஆண்டவன் பெருவெடிப்பை உருவாக்கி, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளை என்ன நேர்ந்தாலும் இதில் தலையிடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். பெரிய மேகத்துகள்கள் நட்சத்திரங்களாகவும், சிறிய துகள்கள் முதலில் திரவங்களாகவும் பின் கிரகங்களாகவும் மாறி அவற்றில் புல், புழு, பூண்டு உருவாகி பின்னர் மிருகம், மனிதன் எனத் தோற்றம் கொண்டனர். மனிதன் பேசக் கற்றுக் கொண்டான், பேசும் மொழி பல்லாயிரமாயின. கூட்டம் சேர்த்தான் கோட்டைப் போட்டான், நாட்டைக் குறித்தான். நாட்டை விரிவாக்க சன்டையிட்டான்.சாப்பிட்டான் ,மகிழ்ந்தான், மடிந்தான். இதுதான் எங்கும் நடந்தது. கடவுளும் தான் நினைத்தபடியே எல்லாம் நடப்பதால் வேண்டுதல் வேண்டாமை இன்றி வேடிக்கை பார்த்தான்.

அவ்வாறிருக்கும் போது ஃப்ற்றுளி ஆற்றின் கரையிலும்,அங்கு வாழும் மக்களாகிய தமிழரும் தன் அமைப்பில் (System)இருந்து மாறுபடுவது போல தோன்றியது. தான் செய்ய வேண்டிய வேலைகளை தமிழன் செய்வதை அறிந்து திடுக்கிட்டான்.

அறம் பாடி அல்லவை செய்கிறான்
மறம் பாடி வெற்றியைப் பறிக்கிறான்
கலம்பகம் பாடி கல்லறை கட்டுகிறான்
வெண்பா பாடி வெட்டியமரத்தை வளர்க்கிறான்
அகமும் புறமும் பாடி மகிழ்கிறான்.
எழுதிய ஓலையை தூக்கிஎறிந்து
நீரோட்டத்தை எதிர்த்து செல்லவைக்கிறான்
இயற்கையை வென்று தமிழன்
இருக்கையை கைப்பற்ற பார்க்கிறானா?

என்று கடவுள் இவனைக் கவனிக்க ஆரம்பித்து காரணத்தைக் கண்டுபிடித்தார். ஆகா இவன் எழுதும் பாட்டில் உள்ள யாப்பிலக்கணம் தான் இத்தனைக்கும் காரணமோ என ஆய்ந்து அதையும் கற்றுத் தெளிந்தார் . யாப்பிலக்கணம் , பிரச்னையை போர்வையாய் போர்த்து தூங்குபவர்களுக்குதான் ஒரு சவால் சோம்பேறிகளுக்கும் முட்டாள்களுக்கும் அல்ல. புத்திசாலிகளை வம்புக்கு இழுக்கும். புத்திசாலிகளுக்கு வைக்கப் படும் பொறி. கடவுளை விட்டு விடுமா? சுடோகு கட்ட பைத்தியக்காரன் கட்டம் கிடைத்தால் அதை தீர்க்காமல் தூங்கமாட்டான் அது போல் ஆண்டவனுக்கு இப் பொழுது ஆசை வந்து விட்டது கவிதை பாட. கவிதை நன்றாகவே வந்தது. தன் திறமையை யாரிடமாவது காட்ட வேண்டுமே. எங்கு போவான் தமிழனை விட்டால் இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் அவனது கவிதையை மதிப்பிட ஆள் ஏது?.

இந்தச் சூழ்நிலையில் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை தீர்க்க புலவர்களுக்கு அழைப்பு விடப் பட்டது.கடவுளுக்கு பொறிதட்டியது. ஆனால் பிர்ச்னையும் உள்ளது. தான் படைத்த மனிதனிடம் போய் கவிதை பாடி பரிசு பெறுவதா? தோற்று விட்டால் என்ன செய்வது. (கடவுளுக்கே இந்த நிலை என்றால் தமிழின் பெருமையை என்ன சொல்வது). ஆசை எல்லாவற்றையும் வென்றது.

