இக்கதையின் இரண்டாவது பாகம் என்பது கதையைப் பற்றிய ஆராய்ச்சிதான். இக்கதை பற்றி கருத்துக்கள் கேட்டிருந்தேன். ஏனோ தமிழக நாத்திக வாதிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இங்கு பதிவிட்ட சிதம்பரநாதன் கூட மழுப்பலாக பதிந்துள்ளார். வலைப் பூவுலக போக்கிரியாக கருதப்படும் ”வால்ப்பையனும்” படித்து விட்டு அடக்கி வாசித்தமையினால், ஒருவரும் மாற்றுக்கருத்து பதியவில்லை என்று கருதி, அனுமானத்தின் பேரிலும், ஏற்கனவே இது பற்றிய அவர்களது கருத்துக்களைக் கொண்டும் எனது தொடரை தொடர்கிறேன்.

தமிழக பகுத்தறிவு வாதியின் பார்வையில்.

இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிய திராவிடர்களை அசுரர்களாக சித்தரித்து அவர்களை கொடூரமாக கொலை செய்வது போன்று கதை எழுதுவார்கள். சூரியனும் சந்திரனும் விழுங்கக் கூடிய பொருள் அல்ல என்பது இந்த குடுமிகளுக்குத் தெரியாது. இதையும் விட அசிங்கமாக எழுதுவார்கள். பெரியார் மட்டும் வரவில்லை என்றால் இந்தக் கதை பாடப் புத்தகங்களில் வந்திருக்கும். இதைவிட அபத்தமான விஷயம் எங்கும் இருக்காது. சூரியனை பாம்பு விழுங்குவதாம். இந்தமாதிரி அறிவியலுக்கு சற்றும் பொருந்தாத விஷயங்களைச் சொல்லி முட்டாளாக்கி வயிறு வளர்ப்பான். இவனுக குப்பைகளோடு இவனுகளையும் ஒழித்தால்தான் நாடு உருப்படும்.

பெரியாரின் பகுத்தறிவுப் பார்வையில்
http://thamizhoviya.blogspot.com/2009/02/blog-post_5416.html

பகுத்தறிவுப் பகலவனாகத் தோன்றிய பெரியார் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து இலக்கியங்களில் கூறப் படினும் அதனைக் கண்டிக்கத் தயங்காததில் வியப்பில்லை. சூரிய கிரகணம் ஞாயிற்றைக் கேது பற்றுவதால் ஏற்படுகிறது என்ற பகுத்தறிவுச் செய்தி, "பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின் வாய்ப்பட்டான்".  என்று சங்க இலக்கியத்துள் வருவதை எவ்வாறு பெரியார் ஒப்புக் கொள்வார்? "அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல" எனவரும் சந்திரகிரகணச் செய்தியைப் பகுத்தறிவாளர்களால் ஏற்கமுடியுமோ?

நாண்மீன்கள் இருபத்தேழும் மகளிர் என்றும், இவர்களைச் சந்திரன் மணம் செய்து கொண்டான் என்றும், சந்திரன் ரோகினியிடத்து மட்டும் அன்பு செலுத்தினான் என்றும், அதனால் சாபம் பெற்றான் என்றும், சிவபெருமானின் அருள் பெற்றுத் தேய்வதும் வளர்வதுமாக உள்ளான் என்றும் ஆரியர் கூறும் கதை கூறப்பட்டிருப்பதை ஆய்ந்தால், ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வண்ண மெல்லாம் திட்டமிட்டு, புலவர் பெருமக்களிடையேயும் தங்களின் புராணக் கதை
களைத் திணித்து விட்டனர் என்பதை அறியலாம். இதைப் பெரியார் கண்டிக்காமல் இருப்பாரா?

ஆன்மீக வாதியின் பார்வையில்

பகவானின் கருணையே கருணை !. அசுரானாக இருந்தாலும் சரணயடையும் பொழுது தனது தன்மையான தெய்வீக அம்சத்தையே வழங்கி சரணாகதி தத்துவத்தை நிலை பெறச் செய்துள்ளார். மேலும் அந்த அசுரர்களுக்கும் வழிபடும் தலங்களும் உள்ளன என்பதுதான் அதிலும் சிறப்பு.

