பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
............கவிஞர் வைரமுத்து.
ஆமாம் மனிதன் உணர மறுக்கிறான், ஏனென்றால் இந்த யுத்தம் மனிதனாக இருக்கும் போது ஆரம்பித்தது அல்ல. ஒரு செல் உயிரிகளாக பூமியில் பரிணமித்த நாளில் ஆரம்பித்தது இந்த ஆக்கிரமிப்பு யுத்தம்.
இது முதலில் சாகா வரத்திற்கான போராட்டமாக ஆரம்பித்து, அதை அடைந்தும் திருப்தி இல்லாததால் பின்னர் பூமிபரப்பின் மீதும், பரப்பின் மீதுள்ள அனைத்து நகரும், நகராப் பொருட்களின் மீதான சர்வ அதிகாரத்திற்கான யுத்தமாக மாறிவிட்டது.
இது தனி மனித போராட்டம் அல்ல. மேலும் கவிஞர் கூறியது போல் மண், ஜெயிப்பதற்கு இது ஒன்றும் கடைசி யுத்தமும் அல்ல. மண்ணின் மீதான யுத்தத்தில் என்றாவது ஒரு நாள் தனது வாரிசுகளால் வென்று விடலாம் என்று மனிதன் தொடர்கிறான்.
ஒரு செல் உயிரியாக இருந்தது முதல், மனிதனாக வளர்ந்த பின்னும் போராடிக் கொண்டிருக்கிறான். இதற்கிடையில் போட்டியில் உடன் வளர்ந்த உயிரினங்களுடன், வெற்றிக்காக தான் எடுத்த, விட்டு வைத்த, அவதாரங்களின் மிச்சங்களும், எச்சங்களும் இப்போராட்டத்தில் நன்பனாகவும், எதிரியாகவும் களத்தில் உள்ளன.
இந்த யுத்தத்தின் போக்கு மனிதனுக்கு சாதகமாக போய்க் கொண்டிருப்பதை உணர மறுத்துவிட்டு அத்தனை உயிரிகளும் தாவரங்களும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றன. இருந்த போதிலும் மனிதன், போராட்டத்திற்கு இடையிலும் தோற்றுப் போன எதிரிகளையும் நன்பர்களையும் வரலாற்று மிச்சங்களாகவும் சான்றுகளாகவும் பாதுகாக்கக் கற்றுக் கொண்டான்.
உலகில் தோன்றியது முதலில் காற்றோட்டம், பின் நீரோட்டம் அதற்கு அடுத்துதான் உயிரோட்டம். அந்த உயிரோட்டத்தின் நிகழ்கால அத்தியாயத்தின் கதாநாயகன் மனிதன் தான். அந்த மனிதனின் பிறப்பிலுள்ள, இதுவரை யாரும் சொல்லாத ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். ஆனால் அதற்கு முன் சிறிது பெளதிகம், வேதியல், உயிரியல், ஆகியவற்றை மேலோட்டமாக தெரிந்து கொண்டால் எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள். ஆகையால்தான் நான் பயணித்த அதே பாதையில் உங்களையும் அழைத்து செல்ல விழைகிறேன்.
ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும், சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இதனால்தான் "கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே" என்றான் போலும். ஏனென்றால் "பலன்" என்ற பெயரில் தான் தலையிட வேண்டிய திருக்குமே என்றுதான் அப்படிக் கூறினான் போலும். அவ்வெடிப்புதான் (BIG BANG) எனும் பெரு வெடிப்பாகும். இது எப்படி இருக்கு!. அப்பழுக்கில்லா கடவுள் கொள்கை வந்துவிட்டது. படைப்பு விஷயத்தில் தான் எல்லா மதங்களும் கோட்டை விடுகின்றன. இதில் (தமிழ்நாட்டு) பகுத்தறிவு வாதிகளின் அடுத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
ஆண்டவன் இருக்கிறரா? எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? இதற்கு பதிலே ஒரு கேள்வியாகத்தான் அமையும். உங்கள் கற்பனையில் உள்ள ஆண்டவனா? அல்லது என்னுடைய அனுமானத்தில் உள்ள ஆண்டவனா? என்ற வகையில் கேள்வி அமையும்.