கங்கணத்தை கழற்றி எறிந்தார். அவர் ஏற்படுத்திய விதியை (இப்பதிவின் இரண்டாவது வரியைப் பார்க்கவும்)அவரே மீறி அவரது அமைப்பினுள் நுழைந்தார். தருமியின் வேண்டுகோளை ஏற்று அவனிடம் தனது கவிதையை கொடுத்து நோட்டம் பார்க்கும் முகமாக மன்னனிடம் அனுப்பினார்.தருமியின் (கடவுளின்)பாடல் தமிழ்ச்சங்கத்தில் ஆராயப் பட்டு பொருள் குற்றம் உள்ளதாக அறிவிக்கப் பட்டது.இதைக் கேட்டு அவதிப் பட்ட கடவுள் ஆத்திரத்துடன் நேரடியாக களமிறங்கி கவிதைபாடி பொருள் கூறினார்.

”கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே ”

தேனை ஆராய்ந்து சேர்க்கும் வாழ்க்கையுடைய அழகிய சிறகையுடைய தும்பியே,நான் கடவுள் காரணத்தால் பட்சபாதம் இல்லாமல் நேரே தெரிந்ததை உள்ளவாறே சொல்வாயாக. மயில் போன்ற சாயலும், பொருந்திய பற்களும் கொண்ட கற்புடை மங்கையின் கூந்தலைவிட நறுமனம் கொண்ட மலர்கள் நீ அறிந்தவைகளில் உளவோ.
என்றார்

ஆனாலும் நக்கீரர் ,”பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான நறுமனம் கிடையவே கிடையாது ஆகவே பொருள் குற்றம் உள்ளது.’என்றார்.

ஆண்டவர் உடனே கிடைத்த சந்தர்பத்தை பயன் படுத்தி தனது கவித் திறமையால் நேரடியாக தாக்க ஆரம்பித்தார்.

”அங்கம் வளர்க்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச்- சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்”

(தன் உடலை வளர்ப்பதற்கு வாளில் நெய்தடவி இரண்டு கால்களையும் விரித்து அமர்ந்து சங்கை அறுக்கும் கீரனோ என் பாட்டில் குறை சொல்பவன்.)ஆனால் இந்தமுறை கடவுள் தேறிவிட்டார். பாட்டில் குற்றமில்லை. ஏனென்றால் நக்கீரரே கவிதையால் கடவுளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

”சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரர்க்கு அங்கு எது குலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ-- சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி”

(சங்கை அறுத்து வாழ்வது எங்கள் குலம்,ஆனால் சிவனுக்கு குலம் ஏது. உள்ள குறையைப் பொருத்தமாகச் சொன்னால் அது தவறாகுமோ?. நாங்கள் தொழில் செய்து வாழ்கிறோம் ஆனால் சிவனைப் (உன்னைப்)போல் யாசித்து உண்டு வாழ மாட்டோம். )

எவ்வளவுதான் பொறுப்பது. தமிழைப் பழகிக் கொண்டு, ஒரு மானிடப்பதர் எல்லாம் வல்ல தன்னைப் பார்த்து இப்படி கேட்கலாமா. தன்னை உணரவில்லையோ என்று தனது நெற்றிக் கண்ணைத் திறந்து காண்பித்தார். அவர் அதற்கும் அசரவில்லை என்ன சொல்லி இருப்பார் என்று பச்சை குழந்தைக்கூட தெரியும் என்பதால் விட்டுவிட்டேன்.ஆனால் கடவுள் விடவில்லை எரித்தேவிட்டார்.

பின்னர் தனது தவற்றை உணர்ந்து நக்கீரனை உயிர்ப்பித்து ”உம் தமிழோடு விளையாட வந்தோம் ”என்று அசடு வழிந்தார்.

ஆனாலும் மனதுக்குள் ”தமிழையும், தமிழனையும் கி.பி. இருபதாம் நூற்றாண்டில் கவணித்துக் கொள்கிறேன்” என்று கருவிக் கொண்டு சென்றார்.

கடவுள் யாப்பிலக்கணத்தை மட்டும் படித்து விட்டு கம்ப்யூட்டர் கவிதை எழுவது போல் எழுதிவிட்டு புலமை காட்ட, பொருளை மறந்து, தமிழ்ப் புலவன் முன் கையறு நிலை அடைந்த கதை யாப்பிலக்கணத்தின் பெருமையையும் தமிழின் சிறப்பையும் கூறும்.
நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது .அடுத்த தலைப்பு ”ஆண்டவன் வைத்த ஆப்பு”என்றுதான் இருக்கும் என்கிறீர்களா. அவ்வளவு சீக்கிரம் சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டுக்கு வரமாட்டேன்.

