இறவாமை ( IMMORTALITY). பாகம் 3

இறவாமை ( IMMORTALITY). பாகம் 1
இறவாமை ( IMMORTALITY). பாகம் 2


சைவமா அசைவமா?

நீண்ட ஆயுளுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டுதான் என்றாலும் அசைவ உயிரினங்கள்தான் நீண்ட ஆயுளுடன் திரிகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.உதாரணம் ஆமை, சுறா, திமிங்கலம், மனிதன்.



உயிரா? உயிர்களா?

மனிதன் உடம்பிலிருந்து உயிர் பிரிந்துவிட்டதாக நாம் ஒருமையில் சொல்கிறோம். உன்மையில் உயிர் ஒருமையா பன்மையா? ஒருமை போல் தோன்றினாலும் உன்மையில் பல கோடி செல்களின் கூட்டமைப்பு (colony) வாழ்க்கை முறைதான் மனிதன்.

அமெரிக்காவுக்கு வயது 400 வருடங்களென்று சொன்னால் பூகோள அமைப்பிற்கா? அல்லது மக்களுக்கா? அமெரிக்கா என்றால் அதன் வரையறுக்கப் பட்ட நிலப் பரப்பும் மக்களும் சேர்ந்துதான். அங்கு வாழும் மக்கள் யாரும் 120 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் இல்லை ஆனாலும் அமெரிக்காவின் வய்து 400 என்கிறோம். மக்கள் மட்டும்தான் புதுப்பிக்கப் படுகிறார்கள்.ஒவ்வொரு தனி நபரும், ஊர் மக்களும் சில அமைப்புகளும் சேர்ந்ததுதான் நாடு. பொருளாதார மையம், ராணுவ மையம், அதிகார மையம்,இருப்பது போல் மூளை, இருதயம், நுரையீரல் உள்ளது. நாட்டுக்கு வயது 400 என்றால், மக்கள் அதிகபட்சமாக 16 தலை முறையாக (புதுப்பிக்கப் பட்டிருக்கிறார்கள்) வாழ்கிறார்கள்.

தேசத்தில் மக்கள் புதுப்பிக்கப் படுவது போல் தேகத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டு தேகத்திற்கு ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. நமது உடம்பிலுள்ள செல்களின் ஆயுளோ மிக மிக அற்பம். எலும்பு, நகம், தோல், முடி, தசை, பல், மூளை, நரம்பு, இரத்தம், குடல் ஆகிய அனைத்து செல்களும் புதுப்பிக்கப் படுகிறது. செல்களின் ஆயுள் ஒரு மணித்துளியிலிருந்து இருந்து அதிகபட்சமாக 15 வருடம் வரை இருக்கிறது. இவ்வளவு அற்ப ஆயுள் கொண்ட செல்கள் இறந்த பின்பு புதிய செல்கள் தோன்றி, உயிரை நிலைப் படுத்துகிறது. இதனால் தான் ”நான்” என்ற அகம்பாவம் கொள்ளாதே என்கிறார்கள். ஏனென்றால் இன்றிருக்கும் ”நான்” நாளை இருப்பதில்லை.

மூளையின் சில செல்கள் மட்டும்தான் நமது பிறப்பிலிருந்து உடன் இருப்பவை.கண் பார்வைக்கான மூளை செல்களும் அவ்வாறே. மற்றவை எல்லாம் 'புதுசு கண்ணா புதுசு'.


சிறுமூளை ”உங்களை” விட இளமையானது.

தசைச்செல்களுக்கு பதினைந்து வயதுதான் ஆகிறது.

குடல் மேற்பரப்பு செல்கள் 5 நாட்கள் தான் ஆகிறது.

குடல் செல்கள் 15 வயதானவை

தோலின் வயது 14 நாட்கள்தான்.

