பூகம்பம்

”பூகம்பத்தைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை திறந்தவெளியில் இருக்கும் வரை”

உலகில் பூகம்பம் ஏற்படும் நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் கொண்டு இது வரை ஏற்பட்ட பூகம்பங்களை கணக்கிட்டு மூன்று முக்கிய பூகம்பப் பகுதிகள் அடையாளம் கண்டுள்ளனர்.இங்குதான் இது வரை ஏற்பட்ட பூகம்பங்களில் 99% நடந்துள்ளன.

1) சர்கம் பசிபிக் சீஸ்மிக் பெல்ட் 81%
2) ஆல்பைட் பெல்ட் 17%
3)மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் 1%


1) சர்கம் பசிபிக் சீஸ்மிக் பெல்ட்

தென் அமெரிக்காவின் தென் முனை தொடங்கி மேற்கு கரை யோர நாடுகளான சிலி, பெரு ஆகியவை வழியாக வட அமெரிகாவின் மெக்சிகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கலி போர்ணியா,அலாஸ்கா வழியாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியுகினியா, நியூஜிலாந்து, ஆகிய நாடுகளை கடந்து ஆஸ்திரேலியாவில் முடிவடைகிறது. இந்த பெல்ட்டில்தான் 81% பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மெக்சிகோ, அமெரிக்கா, ஜப்பான், ஆகிய முன்னேறிய நாடுகள் நவீன தொழில் நுட்ப உதவியுடனும், மக்களின் விழிப்புணர்வுடனும் சேர்ந்து பூகம்பத்தை எதிர் கொள்கிறார்கள். வானாளவிய கட்டிடங்கள் எதிர்ப்பு சக்தியுடன் கட்டப்பட்டுள்ளன. இங்கு பூகம்ப விழிப்புணர்வு அதிகம்.



2) ஆல்பைட் பெல்ட்

ஜாவா சுமத்ரா தீவுகளில் தொடங்கி சீனா வழியாக இந்தியாவின் அஸ்ஸாம், பூடான்,நேபாளம் ,பீகார், டெல்லி, குஜராத், (கட்ச்ரன்) ,பாகிஸ்தான், ஈரான், துருக்கி, வழியாக மத்திய தரைக் கடலில் முடிவடைகிறது. இங்கு 17% பூகம்பங்கள் ஏற்படுகிறது. இந்த பெல்ட்டில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் பூகம்ப விழிப்புணர்வு குறைவு. ஆதலால் உயிர்ச் சேதம் அதிகம்.


3) மிட் அட்லாண்டிக் ரிட்ஜ்

இது அட்லாண்டிக் கடலில் முழுவதுமாக உள்ளதால் இதனால் பாதிப்பு ஏதுமில்லை.

அளவு

பூகம்பத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் குறிப்பிடப் படுகிறது. இதன் ஒரு எண்ணிக்கை கூடுதல் என்பது 10 மடங்கு அதிக அதிர்வும் 30 மடங்கு அதிக சக்தியுடனும் இருக்கும். இதுவரை உலகில் அதிக பட்சமாக பதிவானது 9.5 ரிக்டர் ஆகும்.

பூமி பந்தானது ஒரு உடைந்த முட்டைக்கு ஒப்பாக உள்ளது. பூமியின் மையத்திலிருந்து 3500 கி.மீ அளவுக்கு உருகிய மாக்மா என்னும் குழம்பும் அதன் மீது முட்டை ஓடுகளைப் போல் மிதக்கும் பூமித்தகடுகளும் கொண்டதுதான் பூமி. பூமியின் மேற்பரப்பு இது சுமார் 70 கி.மீ ஆழம் கொண்டது.இது கிட்டதட்ட 12 தட்டையான தகடுகளால் ஆனது. இந்த தகடுகளின் மாறுபட்ட இயக்கங்களால் பூகம்பம் மற்றும் எரிமலை ஏற்படுகிறது. தகடுகளின் இடை வெளியில் எரிமலை வெடிக்கிறது.

இந்தியத் தகடு என்னும் இந்தியப் பகுதியின் பயணம் தென் ஆப்ரிக்காவின் அருகிலிருந்து தொடங்கி ஆசியக் கண்டத்தை முட்டி மோதி தொடர்வதால் தான் இமயமலை உருவாகி, வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியத் தகட்டின் வேகம் வருடத்திற்கு 5 செ.மீ என்ற கணக்கில் உள்ளது. இதன் மோதலால் ஏற்படும் அதிர்வுகள் வெளிப்படும் இடங்களே பூகம்ப மையங்கள் எனப் படுகிறது. இந்த தகடு ஆசியாவில் மோதி பல்லாயிர்க் கணக்கான வருடங்கள் ஆனாலும் அதன் இயக்க வேகம் இன்னும் குறைய வில்லை.