ஏனெனில் அவரவர் அறிவுக்கும், கற்பனாசக்திக்கும், தகுதிக்கும் தக்கவாறுதான் கடவுளை நினைத்துக் கொண்டு சமயத்தில் அசட்டுத் தனமாகக் கேள்விகள் கேட்பார்கள். சிலருடைய ஆண்டவன் ரொம்ப எளிமையாக இருப்பார். ஆதலால் மற்றவர்களின் கேள்விகளுக்கு தாக்கு பிடிக்கமாட்டார். ஆனால் என்னுடைய ஆண்டவனின் வரையறை இதுதான் ”ஆதியும் அந்தமும் இல்லாதவர். நீக்கமற நிறைந்திருப்பார். மொத்தத்தில் எந்த வரையறைக்கும் உட்படாதவர்.” இதில் உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கும். உங்களது அடுத்த கேள்வி இதுவாக இருக்கும்.
சரி அவரால் உங்களுக்கு என்ன நன்மை?
அவரை நான் உணர்ந்தது கொண்டதுதான் எனக்கு நன்மை.
உங்களுக்கு நன்மை ஏதும் செய்கிறாரா?
எனக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம், உத்தரவாதம் ஏது?.
அவரை ஏன் வணங்க வேண்டும்?
யார் சொன்னது வணங்க வேண்டுமென்று.?
எங்கள் கிராமத்தில் ஒருவர் நாய் வளர்த்தார். அவர் வீட்டின் வெளியில்தான் படுப்பார். கிராமங்களில் ஆண்பிள்ளைகளும் வயதானவர்களும் வீட்டிற்கு வெளியே திறந்த வெளி திண்ணையில்தான் படுப்பார்கள். அந்த வகையில் அவர் அருகில் அவர் வளர்க்கும் நாயும் படுத்திருக்கும். ஒருநாள் காலையில் அவர் எழுந்து பார்த்த போது, அவர் அருகில் அவரது நாயும் ஒரு பெரிய நாகப் பாம்பும் இறந்து கிடந்தது. அவைகள் கிடந்த விதத்திலிருந்து அந்த பாம்பும் நாயும் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இரண்டும் இறந்திருக்க வேண்டுமென்று தெளிவாக யூகிக்க முடிந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெகுநாட்கள் கழித்து நான் கிராமத்திற்கு சென்ற போது அவரது வீட்டின் முன் நாயின் சிலை ஒன்றை வைத்து அவர் வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் அவரைப் பார்த்து ”ஐயா, நாய் உங்களை கும்பிடச் சொல்லியதா?” என்று கேட்க வில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும், ஒவ்வொரு மனிதனும் நாய்க்கோ, மனிதனுக்கோ, கடவுளுக்கோ, நன்றியறிதலை, தனக்குத் தெரிந்த வகையில் எப்படியாவது கான்பிக்கிறான். அதில் வணக்கமும் ஒரு முறைதான். கருணாநிதியும் வீரமணியும் அடுத்தவர்களிடம் என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும் கற்சிலைக்கு மாலையிடும் போது பகுத்தறிவை அடகு வைத்து விட்டு அதைத்தான் செய்கிறார்கள்.
