இலவச மின்சாரம்தான் பெரிய பிரச்னையா? அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன் என்பதற்கிணங்க அரசாங்கம் அளந்து கொடுத்திருந்தா இந்த வம்பு வந்திருக்காது .1994-95 இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி (லாபம்) ரூ. 347 கோடி. 

 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது எப்படி.. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், தீர்ப்பாயமும் தான். நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார் மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப் பட்டு விட்டன. இதற்கான சட்டம் 1998 இலேயே இயற்றப் பட்டு விட்டது. இதனால் மாநில அரசின் நிலை கொதிக்கும் சட்டியிலிருந்து எரியும் கொள்ளிக்குள் விழுந்த கதையாகி விட்டது. 

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின் சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப் பெட்டிக்குத் தான் போய்ச் சேர்கிறது. நல்லவாயன் சம்பாரிக்க நாற வாயன் திண்ண கதையா போச்சு. 

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப் படுத்த விருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. நித்திய கண்டம் பூரண ஆயுசு.

 மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி (இறங்கிக்?) கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன் படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியுமாம் . அலை எப்ப ஓயரது தலையை எப்ப முழுகிறது. 

மேலும் தகவலுக்கு 


ஸ்மார்ட் மீட்டர்: 
இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு மாட்டுவதற்கே சாதாரண மீட்டர் இல்லையாம். கிட்டதட்ட 25% வாடிக்கையாளருக்கு மீட்டர் மாட்ட வில்லை . இதுல ஸ்மார்ட் மீட்டராம். கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். பல வீடு, கடைகளில் மீட்டர் இல்லாமல் சராசரிக் கட்டணம் வசூல் செய்யப் படுவதால் மின்சாரம் அளவில்லாமல் தாறுமாறாக உபயோகிக்கப் படுகிறது. 

இதற்காகவே சிலர் மீட்டரை சேதப் படுத்திவிட்டு ( அதற்கென்று சில டெக்னிக் உள்ளது. போலும்! ஐயோ எனக்குத் தெரியாதுங்க) வேண்டிய மட்டும் உபயோகித்து விட்டு சராசரிக் கட்டணம் கட்டி விடுகிறார்கள். மீட்டர் ரீடிங்க் எடுக்க வரும் (சில தகுதியற்ற ) ஆட்கள் மீட்டர் ஒழுங்காக செயல் படுகிறதா என்பதை தீர்மானிக்க முடியாத திறமை யற்றவர்களாக  இருப்பதால்  ரீடிங்கை மட்டும் குறித்துவிட்டு பல்லாக்கு தூக்குவது மட்டும்தான் என்வேலை, எனும் மனப்பாங்குடன் செல்கிறார்கள்.  இதனால் மீட்டர் ஓட வில்லை என்பதை நிர்வாகம் தெரிந்து கொள்ள எட்டு மாதங்கள் ஆகிவிடுகிறது. புதிய மீட்டர் கையிருப்பு இல்லாததால் அது வந்து மாட்டுவதற்குள் ஒன்றரை வருடம் ஆகி விடுகிறது.

ஸ்மார்ட் மீட்டரின் விலை தற்பொழுது 1500 முதல் 5000 வரை உள்ளது. அதற்கான மோடம், நெட் ஒர்க் , மற்றும் சாப்ட்வேர் என்று அதற்கான முதலீடு அதிகமாகிவிடும். ஸ்மார்ட் மீட்டர் சிக்கனமானது சிறப்பானது என்கிறார்கள் இப்படி சொல்லித்தான் ஏமாற்றுகிறார்கள். இதே போல்தான் பெட்ரோல் விலை நிர்ணயம் தனி ஆணையத்திடம் விடப்பட்டதால் விலையேற்றத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல இது சர்வதேச அன்றாட நிர்ணய விலை என்று கூறி விட்டார்கள். கொலைக்கே அஞ்சாதவன் பழி பாவத்துக்கா அஞ்சுவான்?. 

இதில் விலை குறைவதற்கான வாய்ப்பே இல்லை. ஆகவே மின்சாரத்திற்கு அன்றாட விலை உயர்வு மட்டும் உறுதிதான். நாளடைவில் மக்களிடம் முன் அனுமதி பெறாமல் அவர்களது பணத்தை பிடுங்கும் முறையான (ப்ரீபெய்ட்) முழித்து இருக்கும் போது முழியைப் பிடுங்குவதில் இதுவும் ஒன்றாகிவிடும்.

