குவாண்டம் கொள்கை

அறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம்.

ஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊடகத்தின் மூலம் அலைஅலையாக பரவுகிறது என்று அறிந்தனர். ஆக பரவுதல் வேண்டுமென்றால் கடலலை போல் அலை வடிவத்தில் தான் செல்லமுடியும் என தீர்மானிக்கப் பட்டது. அதே சமயம் ஒலி வெற்றிடத்தில் பரவுவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். ஒலி செல்ல காற்று வேண்டும், கடலலை செல்ல நீர் வேண்டும்.ஆக எதுவும் பரவுவதற்கு ஊடகம் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதே அடிப்படையில் ஒளியை ஆராய்ந்தனர். ஆனால் சூரியனிடமிருந்து ஒளியானது கதிர் வடிவில் வெற்றிடத்திலும் பரவி பூமியை வந்தடைவது அறிவியலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெற்றிடத்தை முழுமையாக ஆராய்ந்தனர் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒளி பரவுவதற்கு தேவையானவற்றை வைத்து என்ன மாதிரியான ஊடகமாக இருக்க முடியும் என ஆராய்ந்து யூகித்து கண்டுபிடித்தனர். அதன் பெயர்தான் ”ஈதர்”


சும்மா சொல்லக் கூடாது ஈதரும் சுமார் நாற்பது வருடங்களாக அறிவியல் அறிஞர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது. அதனுடைய வாழ்விற்கும் உலை வைக்க ஒரு வில்லன் அல்ல இருவர் வந்தனர். மைக்கல்சன் - மார்லே என்பவர்கள் தான். அவர்களின், குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாரான கதையான ஒரு பரிசோதனையின் முடிவில் இதுகாறும் ஏமாற்றி வந்த ஈதருக்கும் அவர்களை அறியாமலே கல்லறையை கட்டி விட்டனர். எதைக் கண்டுபிடித்து நிரூபிக்கப் போனார்களோ அதற்கே முடிவு கட்டி விட்டு வந்தனர். உவமானம் சரியாகத்தான் எழுதியுள்ளேன்.ஏனென்றால் ஈதரை கண்டுபிடிக்கும் ஒரு பரிசோதனையை முப்பது வருடங்களாக மெருகூட்டி மெருகூட்டி எதை எதையோ கண்டுபிடித்து கடைசியில் ஈதர் இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். ஐன்ஸ்டீன் மூளையில் கணக்குப் போட்ட சொன்ன விஷயமான ஒளியின் வேகம் சார்பற்ற தனிமுதலானது என்ற உயர்ந்த தத்துவார்த்தமான எளிதில் நிரூபிக்க முடியாதென நினைத்த கொள்கையைக் கூட இந்தச் சோதனையின் இடையில் போற போக்கில் நிறுவினர். ஒளியின் வேகத்தை அடிக் கணக்கில் சுத்தமாக கண்டுபிடித்தனர்.

ஈதருக்கு கல்லறை கட்டிவிட்டதால் ஒளி இப்பொழுது எப்படி பரவுகிறது என்று சொல்லியாகனும்.ஒளியானது சொந்தமாக வண்டி(Carrier) வைத்துக் கொண்டுதான் எங்கும் போகிறது வருகிறது. வெற்றிடத்திலும் துப்பாக்கி குண்டு போகுமல்லவா அது போல ஒளித்துகள் வெற்றிடத்தில் பரவுகிறது என்றும் அதற்கு ஃபோட்டான் என்றும் பெயரிட்டனர் அதுவரைக்கும் மெல்லிய குரலில் பேசப் பட்ட துகள் கொள்கை வலுப்பெற்றது. ஒளியானது அலைவடிவாக மட்டுமில்லாமல் துகள் வடிவாகவும் பரவுகிறது என நிரூபிக்கப் பட்டது.

ஆனால் அதுவும் குழப்பத்துடந்தான் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஏனென்றால் அது இயக்கவிதிக்கு ஒத்து வராத துகளாக இருந்தது. உதாரணமாக ஒளியானது கண்ணாடி வழியாக வரும் பொழுது தனது வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டு கண்ணாடியை விட்டு வெளியேறியவுடன் மீண்டும் தனது பழைய வேகத்தை, கவனிக்கவும் ”மீண்டும் தனது பழைய வேகத்தைப்” பெற்றுக் கொள்கிறது. ஒளி பிரதிபலிக்கும் போதும், போய் கொண்டிருக்கும் திசையில் மோதி மீண்டு, எந்த வித சேதாரம்? இல்லாமலும் இயக்கவிதிக்கு மாறாக எதிர்த் திசையில் வேகம் துளி கூட குறையாமல் செல்வது ஓளியினால் மட்டும்தான் முடியும். இதே நிலைமையை ஒரு துப்பாக்கிக் குண்டை வைத்து யோசித்துப் பாருங்கள். ஒரு சிறிய மணல் மூட்டையை துளைத்துக் கொண்டு வெளியேறும் துப்பாக்கி குண்டு மீண்டும் தனது ஆரம்ப வேகத்தை அடைய முடியுமா? முடியவே முடியாது. முடியுமானால் ஹிட்லர் குண்டுச்செலவே இல்லாமல் உலக மக்கள் தொகையில் பாதிப் பேரை கொன்றிருப்பான்.

