என்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் ,Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP) என்பது வலைத்தளம் ( இண்டர்னெட் )சம்பந்தப் பட்டது. வலைத்தளம், கணினி (கம்ப்யூட்டர்) சம்பந்தப்பட்டது. கணினி பைனரி சம்பந்தப்பட்டது. பைனரி மின்சாரம் சம்பந்தப்பட்டது. மின்சாரத்தைப் பற்றி நமக்குத் தெரியும்.மின்சாரத்தில் இரண்டு நிலைகள் உள்ளன அவை ஆன் (on)அல்லது ஆப்( Off ) .இந்த இரு நிலைகளை வைத்து தான் கணினிக்கு எண்கணிதம் போதிக்கப்பட்டது. நமக்கு கையில் பத்து விரல்கள் உள்ளதால் தான் நாம் பத்தை அடிப்படையாக கொண்ட தசம எண்முறையை (Decimal)கையாள்கிறோம்.

மினசாரத்திற்கு I,(on)O (off) என இரண்டு நிலைகள் உள்ளதால் இரண்டை அடிப்படையாகக் கொண்ட பைனரி முறையை கையாள்கிறது. இந்த இரண்டே எண்களை வைத்து எவ்வளவு பெரிய எண்களையும் எளிதாகவும் விரைவாகவும் எழுத முடிகிறது.எண்கள், எழுத்துக்கள், படங்கள் ஆகியவை எல்லாமே எண்களாக மாற்றப் பட்டு எண்கள் பைனரியாக மாற்றப் பட்டு அவைகள் கணக்கிட ,எழுத, வாசிக்க, வரைய, பத்திரப் படுத்த கம்ப்யூட்டரால் பயன் படுத்தப் படுகிறது. இந்த பைனரி எண்களைத்தான் டிஜிட்டல் என்கிறோம். தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த டிஜிட்டல் சிக்னல் தான் பயன் படுகிறது. இந்த டிஜிட்டல் சிக்னல் கம்பி அல்லது கம்பி இல்லா முறையில் உலகின் பல இடங்களுக்கும் அலைபரப்பப் படுகிறது. இந்த தகவல் பரிமாற்ற முறையை ஒழுங்கு படுத்துவதுதான் TCP/IP

தகவல் பரிமாற்றத்தின் ஆரம்ப நிலையை ஆராய்ந்தால் இது மார்க்கோனியின் ரேடியோ தந்தியின் மூலம் மோர்ஸின் குறியீட்டு முறையை பயன் படுத்தி தகவல்கள் அனுப்ப பட்டு வந்தது. அதிலும் இரண்டு ஒலி நிலைகள் குறுகிய ஒலி, நீள் ஒலி ஆகிய இரண்டையும் பயன் படுத்தி செய்திகளை வெகுதொலைவுகளுக்கு அனுப்பினர்.

அவ்வாறு அனுப்பும் போது ஒரு வார்த்தை அனுப்பி முடித்தபின் பெற்றுக் கொண்டவர் Roger என்ற வார்த்தையின் முதலெழுத்தாகிய “R ”என்ற ஆங்கில எழுத்தை அனுப்புவார்கள்.அதாவது. அந்த வார்த்தையின் விளக்கம் இதுதான் "Roger" means "I have received all of the last transmission" அதாவது”நீங்கள் அனுப்பிய கடைசிச் செய்தியை முழுவதுமாக பெற்றுக் கொண்டேன் ” என்று அர்த்தம். இவரிடம் இருந்து இந்த “R ”என்ற சிக்னல் கிடைத்தபின் தான் அடுத்த வார்த்தையை அனுப்புவார். இல்லாவிட்டால் ஏற்கனவே அனுப்பியதையே மீண்டும் அனுப்புவார். இதனால் தகவல் பரிமாற்றம் முழு உத்திரவாதத்துடன் நடைபெறுகிறது.

