ஆண்டவன் பெருவெடிப்பை உருவாக்கி, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளை என்ன நேர்ந்தாலும் இதில் தலையிடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். பெரிய மேகத்துகள்கள் நட்சத்திரங்களாகவும், சிறிய துகள்கள் முதலில் திரவங்களாகவும் பின் கிரகங்களாகவும் மாறி அவற்றில் புல், புழு, பூண்டு உருவாகி பின்னர் மிருகம், மனிதன் எனத் தோற்றம் கொண்டனர். மனிதன் பேசக் கற்றுக் கொண்டான், பேசும் மொழி பல்லாயிரமாயின. கூட்டம் சேர்த்தான் கோட்டைப் போட்டான், நாட்டைக் குறித்தான். நாட்டை விரிவாக்க சன்டையிட்டான்.சாப்பிட்டான் ,மகிழ்ந்தான், மடிந்தான். இதுதான் எங்கும் நடந்தது. கடவுளும் தான் நினைத்தபடியே எல்லாம் நடப்பதால் வேண்டுதல் வேண்டாமை இன்றி வேடிக்கை பார்த்தான்.

அவ்வாறிருக்கும் போது ஃப்ற்றுளி ஆற்றின் கரையிலும்,அங்கு வாழும் மக்களாகிய தமிழரும் தன் அமைப்பில் (System)இருந்து மாறுபடுவது போல தோன்றியது. தான் செய்ய வேண்டிய வேலைகளை தமிழன் செய்வதை அறிந்து திடுக்கிட்டான்.

அறம் பாடி அல்லவை செய்கிறான்
மறம் பாடி வெற்றியைப் பறிக்கிறான்
கலம்பகம் பாடி கல்லறை கட்டுகிறான்
வெண்பா பாடி வெட்டியமரத்தை வளர்க்கிறான்
அகமும் புறமும் பாடி மகிழ்கிறான்.
எழுதிய ஓலையை தூக்கிஎறிந்து
நீரோட்டத்தை எதிர்த்து செல்லவைக்கிறான்
இயற்கையை வென்று தமிழன்
இருக்கையை கைப்பற்ற பார்க்கிறானா?

என்று கடவுள் இவனைக் கவனிக்க ஆரம்பித்து காரணத்தைக் கண்டுபிடித்தார். ஆகா இவன் எழுதும் பாட்டில் உள்ள யாப்பிலக்கணம் தான் இத்தனைக்கும் காரணமோ என ஆய்ந்து அதையும் கற்றுத் தெளிந்தார் . யாப்பிலக்கணம் , பிரச்னையை போர்வையாய் போர்த்து தூங்குபவர்களுக்குதான் ஒரு சவால் சோம்பேறிகளுக்கும் முட்டாள்களுக்கும் அல்ல. புத்திசாலிகளை வம்புக்கு இழுக்கும். புத்திசாலிகளுக்கு வைக்கப் படும் பொறி. கடவுளை விட்டு விடுமா? சுடோகு கட்ட பைத்தியக்காரன் கட்டம் கிடைத்தால் அதை தீர்க்காமல் தூங்கமாட்டான் அது போல் ஆண்டவனுக்கு இப் பொழுது ஆசை வந்து விட்டது கவிதை பாட. கவிதை நன்றாகவே வந்தது. தன் திறமையை யாரிடமாவது காட்ட வேண்டுமே. எங்கு போவான் தமிழனை விட்டால் இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் அவனது கவிதையை மதிப்பிட ஆள் ஏது?.

இந்தச் சூழ்நிலையில் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை தீர்க்க புலவர்களுக்கு அழைப்பு விடப் பட்டது.கடவுளுக்கு பொறிதட்டியது. ஆனால் பிர்ச்னையும் உள்ளது. தான் படைத்த மனிதனிடம் போய் கவிதை பாடி பரிசு பெறுவதா? தோற்று விட்டால் என்ன செய்வது. (கடவுளுக்கே இந்த நிலை என்றால் தமிழின் பெருமையை என்ன சொல்வது). ஆசை எல்லாவற்றையும் வென்றது.

கங்கணத்தை கழற்றி எறிந்தார். அவர் ஏற்படுத்திய விதியை (இப்பதிவின் இரண்டாவது வரியைப் பார்க்கவும்)அவரே மீறி அவரது அமைப்பினுள் நுழைந்தார். தருமியின் வேண்டுகோளை ஏற்று அவனிடம் தனது கவிதையை கொடுத்து நோட்டம் பார்க்கும் முகமாக மன்னனிடம் அனுப்பினார்.தருமியின் (கடவுளின்)பாடல் தமிழ்ச்சங்கத்தில் ஆராயப் பட்டு பொருள் குற்றம் உள்ளதாக அறிவிக்கப் பட்டது.இதைக் கேட்டு அவதிப் பட்ட கடவுள் ஆத்திரத்துடன் நேரடியாக களமிறங்கி கவிதைபாடி பொருள் கூறினார்.

”கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே ”

தேனை ஆராய்ந்து சேர்க்கும் வாழ்க்கையுடைய அழகிய சிறகையுடைய தும்பியே,நான் கடவுள் காரணத்தால் பட்சபாதம் இல்லாமல் நேரே தெரிந்ததை உள்ளவாறே சொல்வாயாக. மயில் போன்ற சாயலும், பொருந்திய பற்களும் கொண்ட கற்புடை மங்கையின் கூந்தலைவிட நறுமனம் கொண்ட மலர்கள் நீ அறிந்தவைகளில் உளவோ.
என்றார்

ஆனாலும் நக்கீரர் ,”பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான நறுமனம் கிடையவே கிடையாது ஆகவே பொருள் குற்றம் உள்ளது.’என்றார்.