பின் எப்படி ஒளியினால் மட்டும் முடிகிறது. ஆகவே அது துகள் அல்ல அலை என்றனர்.அது மட்டுமில்லாமல் ஒளியின் மூலக்கூறுகளாக விப்ஜியார் (VIBGYOR) என்று அறிந்தனர். ஆனால் அவைகளை பிரித்தறியும் போது அவைகள் ”அலைநீளம்” என்ற ஒரு பண்பால் மட்டுமே வேறுபடுவதால் இது கண்டிப்பாக துகள் இல்லை அலை தான் என்றனர். இந்த பண்பால்தான் மின்காந்த அலைகளும், கதிர் வீச்சுகளும், ஒளிக்கு பங்காளிகளாக மாறிவிட்டனர்.ஆதலால் கடைசியில் எல்லாமே மின்காந்த அலைகள்தான் என உறுதி செய்யப் பட்டது.அந்தவகையான மின்காந்த அலைகளின் அணிவகுப்பு மிகப் பெரியது. அதில் ஒளியின் பங்களிப்பு மிகவும் குறைவு.கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்தை கிளிக் செய்து பாருங்கள் ஒளியின் குடும்பம் எவ்வளவு பெரியது என்று.ஆக ஒளியில் அலைகளும்,துகள்களும் ஆற்றலும் உண்டு என நிரூபிக்கப் பட்டது.



குந்தி தின்றால் குன்றும் கரையும் என்பார்கள்.அணுவுக்குள் எலக்ட்ரான் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தால் என்ன ஆவது. வெளியில் இருந்து ஆற்றல் கிடைக்காத போது நாய் வாலை அறுத்து நாய்க்கே சூப் வைத்த கதையாக அணுவிற்குள் நடைபெறும் இடையறா இயக்கத்திற்கு அணுவுக்குள் இருந்துதான் ஆற்றலை எடுக்க வேண்டியதிருக்கும்.

மனிதன் ஓடும் போது வியர்வையும் வெப்பமும் ஏற்பட்டால்தான் மனிதன்..அந்த வியர்வையும் வெப்பமும் ஏற்பட அவன் நீரும் உணவும் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் ஒடினால், சாகாமல் இருந்தால் எலும்புதான் மிஞ்சும்

அது போல் மின் இயக்க விதிப்படி, அணுவுக்குள் எலக்ட்ரான் வட்டப் பாதையில் செல்லும் போது காந்த அலைகள் உருவாகும் அதனால் ஆற்றல் செலவு ஏற்படும். ஆற்றல் செலவிற்கு அணுவில் இருந்துதான் எடுத்து செலவழிக்க வேண்டும். அதனால் அணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு பொருட்கள் உருமாறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியில் பொருட்கள் ஏதும் இருக்காது. ஆற்றல் மட்டும் இருக்கும்.

ஆனால் உன்மையில் பொருட்கள் மாறாதிருப்பதால் மின் இயக்க விதி அணுவுக்குள் செல்லுபடியாகவில்லை எனத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே ஒரு நிலையான வட்டப்பாதையில் எலக்ட்ரான் சுற்றும் போது மின் இயக்க விதிக்கு விதிவிலக்காக ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் வேறு வட்டப்பாதைக்கு( பொதுவாக சிறிய வட்டப்பாதைக்கு ) மாறும் போது அது இழக்கும் ஆற்றல் கதிர் வீச்சின் மூலம் வெளிப்படுகிறது. இதைத்தான் ஒளி வீச்சுக்கும் சொல்கிறார்கள். ஆற்றல்ச் செலவின்றித்தான் ஒளி, பயணம் செய்கிறது என்று.

எலக்ட்ரான்களைப் பொறுத்த வரை தேவைக்கு அதிகமாக ஒரு கடுகளவு ( கடுகா? சும்மா, அப்புறம் எடுத்துக் காட்டுக்கு எதைத்தான் சொல்வது?) சக்தியானாலும் மிககுறுகிய கால அளவில் கூட வைத்திருக்காது, கதிர் வீச்சின் மூலம் ஆற்றல் எவ்வாறு வெளியேறுகிறது என்று பார்ப்போம் . பொதுவாக பரவுதல் என்றால் துடிப்பு(Pulse) அல்லது அலை(Wave) இவைதான் நெடுந்தொலைவு பயணத்திற்கு ஏற்றது.ஆற்றல் தொடர்ந்து நூல் (string) போல் வெளியேறுவதில்லை மாறாக சிறுசிறு பருக்கை(Quanta)களாக அல்லது துகள்களாகத்தான் (துடிப்பு அல்லது அலைஅலையாக) வெளியேறுகிறது. ஒரு நொடியில் வெளியேறும் துகள்களின் எண்ணிக்கை கதிர்வீச்சின் அலைவெண் ( v )எனப்படும். இக்கொள்கையை உலகுக்கு சொன்ன பிளாங்க் என்னும் அறிவியலார் ஒரு துகளின் ஆற்றலை கணக்கிட ஒரு சமன்பாட்டை உருவாக்கினார்.

( Quantum) E = hv

இதில் h என்பது பிளாங்கின் மாறிலி எனப்படும், v என்பது அக்கதிரின் அலைவெண் ( v ) .ஆகவே எலக்ட்ரான் என்பதும் அது இருக்கும் இடத்திற்கு தகுந்த அளவில் ஒரு குறிபிட்ட கோண வேகம் கொண்ட எடையற்ற, உருவமற்ற ஆற்றல் குவாண்டாக்கள் தான். இதைத்தான் குவாண்டம் கொள்கை (Quantum mechanics) என்கிறார்கள்.மொத்தத்தில் அலையும் துகளும் ஆக காட்சி அளிப்பது ஆற்றல்தான் என முடிவுகட்டினர். துகளுக்கு ”குவாண்டா” எனப் பெயரிட்டனர்.