மேலும் படிக்க...!
என்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் ,Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP) என்பது வலைத்தளம் ( இண்டர்னெட் )சம்பந்தப் பட்டது. வலைத்தளம், கணினி (கம்ப்யூட்டர்) சம்பந்தப்பட்டது. கணினி பைனரி சம்பந்தப்பட்டது. பைனரி மின்சாரம் சம்பந்தப்பட்டது. மின்சாரத்தைப் பற்றி நமக்குத் தெரியும்.மின்சாரத்தில் இரண்டு நிலைகள் உள்ளன அவை ஆன் (on)அல்லது ஆப்( Off ) .இந்த இரு நிலைகளை வைத்து தான் கணினிக்கு எண்கணிதம் போதிக்கப்பட்டது. நமக்கு கையில் பத்து விரல்கள் உள்ளதால் தான் நாம் பத்தை அடிப்படையாக கொண்ட தசம எண்முறையை (Decimal)கையாள்கிறோம்.

மினசாரத்திற்கு I,(on)O (off) என இரண்டு நிலைகள் உள்ளதால் இரண்டை அடிப்படையாகக் கொண்ட பைனரி முறையை கையாள்கிறது. இந்த இரண்டே எண்களை வைத்து எவ்வளவு பெரிய எண்களையும் எளிதாகவும் விரைவாகவும் எழுத முடிகிறது.எண்கள், எழுத்துக்கள், படங்கள் ஆகியவை எல்லாமே எண்களாக மாற்றப் பட்டு எண்கள் பைனரியாக மாற்றப் பட்டு அவைகள் கணக்கிட ,எழுத, வாசிக்க, வரைய, பத்திரப் படுத்த கம்ப்யூட்டரால் பயன் படுத்தப் படுகிறது. இந்த பைனரி எண்களைத்தான் டிஜிட்டல் என்கிறோம். தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த டிஜிட்டல் சிக்னல் தான் பயன் படுகிறது. இந்த டிஜிட்டல் சிக்னல் கம்பி அல்லது கம்பி இல்லா முறையில் உலகின் பல இடங்களுக்கும் அலைபரப்பப் படுகிறது. இந்த தகவல் பரிமாற்ற முறையை ஒழுங்கு படுத்துவதுதான் TCP/IP

தகவல் பரிமாற்றத்தின் ஆரம்ப நிலையை ஆராய்ந்தால் இது மார்க்கோனியின் ரேடியோ தந்தியின் மூலம் மோர்ஸின் குறியீட்டு முறையை பயன் படுத்தி தகவல்கள் அனுப்ப பட்டு வந்தது. அதிலும் இரண்டு ஒலி நிலைகள் குறுகிய ஒலி, நீள் ஒலி ஆகிய இரண்டையும் பயன் படுத்தி செய்திகளை வெகுதொலைவுகளுக்கு அனுப்பினர்.

அவ்வாறு அனுப்பும் போது ஒரு வார்த்தை அனுப்பி முடித்தபின் பெற்றுக் கொண்டவர் Roger என்ற வார்த்தையின் முதலெழுத்தாகிய “R ”என்ற ஆங்கில எழுத்தை அனுப்புவார்கள்.அதாவது. அந்த வார்த்தையின் விளக்கம் இதுதான் "Roger" means "I have received all of the last transmission" அதாவது”நீங்கள் அனுப்பிய கடைசிச் செய்தியை முழுவதுமாக பெற்றுக் கொண்டேன் ” என்று அர்த்தம். இவரிடம் இருந்து இந்த “R ”என்ற சிக்னல் கிடைத்தபின் தான் அடுத்த வார்த்தையை அனுப்புவார். இல்லாவிட்டால் ஏற்கனவே அனுப்பியதையே மீண்டும் அனுப்புவார். இதனால் தகவல் பரிமாற்றம் முழு உத்திரவாதத்துடன் நடைபெறுகிறது.

இதே போன்ற ஒருமுறைதான் இன்றைய இண்டர்னெட் தகவல் பரிமாற்றத்திற்கு பயன் படுகிறது.ஏனென்றால் நமக்கு வேண்டிய தகவல் எங்கோ ஒரு மூலையில் இருந்தும், பல சர்வர்களில் இருந்தும், பல தளங்களை கடந்து நமது கணினிக்கு வருவதற்குள் தகவல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.அதிலும் இந்த பைனரி எண்களுக்கான சிக்னல்கள் எளிதில் தொலைந்து போக வாய்ப்புள்ளதால் அனுப்பிய தகவல் இலக்கு நோக்கி சரியாக சென்றடைந்ததா என உறுதி செய்வதற்கான ஏற்பாடுதான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP). இதனால் தகவலின் அழியாத் தன்மை நிலைநாட்டப் படுகிறது.

