முந்தைய பதிவு
நாம் அறிந்தோ அறியாமலோ, காமத்தில் நம்மை வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தும் அந்த இச்சா சக்தியின், அடிப்படை தேவை புத்திர உற்பத்திதான். மகாபாரதத்தில் பித்ரு பிண்டம் கொடுப்பது, அல்லது நீத்தார் நினைவு என்பது பற்றி பாண்டு எவ்வளவு வருத்தப் படுவான் என்பது மகாபாரதத்தை சிரத்தையுடன் படித்தவர்களுக்குத் தான் தெரியும். அதனால்தான் குழந்தை வேண்டும் முயற்சியில் தனது உயிரையே விட்டான்.
பித்ரு பிண்டம் கொடுப்பது (திதி) ஒருவகையில் பார்த்தால் இன்னாரின் வாரிசுகள் இப்பூமியில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை இப்புவியில் இருக்கும் சக மனிதர்களுக்கு மட்டுமல்லாது அதை அவர்களது முன்னோர்களுக்கு தெரிவிப்பதும் அதை அவர்கள் அறிந்து கொள்ளும் ஒருவித நுட்பமும் கொண்ட சடங்காகும். உயிரின் அடிப்படையே சந்ததிகளை உருவாக்குவதும், அதை பாதுகாப்பதும் ஆகும். தன் வாரிசுகள் பூமியில் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக உயிர் இனங்கள் என்னென்ன செய்கின்றன என்பதை எனது முந்தைய பதிவுகளில் காணலாம்.
ஒரு எருக்களை செடி கூட தனது விதைகளைப் பரப்புவதற்கு முதலில் காயை வெடிக்கச் செய்து, விதைகளைத் தூவுகிறது. பின்னர் ஒருசமயம், விதைகள் மொத்தமாய் விழுந்து ஒரே இடத்தில் கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளை மொத்தமாய் பயன்படுத்தி, மொத்தமாய் அழிய வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலாகத் தன் விதைகளில் மயிர்க்கால்களை ஒட்ட வைத்து வெடித்தவுடன், காற்றின் வேகத்தில் தூரங்களை கடந்து புதிய இடங்களில் வெற்றிக் கொடியை நட்டு, இனத்தைப் பரப்புகிறது. இதெல்லாம் ஓரிரவுக்குள் நடந்த மாயாஜாலம் அல்ல .காலங்களை யுகங்களாக விழுங்கிய அறிவியல் செயற்பாடு.
இனத்தைப் பூமிப் பரப்பின் மீது பரப்புவதில் உயிரினங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறது என்பதைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
முதலில் குழந்தை எப்படி பிறக்கிறது, அதிலுள்ள சிக்கல்கள் என்ன? தீர்வு என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்ப்போம். திருமணமாகும் ஆறு ஜோடியில் ஒரு ஜோடிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் என புள்ளி விவரம் கூறுகிறது. மருத்துவச் சோதனைகள் என்று போய் விட்டால் அதற்கு ஒரு பெரிய அட்டவணையே உள்ளது. மாதவிடாய், முட்டைப்பை, முட்டையின் முழுமை, ஃப்ல்லோப்பியன் குழாய், கர்ப்பப்பையின் பின்வாசல், கர்ப்பப் பையின் நுழைவாசல், பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு, விந்துப் பை, விந்துக் குழாய், விந்து, உயிரணுவின் தன்மை, என்று பலவகையிலும் பார்க்க வேண்டும். முருகன் மயிலேறி உலகைச் சுற்றி வந்த கதையாகி விடும் .
ஆகவே அதை விடுத்து விநாயகர் பாணியில் நல்லதையே எண்ணி மேலோட்டமாகச் சில சோதனைகளை செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள். மருத்துவ ரீதியாக அணைத்து தகுதிகள் இருந்தும் 25 சதவீத பேருக்கு குழந்தை தாமதமாக அல்லது இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவை அதிகரிப்பதும் கணக்கில் கொள்ளத்தக்கது.
மேலோட்டமானவை என்பது கீழ்க் கண்டவைகள்தான்.
1 மாதவிடாயின் சீர்மை
2 விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கம்
3 பார்க்கும் வேலையின் தன்மை
4 ஆர் ஹெச்( Rh factor) ஒவ்வாமை
5. பி.எம் ஐ (Body Mass Index) இண்டெக்ஸ்
6 வாழ்க்கை முறை
முதலில் மாதவிடாய் பற்றி தெரிந்து கொள்வது நல்லது
பெண்ணுக்கு முட்டைப் பைகள் இரண்டு உள்ளது. மாதம் ஒரு முறை ஒவ்வொன்றி லிருந்தும் மாற்றி மாற்றி ஒவ்வொரு முட்டையாக ஃபலலோப்பியன் குழாய் மூலமாக முட்டை கருப்பையை அடைகிறது. கலவிக்குப் பின் பெண்ணுறுப்பின் வழியாக வரும் கோடான கோடி விந்தணுக்களில் ஏதாவது ஒன்று கருப்பைக்கு வந்து முட்டையை துளைத்து உள்ளே சென்று கருவுறச் செய்கிறது.