விஞ்ஞானமே விழி பிதுங்கி நின்ற இடம் இதுதான்.இதுவரை பருப்பொருளாக எண்ணிக் கொண்டிருந்த அனைத்தும் ஆற்றலாம். நாம் இதுவரை கண்ணில் காண்பதும், தொட்டு உணர்வதும் எல்லாமுமே பொய்த்தோற்றமா? உலகே ஆற்றல் மயமா? அல்லது மாயமா? இதைத்தான் ”எங்கெங்கு கானினும் சக்தியடா” என பாரதியார் கூறினாரோ. இதைத்தான் வள்ளுவரும் தீர விசாரித்து ”மெய்ப் பொருள் காண்பது அறிவது” என்றாரோ?. நன்பர்களே புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் ஏனெனில் இது மூளையை குழப்பிவிடும் விஷயம். ஆனால் மொத்ததில் இது ஒருமுக்கியமான கண்டுபிடிப்பாகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே எடை, வேகம் பற்றிய இயக்கவியல் விதிகள் எதற்கும் ஒத்துவராத நிலையில் அணுவுக்குள் உள்ள துகள்கள் யாவும், பருப்பொருள் அல்ல, ஆற்றலின் வடிவம் தான் என உறுதியாக கூறலாம். ஆக ஆற்றல் எனப்படும் சக்திதான் தான் பொருளாக கண்களுக்குத் தெரிகிறது. பொருள்தான் ஆற்றலாக, சக்தியாக மாறுகிறது.

நமது அன்றாட அறிவின் மூலம், பொருள் அழிவின்மைத் தத்துவம் இப்பொழுது ஆற்றல் அழிவின்மை (Conservation of Energy) தத்துவமாக மாற்றி அமைக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வோம். அதாவது பொருள் ஆற்றலாக மாறும், ஆற்றல் பொருளாக மாறும்.ஆற்றலை அழிக்கமுடியாது. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறும் இதைத்தான் ஐன்ஸ்டீன் தனது கணக்கீட்டால் நிரூபித்து உள்ளார்.அதன் அடிப்படையில் பொருளை சக்தியாக மாற்றுவதற்கான சமன்பாடு இதுதான்.

E =MC2

(E=சக்தி, M=எடை, C=ஒளியின் வேகம்)

சக்தி = பொருளின் எடை X 30,000,000,000 X 30,000,000,000

ஜூல்ஸ் / செகண்ட்= 1கிராம் X 30,000,000,000 X 30,000,000,000 cm

ஒரு கிராம் பொருளை மின் சக்தியாக மாற்றினால் 250,000,000,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள் எவ்வளவு பிரம்மாண்டமானது என்று. ஒளியானது எவ்வாறு அலை வடிவாகவும் துகள் (Photon) வடிவாகவும் உள்ளதோ அது போன்றே எலக்ட்ரானும் உள்ளது. இயற்பியலர்கள் இன்னும் தெளிவான கொள்கையால் விளக்க முயற்சிக்கிறார்கள். நீங்களும் முயற்சிக்கலாம் கொள்கை ரீதியில் யோசிப்பதற்கு காசு பணம் தேவையில்லை. பொறிதட்டினால் நீங்களும் ஒரு ஐன்ஸ்டீன் தான்.

வட்டப்பாதையில் எலக்ட்ரான் எங்கு இருக்கும் என்று கேட்டால் எங்கும் இருக்கும் என்று பிரகலாதன் ஸ்டைலில் கூறுகிறார்கள். ஸ்கார்டிங்கர் (Schordinger) அது வட்டப் பாதையும் கிடையாது, மையத்திலிருந்து சமதூரத்தில் அமைந்துள்ள கோளவடிவமான தளத்தில் எலக்ட்ரான் எங்கு வேண்டுமானாலும் இருக்ககூடிய (uncertainty principle) நிச்சயமற்ற வாய்ப்போடு உள்ளது என்கிறார்.

இன்னும் விவரமாக கேட்டால் உயிர் இருக்கும், இல்லாமலும் இருக்கும் ஸ்கார்டிங்கர் பூனை பற்றி படித்து கொள் என்று ஆன்மிகவாதிகளை விட குழப்புகிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த பூனைக்கதையில்.

ஒரு இரும்புத்தகட்டுப் பெட்டியில் ஒரு சிறிய உபகரனம் உள்ளது .ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் ஹைட்ரோ சயனிக் அமிலம் உள்ளது. கொஞ்சம் கதிரியக்க (Radio active) பொருளும் சிறிய அளவில் உள்ளது. நாம் பெட்டியை மூடின நேரத்தில் அந்த கதிரியக்கபொருளில் உள்ள ஒரு அணு, ஒரே ஒரு அணு கதிரியக்கத்தால் சிதைந்தாலும் (வாய்ப்பு 50/50) அந்த பாதிப்பு, அந்த குப்பியை உடைத்து அந்த அமிலம் பரவி உள்ளே இருக்கும் பூனை இறந்து விடுமாறு அமைக்கப் பட்டுள்ளது. இப்பொழுது பெட்டியில் பூனையை வைத்து விட்டு பெட்டியை மூடிவிட்டால் இப்பொழுது பூனை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியாது. அதன் நிலைமையை தெரிந்து கொள்ள பெட்டியை திறந்தால் தான் முடியும். திறக்காத வரை சொல்லமுடியாது. திறந்தவுடனே (அதாவது அளவிடும் போதே ) கூட இறந்துவிடலாம் அல்லது உயிரோடு இருக்கலாம்.அது போல்தானாம் எல்க்ட்ரானின் நிலைமை நாம் அதை பார்க்கும் போது எங்கு இருக்கிறதோ அதுதான் அதன் நிலை. ஆகவே அனுமானத்திற்கோ கணக்கீட்டிற்கோ ஒத்துவராது என்கிறார் போலும்.

