பாகம் 8

வினோத்குமாரின் கேள்வி:
 சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?.

 பதில்:
உண்மையில் சனிக்கிரகமும் அலிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும். ஒரு வேளை ஆதலால்தான் இந்த டபுள் இம்பாக்ட் ஆக இருக்கலாம். ஆனாலும் அலித்தன்மையை இந்த ஒரு கட்டத்தின் நிலைமைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கமுடியாது


வினோத்குமாரின் கேள்வி:
ஆட்டத்தில் மிக முக்கியமான காய்கள் சிப்பாய்கள் .. நான் சிப்பாய்கள் தான் சனியா என கேட்டதற்கு காரணம், மெதுவாக ஆனால் வலுவாக நகரும்.எட்டாம் வீட்டை அடைந்தால் மிக வலுவான மந்திரியாக உருவெடுத்து , எதிராளிக்கு மரணம் தரும் . என்றெல்லம் இருப்பதால்தான். நீங்கள் சனியை யானையாக உருவகப படுத்தியது தவறுதானே?.

 பதில்:
 ஜோதிடத்தைப் பொறுத்த வரை கோச்சாரத்திலும், இலக்கினத்திலும் முக்கிய பங்காற்றுவது சனிதான். கோச்சாரத்தில் ஏழரைச்சனி என்று பெயர் பெற்றவனை, ஆயுளுக்கு காரணமானவனை, சனியன் என்று அன்றாட வாழ்வில் பெயர் எடுத்தவனை, சதுரங்கத்தில் முக்கியமான ஆளாகக் கருதிச் சேர்க்கவில்லை என்றால் சதுரங்கம் முழுமை அடையாது. ஆகவேதான் சனி சிப்பாய் அல்ல என்றேன். நீங்கள் கூறுவது போல் செஸ்ஸில் சிப்பாய்க்கு அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் பொதுவாக சிப்பாய்கள்தான் எளிதாகப் பலி கொடுக்கப் படுகிறார்கள்.

அதுமில்லாமல் சிப்பாய்க்கு எண்மதிப்பு ஒன்றுதான். ஆனால் யானைக்கோ மதிப்பு ஐந்து. தளபதிக்கு(9) அடுத்த மதிப்பு யானைக்குத்தான்(5). ஆகவேதான் ஆயுள்காரகனாகிய சனீஸ்வரனுக்கு யானையின் சிறப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.. சிப்பாய்க்கு தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.


வினோத்குமாரின் கேள்வி: 
சூரியன் ஆண்டுக்கு ஒரு சுற்று என்பதால் ராஜா ஒரு முவ் என்றால் . ராஜா, சிப்பாய், குதிரை தவிர மற்றதெல்லாம் அளவில்லாத முவ் தானே இது எப்படி ?.
பதில்:
சனியின் சுழற்சி காலம் 30 வருடங்கள். இவையெல்லாம் எட்டு கட்டங்களுக்கும் அதிகமாக இருப்பதால் எல்லை வரை செல்கின்றன. செவ்வாய் 4 வருடங்கள் என்பதால் அதன் இயக்கம் நான்கு கட்டங்களுக்குள் அமைந்து விடுகிறது. சுக்கிரனின் சுழற்சிக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் பிற்காலத்தில் மாற்றப் பட்டிருக்கும்.

கேள்வி: 
உங்கள் கூற்றுப் படி ஜோதிடத்தில் திருமணத்திற்கு காரகன் எது? அது சதுரங்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது.?.