இரத்தச்சிவப்பு அணுக்கள் 120 நாட்களுக்குட்பட்டவை தான்

எலும்பு செல்கள் 10 வயதானவை.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 கிலோ தோல் செல்களை மாற்றுகிறானாம். தனது குடலில் தினசரி 20 கிராம் உள்ள குடல் செல்களை தானே ஜீரணிக்கிறானாம். பசியோடு (விரதம்) இருந்தால் இன்னும் அதிகமாகும். ஆகவே சுத்தமான சைவர் என யாரும் இருக்க முடியாது. புதிய இரத்த செல்கள் உற்பத்தியாக வில்லை என்றால் மூன்று மாதங்களில் மரணம் நிச்சயம்.

இப்பொழுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வி எழும்புகிறது.

புதுப்பித்தல் என்று ஆன பின்பு தொடர்ந்து புதுபிக்க வேண்டியது தானே? அதற்கு ஏன் காலக்கெடு?. ஏன் குறிப்பிட்ட வயதுக்கு மேல் புதுப்பிக்க மறுக்கிறது?.

சேர்ந்து விட்ட குப்பைகள்.

இதற்கு பலவிதமான பதில்கள் வைக்கப் படுகிறது. நமது வாழ்நாளில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் காற்று, நீர், உணவு இவற்றில் உள்ள ஆர்செனிக், ஆண்டிமனி, ஈயம், பாதரசம், ஆகியவை நமது உடம்பில் சென்று குப்பையாக சேர்ந்து நச்சுப் பொருளாக மாறி அதன் அளவு கூடும் போது அவை குறிப்பிட்ட செல்களின் புதுப்பிக்கும் தன்மையை மாற்றுகின்றன. அல்லது குறிப்பிட்ட உறுப்புகளை சேதப் படுத்துகின்றன என்பது ஒரு பதிலாக இருக்கிறது என ஏற்கனவே பார்த்தோம்.

மற்றொன்று ஜெனிட்டிக்ஸ் கடிகாரங்கள் (Timers).

ஒவ்வொரு உறுப்பும் புரோக்கிராம் செய்யப் பட்ட கடிகாரங்களுடன்தான் நமது உடம்பில் அமைக்கப் பட்டுள்ளன. பிறந்தவுடன் நாம் எப்பொழுது தவழ வேண்டும், எப்பொழுது நடக்க வேண்டும், பற்கள் முளைப்பது, விழுவது, மீசை வளர்வது, முடி வளர்வது, உதிர்வது, உறுப்புக்கள் (மார்பு, பால் உறுப்புகள்) வளர்வது, வயதுக்கு வருவது எவ்வெப்போது என தீர்மானிப்பது நமது உடலில் உள்ள கடிகாரங்கள் தான். அவைகள்தான் செல்களின் புதுப்பித்தலையும் தீர்மானிக்கின்றது. அவைகள்தான் நமது வயதையும் தீர்மானிக்கின்றது. அந்த கடிகாரங்களை திருப்பி வைக்க முடிந்தால், அல்லது அந்த கடிகாரங்களின் புரோக்கிராம்களின் கட்டளை வரிகளை திருத்த முடிந்தால் அதுதான் இறவாமையின் திறவு கோல் ஆகிவிடும்.

ஜெனிட்டிக்ஸ்

ஜெனிட்டிக்ஸ் ஆராய்ச்சியின்படி ஜீன்களின் சில குறிப்பிட்ட பகுதிகள் திருத்தி அமைக்கப் பட்டதால் ஈஸ்ட், மற்றும் எலிகளின் ஆயுள் நீட்டிப்பது கண்டறியப் பட்டுள்ளது. ஆனாலும் 30 % ஆயுள் மட்டும்தான் ஒரு சில ஜீன்களால் கூட்டவோ, குறைக்கவோ முடியும் எனத் தெரிகிறது.. அந்த ஜீன்கள் முறையே

1)Longevity Genes, ஆயுளை அதிகரிக்கும் ஜீன்கள்,

2)Cell Senescence, செல்களின் தேய்மானம்,

3)Telomeres, டி.என்.ஏ அமைப்பில் உள்ள ஒருவித செல்களாகிய டெலிமியர்ஸ் புதுப்பித்தலின் போது குறைபாடு அடைதல்.