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சில ஐ.டி இளைஞர்கள் ரொம்பத் இறுமாப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தாய் தகப்பனுக்கோ மற்ற யாருக்கும் கீழ்படிதலுடன் கூடிய மரியாதை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்கள். ஆனால் கடைசியில் கோபிநாத் “அப்படி மரியாதை செலுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் யாருக்கு செய்வீர்கள்” என்று கேட்டதற்கு தங்களுக்கு தாங்கள் செய்து கொண்டிருக்கும் அந்த வேலை கிடைக்க காரணமாயிருந்த நபர்களுக்கு மட்டும் மரியாதை செய்வார்களாம். நன்றியறிதலைக் காட்டுவதில். அரசியல் வாதிகளை விட கேவலமாக இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள்
எனது புரியாத கேள்விகளுக்கு அவன் தீர்வாக இருக்கிறான். கணக்கில் தெரியாத மதிப்பிற்கு X எனக் கொள்வதில்லையா அது போல் எனக்கு X ஆக இருந்து தீர்வுகளைத் தருகிறான். ஆகவே தற்போது அவனை X ஆக கொள்(கிறேன்)வோம். எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகிச் சொல்வது போல் தெரிவதால் மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.
உயிருக்கும், அண்டத்திற்கும் தோற்றம் உண்டு என்பது அறிவியலின் உறுதிப்பாடு. அண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை.
பெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா? ஆம் ஐன்ஸ்டீன், டீசிட்டர், எட்வின் கப்பிள், ஜார்ஜ் லாமாய்ட்ர் போன்ற அறிவியல் அறிஞர்களால் விரியும் அண்டமா? அல்லது நிலையான அண்டமா? என்ற இருபது வருட வாதப் போராட்டத்திற்கு பின் விரியும் அண்டம் தான் என நிரூபிக்கபட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள், (Black Holes) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், (சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஒரு பலூனை ஊதும் போது அது எவ்வாறு மையத்தை விட்டு விலகிச் சென்று விரிவடைந்து கொண்டிருக்கிறதோ அது போன்று அண்டம் விரிவதை (3D) முப்பரிமானத்தில் யோசித்துக் கொள்ளுங்கள். தூரத்திலுள்ளவை அதி வேகமாகவும் அருகிலுள்ளவை குறைவான வேகத்திலும் விலகிச் செல்கின்றன.
ஆகவே வெடிப்பு ஒரு மையத்தில் தான் ஏற்பட்டது என்பது வெளிப்படையான உன்மை. சரி வெடிப்பு எப்பொழுது ஏற்பட்டது? அதையும் எளிதாக சிறிய கணக்கீட்டின் மூலம் கண்டுபிடித்து விடலாம். எப்படி என்றால் அவை விலகிச் செல்லும் வேகத்தை இன்றைய வானியல் கருவிகளின் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். வேகத்தின் மூலம் தூரத்தை அளவிடலாம் என்பது பாலபாடம் நாம் இன்று மையத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளோம் என்பதையும் கண்டுபிடிக்கலாம். இவற்றை வைத்து பெருவெடிப்பு ஏற்பட்டதிலிருந்து என்ன நடந்தது என்பதை தோராயமாக கூறி விட்டனர். ஆனாலும் முதல் மூன்று வினாடிகள் என்ன நடந்தது எனச் சொல்லுவதற்கு விஞ்ஞானம் தினறுகிறது. அதைக் கண்டு பிடித்து விட்டால் இப்பிரபஞ்சத்தின் சூட்சும முடிச்சு அவிழ்ந்துவிடும்.
இது எப்படி இருக்குது என்றால் துப்பாக்கியிலிருந்து வெடிச் சத்தத்துடன் குண்டு வெளி வருவது தெரிகிறது, ஆனால் அதற்கு முன் துப்பாக்கியின் சேம்பரில் என்ன நடந்தது என்பது தெரியாது. துப்பாக்கியின் சேம்பரில் ட்ரிக்கர் பட்டவுடன் வெடிமருந்து பற்றிக் கொண்டு வெடித்து குண்டை வேகத்துடன் வெளியேற்றுகிறது. அது போல் இந்த பெருவெடிப்பில் எது ட்ரிக்கர்? யார் அழுத்தியது? எவ்வாறு பற்றியது? என்ற சமாச்சாரங்கள் தான் இன்றைய இயற்பியலரின் தலையாய பிரச்னை.