பதில்:
 திருமண பொறுப்பாளன் அல்லது களஸ்திர காரகனான சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருமணப் பொருத்தம் பார்க்க முடியும். பையன்கள் யாராவது அழகான பெண்களுடன் பழகுவதைப் பார்த்துவிட்டால் போதும், உனக்கென்னடா சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் என்பார்கள். பெண்கள் சம்பந்தப் பட்ட விஷயம் என்றால் சுக்கிரனுக்குப் பங்குண்டு. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளில் ராஜாவுக்கும், மந்திரிக்கும் இடத்திலும், வலத்திலும் (ரிஷபமும், துலாமும்) மதகுருவாக உட்கார்ந்து சண்டையில் உதவியாக இருக்கிறார். சூரிய சந்திரர்களுக்கு அடுத்த இடம் கொடுக்கப் பட்டதில் இருந்து அவரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம். (புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தத்தில் சுக்கிராச்சாரியார் என்பவர் அசுர குருவாக இருந்து அசுரர்களுக்கு துணையாக இருப்பார்..)

கேள்வி: 
அது சரி மற்ற காய்களுக்கும் கிரகங்களுக்கும் எப்படி ஒப்பிடுவீர்கள்?.
பதில்:
புதன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், அதனுடைய சுழற்சிக் காலமாகிய 88 நாட்களும், அதனுடைய உருவ அமைப்பும் காரணமாகும் அடிக்கடி அஸ்தங்கத்தில் மாட்டிக் கொள்வதாலும், வக்கிரத்தில் சஞ்சரிப்பதாலும், சமயத்தில் மறைவிடத்தில் (12ஆம் இடம்) வருவதாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது புதன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. இனி யுத்தத்திற்கு தேவையானவர்கள் எல்லாம் சண்டைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும். அதிலும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்தான் சண்டையில் ஜெயிக்க முடியும். ஜாதகத்தில் அந்த மாதிரி பாபர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் செவ்வாயும், சனியும்.

செவ்வாய்: 
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்தான் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. பெண் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். அதுமட்டுமில்லாமல் பெண் ஜாதகத்தில் சூரியனோடு செவ்வாய் ,சனி ஆகியவை எந்தக் கட்டத்திலும் சேர்ந்து இருந்தால், அதற்கு தகுந்த கணவனை தேட வேண்டுமாம். அதாவது அந்த செஸ் போர்டில் ராஜா, குதிரை, யானை இருந்தால் விளையாடும் போது கவனம் தேவை, இல்லாவிட்டால் எளிதில் தோற்று விடுவீர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு அதனால் குதிரையாக கற்பிதம் செய்தது நூற்றுக்கு நூறு சரி. அதிலும் அதன் தோஷ இடங்கள் ஆகிய 2,4,7,8,12 என்னும் ஐந்து இடங்கள் குதிரையின் இயக்கத்திற்கு ஒத்து வருகிறது. ஆகவே செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளில் (மேஷ, விருச்சிக) ராஜா, மந்திரி, குரு ஆகியோருக்கு இடமும் வலமும் நின்று யுத்தத்தில் கலந்து கொள்கிறது. அதன் சுழற்சி வருடங்கள் நான்கு, அது போல் அது செல்லும் கட்டங்களும் நான்கு.

வியாழன்: 
வியாழன் திருமண பொருத்தங்களில் அவ்வளவாக கணக்கில் கொள்ளப் படுவதில்லை. ஏனெனில் அவர் ஒருவகையில் சகலத்துக்கும் பொறுப்பானவராகுகிறார். ஆதலால் திருமணத்தில் அவரது பார்வை மட்டுமே கணக்கிடப் படுகிறது. அதைத்தான் ”வியாழ நோக்கம்” என்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் குழந்தை பாக்கியத்திற்கு அவர் காரகனாக இருக்கலாம் ஆனால் திருமணம் ஆகிய பொருத்தத்தில் (யுத்தத்தில்) அவருக்கு வேலை இல்லை. அதிலும் இவர் ”ரொம்ப நல்லவர்” ஆதலால் இவர் ”அதுக்கு சரிப்பட மாட்டார்” ஆதலால் மீனமும், தணுசும் கணக்கில் வரவில்லை. பார்வையோடு சரி.