ஒரு கதாசிரியரின் பார்வையில்

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு அசுரன் தேவ வடிவத்தில் உள்ளான் என்பது சூரிய சந்திரர் காட்டிக் கொடுத்துத்தான் தெரிய வேண்டுமா?. மற்ற அசுரர்கள் அமுதம் உண்டனரா என்பது தெரியவில்லை. நீலகண்டர் விஷயத்தில் கதையின் போக்கு திசை மாறுவது போல் தோன்றினாலும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. மற்ற படி கதை பரவாயில்லை. திருநீலகண்டரின் கதை பிற்சேர்க்கை போல் தோன்றுகிறது. ஆனாலும் அந்த ஆலகால விஷத்திற்கு தீர்வு நீலகண்டரின் கதையில்தான் இருக்கிறது. மொத்ததில் பரவாயில்லை.

ஒரு சராசரி முதியவரின் பார்வையில்

எனது பேரக் குழந்தைகள் கதை கேட்டு தொந்தரவு பன்னுவார்கள். இந்த மாதிரி புராணக் கதைகள் அதிகம் தேவைப் படுகிறது. இதுவும் ஒரு மாதிரி நீதி கற்பிக்கும் கதைதான். நாம் எதை நீதின்னு விளக்கிச் சொல்லிக் கொடுக்கனும் .நிச்சயமாக கேட்டு சந்தோஷப் படுவார்கள்.

அறிவியல் எழுத்தாளரின் பார்வையில்

ஒன்றுக்கு ஒன்றாக சம்பந்தப்பட்ட இருபுள்ளிகள். இதை சரியான முறையில் உருவகப் படுத்தி ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் ஆச்சிரியப் படவைக்கிறது.ஒரு அறிவியல் நிகழ்ச்சியை ஒட்டி இவ்வளவு அற்புதமாக கதை பன்ன முடியுதே அதுதான் விஷயம். நீங்கள் முயற்சி செய்யுங்கள் அப்பொழுதான் இந்தக் கதையை புனைந்தவன், கொண்டுவந்து சேர்த்தவர்களின் அருமை புரியும். இன்றைய காலத்தில் ஊடகங்கள் என்று இண்ட்ர்னெட், டி.வி. ரேடியோ, செய்திதாள், போன் என பலதரப்பட்டவை உள்ளன. அனால் ஒரு 500 வருடங்களுக்கு முன்பெல்லாம் வாய்மொழிப் பாட்டும் கதையும் தான் ஊடகங்கள். ஆக கதை பன்னும் விதமும் கதையிலுள்ள ஈர்ப்பும்தான் அதனுடைய அமரத்துவத்திற்கு உத்திரவாதம்.

என்னுடைய பார்வையில்

இந்தக் கதையை எழுதி முடித்தவுடன், கதையின் பாத்திரங்களைப் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்தேன். முதலில். தமிழர்களுக்கு இந்த பாம்புக் கதை எப்பொழுதிருந்து அறியப் பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்வோம். இந்த பாம்புக் கதை சங்ககாலத்திலேயே தமிழர்களால் அறியப் பட்டுள்ளது எனத் தெரிகிறது. அதாவது 2000 வருடங்களுக்கு முன்பாக தமிழன் கிரகணம் பற்றி மட்டும் அறிந்து கொள்ள வில்லை, ராகு கேது பற்றியும் அறிந்துள்ளான் என்ற செய்திதான் என்பதுதான் நமக்கு மிக முக்கியம்

நற்றிணைப் பாடல் ஒன்றில் குறிப்பிடப் பட்ட செய்தி உள்ளது.

”அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல ”

என்று நற்றிணைப் பாடல். இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப் பட்டுள்ளது. பரிபாடலிலும் தெளிவாக கிரகணத்திற்கு காரணமான பாம்பு என்று குறிப்பிடப் பட்டுள்ளதால் தமிழனுக்கும் இதுதான் புராணம். ஆகவே தமிழப் புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவே கருதலாம்

கன்னிப்பெண்கள் தைந்நீராடுமாறு வையையாற்றில் வெள்ளம் வந்ததைப் பாடுகின்ற ஆசிரியர் நல்லந்துவனாரின் பரிபாடல், அவ்வெள்ளத்திற்குக் காரணமாய்ப் பெய்த மழைக்குக் காரணமான வானியல் நிலையை மிக நுட்பமாக வர்ணித்துக் கூறுகின்றது. (பரி. 11:1-5). அசுவினி முதலான இருபத்தேழு நாள் மீன்களுள் ஒவ்வோர் இரண்டே கால் நாட்களையும் உள்ளடக்கிய மேடராசி முதலிய வீடுகள் பன்னிரண்டுள் நந்நான்கு வீடுகளாகப் பிரிந்து, ஒன்பதொன்பது நாள்மீன்கள் அடங்கிய மூவகை வீதிகளையுடைய
இராசி மண்டிலத்தில், வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும் செவ்வாய் மேடத்திலும்புதன் மிதுனத்திலும் ஆதித்தன் சிம்மத்திலும் வியாழனாகிய குரு மீனத்திலும்திங்களும் சனியும் இராகுவும் மகரத்திலும் கேது கடகத்திலும் செல்லக் கூடிய ஆவணித் திங்கள் அவிட்டநாளில், திங்களை இராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம் நேருமாயின் மழை பெய்யுமென்ற வானியல் விதிப்படி, கோள்கள் கூடினமையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வையையில் வெள்ளம் புரண்டதென்பது அப்பரிபாடல் அடிகளின் கருத்தாகும். அவற்றுள், கோள் நிலைகளைக் கூறி வருகின்ற போது, ஆதித்தன் சிம்மத்தில் செல்லும் நிலையைப் புலவர் நேரடியாகக் கூறாமல், 'புலர்விடியல் அங்கி உயர் நிற்ப' என்று விடியற்காலத்தில் கார்த்திகை மீன் உச்சம் பெற்ற நிலையைக் கூறும் முறையிலேயே உணர்த்துகின்ற நுட்பமும், அவ்வாறே ஆவணிமாதத்து மதிநிறை நாளான அவிட்டமென்ற குறிப்பினையும் அதன்படி திங்களும் இராகுவும் மகத்தில் செல்வதையும் இராகு செல்லும் மகத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் கேது செல்வதையும், 'பாம்பு மதியம் மறைய ஒல்லை வருநாள்' என்ற சிறுதொடரால் உணர்த்துகின்ற ஒட்பமும், உளங்கொளத்தறுவனவாம்.

பாம்பு

இங்கு பாம்புக்கு என்ன வேலை. பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செமித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். இவ்வாறு தான் பாம்பு போற போக்கில் முட்டை வடிவக் கற்களையும் விழுங்கிவிடும். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து சிறிது நேரங்கழித்து அதை கக்கிவிடும் ஆகவேதான் இக்கதையில் பாம்பு உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

திருமாலின் பிரச்சினைகள்

1)சக்ராயுதத்திற்கு மரியாதை வேண்டும்.வெட்டினால் துண்டு இரண்டு தான் அதற்கு மாற்று கிடையாது.
2)சரணம் என்று வந்தவனுக்கு கதி அழித்து சரணாகதி தத்துவத்தை பேணவேண்டும்
3)தப்பு செய்தவனுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும்
4)பாற்கடலில் எடுத்த அமிழ்தத்திற்கும் உரிய மரியாதை வழங்கப் படவேண்டும்.

சோதிடவியல் என்ன சொல்கிறது.