இதே போன்ற ஒருமுறைதான் இன்றைய இண்டர்னெட் தகவல் பரிமாற்றத்திற்கு பயன் படுகிறது.ஏனென்றால் நமக்கு வேண்டிய தகவல் எங்கோ ஒரு மூலையில் இருந்தும், பல சர்வர்களில் இருந்தும், பல தளங்களை கடந்து நமது கணினிக்கு வருவதற்குள் தகவல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.அதிலும் இந்த பைனரி எண்களுக்கான சிக்னல்கள் எளிதில் தொலைந்து போக வாய்ப்புள்ளதால் அனுப்பிய தகவல் இலக்கு நோக்கி சரியாக சென்றடைந்ததா என உறுதி செய்வதற்கான ஏற்பாடுதான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP). இதனால் தகவலின் அழியாத் தன்மை நிலைநாட்டப் படுகிறது.

மேலோட்டமான விளக்கம் தருகிறேன்.நமக்கு வரவேண்டிய தகவல்கள் எழுத்து, எண்கள், படம் ,ஆகியவை எண்களாக மாற்றப் பட்டு தொடர்ச்சியாக நமக்கு அனுப்பப் படுகிறது. அவ்வாறு அனுப்பப்படு முன் இந்த எண்கள் முதலில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அனுப்பப் படுகிறது.குறிப்பிட்ட சிறு கால (மைக்ரோ செகண்டுகளில்) இடைவெளியிலுள்ள பைனரிகளை சேர்த்து சிறு (பொட்டலங்களாக)பாக்கெட்டுகளாகவும் அந்த பாக்கெட்டில் உள்ள மொத்த எண்களின் கூட்டுத்தொகையும் கடைசியில் அந்த பொட்டலங்களுடன் அனுப்படுகிறது.

உதாரணமாக Tamil என்ற வார்த்தை அனுப்பப் படுவதாகக் கொள்வோம் .இந்த எழுத்துக்களின் பைனரி வடிவம் முறையே 84,97,109,105,108. ஆகவே 84,97,109,105,108,என்ற எண்கள் அனுப்பப் பட்டு , இவைகளின் கூட்டுத்தொகையான 503 என்ற எண்ணும் அதனுடன் அனுப்பப் படுகிறது. இங்கு அந்த தகவலை பெறும் இடத்தில் அந்த பொட்டலங்களில் உள்ள எண்கள் ஒவ்வொன்றும் சரிபார்க்கப் பட்டு பின்னர் அவற்றின் கூட்டுத்தோகையும் கணக்கிடப் பட்டு அந்த பொட்டலங்களுடன் வந்த கூட்டுத்தொகை எண்ணுடன் ஒப்பிடப் பட்டு சரிபார்க்கப் படுகிறது. சரிபார்த்தவுடன் ஒப்புதல் சிகனல் அனுப்பப் பட்டு அடுத்த தகவல் பெறத் தயாராகுகிறது.

இதில் எந்த இடத்தில் தவறு ஏற்பட்டாலும் தவறு என்று செய்தி வந்துவிடும் நிலைத்த முழுமையான தகவல் பரிமாற்றத்திற்கு உத்திரவாதம் தான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP).


யாப்பிலக்கணம்.

இப்பொழுது யாப்பிலக்கணம் பற்றி மேலோட்டமாக அறிவோம்
சங்ககாலப் பாடல்களை ஆய்ந்து பார்க்கும் போது, போற போக்கில் செய்யுள் எழுத முடியாது என்பது புரியும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே செய்யுள் படைக்க யாப்பிலக்கணம் கற்றறிந்து இருக்க வேண்டுமென த் தெரியவருகிறது.

தமிழில் கவிதை பாட யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.யாப்பிலக்கணம் என்றால் என்ன? அது பற்றிய ஒரு உரையாடலைக் கேட்போம். இதில் புலவர் என்ன பாடல் வகை எனக் கேட்க புரவலர் “வெண்பா” என்று சொன்னவுடன் உரையாடல் முற்றுப் பெற வேண்டும் ஆனாலும் புலவர், புரவலரை சோதனை செய்யும் முகமாக உரையாடல் தொடர்கிறது.


புரவலர் : புலவரே ஒரு கவிதை பாடுங்கள்
புலவர்: வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா, மருட்பா,நூற்பா, இதில் எந்தவகையில் பாட?
புரவலர் : வென்பா வகையில் பாடுக
புலவர்:எதுகையும் மோனையும் கலக்கவா?
புரவலர் : ஆமாம் தொடையில்லா பாட்டுக்கு கண்டிப்பாகத் தடைதான்
புலவர்:அடிக்கு எத்தனை சீர்?
புரவலர் : அளவடி, நாச்சீர்
புலவர்:சீர்க்கு என்ன தளையிட?
புரவலர் : வெண்சீர்வெண்டளை, இயற்சீர்வெண்டளை
புலவர்:சீர்க்கு எத்தனை அசை வைக்க?
புரவலர் : மூவசைச்சீர்
புலவர் பாடினார், பொருள் பெற்றார்.