சனி: 
திருமண பொருத்தம் பார்ப்பதெல்லாம் அப்புறம், முதலில் ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் பார்க்க வேண்டிய விஷயம் ஆயுள்.
ஜோதிடர்களே! முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் காரகன் (சனி), ஆயுள் ஸ்தானாதிபதி, லக்னாதிபதி ஆகியோரைப் பார்த்து அதன் பலம் பலவீனத்தை கணித்து மனதில் வைத்து அதன்படி சொல்லுங்கள். அதைப் பார்க்காமல் தான் சிலபேர், ஒரு திரைப்படத்தில் சார்லி பலன் சொல்லி அடி வாங்கியதைப் போல் வாங்குகிறார்கள்.

ஆயுளுக்கு காரகன் (பொறுப்பேற்பவன்) சனிதான். சுபாவத்தில் கெட்டவன். சண்டைக்கு உகந்தவன், பாபி. இவருக்கு மந்தன், காரி, ஈஸ்வரன் என்றெல்லாம் பேருண்டு. வான வெளியில் பெரிய கிரகமாகவும் கடைசி கிரகமாகவும் உள்ளவர். (செஸ் போர்டிலும் கடைசியாக உள்ளது) கரிய நிறத்தவன், உருவத்தில் பெரியவன். இந்த இரண்டு குணாதிசயங்கள் உள்ள ஒரே ஒரு மிருகம் யானைதான். அதனால்தான் சனிக்கு யானையை உருவகப் படுத்தி ஆட்டத்தில் நிற்க வைத்து விட்டனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர் சூரிய சந்திரர்களுக்கு இடமும் வலமும் கடைசியில், தனது ஆட்சி (கும்பம், மகரம்) வீடுகளில் அமர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்கிறார்ர்ர். (அவன், இவன் என்று சொல்லி அனாவசியமாக கோபத்தை கிளறக் கூடாது பாருங்கள்). அதனுடைய இயக்கமும் யானையைப் போல் மெதுவாக, ஸ்டெடியாக இருக்கிறது. இரு ஜோதிடக் கட்டங்களை  கும்பம், மகரம் ஆகிய இரு ராசிகளுக்கும் இடையில் பிரித்து ஒரு நேர் கோட்டில் அமைத்து அப்படியே எதிரெதிர்த் திசையில் நேராக அடுக்கினால் செஸ் போர்டுதான்.


                         


கேள்வி: 
 சூரிய,சந்திரர்களையும் கிரகங்களையும் அதன் ஆட்சி வீடுகளையும் செஸ்ஸில் ராஜா, மந்திரி(க்யூன்), குரு(பிஷப்) நைட்(குதிரை), ரூக் (யானை) ஆகியோருக்கும் அவரது இருப்பிடங்களுக்கும் ஏறத்தாழ சரியாக ஒப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். இந்த சிப்பாய்களுக்கு எங்கிருந்து, யாரை அழைத்து வந்து ஒப்பிடப் போகிறீர்கள்?.

 பதில்:
அவர்களும் ஜோதிடத்தில் தான் உள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் உபகிரகம் (பான்) என்கிற அமைப்பு உண்டு. அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. ஒரு வேளை வால் நட்சத்திரங்களாக இருக்கலாம். ”உபகிரகம்” என்கிற வெறும் வார்த்தை பிரயோகத்தை வைத்துக் கொண்டு விவாதத்திற்கு வராதீர்கள், ஏனென்றால் "உபகிரகம்" என்பது இவர்கள் வசதிக்கு ஏற்படுத்திய வார்த்தை.

சூரியனுக்கு காலன்,
 சந்திரனுக்கு பரிவேடன்,
புதனுக்கு அர்த்தப்பிரகரணன்
சுக்கிரனுக்கு இந்திரதணுசு,
செவ்வாய்க்கு தூமன்,
குருவுக்கு எமகண்டன்
சனிக்கு குளிகன்

ஆகியோர்தான் சிப்பாய்கள். அவர்களுக்கு அதிக வலிமை இல்லைதான், ஆனால் அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு சென்றால்தான் வில்லங்கம். மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையோ கொடுப்பார்கள் என்பது ஜோதிடத்தின் பாலபாடம். இந்த சிப்பாய்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் அதாவது (எட்டாம் இடத்திற்கு வந்துவிட்டால்) அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. அது போல் செஸ்ஸில் பான் எட்டாம் இடத்திற்கு சென்றுவிட்டால் மந்திரியின் அதிகாரம் தரப்படும். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மாந்தி எனப்படும் குளிகன் அமர்ந்தால் அதுவும் தோஷமாக கருதப்படும்.ஆகவே சிப்பாய்களின் இருப்பிடம் நியாயப் படுத்தப் பட்டது.