மேலோட்டமான விளக்கம் தருகிறேன்.நமக்கு வரவேண்டிய தகவல்கள் எழுத்து, எண்கள், படம் ,ஆகியவை எண்களாக மாற்றப் பட்டு தொடர்ச்சியாக நமக்கு அனுப்பப் படுகிறது. அவ்வாறு அனுப்பப்படு முன் இந்த எண்கள் முதலில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அனுப்பப் படுகிறது.குறிப்பிட்ட சிறு கால (மைக்ரோ செகண்டுகளில்) இடைவெளியிலுள்ள பைனரிகளை சேர்த்து சிறு (பொட்டலங்களாக)பாக்கெட்டுகளாகவும் அந்த பாக்கெட்டில் உள்ள மொத்த எண்களின் கூட்டுத்தொகையும் கடைசியில் அந்த பொட்டலங்களுடன் அனுப்படுகிறது.

உதாரணமாக Tamil என்ற வார்த்தை அனுப்பப் படுவதாகக் கொள்வோம் .இந்த எழுத்துக்களின் பைனரி வடிவம் முறையே 84,97,109,105,108. ஆகவே 84,97,109,105,108,என்ற எண்கள் அனுப்பப் பட்டு , இவைகளின் கூட்டுத்தொகையான 503 என்ற எண்ணும் அதனுடன் அனுப்பப் படுகிறது. இங்கு அந்த தகவலை பெறும் இடத்தில் அந்த பொட்டலங்களில் உள்ள எண்கள் ஒவ்வொன்றும் சரிபார்க்கப் பட்டு பின்னர் அவற்றின் கூட்டுத்தோகையும் கணக்கிடப் பட்டு அந்த பொட்டலங்களுடன் வந்த கூட்டுத்தொகை எண்ணுடன் ஒப்பிடப் பட்டு சரிபார்க்கப் படுகிறது. சரிபார்த்தவுடன் ஒப்புதல் சிகனல் அனுப்பப் பட்டு அடுத்த தகவல் பெறத் தயாராகுகிறது.

இதில் எந்த இடத்தில் தவறு ஏற்பட்டாலும் தவறு என்று செய்தி வந்துவிடும் நிலைத்த முழுமையான தகவல் பரிமாற்றத்திற்கு உத்திரவாதம் தான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP).


யாப்பிலக்கணம்.

இப்பொழுது யாப்பிலக்கணம் பற்றி மேலோட்டமாக அறிவோம்
சங்ககாலப் பாடல்களை ஆய்ந்து பார்க்கும் போது, போற போக்கில் செய்யுள் எழுத முடியாது என்பது புரியும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே செய்யுள் படைக்க யாப்பிலக்கணம் கற்றறிந்து இருக்க வேண்டுமென த் தெரியவருகிறது.

தமிழில் கவிதை பாட யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.யாப்பிலக்கணம் என்றால் என்ன? அது பற்றிய ஒரு உரையாடலைக் கேட்போம். இதில் புலவர் என்ன பாடல் வகை எனக் கேட்க புரவலர் “வெண்பா” என்று சொன்னவுடன் உரையாடல் முற்றுப் பெற வேண்டும் ஆனாலும் புலவர், புரவலரை சோதனை செய்யும் முகமாக உரையாடல் தொடர்கிறது.


புரவலர் : புலவரே ஒரு கவிதை பாடுங்கள்
புலவர்: வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா, மருட்பா,நூற்பா, இதில் எந்தவகையில் பாட?
புரவலர் : வென்பா வகையில் பாடுக
புலவர்:எதுகையும் மோனையும் கலக்கவா?
புரவலர் : ஆமாம் தொடையில்லா பாட்டுக்கு கண்டிப்பாகத் தடைதான்
புலவர்:அடிக்கு எத்தனை சீர்?
புரவலர் : அளவடி, நாச்சீர்
புலவர்:சீர்க்கு என்ன தளையிட?
புரவலர் : வெண்சீர்வெண்டளை, இயற்சீர்வெண்டளை
புலவர்:சீர்க்கு எத்தனை அசை வைக்க?
புரவலர் : மூவசைச்சீர்
புலவர் பாடினார், பொருள் பெற்றார்.