4)Stem Cells: ஸ்டெம் செல்கள் இவைகள் தான் ஆதாரமான செல்கள் இவைகள் தேவைப் படும் பொழுது தேவைப் படும் உறுப்புக்களின் செல்களாக மாறி, சரி செய்யும் இயல்பு கொண்டவை.

மேற்கண்ட ஜீன்களில் தேவைக்கேற்ற மாற்றம் செய்யப் பட்டால் 30% ஆயுளை அதிகரிக்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?.

டெலமியர் கொள்கை

டெலமியர் என்பது குரோமோசம் செல்களின் கடைப் பகுதியில் உள்ள ஒரு பகுதி. அந்தப் பகுதி அடுத்தடுத்து ஏற்படும் செல் பகுப்பின் போது குறைவு ஏற்பட்டுவிடுகிறது என நிரூபிக்கப் பட்டுள்ளது. இப்படி குறைவு பட்ட டெலமியர்கள் செல் புதுபித்தலை  நாளடைவில்  தடைசெய்கின்றன என்றும் அறியப் பட்டது.



அவ்வாறு எந்த வித சேதாரமின்றி டெலமியர் பகுபடும் போது   இறவாமைக்கு உத்தரவாதம் என்கிறார்கள்.அதற்கான கானொளி இத்தளத்தில் உள்ளது. http://www.smithsonianchannel.com/sc/web/show/137613/decoding-immortality

இனவிருத்திக்கான ஹார்மோன்களின் சுரப்புத்தான், செல் புதுப்பித்தலை கட்டுப் படுத்துகிறது.அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
நமது உடம்பின் நோய் எதிர்ப்பு தன்மை மிகவும் நுட்பமானது. நமது உடம்பில் அன்னிய செல்களை எளிதில் அடையாளம் கண்டு உடனடியாக அவற்றை அழிப்பதற்கு களத்தில் இறங்கி விடும். இந்தத் தன்மைதான் உறுப்பு மாற்றத்தின் போது மாற்று உறுப்பை ஏற்க மறுக்கிறது. ஆகவே அதை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய ஒரு மருந்து உள்ளது. அந்த மருந்தாகிய ரேபமைசின் எலிகளின் ஆயுளை 38% அதிகரிப்பது தற்செயலாக கண்டுபிடிக்கப் பட்டது. இம் மருந்தை தேவாமிர்தத்திற்கு இணையானதாக கருதுகிறார்கள். அநேகமாக இதன் தன்மையையும் செயல்படும் விதத்தையும் பார்த்தால் இது வயதானவர்களுக்கு மட்டும் தான் சரிவரும். அது எப்படி என்று பார்ப் போம்.

ஆர்த்திரிட்டீஸ் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.
இரத்தம் உடலெங்கும் பாயும் போது எலும்பு மூட்டுக்களின் மேலுள்ள ஜவ்வுகளின் வழியாகவும் செல்கிறது. அவ்வாறு செல்லும் போது வயதானவர்களின் தேய்வுற்ற எலும்புத்துகள்கள் இரத்தத்தில் கலந்து செல்கிறது. இந்த தேய்மானம் அதிகமாகி எலும்புத்துகள் இரத்தத்தில் அதிகமாகிச் செல்லும் போது நமது உடம்பிலுள்ள செக் போஸ்ட்களில் அதாவது பாதுகாப்பு மையங்களில் (immune centres) இந்த செல்களின் I.D proof கேட்கப்படும் பொழுது இந்த செல்களின் அதீதமான எண்ணிக்கையினால் ஏதோ ஒரு வகையில் இந்த துகள்கள் எதிரியாக முத்திரை குத்தப் படுகிறார்கள்.(autoimmune disorder)




உடனே எதிரிகளை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கி அதிரடிப் படையான ராணுவத்தை ( Antigen) இரத்தத்தில் கலந்து, எலும்புத்துகள்களின் அடையாளத்தைக் கொடுத்து, அழிக்குமாறு மூளையினால் கட்டளை இடப்படுகிறது. ஆண்டிஜன் இரத்தத்தில் கலந்து துகள்களை அழிப்பதோடல்லாமல் அவை உற்பத்தியாகும் இடமாகிய மூட்டுக்களில் உள்ள அதே அடையாளம் கொண்ட, அப்பொழுதான் உருவாகிய நல்ல செல்களையும் எதிரியாக கருதி அழிக்கத் தொடங்கும் போதுதான் நமக்கு மூட்டுகளில் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது.



