Previous
ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கும். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. சீட்டுக்கட்டில் ஒவ்வொரு வகையிலும் 13 சிட்டுக்கள் உள்ளது. வருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஒரு மாதத்திற்கு நான்கு வாரங்கள் இருப்பது போல், சீட்டின் வகைகள் நான்கு. மற்றபடி ராஜா-சூரியன், ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன், ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் ஜோதிடத்தையும், சதுரங்கத்தையும் பின்புலமாகக் கொண்டு உருவான விளையாட்டுதான் எனத் தெரியவரும்

வினோத்குமாரின் கேள்வி:
சூரியன் ராசா
சந்திரன் மந்திரி
சுக்கிரன் தளபதி
 சனி சிப்பாய்
செவ்வாய் குதிரை
ராகு கேது இல்லை
புதன் இல்லை.
யானை .. யார் குருவாக தான் இருக்க வேண்டும்...என நினைக்கேரன்.. என் புரிதல் சரியா?.

இன்னொரு கேள்வி .. சூரியன் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் ஏன் இரண்டாக உள்ளது..? 2 யானை , 2 தலைபத் i 2 குதிரை . ஏன்? ..

 பதில்: உங்களின் வரிசையில் சிறிய திருத்தம்.
 சூரியன்-ராசா
சந்திரன்-தளபதி
சுக்கிரன்-மந்திரி(மதகுரு)
செவ்வாய்-குதிரை
சனி-யானை

புதனுக்கும் குருவுக்கும் திருமணப் பொருத்தத்தில் இடமில்லை. புதனுக்கான விளக்கம் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது.
 http://chandroosblog.blogspot.in/2012/04/6.html 

குருவுக்கான விளக்கம் பின்னர் தருகிறேன். ஜோதிடத்தில் ராசியை, வீடு என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒவ்வொரு கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து உச்ச ,நீச, ஆட்சி வீடு எனக் கூறப்படும்.



கிரகங்கள் எல்லாமே நீள் வட்டப் பாதையில் சுற்றுவதை அறிவோம். அதிலும் பூமி வரிசைக் கிரமத்தில் மூன்றாவதாக உள்ளதாலும், மற்ற கிரகங்கள் எல்லாமே பூமியைப் பொறுத்து, ஒரு சமயம் மிக அருகிலும் (உச்சம்) அதற்கு நேர் எதிரான நிலையில் தூரத்தில் (நீசம்) அமைவதும் இயல்புதான்.

செவ்வாய் கிரகம் நமக்கு(பூமிக்கு) அருகில் இருக்கும் பொழுது சுமார் 4 கோடி மைல் தொலைவிலும் அதிக பட்ச தூரம் என்று வரும் பொழுது சுமார் 22 கோடி மைல் தொலைவிலும் இருக்கிறது. நீச (Aphelion) நிலையில் இருக்கும் பொழுது உச்ச (Perihelion) நிலையைப் போல் சுமார் 5 மடங்கு தூரத்தில் இருக்கிறது.


ஆனால் சந்திரன் பூமியையும், பூமி சூரியனையும் ஏறத்தாழ (low eccentricity) வட்டப்பாதையில் சுற்றுவதால், இவைகளின் உச்ச, நீச தூரத்திற்கிடையே வித்தியாசம் மிகமிகக் குறைவாக இருக்கும். சுமார் 1/8 (அரைக்கால்) பங்குதான். அதாவது பூமிக்கும் -செவ்வாய்க்கும் இருக்கும் வித்தியாசத்தில் 40ல் ஒரு பங்குதான்.

ஜோதிடப் படி பூமியை மையமாக வைத்துப் பார்க்கும் போது சூரியன் அனேகமாக ஒரு வட்டப்பாதையில் சுற்றுவது போல்தான் தெரியும். ஆதலால் சூரியனையும் சந்திரனையும் தவிர்த்து மற்ற எல்லா கிரகங்களும் ஒரு நேரத்தில் பூமிக்கு மிக அருகிலும் மற்றொரு சமயத்தில் மிக தூரத்திலும் இருக்கும்.

சூரியனும் சந்திரனும் பூமியை ஒரு சுமாரான (low eccentricity) நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால்தான் ஆட்சியாக ஒரே ஒரு வீடு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் மற்ற கிரகங்களை கணக்கிடும் போது அவைகளுக்கு அதி பயங்கர நீள்வட்டத் தன்மை உள்ளது.
கீழே உள்ள படத்தில் சந்திரன்,சூரியனின் பாதைகள் வட்டமாகத் தெரியும், ஆனால் பூமியை மையமாகக் கொண்டு எல்லாவற்றையும் சுழல்வதாகக் கற்பனை செய்து பாருங்கள்,அப்பொழுதுதான் உச்சம், நீசம் பற்றி புரியும்.