ஒரு பெண் பிறக்கும் போதே தனது முட்டைப் பையின் இரு பிரிவுகளில், ஒவ்வொன்றிலும் தலா ஒரு மில்லியன் (1,000,000) முழு வளர்ச்சி அடையாத முட்டையின் கருக்களுடன் பிறக்கிறாள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிகபட்சமாக பத்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு எதற்கு ஒரு மில்லியன் முட்டைகள்? இங்குதான் மனிதன் தன்னை எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் தாரளமாகத் தகவமைத்துக் கொண்டான் என்பதை அறியமுடிகிறது.
எப்பொழுதுமே மனித உடம்பு, தேவைக்கு மேல் 50 சதவீதம் அதிகமான உடலுறுப்புகளுடன் தான் தகவமைக்கப் பட்டுள்ளது. நுரையீரல், கிட்னி, மூக்கு துவாரம், முட்டைப் பைகள், விதைப் பைகள், கண், காது, கை, கால் என எல்லாமே இரண்டிரண்டாக உள்ளது. தேவைக்கு மேல் 50 சதவீதம் அதிகமான வயிறு, 50 சதவீதம் அதிகமான கல்லீரல், 80 சதவீதம் அதிகமான மூளை, 80 சதவீதம் அதிகமான குடல், ஒரு கோடி மடங்குக்கு அதிகமான விந்து., ஒரு மில்லியன் மடங்கு அதிகமான முட்டை என எல்லாமே தேவைக்கு அதிகமாகத் தான் உள்ளது. இந்த வகையில் மனித இனத்திற்கு ஏதாவது ஒரு காலத்தில் (தேவைப் பட்ட) அல்லது தேவைப் படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாடாக ஒரு மில்லியன் முட்டைகள் இருக்கலாம்.
பருவம் எய்தும் போது, அதில் ஐந்தில் ஒரு பங்குதான் அதாவது சுமார் 2,00,000 + 2,00,000 மிஞ்சியிருக்கின்றன. மற்றவை ஒருவித நடை முறையை பின்பற்றி அழிக்கப்படுகின்றன. பெண்ணிற்கு கருத்தரிக்கும் காலம் சுமார் 13 வயதிலிருந்து 53 வயது வரை உள்ள மாதவிடாய் காலம் தான். இந்த சுமார் 40 வருடங்களில் வருடத்திற்கு சுமார் 12 முட்டைகள் என்ற விகிதத்தில் சுமார் 500 முட்டைகள் மட்டுமே இன விருத்திக்கு தயார் படுத்தப் படுகிறது. முட்டையின் அளவோ கண்களால் பார்த்தறிய முடியாத அளவுக்கு மிகவும் சிறியது.( .02mm) .முட்டை எப்படி முழுமை அடைகிறது?, எப்பொழுது முழுமை அடைகிறது? என்பது இதுநாள் வரை மர்மமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளார் வேறெரு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது தற்செயலாக முட்டை முழுமை அடைவதை தனது கேமிராவில் பிடிக்க நேர்ந்தது. அவைதான் கீழ்க் கண்ட படங்கள் . வைரமுத்து கூறியதைப் போல் தண்ணீர்க் குடத்தில் தான் பிறக்கின்றோமோ!
குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் வெளியேறிய முட்டைகள் தவிர மற்றவை எல்லாம் முழுமை அடையாமல் மாதாந்திர தவணை முறையில் அழிக்கப் படுகிறது. மிச்சம் உள்ள முட்டைகளும் மாதவிடாய் நிற்கும் (மெனோபாஸ் ) காலத்தில் முற்றிலும் அழிக்கப் படுகிறது. குழந்தைகளை வரிசையாக இடைவெளி இல்லாமல் பெற்றுக் கொண்டால் ஒரு பெண் அதிகபட்சமாக 60 (இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து) குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனால் தெரிவது என்ன வென்றால் குசேலர் 27 குழந்தை பெற்றுக் கொண்டது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால் ஒரு ரஷ்யப் பெண் 27 பிரசவத்தில் 69 குழந்தைகள் பெற்றதாக கின்னஸ் ஆவணப்படி தகவல் உள்ளது. தமிழ்நாட்டில் 16 குழந்தைகள் பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து கெளரவித்த வரலாறும் தமிழனுக்கு உண்டு. இந்த விஷயம் தெரியாமல் பெரியார் முட்டாள்தனமாக குசேலர் 27 குழந்தைகள் பெற்றுக் கொண்டது நம்ப முடியாத பொய் எனக் கூறுவதும். அதற்கு மடத்தனமான விசிலடிச்சான் குஞ்சுகள் விசில் போடுவதும் தமிழ் நாட்டில் “பகுத்தறிவின்” வளர்ச்சியைக் காட்டுகிறது,.
கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது?
இரா.சந்திரசேகர்
பழனி.
மேலும் படிக்க...!