இங்கு குறிப்பிட்டுள்ள யாப்பிலக்கண உறுப்புக்களை பற்றி மேலோட்டமாகப் பார்ப்போம்.

எழுத்து , அசை, சீர், தளை, அடி ,தொடை

நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும்.

எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள்.
இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.

ஒரு அடியில்(வரியில்) எத்தனை சீர்கள் (வார்த்தைகள்)அமையலாம், அந்தசீர்களை இணைக்கும் தளை என்ன வகையாக இருக்கவேண்டும்.என்ன மாதிரியான சீர்கள் வேண்டுமோ அதற்கு தகுந்த அசைகள், அசைகளுக்கு தகுந்த எழுத்துக்கள், மற்றும் எதுகை மோனையை சேர்க்கபடும் விதத்தால் என்ன மாதிரியான தொடை என இவை அணைத்தும் சேர்ந்து அது என்ன பாவினம் என்பதை தீர்மானிக்கிறது.

கேட்கப்படும் பா வகைக்கு தகுந்தமாதிரி இத்தனை விஷயங்களையும் சரியாக இணைத்து சரியான இடத்தில் பொருத்தி அம்மென்றால் ஆயிரமும் ,இம்மென்றால் எண்ணூறும் பாடவல்ல தமிழனின் அறிவை எடுத்துறைக்க இயலுமோ. இன்றைய ஐ.க்யூ சோதனையில் முதலிடம் வகிப்பவர்கள் புலவர்கள்தான் என்றும் கூறுகிறார்கள். இது தமிழ்ப் புலவர்களைப் பற்றிய வரை உன்மைதானென விளங்குகிறது. யாப்பிலக்கணக்கம் புத்திசாலிகளை மட்டும் வடிகட்டி புலமைக்கு அனுப்புகிறது. அதனால்தான் மன்னன் முன் நின்றும் ஆணவத்தோடு புலவர்கள் பேசினார்கள். மன்னனும் அவர்களது திறமை கண்டு வியந்து பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தான்..அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தான்.

இனிய ஓசை நயம் அமைந்த பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல் அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம் தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத் தொடங்கினர். கவிதைகளுக்கு ஒரு அமரத்துவம் ஏற்பட்டு விடுகிறது.

அது மட்டுமின்றி எழுத்தோலை, அதிகம் புழக்கத்தில் இல்லாத காலத்தில் வாய்மொழிப் பாட்டாக கவிதை, செய்யுள் பாடப்பட்டதால் அதை ஒருவர் கேட்டு மற்றவர்க்கு சொல்லும் போது வார்த்தைகள் மாறி பொருள் மாறிவிடும் போக்கு நிலவியது. இதைத் தடுப்பதற்கு தமிழனின் சிந்தனையில் ஏற்பட்ட முறைதான் "யாப்பிலக்கணம்”.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தகவல் பரிமாற்றம் என்பது தலைமுறைகளுக்கிடையில் கவிதை முறையில் மனப்பாடமாக தான் எடுத்துச் செல்லப் பட்டது. அவ்வாறு மனப்பாடமாக கொண்டு செல்லும் கவிதையில் வார்த்தைகளை சேர்க்கவோ, மாற்ற முடியாத ஒரு உன்னதமான ஏற்பாடு தான் யாப்பிலக்கணம் என்பது மறுக்க முடியாத உன்மை.இதன் மறு பெயர்தான் Transmission Control Protocol (TCP)

யாப்பிலக்கணம் - TCP/IP
எழுத்து - ASCII Equalents
அசை - பைனரி
சீர் - பாக்கெட்டுகள் (பொட்டலங்கள்)
அடி - பாக்கெட் எண்
தளை - கூட்டுத்தொகை எண்
தொடை - Not available
பாவினம் - file format (Text, Jpeg, Mpeg,)

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட வள்ளூவரின் குறளில் வார்த்தையை சேர்க்கவோ மாற்ற முடியாது அப்படி ஏதும் நடந்தால் எளிதாக கண்டு பிடித்து விடலாம். இதுதான் யாப்பிலக்கணத்தின் பெருமை.