ராணுவம் தன் நாட்டு மக்களையே தாக்குவது போலாகும் இந்தச் செயல். (இதற்குத்தான் பெரியவர்கள் இரவு நேரங்களில் பிள்ளைகளை வெளியே சுற்றதீர்கள் என்கிறார்கள் ஏனென்றால் உண்மையான I.D proof கொடுத்து வந்துவிட்டாலும் அதிலுள்ள அட்ரஸினால் குடும்பத்துக்கு ஆபத்து). இதற்கு ஒரே வழி ராணுவத்தையே செயலிழக்கச் செய்வதுதான். அலர்ஜியும் கிட்டதட்ட இந்த வகைதான். இந்த நேரத்தில் தான் நமது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை ஒடுக்க மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. வயதான காலத்தில் நமது உடம்பில் இந்தமாதிரியான I.D proof பிரச்சினை அதிகம் ஏற்படும் போல் இருக்கிறது. அதனால்தான் ரேப்மைசின் வயதானவர்களுக்கு மட்டும் சரிவரும் என்கிறேன். எப்படியோ இந்த மருந்து எதிர் மறையாய் செயல்பட்டாலும் வயதானவர்களுக்கு மட்டும் பத்திரமாக இருக்கும் வரை நல்ல பலனைக் கொடுக்கிறது.

குழந்தைப் பருவத்தில் இருந்து இனவிருத்திக்கான வயதை எட்டும் வரை உடலில் விரைவான மாற்றத்தையும் அபாரமான வளர்ச்சியையும் ஏற்படுத்திய ஹார்மோன்கள் அதன் பின்னர் உடலின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இன விருத்திக்கு தேவையான தகுதிகளை மட்டும் தக்க வைத்துக் கொள்கிறது. இதனால்தான் நமது மூளை, செல் தேய்மானம் பற்றியோ, உடல் வளர்ச்சி பற்றியோ ஓரளவுக்குத்தான் கவலைப்படுகிறது போலும்.

ஆராயப்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகள்

ஒரு வகை சிவப்பு திராட்சையில் காணப் படும் ரெஸ்வரட்ரால் என்னும் பொருள், புழுக்கள், ஈக்கள், ஈஸ்ட் ஆகியவற்றின் ஆயுளை முறையே 30 லிருந்து 60% அதிகப் படுத்தியதை அறிந்துள்ளார்கள். ஆகவே அளவாக ஒயின் சாப்பிடுங்கள். இதுவும் வயதானவர்களுக்கு சிறப்பாக செயல் படுகிறதாம்.




2002ல் அது போல் அசிட்டைல்-எல்-கார்னிட்டைன் மற்றும் ஆல்பா-லிப்போயிக் ஆசிட் ஆகியவற்றின் கலவை வயதான எலிகளுக்கு கொடுக்கப் பட்ட பொழுது அவைகளின் இளமை ஆட்டமாகிய ”மாக்ரீனோ”வை தாங்க முடியவில்லையாம். இந்த மருந்துகள் மனிதனுக்கு கொடுக்ககூடியவை என்ற அந்தஸ்து பெற்றவை. ஆகவே அதைக் கண்டுபிடித்த புரூஸ் ஆம்ஸ் அந்த மருந்தை தயாரிக்க காப்புரிமை பெற்று ஜுவனன் என்ற கம்பெனியையும் ஆரம்பித்துள்ளார்.

2007ல் சால்க் இன்ஸ்டியுட்டில் ஒரு குழுவினர் , நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப் படுத்தும் ஜீனை அடையாளம் கண்டுகொண்டனர்.