இவர் இதை விளக்க இதை விட நல்ல உதாரணம் தேடி இருக்கலாம். விரைவில் யாராவது நல்ல உதாரணத்துடன் வாருங்கள்.



அவர் சொல்ல வருவது என்னவென்றால் எலக்ட்ரான் ஒரு பொருளல்ல அதற்கு இருக்கும் இடம் சொல்ல முடியாது, ஆனால் கருவிகளால் உணரலாம். மாயாவி போலும்!!. கால இடைவெளிகளில் இருப்பிடத்தை அளந்து பார்த்தால் அது வட்டப் பாதையில் இருப்பது போல் தோன்றினாலும் உன்மை நிலை அவ்வாறு இல்லை.அதை ஒரு புள்ளியால் குறிக்கமுடியாது.(இந்த cycle கேப்பில் தான் ஸ்ட்ரிங்க் தியரி நுழைகிறது).
அதன் இருப்பிடம்தான் குழப்பமே ஒழிய அதன் செயல் பாட்டில் மாறுதல் இல்லை. இப்பொழுது நான் நன்றாக குழப்புகிறேனா?

அறிவியலின் பாலபாடமே கணக்கீட்டிற்கு எதுவும் வரவில்லை என்றால் அது அறிவியலே இல்லை என்பதுதான் அப்புறம் என்ன? அன்செர்ட்டியன்ட்டி பிரின்சிபல் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டால் ஏற்றுக் கொள்ளலாமா?. என்றெல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பேசுவதெல்லாம் மிக மிக மிக மிக நுண்ணிய அளவுகள் பற்றியது.

அப்படியானால் ஆற்றலின் அடிப்படையில் நியூட்ரான்,எலக்ட்ரான் புரோட்டானுக்கு விளக்கம் என்ன? ஆற்றலில் நெகட்டிவ் , பாசிட்டிவ் என்று உண்டா? ஆற்றலில் நெகட்டிவ், பாசிட்டிவ் என்றிருந்தால் பொருளிலும் நெகட்டிவ் இருக்க வேண்டுமே.அப்படியானால் நெகட்டிவ் பொருள் உண்டா? ஆண்டி மேட்டருக்கு வந்து விட்டோமா?

சரி சரி எங்கோ தப்பு செய்கிறார்களா? இதுவும் ”ஈதர்” கதையாகி விடப் போகிறது. நாம் யோசிப்போம், மாத்தி யோசிப்போம். அறிவியலோடு சொல்ல முயற்சிப்போம். அல்லது பொறுத்திருப்போம் யாராவது சரியாக சொல்வார்கள்.

அறிவியல் இந்தமாதிரி முட்டுச்சந்தில் நின்று முழி பிதுங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம் முன்பொருமுறை ”ஈதர்” என்ற இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு 40 வருடங்களாக ஜல்லி அடித்துக் கொண்டிருந்தனர். ஈதரும் கணக்கு பிசகாமல் நடந்து கொண்டு ஏமாற்றிக் கொண்டிருந்தது. பின்னர் மைக்கல்சென் - மார்லே இவர்களின் பரிசோதனையில் தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி மறைந்து விட்டது. அதே போல் அரிஸ்ட்டாடில் காலத்தில் ”பிளாங்கிஸ்டன்” என்பதும் வந்து மறைந்த சமாச்சாரம்தான். அந்த வரிசையில் இப்பொழுது வந்து காத்திருப்பது பிளாஸ்மா, நாலாவது பரிமாணம்,மற்றும் பலவித பரிமாணங்கள்,ஸ்ட்ரிங் தியரி அல்லது Theory of everything TOE.இவைகளில் எவையெவை தேறும் தேறாது என்பதை காலம்தான் சொல்லும்.

நாம் இதுவரை பார்த்தது 60 வருடங்களுக்கு முந்தைய அணுவின் நிலைமை. நியூட்ரான் புரோட்டான் எலக்ட்ரான் ஆகியவை ஆற்றலின் வடிவங்கள் என்றால், மிகவும் அடிப்படையானது ஆற்றல் தான் என்று வருகிறது. ஆற்றலின் வெவ்வேறு வடிவங்கள்தான் துகள்களாக மாறி காட்சியளிக்கின்றது. அப்படியானால் இதுவரை சொன்ன விஷயங்களை எல்லாம் ஆற்றலின் அடிப்படையில் மாற்றி அமைக்கவேண்டியதாகிறது. ஆற்றல் அடிப்படையில் நான் ஏற்கனவே கூறியது போல் கிட்ட தட்ட 30 துகள்களாக பிரித்துள்ளனர்.





அவ்வாறு ஆற்றலின் வெவ்வேறு வடிவமான அந்த முப்பது துகள்களும் கீழ்க்கண்டவாறு பிரிக்கப் பட்டது.