வெண்பாவின் இலக்கணத்தைப் பார்ப்போம்

1).ஈற்றடி முச்சீரடியாகவும் (கடைசி வரியில் மூன்று வார்த்தைகளும்)
2)ஏனைய அடி நாற்சீரடியாகவும் பெற்று (ஏனைய வரிகளில் நான்கு வார்த்தைகளும் )
3) காய்ச்சீரும் (வார்த்தையில் எழுத்துக்கள் அமையும் முறை)
4)அகவற்சீரும் ,(வார்த்தையில் எழுத்துக்கள் அமையும் முறை)
5)வெண்சீர் வெண்டளையும், (வார்த்தைகளை இணைக்கும் தளை)
6)இயற்சீர் வெண்டளையுங் கொண்டு (வார்த்தைகளை இணைக்கும் தளை)
7)மற்றைச் சீருந்தளையும் பெறாது
8)செப்பலோசை பெற்று
9)காசு-பிறப்பு-நாள்-மலர் என்னும் வார்த்தைகளின் அசை அமைப்பு கொண்டு கடைசி வார்த்தை முடிவது வெண்பா எனப் படும்.

இப்ப சொல்லுங்க இத்தனை விஷயங்களை மனதில் வைத்து , கொடுத்த பொருளுக்கு தகுந்தாற்ப் போல் வெண்பா பாடறது எவ்வளவு சிரமம். ஆனாலும் நமது தமிழ்ப் புலவர்கள் இதில் போட்டி போட்டுக்கொண்டு சரமாரியாக கவிதை பாடிய வரலாற்றைக் கேட்கும் போது அவர்களின் அறிவுத் திறனை எப்படித்தான் பாராட்டுவது.

ஆனால் இன்றைய தமிழன் அறிவின் பரிணாமப் படிக்கட்டுகளில் ஏற மறுத்து விட்டு இறங்கிக் கொண்டிருக்கிறான்.

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)

என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு யாப்பிலக்கணத்துக்கு சமாதி கட்டிவிட்ட அதிமேத்தாவிகளை தமிழினத்துரோகி என்றுதான் கூறவேண்டும். ஏன் அதை ”உரைநடை ஆளுமை ” அல்லது ”’எழுத்தாண்மை” அல்லது ”கருத்தாண்மை “, “வசன நடை”என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.ஆனால் தயவு செய்து கவிதை என்று மட்டும் சொல்லாதீர்கள் .அது யாப்பிலக்கணம் படைத்த தமிழனுக்கு இழுக்கு.

மதிகெட்டுப் போனதை ஒத்துக் கொள்ளாமல் மரபுக் கவிதைகளை பழித்துவிட்டு மக்கள் கவிதை , புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டு பொருளற்ற முறையில் அர்த்தமற்ற வார்த்தைகளைப் போட்டு, ஒற்றை சொற்களை ஓசை நயமின்றி அடுக்கடுக்காக அடுக்கி விட்டு கவிதை என்று சட்டையை தூக்கி விட்டுக் கொள்பவர்களை என்ன செய்வது. அவர்களின் காதை அறுக்க வில்லிபுத்தூராரைத்தான் கூப்பிடவேண்டும்.

வில்லிபுத்தூரார் யார் என்று கேட்கிறிர்களா.அவருடன் போட்டியிட்டு தப்பான பாடல் பாடினால் அவரது காதை அறுக்க கையில் தொரட்டியுடன் அலைபவர். வில்லிபாரதம் என்ற பெயரில் கம்பனுக்கு இணையாக மகாபாரதம் பாடியவர். ஆனால் ஏனோ பெயர் வாங்க முடியவில்லை. அவருடைய செருக்கு அழிந்த கதையை படிப்போம். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர்.


அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

சொற்போர்க் களம் ஒன்று அமைக்கப்பட்டது. அடிகளார் நூறு பாக்கள் கொண்ட நூல் ஒன்று பாடுவதென்றும், அதற்கு வில்லிபுத்தூரார் உரைகூற வேண்டுமென்றும் எப்பாட்டிற்கேனும் உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்து விழித்தால் அவர் தோற்றதாக முடிவு செய்து அவர் காதினை அறுத்து விடுதென்றும், அவ்வாறன்றி எல்லாப் பாடல்கட்கும் உரை கூறிவிட்டால் அடிகள் தோற்றதாகக் கொண்டு, அடிகளின் காதைக் கொய்து விடுவதென்றம் முடிவு செய்யப்பட்டது. தக்கார் சிலர் நடுநிலையாளராக அமர்த்தப் பெற்றனர். ஒருவர் காதில் மற்றெருவர் தொரட்டியை மாட்டி தயாராக இருந்தனர்.

அடிகளார் "கந்தரமந்தாதி" என்னும் நூலைப் பாடத் தொடங்கினார். அது யமகங்களால் ஆகியது. யமகம் என்பது யாது? முதல் அடியில் வந்த தொடரே மற்ற அடிகளிலும் வந்து வேறு பொருள் தருவது. அந் நூற்பாடல்களுக்கு வில்லிபுத்தூரார் உரை கூறத் தொடங்கினார். ஐம்பத்து மூன்று பாடல்கள் வரை முடிவு பெற்றன. வில்லிபுத்தூராரும் கல்வியில் வல்லவரேயென்பதை யுணர்ந்த அடிகள் ஐம்பத்து நான்காவது பாடலைத் தகரவருக்கப் பாட்டாகப் பாடினார்.

பாடலைப் பார்ப்போம்:

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

எனப் பாடலைப் பாடினார்.

வில்லிபுத்தூரார் இது பாட்டு அன்று என்றும், வாய்க்கு வந்தபடி கூறியது என்றும், தாம் அதனை ஒப்புக்கொள்ள இயலாதென்றும், வீண் சொற்போரில் இறங்கினார். அருணகிரிநாத அடிகள், "இஃது இலக்கண முறைப்படி பொருளமைதியுடன் பாடப்பெற்ற பாட்டு" என்றார். அடிகளாரே இப் பாட்டிற்குப் பொருத்தமான, திருத்தமான உரை கூறிவிடின் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளவும் காதை இழக்கவும் உடன்படுவதாக வில்லிபுத்தூராரும் உரைத்தார். அடிகளார் இப்பாடலுக்குப் பொருள் விரித்துரைத்தார். கூறிய பொருள் அமைதியுடையதாக இருந்தது. வில்லிபுத்தூரார் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். நடுநிலைமையாளரும், வில்லிபுத்தூரார் தோற்றார், என்று முடிவு கூறினார்கள்.

இதன் பொருளை இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்.

அவ்வளவில் வில்லிபுத்தூரார் எழுந்து தம் தோட்டியை அடிகள் முன் நீட்டி, இத் தோட்டியால் என் செவியினை அறுத்துவிடலாம் என்றார். அடிகள் அத் தோட்டியைத் தம் கையில் வாங்கி, "ஒருவருக்கு ஒரு காதைக் கொடுக்கும் ஆற்றல் நம்மிடம் உண்டா? அவ்வாறாக, ஒருவருடைய காதை அறுப்பது எவ்வாறு நேர்மையுடையதாகும். அவ்வாறு செய்வது இறைவன் திருவுளப் பாங்கிற்கு ஏற்றதன்று. இன்று நாம் உமக்கு உம்முடைய காதினை அறப் பொருளாக வழங்குகின்றோம். இனி, இத்தொழில் ஈடுபடாது ஒழிவீராக" என்று கூறி அத் தோட்டியினை வீசி எறிந்தார்.

அடிகளின் இத்தகைய பெருந்தன்மையைப் பார்த்து அக் காலத்து அறிஞர் ஒருவர்,

காசுக்குக் கம்பன் கருணைக் குஅருணகிரி
ஆசுக்குக் காளமுகில் ஆவனே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங்கு ஔவை எனக் கூறு

என்றார்


செங்கோல் , சிம்மாசனம் ,பல்லக்கு, தேர்கள், சேனை, பவனி இவையெல்லாம் அனுபவிக்க இருந்தும் தமிழன் ”கால்நடை”யாய் நடப்பேன் என்று கூறினால் இவனை மறை கழன்றவன் அல்லது தகுதியில்லாத தற்குறி என்றுதானே கூற வேண்டும்.