அதன் மூலம் குறைந்த கலோரி உணவு ஆயுளை நீட்டிப்பது உறுதி செய்யப் பட்டது.
30% கலோரி குறைத்து உண்பதால் ஆயுளும் ஆரோக்கியமும் 40% கூடுகிறது என எலி, குரங்கு, மற்றும் சில விலங்குகளை வைத்து செய்த ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. மனிதர்களுக்கும் இது ஒத்து வருமா? சாதாரண அளவிலிருந்தா அல்லது அதிகமாக சாப்பிடுவதிலிருந்தா? எந்த வயதிலிருந்து என்பதும் முக்கியம்.

2008ல் ஸ்பானிஷ் நேஷனல் ரிசர்ச் செண்டரில் ஒரு குழுவின் ஆராய்ச்சியால் ஜீன் மாற்றத்தால் எலிகளின் டெலிமியரேசின் அளவு சாதாரண எலிகளில் இருப்பதை விட 10 மடங்கு அதிகரிக்கப் பட்டது. இதனால் எலிகளின் ஆயுள் 26% அதிகரித்து.

இதே வருடம் யுனிவர்சிட்டி ஆப் வெர்ஜீனியாவில் புரபஸர் மைக்கலொ தோர்னர் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் MK-677 என்னும் மருந்தால் 60 வயதிலிருந்து 80 வயதுக்குட் பட்டவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் தசை இழப்பில் 20% தடுக்கப் பட்டது மேலும் இதனால் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் மற்றும் இன்சுலின் சுரப்பும் அளவும் இள வயதினருக்கு உள்ளது போல் காணப் பட்டது.

வைட்டமின் ஏ, வைட்டமின் இ இவை இரண்டும் நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதமானவை.

சரி, தமிழில் நமது முன்னோர்கள் இந்த வகை மருந்துகள் வைத்திருந்தனரா? அவை எவை என்று பார்ப் போம்.
நீண்ட் ஆயுளை அளிக்கும் கரு நெல்லிக் கனியை ஔவைக்கு அதியமான் கொடுத்ததாக வரலாறு சொல்கிறது.அக்கனியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

அமுக்ரா கிழங்கு என்று ஒன்று உள்ளது அது எல்லா வகை தமிழ் மருந்துகளிலும் சேர்க்கப் படுகிறது.சர்வரோக சஞ்சீவினி.அதிலும் ”ஆண்மை” வைத்தியர்களின் மருந்துகளின் முக்கிய் அம்சம். அதன் மகத்துவம் சித்த வைத்தியர்களுக்கு தெரியும்.

நமது அமுக்ராவுக்கு சீனாவின் மாற்று ”ஜின்சென்”கிழங்கு.(Ginseng root) இதுவும் காயகல்ப சிகிச்சைக்கானது.சர்வ ரோக நிவாரணி.5000 வருடங்களாக சீனர்கள் பயன் படுத்துகிறார்களாம். ஆனாலும் சீனர்கள் ஆயுள் லிஸ்ட்டில் முதலிடம் பெறவில்லையே. இக்கிழங்கின் வடிவத்தைப் பார்த்தால் ஆச்ரியமாகவும் வினோதமாகவும் இருக்கும் ஆகவே சிலபடங்களை தருகிறேன். இக்கிழங்கிலிருந்து பெறப்படும் மருந்து கேன்சரையே என்னவென்று கேட்குமாம். இதற்கு சரியான டிமாண்ட்.

செக்ஸியாக தெரிகிறதோ மூஞ்சிதான் இஞ்சி தின்ற குரங்கு போல் உள்ளது.



ஓஹோ இதற்குத்தான் ”கிழங்கு” மாதிரி என்றார்களோ




கூடி நின்று கும்மி அடிக்கிறார்களோ



வேண்டாம்....சண்டைக்கு வருவீர்கள்.




அடுத்து தமிழில் ”திரிகடுகம்”,இந்தத் தலைப்பில் தமிழில் அறிவுரைப் பாடல்கள் உள்ளது. சுக்கு, மிளகு, திப்பிலி, இவை மூன்றும் தான் Three kadugam வாரத்திற்கு ஒருநாள் மூன்றும் கலந்த பொடியை சாப்பிட்டால் நல்லது.