அவ்வாறு ஆட்சிவீடு அளிக்கும் போது சூரியனுக்கு சிம்ம ராசியையும் சந்திரனுக்கு கடக ராசியையும் வீடாக கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அடுத்து புதனுக்கு இரண்டு வீடும் சுக்கிரனுக்கு இரண்டு வீடும் அது போல் செவ்வாய், வியாழன், சனி ஆகியோருக்கும் தலா இரண்டு வீடு கொடுக்கப் பட்டுள்ளதை கீழே உள்ள படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி வீடு படம்
அதாவது 12 வீடுகளை, ஐந்து கிரகங்களுக்கு தலா 2 வீடும் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடும் ஆக கொடுக்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிவது என்னவென்றால், சூரியனையும் (நட்சத்திரம்) சந்திரனையும் (உபகோள்) மற்ற கிரகங்களில் இருந்து ஏதோ ஒருவகையில் வேறுபடுத்தி வைத்துள்ளனர். இதனால் சந்திரனையும் "கிரக" லிஸ்ட்டில் இருந்து விலக்கி விடலாம் என்பதை பகுத்தறிவு வாதிகள் புரிந்து கொள்ளட்டும்.

செஸ்ஸில் ராஜா, மந்திரி ஆகியோர் ஒவ்வொருவர்தான் உள்ளனர். ஆனால் மதகுரு,(சுக்கிரன்) குதிரை,(செவ்வாய்) யானை(சனி) ஆகியோர் இரண்டு பேர் உள்ளனர். இதில் பிரதானமாக சூரியன் ராஜாவாகவும் சந்திரன் மந்திரியாகவும் கற்பிக்கப் பட்டதில் யாருக்கும்மாற்று கருத்து இருக்க முடியாது. மாற்றுக் கருத்து இருந்தால் கீழே உள்ள விளக்கத்தினால் மாற்றிக் கொள்ளவும்.

ஜாதகத்தில் லக்னத்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. லக்னம் என்பது முற்றிலும் சூரியனைச் சார்ந்துள்ளது. சூரியன், லக்னம், ஆகிய இரண்டும் பூமியில் ஜாதகரின் பிறந்த இடத்தைப் பொறுத்து சூரியனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது மறைமுகமாகவும், துல்லியமாகவும் குறிப்பிடுகின்றது. சூரியனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் ( அது ஒரு *ஹைடெக் சமாச்சாரம் ) லக்னம், ராகு, கேது ஆகிய மூன்றும் பயன்படுத்தப் படுகிறது என்பது ஜோதிடத்தில் தெளிவுள்ளவர்களுக்குப் புரியும். வாழ்க்கையின் முழு பலனும் லக்னத்தை வைத்துத் தான் சொல்லப் படுகிறது. அதாவது உயிர், உடல் ஆகியற்றை லக்னம் குறிப்பிடுகிறது.

 *http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html.

இது போன்ற துல்லிய கணக்கீடுகள் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்களுக்கு கிடையாது. ஆகவே சூரியன்தான் ராஜா, சந்திரன்தான் மந்திரி. ஜாதகத்தில் சூரிய, சந்திரர்களுக்கு ஆட்சி வீடாக தலா ஒரு வீடுதான் (கடகம் ,சிம்மம்) கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவேதான் செஸ்ஸில் ராஜா, தனது சிம்மம் ஆகிய ஒற்றை வீட்டில் இருந்து ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். சூரியனின் சுழற்சி ஒருவருடம் என்பதால் அது ஒரு கட்டம்தான் நகர்த்த முடிகிறது.

சூரியனுக்கு அடுத்ததாக சந்திரனுக்குத்தான் ஜாதகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அறிவையும் ஆரோக்கியத்தையும் குறிப்பிடுவது இராசிதான். இராசி என்பது முற்றிலும் சந்திரனைச் சார்ந்துள்ளது. அதனால்தான் சந்திரனை ”மதி” என்றும் கூறுகிறார்கள். சந்திரன், ராசி, ஆகிய இரண்டும் பூமியைப் பொறுத்து சந்திரனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது, மறை முகமாகவும் சந்திரனின் நிலையைத்தான் குறிப்பிடுகின்றது . சந்திரனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் இராசி, ராகு கேது ஆகிய மூன்றும் பயன்படுத்தப் படுகிறது. ஆகவே சந்திரன்தான் மந்திரி. சந்திரன் தனது ஒற்றை வீடாகிய கடகத்தில் நின்று ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். ஒருவருடத்தில் 13 முறை சுற்றி விடுகிறார்.
தொடரும்............
இரா.சந்திரசேகர்,
பழனி.

மேலும் படிக்க...!
top