தமிழா நீ கவிதை பாட வேண்டுமென்றால் யாப்பிலக்கணத்தின் ஏதாவது ஒரு பண்பையாவது பயன் படுத்து, உனது கவிதையில்.உதாரணமாக ஈற்றடி முச்சீராகவும் மற்றைய மூன்று அடிகளும் நாச்சீராகவும் உள்ள எளிய பண்பை பயன்படுத்தி கவிதை எழுதுங்கள். பின்னர் ”அசை ”போடுங்கள். ”தளை ”தானாகவே வந்துவிடும். பின்பு போட்டிக்கு ”தொடை”யை தட்டி கூப்பிடுங்கள்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவனால் முடியும் போது உங்களால் முடியாதா? யாராலும் கவிதை பாட முடியும் என்பதை நிரூபிக்க கம்பன் தன் வீட்டு வேலைக்காரி, தட்டான். கருமான், வண்ணான், அம்பட்டையன் ஆகிய அனைவரையும் கவிதை பாடவைத்தான்.அவர்கள் பாடிய பாடலை பின்னர் பார்ப்போம். இதனால் தான் ”கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்” என்றார்கள்.அந்த கட்டுத்தறியிலும் கேவலமானவனா இன்றையத் தமிழன்.

ஆகவே தமிழ் மேல் ஆர்வம் உள்ள கவிஞர்களே வாழ்க்கையில் ஒரு வெண்பாவாவது இலக்கணத்தமிழில் பாடுங்கள்.

இன்னும் வரும்...................

18 comments:

Uthamaputhra Purushotham said...

அருமையான தகவல்கள் கொண்ட விருவிறுப்பான பதிவு. பாராட்டுக்கள். தொடருங்கள். அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நன்றி.

Johnson Christopher said...

அருமையான தகவல்கள் . நன்றிகள் பல !

Prathipaeswari said...
This comment has been removed by the author.
Arun said...

கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி குறுகித்தறித்த குறள் என்பது போல, முவ்வாயிரம் வருடதிற்கும் பழமையான தமிழ் இலக்கணத்தையும், நம் முன்னால் உள்ள கணினி இலக்கணதையும் ஒப்பிட்டு உணர்த்தியதும், மேலும் TCP/IP பற்றி வழக்கு தமிழில் எளிமையான விளக்கியதும் மிக சிறப்பு. நன்றி...

விக்னேஷ்வரி said...

நான் மிகவும் ரசித்த பதிவுகளுள் இதுவும் ஒன்று.

நாட்டாமை said...

ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வித்தியாசமான கண்ணோட்டம்.பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.

Nilavan said...

புதிய சிந்தனையை நயமாக புகுத்தி ஒரு பாடம் சொல்லியிருக்கீர்கள் எனப் பாராட்டும் அதே நேரத்தில் 'கவிதைகள்' என தொகுப்பு ஒன்றை வைத்து வலைத்தளத்தில் மனதில் தோன்றியதை 'வார்த்தையாய்' எழுதிக் கொண்டிருக்கும் என் போன்றோரின் 'கருத்தாண்மைகளை' சாடியிருப்பதும் சற்றே சிந்திக்கவும் வைக்கிறது காதுகளைப் பொத்தியபடி..

கவிதைகளுக்கும் கருத்தாண்மைக்குள்ள வேறுபாடு ஒன்றைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றும் எவ்வாறிருக்க வேண்டும் என ஒரு புதுப்பதிவு ஒன்றைப் போட்டு அற்பமாய் எழுதும் கவிதைக்காரர்களை கருத்தாண்மைக் காரர்களாய் மாற்றுங்கள்.

உங்களின் புதிய முயற்சி பல்வேறு ஆதரவைப் பெற்று முன்னிலை அடைய வாழ்த்துக்கள்..

Chandru said...