நாடு

பூகம்பம் இந்தியாவிற்கோ அதன் மாநிலமான குஜராத்திற்கோ புதியது அல்ல.1935 ஆம் வருடத்திய நில அதிர்வு சர்வேப் படி பூகம்பம் தாக்க அதிக வாய்ப்புள்ள பகுதி குஜராத்திலுள்ள கட்ச்ரன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 1994ல் ஐ.நா வின் திட்டத்திற் கிணங்க மத்திய நகர்ப் புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழில் நுட்ப முன்னேற்ற கவுன்சில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கை சீற்ற ஆபத்து பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தியது. இதன் முடிவுகள் 1998ல் வல்னரபிலிட்டி அட்லஸ் ஆப் இந்தியா என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்டது. நாட்டின் வெவ்வேறு கட்டுமானங்களால் ஏற்படும் ஆபத்துகளை அது விவரித்து ஒவ்வொரு பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நுட்பங்கள், விதிமுறைகள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கான பரிந்துரைகள் இதில் அடங்கியுள்ளன். வேறு எந்தநாட்டிற்கும் இப்படியொரு மேப் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மாநிலம் குறித்தும் இரு சிறு தொகுதி நூலகள் அந்தந்த அரசுகளுக்கு அனுப்பபட்டன. இது வரை ஒரு மாநிலம் கூட இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

குஜராத்தின் கட்ச் பகுதி பூகம்ப மேப்பின் V Zone என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (அதாவது அதிக தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதி). டில்லி, மும்பை, மற்றும் பல நகரங்கள் இந்த ஆல்பைட் பெல்ட்டில் உள்ளது என்னும் உன்மை பயங்கரமாக உள்ளது. வட இந்தியாவில் இமய மலைப் பகுதியில் 300 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனிடையே 20 வருடங்களுக்கு ஒரு முறை 8 ரிக்டர் அளவுள்ள பூகம்பம்மும் ஏற்படும் என்றும் கூறப் படுகிறது. வட இந்தியாவில் கங்கைச் சமவெளிப் பகுதியில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வேண்டிய காலக் கெடு கடந்து விட்டதால் அது எந்நேரமும் ஏற்படலாம் என்று கொலடாரோ யுனிவர்சிட்டியின் பேராசிரியர் டாக்டர் ரோஜர் பில்காம் கூறியுள்ளார். மேலும் அதன் அதிர்வு 7.8 லிருந்து 8.3 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ஏற்படுவதால் அதன் அழிவும் பெரிதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

கட்ச் பகுதியில் வந்த பூகம்பம் முன் அறிவிப்போடுதான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24 ஆம் தேதி கட்ச்ரன் பகுதியில் 4.3 அளவுள்ள பூகம்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து புவனேஸ்வரிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டது. காந்தி நகரில் வாழும் நிபுணர் பி.என் நாயரின் குரலுக்கு செவி மடுத்து ஒரு சில கோடி செலவிட்டு ஒரு நில அதிர்வு சர்வே நடத்தியிருந்தால் இன்றைக்கு ஏற்பட்ட விலை மதிப்பற்ற உயிர்ச் சேதத்தையும் பொருள் இழப்பையும் தவிர்த்திருக்கலாம்.

பூகம்பம் ஒரு போதும் மக்களை கொல்வதில்லை. மோசமான கட்டிடங்கள் தான் கொல்கின்றன. பாதுகாப்பு சட்டங்களை அமலாக்க மக்களிடையெ விழிப்புணர்வு தேவை. அரசாங்கத்தின் கடமையும் , மக்களின் உணர்வும் மங்கும் போது இயற்கையின் சீற்றம் உயிர்ச் சேதமாய் உணரப் படுகிறது. அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் மக்கள் தங்கள் சமாதிகளை தாங்களே கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. கட்ச் பகுதியில் இரண்டு மாடி கட்டிடங்களுக்கு மேல் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. மக்கள் செவி சாய்க்கவில்லை, அரசாங்கம் வலியுறுத்தவில்லை, விதி விடவில்லை.