”ஏலாதி”
இந்தத் தலைப்பிலும் பாடல்கள் உள்ளது.
ஏலம், லவங்கப்பட்டை,நாககேசரம்,சுக்கு, மிளகு, திப்பிலி இவை அணைத்தும் கலந்த சூர்ணம். இதுவும் காய கல்ப மருந்து வகைதான்.

ஆவாரை
”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். ஆக அந்தப் பூவை அப்படியே திங்கலாம்.





வெள்ளைப் பூண்டு, வெங்காயம்.
இரண்டும் அருமையான உணவான மருந்து.உலகில் கிட்ட தட்ட எல்லா மக்களும் மருந்தாக சாப்பிடும் உணவு வகை வெள்ளைப் பூண்டு.கொழுப்பைக் குறைக்கும் அரு மருந்து.

அடுத்து கடல் மீன் மற்றும் மீன் எண்ணெய். இதிலுள்ள ஒமேகா 3 என்னும் பொருள் கொழுப்பைக் கரைப்பதில் கில்லாடியாம். மற்றும் நமது உடம்பிற்கு தேவையான ஆபத்தில்லா கொழுப்பை கொண்டதாம்.வளரும் குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று.

இவை எல்லாம் ஆரோக்கியத்திற்கான உணவு மற்றும் மருந்து வகைகள்.நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான உடல் மட்டும் காரணமல்ல நல்ல மனதும் குணமும் காரணமாம்.

தாமஸ்( Thomas T. Perls, M.D., M.P.H., the director of the New England Centenarian Study at Boston University) கூறுகிறார், ஆணோ, பெண்ணோ 100 வயதிற்கு மேல் இருப்பவர்களிடம் கீழ் கண்ட ஒரு பொதுத் தன்மை குணத்தின் அளவில் இருக்க வேண்டும். அதாவது அதிக நன்பர்கள், உறவினர்களிடம் அதிகமான பற்றுதல், அளவான சுய கௌவரம் ஆகியவைதான்.

ஆக்ஸிஸனின் அயனி நிலை (Free radicals) செல்களை பாதிக்கிறது. அதிகமான சர்க்கரை, செல்களில் ஏற்படுத்தும் மாற்றம், ஹார்மோன்கள், ஆகியவைகளும் முக்கிய காரணிகள்.
வயதாவதை எவ்வாறு தடுக்கலாம்.ஏற்படும் குறைபாடுகள் எவை? தீர்க்கும் வழி யாது.?.

1).இருதயம் வயதாகும் போது இருதயத் தசைகள் முறுக்குகேறுவதால் வேலைசெய்ய சிரமப் படுகிறது.
தீர்வு, இருதயத்திற்கு பயிற்சிதான். நடத்தல்தான் எளிய பயிற்சி ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

2) வயதாவதால் T-cells நோய் எதிர்ப்புத் தன்மை இழக்கிறது-
ஃப்ரீ ரேடிகல்ஸ் அதிகரிப்பதால் செல்கள் நோய் எதிர்ப்புத்தன்மை இழக்கிறது. இதற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் பொருட்கள் உணவில் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாதுளம் பழம், டீ, வால் நட் இவைகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும்.

ஒரு நாளைக்கு ஏழு வால்நட்ஸ் (walnuts) சாப்பிட்டால் 10 வயது கூடுமாம் ( In 2009 the British Journal of Nutrition reported a study at Tufts University in Boston which showed that brain function and motor skills in aged rats could be improved by adding walnuts to their diet. The human equivalent would be to eat seven to nine walnuts per day.)

Walnuts.




3)இரத்தக்குழாய் வயதாவதால் கெட்டிப் படுகிறது- இதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
உண்ணும் உணவிலும் ஓடும் இரத்ததிலும் கொழுப்பை குறைக்க வேண்டும்.
நடைதான்.