கேள்வி: 
விளையாட்டின் முடிவிற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் எப்படி முடிச்சுப் போடுவீர்கள்?.

பதில்:
வெள்ளைக்காய் ஆணாகவும், கறுப்புக்காய் பெண்ணாகவும் உருவகப் படுத்திக் கொண்டு விளையாடும் போது, முதல் நகர்த்தலில் வெள்ளைக்காய்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட்டு டிராவில் முடிந்தாலும், வெள்ளைக்காய் ஜெயித்தாலும் இரு ஜாதங்களும் சேரும் என்பதுதான் முடிவு. வெள்ளைக்காய் தோற்றால் அது பொருந்தாது. அதாவது மனை என்னும் குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கியிருந்தால் அது சரியான குடும்ப அமைப்பாக இருக்காது என்பது ஜாதகம் கண்டு பிடித்த காலத்தில் ஏற்பட்ட மரபு. அந்தக் கால சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இதில் ஆணாதிக்கமோ என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி: 
சதுரங்கத்தில் உள்ள கேஸ்லிங்க் (castling) என்பதற்கு ஜோதிட விளக்கம் என்ன?
பதில்:
தர்ம கர்மாதி யோகம் என்பதைப் பற்றி 1665 இல் இயற்றப் பட்ட "ஜாதக அலங்காரம்" கூறுவதைப் பார்ப்போம்.

மாதேகே டன்மயோக வகைகன்ம மன்னனோடு
தாதையுங்கூடி எந்தத் தலத்தினிருந்த போதும்
ஓதிய ஒருவர் வீட்டில் ஒருவர் மாறாயிருந்த
போது மாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்.

அதாவது 9ஆம் 10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலும் அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவிலாத நல்லவழியில் ஈட்டிய செல்வத்தைப் பெற்று இராஜ யோகத்தோடு வாழ்வான். இதைத்தான் பரிவர்த்தனை யோகம் எனவும் சொல்வர். பரிவர்த்தனை என்றால் (இடத்தை) கொடுத்து வாங்குதல் எனப்படும்.

மேலும்  இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக் கொள்வதை பரிவர்த்தனை யோகம் என்பார்கள்.அதாவது 1,2,9,10,11 க்குடையவர்கள் தங்கள் இராசி வீடுகளை பரிவர்த்தனை செய்து கொள்வதாகும். உதாரணமாக சூரியனின் ஆட்சி வீட்டில் சனியும், சனியினது ஆட்சி வீட்டில் சூரியனும் இருந்தால் அது பரிவர்த்தனை யோகம் எனப் படும். இதனால் அதிகப் பலம் பெறுவார்கள். யோக ஜாதகம் என்பர். செஸ்ஸில் யோகம் என்பது வெற்றிக்கான வாய்ப்புகளென்றுதான் அர்த்தம். அந்த வகையிலான ஒரு நகர்த்தலாக இருக்கும்.

மேற்க் கூறிய விளக்கங்களால் இந்தியாவின் சதுரங்கம்தான் இன்று உலகெங்கும் விளையாடப் படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் சதுரங்கத்தின் தோற்றுவாய் ஜோதிடம்தான் என்பதும், அந்த ஜோதிடத்தை உலகிற்கே அளித்தது இந்தியாதான் என்பதும் உறுதி செய்யப் படுகிறது.

தொடர் முற்றும்.

நன்றி.

இரா. சந்திரசேகர்,
பழனி.

மேலும் படிக்க...!
top