அதற்காகத்தான் Large Hadron Collidor என்னும் அதிவேகத் துகள் முடுக்கியும் அதற்கான பரிசோதனைச் சாலையும் சுவிட்ஜர்லாந்தில் உள்ள செர்ன் என்னுமிடத்தில் துவக்கப் பட்டுள்ளது. அது ஆரம்பித்த உடனே தகராறு செய்துவிட்டது. அது ஒரு தனிக்கதை. தற்போதைய அவர்களது முடிவுகள், (Neutrino,Muon,Kuon,Tau) நியூட்ரினோ, முயுவான், குயான் போன்ற சில துகள்கள் பற்றிய சில கொள்கைகளை உறுதி படுத்தியுள்ளது. இன்னும் அந்த அதிவேகத் துகள் முடுக்கியின் வேகம் முடுக்கப் பட வேண்டியதிருக்கிறது. அதன் பின்தான் மிகவும் எதிர்பார்த்த பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
வெடிப்புக்கு பின் தான் அண்டத்தில் வெளியும், காலமும் (Space, Matter & Time) உருவானது, உடனே காலம் இயங்கத் தொடங்கி விட்டது.
என்னது வெளி (Space) உருவானதா? வெளி எதற்குள் உருவானது?,
ஆமாம் வெளி உருவானது அதற்கு முன் திசையற்ற ஒருமைப் (Singularity) புள்ளிதான் இருந்தது.
ஒருமைப் புள்ளி என்றால் என்ன? அது எதனுள் இருந்தது?
ஒருமைப் புள்ளி மட்டும்தான் இருந்தது, ஆளை விடுங்க.
சரி காலம் இயங்கத் தொடங்கியதா? அப்படி என்றால் அது வரை காலம் உறங்கியதா?
காலம் உறங்கவில்லை, காலமே அப்பொழுதான் உருவானதாம்.
எடுத்தவுடனே இத்தனை குழப்பமா?, ஆமாம் இவைகளுக்கு எல்லாம் எடுத்துக் காட்டு சொல்ல முடியாத ஒற்றை நிகழ்வுகளாக இருப்பதால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. இவைகளெல்லாம் கணக்கீடுகளின் படிதான் விளக்க முடியும். ஏனெனில் கணக்கீட்டின்படி எல்லாம் ஒத்துப் போகிறது. ஆனாலும் இவையெல்லாம் நமது அன்றாட அறிவின் கற்பனைத் திறனுக்கு அப்பாற்பட்டதுதான்.
எப்பொழுதும் காலத்திற்கு உள்ளேதான் வரலாறு இருக்கும். இப்பொழுது காலத்திற்கே வரலாறா? முரண்பாடாகத் தெரிந்தாலும் இப்பொழுது ஏற்றுக் கொள்ளுங்கள் வேறு வழியில்லை. பிற்காலத்தில் இன்னும் புரியுமாறு விளக்கங்கள் வரலாம்.
காலத்தைப் பற்றி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ”காலத்தின் சுருக்கமான வரலாறு” (Brief History of Time) எனும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். உலகில் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட அறிவியல் புத்தகங்களில் அதுவும் ஒன்று. நானும் படித்தேன், படிக்கும் பொழுது கணக்கின்படி புரிகிறது ஆனால் விளக்கிச் சொல்லும் அளவுக்கு புரியவில்லை. முடிந்தால் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டவர்கள் தமிழில் (பிளாக்) எழுதி தமிழுக்குப் பெருமை சேருங்கள்.
ஆற்றல், விதிகள், விசைகள், இவைகளின் கலப்பினால் பெருவெடிப்புக்கு பின் நிகழ்வுகள் ஒன்றுக்குகொன்று சம்பந்தபட்டு தொடர் வினையாக (Chain reaction) நிகழ்ந்து கொண்டு இருப்பதால் ஒவ்வொன்றுக்கும் அணு அளவேணும் தொடர்பிருக்க வேண்டும் (Chaos theory). இதில் சில முக்கியமான நிகழ்வுகள் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு தெரியும் வகையில் பதிவு செய்யப்படுகிறது. அல்லது அந்த பதிவுகளின் சூட்சுமம் மட்டும் நமக்குப் புரிகிறது. இங்கு கமலின் தசாவதாரம் நினைவுக்கு வந்தால் நீங்களும் இது விஷயம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.