1) போஸான்ஸ் (Bosons) ஆற்றலை சுமந்து ஆற்றலாக இருக்கும், மாறும் துகள்கள்
2) ஃபெர்மியான்ஸ் (Fermions) பொருளாக இருக்கும், எடை கூடிய ஆற்றல் துகள்கள்

இவைகள் மேலும் குவார்க் குடும்பம், லெப்டான் குடும்பம், டாக்கியான்கள்,மீசான்,பேரியான் குளுவான்கள், ஃபோட்டான்கள். கிராவிட்டான்கள் எனப் பிரிக்கப் பட்டது. குவார்க் மற்றும் லெப்டான் ஆகிய ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.குவார்க் குடும்பத்தில் எல்லோரும் எடை மிகுந்தவர்கள். மொத்தத்தில் குண்டோதரர்கள் குடும்பம்தான் குவார்க் குடும்பம். அவர்களின் பெயர்கள், பெரிய அண்ணா, சிறிய அண்ணா, நடு அண்ணா, குட்டி அண்ணா குண்டு அண்ணா, ஒல்லி அண்ணா என்பது போன்று பெயர்கள் வைத்துள்ளனர்.



உண்மையில் அவைகளின் பெயர்கள் Up,Down, Charm, Strange, Bottom and Top Quarks தான் அவைகள். இந்த அடிப்படையில் புரோட்டானை 2Up quark + 1Down quark என்று சொல்லலாம். நியூட்ரானை 2Down Quark + 1Up Quark என விவரிக்கலாம். அல்லது சுருக்கமாக 2U1D,2D1U என்றும் குறிப்பிடலாம்.




ஒல்லியர்கள் குடும்பத்தில் அதாவது லெப்டான் குடும்பத்தில் எலக்ட்ரான் தான் மூத்தவர் நிலைத்த ஆயுள் பெற்றவர். மற்றவர்கள் எல்லாம் வெட்கப்பட்டு வெளியே தலைகாட்ட மறுப்பவர்கள்.அவர்கள்தான் மியூவான்,(Muon) டாவான்,(Tauon) மற்றும் மூன்று நியூட்ரினோக்கள். (Neutrinos)

மேலும் குளுவான்கள், ஃபோட்டான்கள் , கிராவிட்டான்கள் என்ற துகள்களும் உள்ளன என்கிறார்கள் ஃபோட்டான் ஓ.கே. இந்த கிராவிட்டான் தான் இன்னும் அங்கீகரிக்கப் படவில்லை. ஒளி ஆற்றலையும், காந்த ஆற்றலையும் சுமந்து செல்லும்(Carrier) வீரர் படைதான் ஃபோட்டான். அணுக்கருவிசை வலியதை சுமந்து செல்ல குளுவான்கள். அது போல், ஈர்ப்பு சக்தியை சுமந்து செல்ல எப்படியாவது ஒருத்தன் வேண்டுமல்லவா அவன் கிரவிட்டான் ஆகத்தான் இருக்க முடியும் என்பது யூகம். விழுகின்ற பொருளுக்கும் பூமிக்கும் இடையில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று பாருங்கள் அல்லது யோசியுங்கள். அது எப்படி இருக்குமென்று சொல்லிவிட்டால் கண்டிப்பாக நோபல் பரிசுதான்.அணுக்கருவிசை மெலியதை (weak forces)தூக்கிச் செல்ல W+. W-, Z என மூன்று வகை உள்ளன.இப்பொழுது அதிகமாக தெரிந்து கொள்ள எதிர் பார்க்கப்படுவது ஹிக்ஸ்போஸான்(கடவுள் துகள்) மற்றும் கிராவிட்டான் என்ற துகள்கள் பற்றிய உண்மைதான்.

இப்படி ஆற்றலின் வடிவத்திற்கு பெயர் வைக்க ஆரம்பித்தால் துகள்களுக்கு உலகத்திலுள்ளவர்கள் அத்தனை பெயர்களும் பத்தாது. அதுமட்டுமில்லாமல் மூலம் என்று சொன்னால் அது ஒருமையாய் இருக்க வேண்டும்.அதுதான் ஆற்றல்.

இந்தப் ”பொத்தாம் பொதுவா” இருக்கா அல்லது புள்ளியாய் இருக்கா என்ற குழப்பத்திற்கு பின்பும் கூட அணுக்கள் நீல்ஸ் போர் மாடலில் விளக்கப் பட்டது போல்தான் நடந்து கொள்கிறது.ஆகவே அந்த அடிப்படையிலேயே நாம் தொடர்ந்து சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். பின்னர் சமயம் கிடைக்கும் போது ஸ்ட்ரிங் தியரியையும் அறிமுகப் படுத்திக் கொள்வோம். இந்த கிராவிட்டானுக்கு மட்டும் விளக்கம் சொல்லிவிட்டால் ஸ்ட்ரிங் தியரி தான் எல்லாவற்றிற்கும் ஒத்து வரும் போல் தெரிகிறது

இப்பொழுது அணுவை ஒரு பெரிய அறையுடன் ஒப்பிட்டால் நியுக்ளியஸை (புரோட்டான் + நியூட்ரான்) ஒரு சுண்டைக்காய் அளவு என்று யூகித்துக் கொள்ளுங்கள். எலக்ட்ரானுக்கோ எடையும் கிடையாது. ஆனால் இவை மூன்றுக்கும் உருவம் கிடையாது. எப்படி என்று கேட்டால் அது அலையின் (சக்தி) வடிவம் தான் என்பார்கள். ஆக உருவமற்றவைகள் எல்லாம் நிச்சயமற்ற தன்மையில் ஒன்று சேர்ந்து மிகப் பிரம்மாண்டமான உருவங்களாக மாறுகிறது. . இப்போதைக்கு மேற் கூறியவாறே புரிந்து கொள்ளுவோம். எல்லாம் மாயை.