இங்கு குறிப்பிட்டுள்ள யாப்பிலக்கண உறுப்புக்களை பற்றி மேலோட்டமாகப் பார்ப்போம்.

எழுத்து , அசை, சீர், தளை, அடி ,தொடை

நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும்.

எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள்.
இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.

ஒரு அடியில்(வரியில்) எத்தனை சீர்கள் (வார்த்தைகள்)அமையலாம், அந்தசீர்களை இணைக்கும் தளை என்ன வகையாக இருக்கவேண்டும்.என்ன மாதிரியான சீர்கள் வேண்டுமோ அதற்கு தகுந்த அசைகள், அசைகளுக்கு தகுந்த எழுத்துக்கள், மற்றும் எதுகை மோனையை சேர்க்கபடும் விதத்தால் என்ன மாதிரியான தொடை என இவை அணைத்தும் சேர்ந்து அது என்ன பாவினம் என்பதை தீர்மானிக்கிறது.

கேட்கப்படும் பா வகைக்கு தகுந்தமாதிரி இத்தனை விஷயங்களையும் சரியாக இணைத்து சரியான இடத்தில் பொருத்தி அம்மென்றால் ஆயிரமும் ,இம்மென்றால் எண்ணூறும் பாடவல்ல தமிழனின் அறிவை எடுத்துறைக்க இயலுமோ. இன்றைய ஐ.க்யூ சோதனையில் முதலிடம் வகிப்பவர்கள் புலவர்கள்தான் என்றும் கூறுகிறார்கள். இது தமிழ்ப் புலவர்களைப் பற்றிய வரை உன்மைதானென விளங்குகிறது. யாப்பிலக்கணக்கம் புத்திசாலிகளை மட்டும் வடிகட்டி புலமைக்கு அனுப்புகிறது. அதனால்தான் மன்னன் முன் நின்றும் ஆணவத்தோடு புலவர்கள் பேசினார்கள். மன்னனும் அவர்களது திறமை கண்டு வியந்து பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தான்..அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தான்.

இனிய ஓசை நயம் அமைந்த பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல் அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம் தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத் தொடங்கினர். கவிதைகளுக்கு ஒரு அமரத்துவம் ஏற்பட்டு விடுகிறது.

அது மட்டுமின்றி எழுத்தோலை, அதிகம் புழக்கத்தில் இல்லாத காலத்தில் வாய்மொழிப் பாட்டாக கவிதை, செய்யுள் பாடப்பட்டதால் அதை ஒருவர் கேட்டு மற்றவர்க்கு சொல்லும் போது வார்த்தைகள் மாறி பொருள் மாறிவிடும் போக்கு நிலவியது. இதைத் தடுப்பதற்கு தமிழனின் சிந்தனையில் ஏற்பட்ட முறைதான் "யாப்பிலக்கணம்”.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தகவல் பரிமாற்றம் என்பது தலைமுறைகளுக்கிடையில் கவிதை முறையில் மனப்பாடமாக தான் எடுத்துச் செல்லப் பட்டது. அவ்வாறு மனப்பாடமாக கொண்டு செல்லும் கவிதையில் வார்த்தைகளை சேர்க்கவோ, மாற்ற முடியாத ஒரு உன்னதமான ஏற்பாடு தான் யாப்பிலக்கணம் என்பது மறுக்க முடியாத உன்மை.இதன் மறு பெயர்தான் Transmission Control Protocol (TCP)

யாப்பிலக்கணம் - TCP/IP
எழுத்து - ASCII Equalents
அசை - பைனரி
சீர் - பாக்கெட்டுகள் (பொட்டலங்கள்)
அடி - பாக்கெட் எண்
தளை - கூட்டுத்தொகை எண்
தொடை - Not available
பாவினம் - file format (Text, Jpeg, Mpeg,)

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட வள்ளூவரின் குறளில் வார்த்தையை சேர்க்கவோ மாற்ற முடியாது அப்படி ஏதும் நடந்தால் எளிதாக கண்டு பிடித்து விடலாம். இதுதான் யாப்பிலக்கணத்தின் பெருமை.