இடைவிடாத இந்த வினையின் வேகம் ஒரே சீராக இல்லாமல் தாறுமாறாக இருக்கிறது. இதிலுள்ள சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டால் அண்டத்தின் நிகழ்வுகள் அத்தனைக்கும் அதுவே காரணமாகிவிடும். அதை நான் கண்டு பிடிக்காமல் விட மாட்டேன் என்று இருபத்திரண்டு வயதில் மரணத்தை சந்திக்க வேண்டியவர் கடந்த 37 வருடங்களாக மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறார். அவரது உதவிக்கு, உலகின் கம்ப்யூட்டர் ஜாம்பவான்களாகிய மைக்ரோசாப்ட்டும், இண்டெல்லும் இணைந்து அவருடைய மெளனமான சைகளை மொழியாக மாற்றி, அவர் கூறும் கருத்துகளை உலகுக்கு அளிக்கத் தேவையான கருவிகளை செய்து கொடுத்துள்ளனர். வாய் பேச முடியாமல், எழுதமுடியாமல், நடமாட முடியாமல் அதி நவீன கண்டு பிடிப்புகளின் உதவியால் கருத்துக்களை மட்டும் பரிமாறிக் கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் என்னும் முதன்மை அறிவியலார் ”காலத்தோடு” அறிவாலும், உடம்பாலும், பலவழிகளில் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். என்னுடைய முயற்சியும் அந்த சூட்சுமத்தை கண்டு பிடிப்பதுதான். படித்து முடித்த பின் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.ஒரு வேளை எல்லாவற்றிற்கும் முற்றிலும் மாறான ஒரு கருத்தை நீங்கள் வைக்கலாம். பொறிதட்டினால் நீங்களும் ஐன்ஸ்டீன் தான்.
ஒரு வேளை இயற்கை தனது ரகசியங்களை கூற முற்படுவோரை கண்மூடித்தனமாக தாக்குகிறதோ என்று கூடத் தோன்றுகிறது. அதுவும் தியரி ஆப் ரிலேட்டிவிட்டியை கையில் எடுத்துக் கொண்டதோ என சந்தேகமாக இருக்கிறது. இங்கே வயதும் ஞானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதோ என்பது போல் ஒன்று கூடினால் மற்றொன்று குறையும் என்பது போல் தோன்றுகிறது. தொலைபேசிக்கு வித்திட்ட கிரகாம் பெல்லின் வாரிசுகள் செவிடர்களாம். அறிவு ஜீவிகள் சிறிய வயதிலேயே காலமாகி விடுகின்றனர் என்பதற்கு ராமானுஜம், பாரதியார், விவேகானந்தர், ஏசுகிறிஸ்து ஆகியோரை உதாரணமாக கொள்ளலாம். இவர்களெல்லாம் ஏதோ ஒரு ரகசியத்தை சொல்லுவதற்கு முன்பே இயற்கை சதி செய்து விட்டது போலும். ஐன்ஸ்டீன் பற்றி நீங்கள் கேட்பது தெரிகிறது, அவர் என்ன சொல்ல வந்தார் என்று இயற்கைக்கே புரியவில்லை போலும்! அதனால் தான் அவரை பழிவாங்காமல் விட்டு விட்டது. ஐன்ஸ்டீன் சொன்னதை ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஏற்றுக் கொண்டார். எளிய நடையில் எல்லோருக்கும் (இயற்கைக்கும்) புரியும்படி விளக்கியது தான் அவரது தவறோ ?. ஒருவேளை ஹாக்கின்ஸ் ஒரு சராசரி மனிதராக இருந்திருந்தால் இன்றுள்ள பல குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்திருக்குமோ?.