4) 70 வயதில் நுரையீரல் 40% கொள்ளவு குறைந்து விடுகிறது-
பிரணாயாமம் செய்தால் நுரையீரலுக்கு பயிற்சி. இதனால் கொள்ளளவு அதிகரிக்கும்.

5)மூளைத் திறன் சிலருக்கு குறைந்து விடுகிறது.
அதற்கும் பயிற்சிதான். புதிர் விடுவிக்கப் பயிற்சி. சுடோகு, வார்த்தை விளையாட்டு, செஸ் ஆகியவற்றை தினமும். மண்டை சூடேறும் வரை விளையாடலாம்.

6)சிறு நீரகம்செயற்றிறன் குறைந்து விடுகிறது-
உணவு முறை. உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், அதிகமாக ”சரக்கு” அடிக்கக் கூடாது. மருந்து மாத்திரைகளை தேவைப் பட்டால் மட்டும் சாப்பிட வேண்டும்.

7)இரைப்பை
கொழுப்பைக் குறைக்க வேண்டும். வயதுக்கு தகுந்த உணவு உண்ண வேண்டும். உணவுமுறையும் பயிற்சியும் கண்கானிக்க வேண்டும்.

8)70 வயதில் தசை 20% வேலைசெய்ய மறுக்கிறது.
பயிற்சிதான். நடப்பது தான் எளிய பயிற்சி.

9)எலும்பு பலம் குறைகிறது-
நடப்பது தான் எளிய பயிற்சி.

10)கண்பார்வை சாலேஸ்வரம்- கண்ணுக்கான பயிற்சி.

11)காது கேளாமை- கருவி பயன் படுத்த வேண்டும்,

12)நல்ல செய்தி என்னவென்றால் நல்ல நடத்தையும் உயர்ந்த எண்ணமும் ஆயுளை நீட்டிப்பதாக அறியப் பட்டுள்ளது
நன்னடத்தை பலவகையான மனநோய்களையும் உடல் குறைபாடுகளையும் குணப் படுத்தும்.ஆகவே நேர்மையான எண்ணம் கொண்டு செயல் படுங்கள் (Positive thinking)

நூற்றுவர்கள் (அதாவது நூறு வயதை கடந்தவர்கள்) எண்ணிக்கை 10 வருடங்களில் இரட்டிப்பு ஆவது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

நூற்றுவர்களிடம் உள்ள பொதுவான 5 விஷயங்கள்,
1) பாரம்பரியம்,
2) ஆரோக்கியம்(எடை, உணவு, உடற்பயிற்சி,),
3) கல்வி,
4) ஆளுமை,
5) வாழ்க்கை முறை.

ஜப்பானின் ஒகினவாவில்தான் உலகிலயே அதிகமான நூற்றுவர்கள் அதாவது (35/100,000) என்ற விகிதத்தில் வாழ்கிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். ஒகினோவில் அதிக அளவில் இருக்கும் நூற்றுவர்களிடம் உள்ள பொதுவான 5 விஷயங்கள் என கீழ்க்கண்டவைகள் அறியப் பட்டுள்ளன.

1) உணவு முறை. தாணியங்கள், மீன், தாவர வகை, முட்டை பால், மற்றும் சிறிது இறைச்சி.

2) குறைந்த மனவழுத்தம் கொண்ட வாழ்க்கை முறை.

3)அதிக அக்கறை கொண்ட, வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகமாக வாழும் முறை.

4) பொது விஷயங்களில் ஈடுபாடும் அக்கறையும், தினசரி நடையும், தாவரம், மிருகங்கள் ஆகியவற்றை பேணுதலும்.

5) தெய்வீக நம்பிக்கையும், பிரார்த்தனையும்.

ஒகினாவின் நிரூபிக்கப் பட்ட உன்மைகள் இவைதான்.

தொடரும்,.இறவாமை ( IMMORTALITY). பாகம் 4......................


அடுத்ததாக எப்பொழுதும் காதுக்குள் ஓதும் நித்திய பரமானந்தத்தின் செய்தியின் அர்த்தம் என்ன?...................................

மேலும் படிக்க...!
top