ஆண்டவர் உடனே கிடைத்த சந்தர்பத்தை பயன் படுத்தி தனது கவித் திறமையால் நேரடியாக தாக்க ஆரம்பித்தார்.

”அங்கம் வளர்க்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச்- சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்”

(தன் உடலை வளர்ப்பதற்கு வாளில் நெய்தடவி இரண்டு கால்களையும் விரித்து அமர்ந்து சங்கை அறுக்கும் கீரனோ என் பாட்டில் குறை சொல்பவன்.)ஆனால் இந்தமுறை கடவுள் தேறிவிட்டார். பாட்டில் குற்றமில்லை. ஏனென்றால் நக்கீரரே கவிதையால் கடவுளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

”சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரர்க்கு அங்கு எது குலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ-- சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி”

(சங்கை அறுத்து வாழ்வது எங்கள் குலம்,ஆனால் சிவனுக்கு குலம் ஏது. உள்ள குறையைப் பொருத்தமாகச் சொன்னால் அது தவறாகுமோ?. நாங்கள் தொழில் செய்து வாழ்கிறோம் ஆனால் சிவனைப் (உன்னைப்)போல் யாசித்து உண்டு வாழ மாட்டோம். )

எவ்வளவுதான் பொறுப்பது. தமிழைப் பழகிக் கொண்டு, ஒரு மானிடப்பதர் எல்லாம் வல்ல தன்னைப் பார்த்து இப்படி கேட்கலாமா. தன்னை உணரவில்லையோ என்று தனது நெற்றிக் கண்ணைத் திறந்து காண்பித்தார். அவர் அதற்கும் அசரவில்லை என்ன சொல்லி இருப்பார் என்று பச்சை குழந்தைக்கூட தெரியும் என்பதால் விட்டுவிட்டேன்.ஆனால் கடவுள் விடவில்லை எரித்தேவிட்டார்.

பின்னர் தனது தவற்றை உணர்ந்து நக்கீரனை உயிர்ப்பித்து ”உம் தமிழோடு விளையாட வந்தோம் ”என்று அசடு வழிந்தார்.

ஆனாலும் மனதுக்குள் ”தமிழையும், தமிழனையும் கி.பி. இருபதாம் நூற்றாண்டில் கவணித்துக் கொள்கிறேன்” என்று கருவிக் கொண்டு சென்றார்.

கடவுள் யாப்பிலக்கணத்தை மட்டும் படித்து விட்டு கம்ப்யூட்டர் கவிதை எழுவது போல் எழுதிவிட்டு புலமை காட்ட, பொருளை மறந்து, தமிழ்ப் புலவன் முன் கையறு நிலை அடைந்த கதை யாப்பிலக்கணத்தின் பெருமையையும் தமிழின் சிறப்பையும் கூறும்.
நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது .அடுத்த தலைப்பு ”ஆண்டவன் வைத்த ஆப்பு”என்றுதான் இருக்கும் என்கிறீர்களா. அவ்வளவு சீக்கிரம் சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டுக்கு வரமாட்டேன்.

7 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

”கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே ”

- இறையனார் என்கிற ஒரு புலவன் எழுதியதை சிவன் எழுதினான் என்றெல்லாம் கிளப்பி விட்டது யாரென்று தெரியவில்லை. சிவன் குலத்தாழ்சி சொல்லி நக்கீரனை சங்கறுக்கும் குலம் என்று சொல்வதெல்லாம் ஏபி நாகராஜன் வசனமே அன்றி சிவனுக்கு அதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. திருவிளையாடல் புராணங்களில் பல கட்டுகதைகள் உண்டு அல்லது முழுவதும் கட்டுக்கதைகள் தான், அதில் சிவன் பெண்களின் கூந்தலுக்கான சந்தேகம் விளக்குகிறான் என்பது மற்றுமொரு கட்டுக்கதை.

துளசி கோபால் said...

அட்டகாசம்.

ரசித்தேன்.

இனிய பாராட்டுகள்.

நாட்டாமை said...

கடவுள் இல்லையேல் இலக்கியம் இல்லை,இலக்கியம் இல்லையேல் மொழிக்குச் சிறப்பு இல்லை.மொழிக்குச்சிறப்பு இல்லையேல் அதைச் சார்ந்த மனிதனுக்கு சிறப்பு இல்லை. ஆகவே கடவுள் இருக்கட்டும்

Chandru said...

குழந்தை, தந்தையை பார்த்து ”அப்பா யானை விளையாட்டு விளையாடலாம், வாங்க நீங்க யானையாக மாறுங்கள் நான் மேலே ஏறி உட்கார்ந்து கொள்கிறேன் என்றதாம்’. அதற்கு தகப்பன் ” ஏ அறிவு கெட்ட ஜென்மமே, பகுத்தறிவோடு பேசு நான் எப்படி யானையாக மாறமுடியும்". என்ற கதையாக இருக்கிறது.

தேனெடுக்கும் இடத்தில் சர்க்கரை வியாதிக்காரன் புலம்பது போல் உள்ளது

மொழியின் வளமும், மூளையின் திறனும் கற்பனைதான்.

AsHoK KuMaR said...

Rich imagination and entertaining story. The comment above is hilarious and it's worth a blog.

Unknown said...

சரியாக கூறினீர்கள் சகோதரா

top