1906 ல் காங்க்ரா 20000 பேர் 8.0 R
1930 ல் துப்ரி 100 பேர் 7.1 R
1934 ல் பீகார் 14000 பேர் 8.3 R
1950 ல் அஸ்ஸாம் 1500 பேர் 8.6 R
1958 ல் அஞ்சார் 115 பேர் 7.0 R
1967 ல் கொய்னா 200 பேர் 6.7 R
1988 ல் பீகார் 1005 பேர் 6.6 R
1991 ல் உத்தரகாசி 215 பேர் 6.6 R
1993 ல் லாக்தூர் 10000 பேர் 6.3 R
1999 ல் சாமோலி 105 பேர் 6.8 R
2001 ல் புஜ் 1,00,000 பேர் 6.9 R

உலகின் மிகப் பெரிய பூகம்பம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி சீனாவில் ஏற்பட்டது. இதன் அளவு 9.5 R. இந்த பூகம்பத்தில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் இரண்டு நிமிடங்களில் உயிர் இழந்தனர்.

வீடு

பூகம்பத்தால் ஏற்படும் உயிரிழப்பிற்கு வீடுகளே காரணம்.ஆகவே வீட்டை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நில நடுக்கத்தால் மூன்று வெவ்வேறு திசைகளில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் கட்டிடங்கள் தாறுமாறாக ஆடுவதால் விழுகிறது.ஆகவே வலுவான கான்கிரீட் தூண்களும், அஸ்திவாரமும் முக்கியம். சுவர்களும் கான்கிரீட் அமைப்புடன் பின்னப் பட்டிருக்க வேண்டும். அடுக்கு மாடி கட்டிடங்கள் பூகம்ப பகுதியில் கட்டக் கூடாது. கட்டிடங்கள் நடுவில் எடை கூடியும் ஓரங்களில் எடை குறைவாகவும் உள்ள முறையில் கட்டப் பட வேண்டும். சுத்தமான ஜியோமிதி வடிவ முறையில் (சதுரம், செவ்வகம், முக்கோணம் ) உள்ள கட்டிடங்கள் அதிச்சியை தாங்கக் கூடியவை. துருத்திய வடிவங்கள், ஒழுங்கற்ற வடிவஙகள், அஸ்திவாரமில்லாத இணைப்புகள் பூகம்பத்தால் அதிகம் பாதிப்படையும். வீடுகளின் வாசல்கள் எளிதான முறையில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விரைந்து வந்து சேரக் கூடியதாக இருக்க வேண்டும்.

மக்கள்

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. நமது வசிப்பிடத்தின் பூகோள ரீதியான பாதிப்புகளை தெரிந்து நீர், காற்று, நெருப்பு, பூகம்பம் ஆகியவற்றால் பாதிக்காதவாறு வீட்டை அமைக்க வேண்டும். திறமையான என்ஞீனியரின் மேற்ப் பார்வையில் வீட்டை கட்ட வேண்டும். பூகம்ப அறிகுறிகள் ஏற்பட்டால் மினசாரம், தண்ணீர் கேஸ் ஆகியவற்றை நிறுத்தி விட வேண்டும். செல்லப் பிராணிகளின் விநோத நடவடிக்கைகளை கூர்ந்து கவணிக்க வேண்டும்

தமிழகத்தில் திருப்பூர் அருகில் பூலாத்தூரில் உள்ள நிபுணர் டி.எஸ் ஆனந்தன் என்பவர், “ நான் பூகம்பத்தை பற்றி குறந்தபட்சம் 2 மணி நேரத்திற்கும் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு முன்பும் அது எங்கே ஏற்பட போகிறது என்று அறிவிப்பேன்” என்று சவால் விடுகிறாரே. அவரது கூற்றில் உள்ள உன்மையை அரசு ஆராய்ந்து அறிந்து பயன் படுத்த முன்வர வேண்டும்.இன்னொரு பேரழிவு ஏற்படாதிருக்க பாடு படுவோம்.

பழனி போட்டோ கிளப்பிற்காக,
கட்டுரையாளர்:
திரு ஆர் சந்திரசேகர்
விக்னேஸ் ஸ்டூடியோ,
பழனி.





இந்தக் கட்டுரை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்காக நிவாரண நிதி திரட்டும் முகமாக பழனியில் 2001ல் போட்டோ கிளப்பினர் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது வந்திருந்த மக்களுக்கு பூகம்ப விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அளிக்கப் பட்ட செய்திக்குறிப்பு.



மேலும் படிக்க...!
top