வெடிப்பினால், தோன்றிய முதல் முழுப் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயு தான் எங்கும் இருந்தது. பின்னர் வெப்பத்தினாலும் சேர்க்கையினாலும் ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பின்னர் சேர்க்கையினாலும், பல வகை விசைகளினாலும் காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(Black Holes) நட்சத்திரங்கள், கிரகங்கள், தனிமங்கள், கூட்டுப் பொருட்கள் உருவாயின.
கூட்டுப் பொருட்கள், தனிமங்கள், என்றால் என்ன? இங்கு கூறப்போகும் உதாரனம் விஷயத்தை புரிந்து கொள்வதற்கானது. இது சாதாரண கண்களைப் பொறுத்த வரைதான் சரியாக இருக்கும். உதாரணமாக பென்சில் என்பது கூட்டுப்பொருள், அதைப் பிரித்து ஆராய்ந்தால் அதில் இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று கரித்தண்டு, மற்றது மர உருளை. மரத்தை மேலும் பிரிக்க முடியாது பிரித்தால் மரம் தான் மிஞ்சும். கரியை பிரித்தாலும் அதே நிலைதான். ஆகவே பிரித்தால் வேற்றுமை இல்லாமலும் தன்மை மாறாமலும் இருப்பது தான் மூலப்பொருளாகிய தனிமம். ஆக பென்சிலுக்கு மூலப்பொருளாக இருப்பவை கரியும், மரமும் தான். (ஆனால் மர உருளையை வேதியல் முறைப்படி ஆராய்ந்தால் அது ஐந்துக்கும் மேற்ப்பட்ட தனிமங்களால் ஆனது. அது போன்று கரித்தண்டில் கரி மற்றும் பசைப் பொருட்கள் உள்ளது).
நீர் ஒரே பொருளால் ஆனது போல் தோன்றினாலும் வேதியல் முறையில் பார்த்தால் அது ஹைட்ரஜன், ஆக்ஸிசன் எனும் இரண்டு தனிமங்களால் ஆனது.
சமையல் உப்பை நீங்கள் சாதாரண முறையில் எவ்வளவுதான் பிரித்தாலும் கடைசி துகள் வரை உப்பாகத்தான் இருக்கும், ஆனால் வேதியல் முறையில் பிரித்தால் சோடியம், குளோரின் என்னும் இரு தனிமங்களால் ஆனது எனத் தெரிய வரும். ஆகவே நீர், சமையல் உப்பு இவை இரண்டும் (Compounds) கூட்டுப் பொருட்கள். ஹைட்ரஜன், ஆக்ஸிசன், சோடியம், குளோரின் ஆகியவை அவைகளின் மூலப் பொருட்கள்.
பொருட்களை ஆராய்ந்த வேதியல் அறிவியலார்கள் அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் 92 (மூலப் பொருட்களால்) தனிமங்களால் தான் உருவாகியது என்று அறுதியிட்டுக் கூறிவிட்டனர். அதிலும் சில முக்கியமான ஒன்பது தனிமங்களின் கலப்பினால் தான் பூமியிலுள்ள 99 சதவீதப் பொருட்கள் உருவாகியுள்ளன. அந்த ஒன்பது தனிமங்களும், அவை பூமியில் உள்ள விகிதாச்சாரமும் இவைதான்,
இரும்பு 35.0%
ஆக்ஸிசன் 28.0%
மக்னீசியம் 17.0%
ஸிலிக்கான் 13.0%
நிக்கல் 2.7%
சல்பர் 2.7%
அலுமினியம் 0.6%
கால்சியம் 0.4%
மற்றவை 0.6%
மற்றவை என்றால், மீதமுள்ள கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம், பொட்டாசியம், குளோரின் மற்றும் எஞ்சியுள்ளவை அனைத்தும் சேர்ந்து 1% க்கும் குறைவுதான்
தொடரும்.......
மேலும் படிக்க...!