நாம் பூமியில் எங்கிருந்தாலும் மணிக்கு சுமார் 70,000 மைல் வேகத்தில் இடையறாது பயணம் செய்து கொண்டிருக்கிறோம் அது மட்டுமில்லாமல் பூமியின் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகமான மணிக்கு 1000 மைல் வேகத்தில் வேறு சுழன்று கொண்டிருக்கிறோம் என்பதை எனது அன்றாட அறிவிற்கு என்னால் சொல்லி விளக்க முடியவில்லை. கடைசியில் அப்படி வைத்துக் கொள், கணக்கின் படி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, பூமிதான் சூரியனை சுற்றுகிறது சூரியன் சுற்றவில்லை என்பதை எப்படி நம்புகிறாயோ அது போல் இதையும் நம்பு என்று கூறித்தான் சமாதானப் படுத்தியுள்ளேன்.

ஒரு புரோட்டான், ஒரு எலக்ட்ரான் கொண்ட அமைப்புதான் ஹைட்ரஜன் என்னும் வாயு. இதில் நியூட்ரான் கிடையாது. இதுதான் மூலப்பொருள் அட்டவணையில் முதலாவது உள்ளது. ஆதிமூலமும் அதுதான். இவ்வாறு புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய இரன்டும் சம எண்ணிக்கையில் ஏறு வரிசையில் அமைந்து 1 முதல் 92 பொருட்கள் உருவாகி யுள்ளன. பின்னர் செயற்கை முறையில் தயாரித்த தனிமங்களோடு சேர்த்து மொத்தம் 103 உள்ளன.அதற்கு மேலும் உள்ளவை நிலையற்றவை. இதில் ஏறு வரிசையில் செல்லச் செல்ல நியூட்ரானின் எண்ணிக்கை எலக்ட்ரானின் எண்ணிக்கையை விட அதிகமாகிக் கொண்டே போகும். நியூட்ரானின் எண்ணிக்கைக்கும் எலக்ட்ரானின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நியூட்ரான் மட்டும் கூடினால் அணு எடையில் மட்டும் மாற்றம் உள்ள ஐசோடோப்புக்கள் எனப்படும் பொருட்கள் உருவாகும்.

சூரியமண்டலத்தில் ஒன்பது கிரகங்களுக்கு மேல் ஏன் இல்லை என்பதற்கும் தனிமங்களில் ஏன் 92 க்கு மேல் உருவாகவில்லை என்பதற்கு சில ஒற்றுமைகள் உள்ளன. கீழ்க்கண்டவைகள் காரணங்களாக இருக்கலாம்.

1). எலக்ட்ரானின் சுழல் வேகம், மற்றும் ஈர்ப்புத்தன்மை போதாமையும், மையத்திலிருந்து எலக்ட்ரான்கள் உள்ள தூரமும் காரணங்களாக இருக்கலாம்.

2) எலக்ட்ரான், புரோட்டான்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அணுவின் ஸ்திர தன்மை குறைகிறது. அணுக்கள் உருவத்தில் பெரியதாக இருக்கும் பொழுது அதி வேகம் கொண்ட எல்க்ட்ரான்களை இழுத்து பிடித்து வைக்க அதே எண்ணிக்கையிலுள்ள புரோட்டான்களும், புரோட்டான்களை இழுத்துப் பிடித்து வைக்க அதிக அளவில் நியூட்ரான்களும் தேவைப் படுகிறது..

3) நியூட்ரான்கள் அதிகமாகும் போது அணுக் கருவிசை பலவீனப்படுவதால் உள்ளுக்குள்ளயே 2 எலக்ட்ரான் 2 புரோட்டான் 2 நியூட்ரான் ஆகியவை இணைந்து ஹீலியம் போன்ற உறுதி மிக்க சிறிய அமைப்புகள் தோன்றி சுயாட்சி பெற்று பிரிந்துவிடுகின்றன.

அணு எண் 86 க்கு மேல் உள்ள தனிமங்களில் மையத்தின் கட்டுப்பாடு குறையும் போது சில இயக்கங்கள் சுயாட்சி கோரிக்கையுடன் போராடத் தொடங்குகிறது. அதன் வெளிப்பாடுதான் கதிரியக்கம். குழப்பத்தை ஏற்படுத்தும் துகள்கள் நாடுகடத்தப் படுவதுதான் கதிர்வீச்சு (ரேடியோ ஆக்டிவிட்டி, Radio activity).

இவ்வாறு நியுட்ரானைப் பிரித்தால் எடையுடன் கூடிய புரோட்டான், எடையற்ற எலக்ட்ரான் மற்றும் நியூட்ரினோ எனப் பிரிந்து விடுகிறது. இவ்வாறு சேரும் போதும், பிரியும் போதும் ஏற்படும் எடைக்குறைவு தான் அணுசக்தியாக மாறி விடுகிறது.அதாவது எலக்ட்ரான்கள் பெரிய வட்டபாதையிலிருந்து சிறிய வட்டப்பாதைக்கு மாறும் பொழுதோ, இடம் மாறும் போதோ சக்தி வெளிப்படும் அதுவே அணுசக்தியாகும். யுரேனியத்தின் அணுவை எடுத்துக் கொண்டால் அதில் வெளியில் 92 எலக்ட்ரான்களும் மையத்தில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் உள்ளன. இதிலிருந்து யுரேனியத்தின் கதிரியக்கத் தன்மைக்கு நியூக்கிளியஸ் தான் காரணம் என்று தெரிகிறது. இதனால் தான் யுரேனியம் அணுவை பிளந்து சக்தி எடுக்கமுடிகிறது. இதில் 143 நியூட்ரான்கள் (143+92=235)உள்ள யுரேனியம் தான் U 235 என்னும் அணு உலையின் எரிபொருள்.