வெண்பாவின் இலக்கணத்தைப் பார்ப்போம்

1).ஈற்றடி முச்சீரடியாகவும் (கடைசி வரியில் மூன்று வார்த்தைகளும்)
2)ஏனைய அடி நாற்சீரடியாகவும் பெற்று (ஏனைய வரிகளில் நான்கு வார்த்தைகளும் )
3) காய்ச்சீரும் (வார்த்தையில் எழுத்துக்கள் அமையும் முறை)
4)அகவற்சீரும் ,(வார்த்தையில் எழுத்துக்கள் அமையும் முறை)
5)வெண்சீர் வெண்டளையும், (வார்த்தைகளை இணைக்கும் தளை)
6)இயற்சீர் வெண்டளையுங் கொண்டு (வார்த்தைகளை இணைக்கும் தளை)
7)மற்றைச் சீருந்தளையும் பெறாது
8)செப்பலோசை பெற்று
9)காசு-பிறப்பு-நாள்-மலர் என்னும் வார்த்தைகளின் அசை அமைப்பு கொண்டு கடைசி வார்த்தை முடிவது வெண்பா எனப் படும்.

இப்ப சொல்லுங்க இத்தனை விஷயங்களை மனதில் வைத்து , கொடுத்த பொருளுக்கு தகுந்தாற்ப் போல் வெண்பா பாடறது எவ்வளவு சிரமம். ஆனாலும் நமது தமிழ்ப் புலவர்கள் இதில் போட்டி போட்டுக்கொண்டு சரமாரியாக கவிதை பாடிய வரலாற்றைக் கேட்கும் போது அவர்களின் அறிவுத் திறனை எப்படித்தான் பாராட்டுவது.

ஆனால் இன்றைய தமிழன் அறிவின் பரிணாமப் படிக்கட்டுகளில் ஏற மறுத்து விட்டு இறங்கிக் கொண்டிருக்கிறான்.

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)

என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு யாப்பிலக்கணத்துக்கு சமாதி கட்டிவிட்ட அதிமேத்தாவிகளை தமிழினத்துரோகி என்றுதான் கூறவேண்டும். ஏன் அதை ”உரைநடை ஆளுமை ” அல்லது ”’எழுத்தாண்மை” அல்லது ”கருத்தாண்மை “, “வசன நடை”என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.ஆனால் தயவு செய்து கவிதை என்று மட்டும் சொல்லாதீர்கள் .அது யாப்பிலக்கணம் படைத்த தமிழனுக்கு இழுக்கு.

மதிகெட்டுப் போனதை ஒத்துக் கொள்ளாமல் மரபுக் கவிதைகளை பழித்துவிட்டு மக்கள் கவிதை , புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டு பொருளற்ற முறையில் அர்த்தமற்ற வார்த்தைகளைப் போட்டு, ஒற்றை சொற்களை ஓசை நயமின்றி அடுக்கடுக்காக அடுக்கி விட்டு கவிதை என்று சட்டையை தூக்கி விட்டுக் கொள்பவர்களை என்ன செய்வது. அவர்களின் காதை அறுக்க வில்லிபுத்தூராரைத்தான் கூப்பிடவேண்டும்.

வில்லிபுத்தூரார் யார் என்று கேட்கிறிர்களா.அவருடன் போட்டியிட்டு தப்பான பாடல் பாடினால் அவரது காதை அறுக்க கையில் தொரட்டியுடன் அலைபவர். வில்லிபாரதம் என்ற பெயரில் கம்பனுக்கு இணையாக மகாபாரதம் பாடியவர். ஆனால் ஏனோ பெயர் வாங்க முடியவில்லை. அவருடைய செருக்கு அழிந்த கதையை படிப்போம். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர்.


அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

சொற்போர்க் களம் ஒன்று அமைக்கப்பட்டது. அடிகளார் நூறு பாக்கள் கொண்ட நூல் ஒன்று பாடுவதென்றும், அதற்கு வில்லிபுத்தூரார் உரைகூற வேண்டுமென்றும் எப்பாட்டிற்கேனும் உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்து விழித்தால் அவர் தோற்றதாக முடிவு செய்து அவர் காதினை அறுத்து விடுதென்றும், அவ்வாறன்றி எல்லாப் பாடல்கட்கும் உரை கூறிவிட்டால் அடிகள் தோற்றதாகக் கொண்டு, அடிகளின் காதைக் கொய்து விடுவதென்றம் முடிவு செய்யப்பட்டது. தக்கார் சிலர் நடுநிலையாளராக அமர்த்தப் பெற்றனர். ஒருவர் காதில் மற்றெருவர் தொரட்டியை மாட்டி தயாராக இருந்தனர்.