படித்து, பாராட்டிய தமிழ் உள்ளங்கள் உத்தம புத்திரர்,ஜான்சன் கிறிஸ்டோபர்,பிரதிபா ஈஸ்வரி, அருண்,விக்னேஸ்வரி,நாட்டாமை,நிலவன் ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

யாப்பில‌க்க‌ண‌த்தை இவ்வ‌ள‌வு எளிதாக‌ சொல்ல‌முடியுமா?? சும்மா ந‌ச் என்று இருந்த‌து.ஏழாவ‌து வ‌குப்பு இல‌க்க‌ண‌ வ‌குப்பு க‌ண் முன் வ‌ந்து சென்று ப‌ய‌மூட்டிய‌து.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

மிக அழகு. படிக்க படிக்க பிரமிப்பை உண்டாக்கிற்கு உங்கள் பதிவு.

தமிழை அறிவியலுடன் இணைத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல.

Sugumarje said...

ஆகா.... மிக மிக அருமை... அம்மா, மம்மியாகி, இப்போ மாம் ஆகிவிட்டது... புதுக்கவிதை பற்றி விளக்கம் மிக சூடாக உள்ளது... பாராட்டுக்கள்... புரிந்து கொள்பவர்கள் புத்திசாலிகள்...
//மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவனால் முடியும் போது உங்களால் முடியாதா?//
//அந்த கட்டுத்தறியிலும் கேவலமானவனா இன்றையத் தமிழன்.
//
நல்லா கேட்டீங்க... :) நேரமிருந்தால்
எனக்கு யாப்பு பற்றிய நூல் தகவல் தருகிறீர்களா?

என்னை அறிய sugumarje

ரசிகன் said...

தமிழின் பெருமையை பேசும் போதெல்லாம் உடல் சிலிர்க்கிறது. சிலிர்க்க வைத்ததற்கு நன்றி அய்யா.

Chandru said...

ரசிகன் அவர்களுக்கு வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

Somu Sundaram said...

மிக அருமை. வாழ்த்துக்கள்.

Somu Sundaram said...

மிக அருமை. வாழ்த்துக்கள்.

Vijay Periasamy said...

மிகவும் அருமையான தகவல்கள் . வியப்பில் இருந்து மீள முடியவில்லை . என் தமிழை நினைத்தால் எனக்கு மிகவும் கர்வமாக இருக்கிறது . மிகவும் ரசனையான பதிவு. வாழ்த்துக்கள்.

தமிழ் வசந்தன் said...

மிகத் தேர்ந்த கட்டுரை. யாப்பிலக்கணத்தின் அவசியமே ஏனென்பது இப்போது தான் உரைக்கிறது. இதுகாரும் இதுபோன்ற தகவல்கள் எட்டாமலேயே இருந்துவிட்டதற்காக வருந்துகிறேன். இதைப் படிக்கிற போது எனக்கோர் யோசனை மேலிடுகிறது.

தாய்மொழியில் தொழில்நுட்பங்களை கற்பதற்கான சூழல் இங்கே மிகக்குறைவாக உள்ளது. ஜப்பானியர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் அவர்களின் மொழியிலேயே கண்டறிந்த ரூபி கணிணி மொழி. அதைப் போல நாமும் நமக்கென கணிணி மொழியை வரையறுத்துவிட்டால், தமிழர் தொழில்நுட்பங்களைத் தம்மொழியிலேயே கற்றுக்கொள்ள முடியும். சிந்தித்து இன்னும் பற்பல வளர்ச்சிகளை, செயலிகளை (Applications) உருவாக்க முடியும். பாமரர் கூட மேதையாவதற்கு முற்பட முடியும். பிறமொழியின் அவசியம் அதிகம் தேவைப்படாது. விரைவில் தமிழில் மின்னனு மொழி உருவாக்கி, அந்த மொழியாலேயே இயக்க அமைப்புகளையும் (Operating System) நிறுவிவிட்டால் அதன் தொடர்ச்சியாக பல பதிப்புருக்களில் (Version) தமிழ் இயக்க அமைவுகள் வளர்ச்சியுறும். அதற்கு மெனக்கெடல்கள் இப்போது போல அதிகம் தேவைப்படாது. எவரும் முயற்சிக்கலாம் என்ற நிலை வரும்.

யாப்பிலக்கணம் செய்த தமிழர்களால் இது முடியாததல்ல... காலம் கைகூடுமெனக் காத்திருக்காமல் தகுந்த நபர்களிடம் தகவல்கள் சென்றடைந்தால், முயற்சிகள் விரைவில் தொடங்கிவிடும். பார்க்கலாம்...

Scribbles of Mani said...

Super

top