ஏற்கனவே செல்போன், டிவி சேனல் காரர்கள் மக்களிடம் பணத்தை கறப்பது போல் இதுவும் தனியார் கம்பெனிகளின் சுரண்டலுக்காக வகுக்கப் பட்ட திட்டம். ஸ்மார்ட் மீட்டருக்கான செலவு கிட்டதட்ட 5000 கோடியாகும். இதுவும் மக்கள் பணம்தான். தனக்குத்தானே செலவு செய்து சூனியம் வச்சு கிட்ட கதைதான். இஞ்சி இலாபம் மஞ்சளில். 

இதை மக்களின் பணத்தில் நிறுவிவிட்டு  பணம் வசூலிப்பதை தனியாரிடம் ஒப்படைத்து, அரசு ஊழியர்களின் வேலைப் பளுவை குறைத்துவிட்டு, தனது கல்லாவை நிரப்பி விடுவார்கள் அரசியல்வாதிகள். ஏதாவது பிரச்னை என்றால், விவரம் கேட்க முடியாது. டோல்ஃப்ரீ நம்பரில் கேட்டால் கம்ப்யூட்டர் பேசும். அதுக்கு ஒன்றை அமுக்கவும்  இதுக்கு இரண்டை அமுக்கவும் என்று கடுப்பை ஏற்றுவார்கள். மக்கள் படாத பாடு பட்டு சேர்க்கும் காசை உட்கார்ந்த இடத்திலிருந்ததோ அல்லது சொகுசாக உலகைச் சுற்றிக் கொண்டோ சுரண்டுவார்கள். உழைக்கிறவனுக்கு ஒரு காசு நாட்டாமை பண்றவனுக்கு நாலு காசு. 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்லது அரசு. 

என்று வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே அரசின் இலக்கணத்தை வகுத்துள்ளார். சரியாகத் திட்டமிட்டு அதற்காக வரியாகப் பெறப் பட்ட பணத்தைக் காத்து அதை சிக்கனமாக சிறப்பாக மக்களுக்கு செலவழிப்பது தான் அரசாள்பவனின் கடமை. 

ஆனால் இன்று நடப்பதோ வேறு, எல்லாவற்றையும் ஒப்பந்த முறையில் தனியாரிடம் விட்டுவிட்டு வரியையும் அவனே வசூலிக்க வகை செய்து விட்டார்கள். பின் எதற்கு அரசும், அரசு ஊழியர்களும். தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் பேசி கமிஷன் வாங்கி தனது ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போடுவதற்குத்தான் அரசு (அரசியல் வாதிகளும் அரசு ஊழியர்களும்)  என்ற நிலையை நோக்கிச் செல்கிறது இன்றைய அரசு இயல்.

இலவச டிவியின் விளைவுகள்: 

கருணாநிதியின் குடும்பநல கேபிள் திட்டத்திற்காக, ஒரு டிவி சுமார் 2265 ரூபாய் மதிப்பில் 1.5 கோடி டிவிக்கள் சுமார் 3687 கோடி அரசுப் பணத்தில் மக்களுக்கு வழங்கப் பட்டது . இதனால் கருணாநிதியின் குடுபத்திற்கு கேபிள் டிவி மூலம் 4000 கோடி ரூபாய் 3 வருடங்களுக்கு உறுதிப் படுத்தப் பட்ட வருமானம் ஆகிவிட்டது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் தேடிக் கொண்டார். 

இதில் பாதி டிவிக்கள் உபயோகத்தில் இருப்பதாக கருதப் பட்டாலும்
 80,00,000 X 50 = 400,000,000 வாட்ஸ் (நினைவில் கொள்க வழங்கப் பட்ட பாதி டிவிக்குத்தான்). தேவைப் படுகிறது. அதாவது 400 மெ.வாட்ஸ் மின்சாரம் அதிகமாகத் தேவைப் படுகிறது. 

இதைத் தயாரிக்க 2400 கோடி ரூபாய் வேண்டும். ஆக கருணாநிதி அரசுப் பணத்தை 3687 +2400 = 6087 கோடி செலவு செய்து தனது குடும்பத்திற்கு  வருடத்திற்கு 4000 கோடி நிலையான வருமானத்தைத் தேடிக் கொண்டார். 

ஊரை அடிச்சு உலையில் போட்ட கதையாக இருக்கிறது. ஆனால் கேணைத்தமிழன் இன்னும் நம்புகிறான் இவர் நல்லவர், வல்லவர் என்று. ஆடு வெட்டுகிறவனைத் தானே நம்பும். 


இரா. சந்திரசேகர்.
 பழனி.

மேலும் படிக்க...!
top