அடிகளார் "கந்தரமந்தாதி" என்னும் நூலைப் பாடத் தொடங்கினார். அது யமகங்களால் ஆகியது. யமகம் என்பது யாது? முதல் அடியில் வந்த தொடரே மற்ற அடிகளிலும் வந்து வேறு பொருள் தருவது. அந் நூற்பாடல்களுக்கு வில்லிபுத்தூரார் உரை கூறத் தொடங்கினார். ஐம்பத்து மூன்று பாடல்கள் வரை முடிவு பெற்றன. வில்லிபுத்தூராரும் கல்வியில் வல்லவரேயென்பதை யுணர்ந்த அடிகள் ஐம்பத்து நான்காவது பாடலைத் தகரவருக்கப் பாட்டாகப் பாடினார்.

பாடலைப் பார்ப்போம்:

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

எனப் பாடலைப் பாடினார்.

வில்லிபுத்தூரார் இது பாட்டு அன்று என்றும், வாய்க்கு வந்தபடி கூறியது என்றும், தாம் அதனை ஒப்புக்கொள்ள இயலாதென்றும், வீண் சொற்போரில் இறங்கினார். அருணகிரிநாத அடிகள், "இஃது இலக்கண முறைப்படி பொருளமைதியுடன் பாடப்பெற்ற பாட்டு" என்றார். அடிகளாரே இப் பாட்டிற்குப் பொருத்தமான, திருத்தமான உரை கூறிவிடின் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளவும் காதை இழக்கவும் உடன்படுவதாக வில்லிபுத்தூராரும் உரைத்தார். அடிகளார் இப்பாடலுக்குப் பொருள் விரித்துரைத்தார். கூறிய பொருள் அமைதியுடையதாக இருந்தது. வில்லிபுத்தூரார் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். நடுநிலைமையாளரும், வில்லிபுத்தூரார் தோற்றார், என்று முடிவு கூறினார்கள்.

இதன் பொருளை இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்.

அவ்வளவில் வில்லிபுத்தூரார் எழுந்து தம் தோட்டியை அடிகள் முன் நீட்டி, இத் தோட்டியால் என் செவியினை அறுத்துவிடலாம் என்றார். அடிகள் அத் தோட்டியைத் தம் கையில் வாங்கி, "ஒருவருக்கு ஒரு காதைக் கொடுக்கும் ஆற்றல் நம்மிடம் உண்டா? அவ்வாறாக, ஒருவருடைய காதை அறுப்பது எவ்வாறு நேர்மையுடையதாகும். அவ்வாறு செய்வது இறைவன் திருவுளப் பாங்கிற்கு ஏற்றதன்று. இன்று நாம் உமக்கு உம்முடைய காதினை அறப் பொருளாக வழங்குகின்றோம். இனி, இத்தொழில் ஈடுபடாது ஒழிவீராக" என்று கூறி அத் தோட்டியினை வீசி எறிந்தார்.

அடிகளின் இத்தகைய பெருந்தன்மையைப் பார்த்து அக் காலத்து அறிஞர் ஒருவர்,

காசுக்குக் கம்பன் கருணைக் குஅருணகிரி
ஆசுக்குக் காளமுகில் ஆவனே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங்கு ஔவை எனக் கூறு

என்றார்


செங்கோல் , சிம்மாசனம் ,பல்லக்கு, தேர்கள், சேனை, பவனி இவையெல்லாம் அனுபவிக்க இருந்தும் தமிழன் ”கால்நடை”யாய் நடப்பேன் என்று கூறினால் இவனை மறை கழன்றவன் அல்லது தகுதியில்லாத தற்குறி என்றுதானே கூற வேண்டும்.


தமிழா நீ கவிதை பாட வேண்டுமென்றால் யாப்பிலக்கணத்தின் ஏதாவது ஒரு பண்பையாவது பயன் படுத்து, உனது கவிதையில்.உதாரணமாக ஈற்றடி முச்சீராகவும் மற்றைய மூன்று அடிகளும் நாச்சீராகவும் உள்ள எளிய பண்பை பயன்படுத்தி கவிதை எழுதுங்கள். பின்னர் ”அசை ”போடுங்கள். ”தளை ”தானாகவே வந்துவிடும். பின்பு போட்டிக்கு ”தொடை”யை தட்டி கூப்பிடுங்கள்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவனால் முடியும் போது உங்களால் முடியாதா? யாராலும் கவிதை பாட முடியும் என்பதை நிரூபிக்க கம்பன் தன் வீட்டு வேலைக்காரி, தட்டான். கருமான், வண்ணான், அம்பட்டையன் ஆகிய அனைவரையும் கவிதை பாடவைத்தான்.அவர்கள் பாடிய பாடலை பின்னர் பார்ப்போம். இதனால் தான் ”கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்” என்றார்கள்.அந்த கட்டுத்தறியிலும் கேவலமானவனா இன்றையத் தமிழன்.