நீங்கள் மட்டும் இந்த நுண்துகள்களை மாற்றி அமைக்கும் கலையில் வித்தகர் ஆகிவிட்டால் மிக எளிதாக கிடைக்ககூடிய காரீயத்திலுள்ள 82 ஜோடி புரோட்டான், எலக்ட்ரான்களில் 3 ஜோடி புரோட்டான், எலக்ட்ரான்களை எடுத்து விட்டீர்கள் என்றால் அது உலக மக்கள் விரும்பும் ஒரு உன்னத உலோகமான தங்கமாக மாறிவிடும்!.அதே போன்று பாதரசத்தில் ஒரு
புரோட்டான், ஒரு எலக்ட்ரானை எடுத்து விட்டீர்கள் என்றால் அதுவும் தங்கம் தான்!. இதானால்தான் இந்த முயற்சியில் ஈடுபடும் பைத்தியங்களை ரசவாதிகள் என் அழைக்கிறோம். இன்றைய அறிவியல் சொல்லித்தான் பாதரசத்தில் தங்கத்தை விட ஒரே ஒரு ஜோடி புரோட்டானும், எலக்ட்ரானும் குறைவாக உள்ள சமாச்சாரம் நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இந்த தாடிக்கார ரசவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பாதரசத்தைத்தான் தங்கமாக மாற்ற முயற்சித்தனர் அது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.


ஒரு குண்டூசி தலையளவு பொருளில் உள்ள எலக்ட்ரான்களை பிரிக்க 3 மில்லியன் டன் எடையை தூக்கத் தேவைப்படும் சக்தி வேண்டும். அவ்வளவு சக்தியை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பது தான் நமக்குத் தேவையான விஷயம். இதற்கான திறவு கோல் எது. இந்த சக்தியை எப்படி வெளிக் கொணருவது என்பது இன்றைய பிரச்சினை. தமிழகத்தில் ஒவ்வொரு வருடத்திலும் வெளிவரும் 60,000 பொறியாளர்கள் மற்றும் 6,000 ஆராய்ச்சியாளர்கள் இதன் மீது ஒரு கண் வைத்தார்கள் என்றால் நிச்சயமாக வழி பிறக்கும்.

மின்சாரம் என்பதெல்லாம் எலக்ட்ரான்களின் பொழுது போக்கு விளையாட்டு. புவி ஈர்ப்பு விசையில் எல்லாமே ஈர்ப்பு தான், விலக்கல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால் மின்காந்த விசையில் ஒத்த மின்னூட்டங்கள் எந்த அளவுக்கு ஒன்றை ஒன்று விலக்கின்றனவோ அதே அளவுக்கு மாறுபட்ட மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன என்பதுதான் மின்காந்த விசையின் தனித்தன்மை. ஈர்ப்பு விசையை மின்காந்த விசையோடு ஒப்பிட்டால் அது ஒரு ஜுஜூபி. ஈர்ப்பு விசை என்பது மிகமிகத் தொத்தலான விசையாகும்.

யுரேனியத்தின் அணுவை எடுத்துக்கொண்டால் அதில் 92 எலக்ட்ரான்களும் நடுவில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் உள்ளன, ஆனால் 92 எலக்ட்ரான்கள் எவ்வாறு ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமல் ஒழுங்காக சுற்றிக் கொள்கின்றன?.

இதற்கென ஒரு தனி அமைப்பும் விதிகளும் உள்ளது.
வைரமுத்துவின் பாட்டும் உள்ளது.
..................................தொடரும்
.

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!

இராகு கேது (பாகம் 4)

நாம் இந்த தொடரின் கடைசிப் பகுதிக்கு வந்து விட்டோம்.



சந்திரனின் ஒரு வருட சுழற்சியில் அதன் பாதை எப்படி இருக்கும் என்று மேற்கண்ட சித்திரத்தில் காட்டப் பட்டுள்ளது. பூமியே கதிரவனின் கைதிகளில் ஒருத்தி. (ஆங்கில வழக்கப் படி மட்டுமல்ல, நாமும் பூமித்தாய் என்றுதான் கூறுகிறோம்) . இந்தக் கைதிக்கும், அதிலும் ஒரு பெண்ணுக்கு அடிமை சிக்கினால் அவன் பாடு எப்படி இருக்கும் என்பதைத்தான் இந்தப் படம் விளக்குகிறது. அல்லக்கைகள் படும் பாட்டைதெளிவாக விளக்குகிறது. இதில் காட்டப் பட்டுள்ளது ஒரு சுமாரான நிலைமைதான், உன்மை நிலை இன்னும் மோசமானது. ஆனால் சோதிடத்தில் அத்தனை விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது என்பதுதான் ஆச்சரியமூட்டக் கூடியது.