இதில் ராகுவும் கேதுவும் பற்றிய ஜோதிடத் தகவல்கள் தான் நிறைய இருக்கின்றன. இராகுவும் கேதுவும் எப்பொழுதும் நேர் எதிரில் இருப்பார்கள். எதிரும் புதிருமாக உட்கார்ந்திருப்பவர்களை கூட இராகுவும் கேதுவும் போல் உட்கார்ந்திருக்கார்கள் என்று கூறுவதுண்டு.அது போன்றுதான் ஜாதகக் கட்டங்களில் இராகுவும் கேதுவும் 180 டிகிரியில் இருப்பதைக் காணலாம்

கிரகணத்தன்று பிறந்தவர்களது ஜாதகத்தில் சந்திரன் உடனோ அல்லது சூரியன் உடனோ இராகு அல்லது கேது இருப்பார்கள். ஆனால் இதன் உல்டா(vice versa) எப்பொழுதாவதுதான் உண்மையாக இருக்கும்

1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள்.
2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள்
3)இராகுவும் கேதுவும் உருவமில்லாத நிழல் கிரகங்கள்
4)மற்ற எல்லா கிரகங்களூக்கும் தலா இரண்டு சொந்த வீடுகள் உள்ளன. ஆனால் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடு தான் உள்ளது. இராகு கேதுவுக்கு அதுவும் இல்லை.
இராகுவும் கேதுவும் ஜாதகக் கட்டத்தில் சொந்த வீடற்றவர்கள் (வீடு பற்றி பின்னர் பார்ப்போம்.ஆனாலும் சோதிடர்களைக் கேட்டுப் பாருங்கள், இவர்களுக்கு வீடில்லை என்பார்கள் )
5)சூரிய சந்திரர்களை விட பலமானவர்கள்.

இக்கதையின் விவரப்படி அல்லது ஜோதிட விவரப்படி இவர்களின் இருப்பிடத்தை தீர்மானிப்போம். யாராவது ஒருவரின் இருப்பிடம் தெரிந்தால் போதும் மற்றவரின் இருப்பிடம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இராகுவையும் கேதுவையும் கதைப்படி காட்டிக் கொடுத்தவர்களாகிய சூரிய சந்திரர்கள் தான் இப்பொழுதும், எப்பொழுதும் "காட்டி"க் கொடுக்ககிறார்கள். இவர்களை வைத்துத் தான் இராகு கேதுவின் இருப்பிடம் அடையாளம் காணமுடிகிறது.

இவை இரண்டும் பூமியை சுற்றிவருவதாலும், சூரியன் சந்திரன் சம்பந்தப் பட்டிருப்பதாலும். சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றின் சுற்று வட்டப் பாதைக்குள் தான் எங்காவது இருக்க வேண்டும்.மேலும் சூரிய சந்திர கிரகணங்களை வைத்தும் அவர்களது இடத்தை நமக்கு தெரிந்த வகையில் துல்லியமாக மதிப்பிடலாம்.அவ்வாறு பார்க்கும் போது சந்திரன் பூமியை சுற்றும் பாதையின் தளமும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் சந்திக்கும் இடத்தில் தான் அவைகள் இருக்கமுடியும்.

மற்றும் இரண்டு சுற்று வட்டப் பாதைகளும் ஒரே தளத்தில் இருந்தால் எல்லாப் பௌர்னமியும் முழு சந்திரகிரகணமாக இருக்க வேண்டும் என்பதும், எல்லா அமாவாசைகளும் முழு சூரிய கிரகணமாக இருக்க வேண்டும் என்பதும் முடிவாகிறது. ஆனால் உன்மையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதால் ஒன்றை ஒன்று ஒரு சிறிய கோணத்தில் வெட்டிக் கொண்டு சாய்வாகத்தான் இருக்கவேண்டும். இவைகள் இரண்டும் உருவமற்றவை என்பதும் தெரிகிறது. பூமி-சந்திரனின் சுற்றுப்பாதையின் தளம் சூரிய-பூமியின் சுற்றுப்பாதையின் தளத்தை வெட்டும் கற்பனைப் புள்ளிகள் தான் இராகுவும் கேதுவும் என்பது இதன் மூலம் தெரிகிறது.

எனக்குத்தெரிந்த் 3d Max ஐ வைத்து வரைந்துள்ள படங்களையும் விளக்கத்தையும் அடுத்து தருகிறேன்.


............................................தொடரும்


மேலும் படிக்க...!
top