ஆகவே தமிழ் மேல் ஆர்வம் உள்ள கவிஞர்களே வாழ்க்கையில் ஒரு வெண்பாவாவது இலக்கணத்தமிழில் பாடுங்கள்.

இன்னும் வரும்...................

மேலும் படிக்க...!
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன் கண்ணா? என்று கண்ணதாசனும் இந்த கேள்வியை கேட்டார் ஆனால் பதில் சொல்லாமல் விட்டு விட்டார்.அதற்கான பதிலைத்தான் சர் சி.வி.இராமன் கண்டு பிடித்தார்.

ஒளியானது சக்திச் செலவின்றி எவ்வளவு தூரமும் செல்லும் என்றும் எத்தனை முறையும் பிரதிபலிக்கும் என்றும் நிலை நாட்டப்பட்ட சித்தாந்த்தத்தை முதன் முதலில் தவிடு பொடியாக்கினார் சர்.சி.வி.இராமன்.

ஒவ்வொரு பிரதிபலிப்பிலும் ஒளி அத்தளத்தின் மீது மோதுவதால் ஒளிக்கு சக்தி இழப்பு ஏற்படுகிறது.இந்த சக்தி இழப்பு அலை நீளத்தில் சரிக்கட்டப் படுகிறது. அதனால் ஒளியின் அலைநீளம் ஒரு நுண்ணிய அளவில் குறைந்து நிறமாற்றம் பெறுகிறது. அதாவது நீல நிறத்தை நோக்கிய மாற்றம் ஏற்படுகிறது.கடைசியில் பிரதிபலிப்புகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நீலமாக மாறுகிறது.இதுதான் இராமனின் விளைவு.

இதனால்தான் வானம் ,கடல் ஆகியவை நீலமாகத் தெரிகிறது.

இந்த கண்டுபிடிப்பினால் எந்த பொருளையும் எளிதாக அடியாளம் கண்டுபிடிக்கவும் வகைப்படுத்தவும் முடிகிறது. பிரதிபலிப்பின் போது பிரதிபலிக்குமுன் பிரதிபலிப்புக்குபின் வெளியேறும் அலைகளின் நீளத்தில் உள்ள வித்தியாசத்தை வைத்து பிரதிபலித்த பொருள் என்ன வகையானது என கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

மேலும் படிக்க...!

மாயாஜாலம்

ஜீபூம்பா” என்று மந்திரம் சொல்லி கோடிக்கணக்கில் பணம் வரவழைக்க முடியுமா? முடியும்,முடியும்.. நானும் இது நாள் வரையில் மந்திர தந்திரங்களில் நம்பிக்கை இல்லாதவன்தான். ஆனால் காலம் கலிகாலம் ஆகிவிட்டதால் நம்பித்தான் ஆகவேண்டும்.

இந்தக் காலத்து வியாபாரம் எனக்கு அந்த நம்பிக்கையை தோற்றுவித்தது. அந்த மந்திர வார்த்தை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். நானும் சில வார்த்தைகளை கண்டுபிடித்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்।। ஏனென்றால் எனக்கு முன்னே பல பேர் மில்லியன்,பில்லியன், டிரில்லியன் டாலர் கணக்கில் சம்பாரித்தனர், சம்பாரித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வியாபாரத்தில் பண்டங்கள் கைமாறுவதில்லை, தொழிற்சாலை இல்லை, தயாரிப்பு இல்லை,நேரடியான பேச்சுவார்த்தை இல்லை, மூலப் பொருள் இல்லை,காலமும் மூளை தான் முக்கியத்தேவை। மந்திர உச்சாடனத்திற்காக குறைபட்ச ஆங்கில அறிவும், மந்திர பிரயோகத்திற்காக ஒரு கம்ப்யூட்டருடன் கூடிய அகன்ற வரிசை வலைத்தொடர்பும் தேவை। ஒரு கிரெடிட் கார்டு கணக்கும் தேவை।ஆமாம் இந்த மந்திரவேலை கம்ப்யூட்டரின் உதவியுடன் தான் செய்யமுடியும்.

மேலும் படிக்க...!
top