ராகுவும், கேதுவும் எல்லாக் கிரகங்களுக்கும் எதிர்த் திசையில் பூமியை சுற்றி வருவதையும் அவ்வாறு சுற்றி வருவதற்கு 18.5 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பதையும் விளக்குவதற்கான அனிமேஷன் சித்திரத்தையும் கொடுத்துள்ளேன். இதில் ராகுவும் கேதுவும் சந்திரனின் வட்டப் பாதையில் இருப்பதால் ஒவ்வொரு சுற்றின் போதும் சந்திரன் ராகுவையும்( ஏற்றப் புள்ளி, Ascending node) கேதுவையும் (இறங்குபுள்ளி Descending node) ஒருமுறை சந்தித்து விட்டுத்தான் வருகிறது. இந்த சந்திப்புகள் எல்லாம் ”விழுங்குதல்” கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. ஆனால் எப்பொழுது, சூரியன், பூமி,சந்திரன், ராகு கேது இவை ஐந்தும் நேர்கோட்டில் வருகிறதோ அப்பொழுதுதான் ”விழுங்குதல்” என்ற் கிரகணம் ஏற்படும்.

ராகு கேதுவைப் பற்றி பெரிய பெரிய ஜோதிடர்கள் கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் உளறுகிறார்கள் என்பதால்தான் இந்தக் கட்டுரையை விரிவாக எழுதியுள்ளேன். ஆகவே இதன் வலைத் தொடர்பு முகவரியை உங்கள் ஜோதிட நன்பர்களுக்கு அனுப்பி வைத்து பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.





இந்த பாம்புக் கதை இண்டர்னெட் வந்தடைவதற்கு இயற்றியவன் செய்த ஏற்பாட்டை எண்ணி ஒரு பத்து நிமிடங்கள் அவனது காலச் சூழலுக்குச் சென்று செலவு செய்யுங்கள். பேனா பேப்பர் இல்லாத காலம், எழுதப் படிக்கத் தெரிந்தவன் ஆயிரத்தில் ஒருவன், மனிதனது சராசரி ஆயுளோ 20 க்கும் கீழ், வாய் மொழிதான் வழக்கு, இப்படிப்பட்ட காலத்திலிருந்து தான் பாம்புக்கதை வந்து இண்டர்னெட்டில் அரங்கேறியது. இதற்காக அவன் என்ன செய்தான்?.
சொல்ல வந்த விஷயத்தை கவிதையாய், கதையாய், காமமாய், பக்தியாய், வரலாறாய், தகவலாய், அறிவியலாய், என்று பலதரப்பட்ட பார்மேட்களிலும், மீடியாக்களிலும், ஏற்றி பல தலைமுறைகள் தாண்டி மொழிகள் தாண்டி தப்பாமல் செல்ல வேண்டிய இலக்கு நோக்கி செலுத்திய அவனது திறமையை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்களை மஞ்சள் பத்திரிக்கைக்காரன் என்றோ, கறுப்புச் சட்டைக்காரன் என்றோ, காவிச் சட்டைக்காரன் என்றோ, உங்களை அடையாளப் படுத்துவது உங்களது ஒரே மாதிரியான குறுகிய பார்வைதான். ஆகவே பார்வையின் அகலத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். கோணத்தை மாற்றிப்பாருங்கள். நீங்கள் உலகுக்கு சொல்லவேண்டிய நல்ல தகவல் ஒன்றை உருவாக்குங்கள், அதனை குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டி நிற்குமாறு நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

ஆகவே காமத்தைப் பார்த்து அசிங்கம் என்று கருதி அழிக்காமல் ஏதேனும் அறிவியல் இருந்தால் ஆராய்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். உத்ராயணம், தெட்சிணாயணம் என்னும் இந்த ஒன்றுமில்லாத விஷயம் ”பகுத்தறிவாளர்” எத்தனை பேருக்கு இன்றைக்கு புரிந்து இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த விஷயம் கடந்த 2000 வருடங்களுக்கும் மேலாக தமிழனிடமும் உள்ளது. சிறிது ஆழமாக ஆராய்ந்திருந்தால் கெப்ளருக்கும், கோப்பர் நிக்கஸூக்கும் கிடைத்த பேரும் புகழும் ஒரு தமிழனுக்கும் கூட கிடைத்திருக்கும். அப்படி கிடைக்காமல் போனதற்கு காரணம் இந்த கடவுள் மறுப்பாளர்களும், அவர்களது புராண, இதிகாசத் தாக்குதலும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ”பகுத்தறிவுப் பகலவன்”கள் என்ற பெயரில் அரை வேக்காட்டு ”அறிஞர்கள்” தோன்றி, மாத்தி யோசிக்க கற்றுக் கொடுக்காமல், குருட்டுத்தனமாக யோசிக்க கற்றுக் கொடுத்து அறிவியல் ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள். இக்கதைகளை போற்றி பாதுகாப்பவன் தான் புத்திசாலியாகி விடுகிறான் என்பதை காணக் கிடைக்கும் தகவல்களை படித்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

முதலில் பாம்பாம், விழுங்குவதாம் என்று கேலி பேசிய விஞ்ஞானிகளும் மௌனமாக ஒத்துக் கொண்டு அதன் இருப்பிடத்தை டிகிரி சுத்தமாக அளந்து சொல்லி தங்களுக்கும் அறிவு இருக்கிறது என்று காட்டிக் கொள்கிறார்கள்.

"சைன்ஸ் டு டே" என்றொரு அறிவியல் மாதாந்திரப் பத்திரிக்கையில், சுமார் 30 வருடங்களுக்கு முன் சோதிடத்தை கிண்டலடித்து ராகு, கேது என்று இல்லாத கிரகங்களுக்கு பெயரிட்டு அதை அறிவியல் என்று முட்டாள்தனமாக உளறுகிறார்கள் என்று ஒரு பேராசிரியரின் கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தது.

அதே பத்திரிக்கை அடுத்த இருபது வருடங்களில் கோள்களின் இன்றைய நிலை என்று போட்டு ராகு, கேதுவின் நிலைகளை வெளியிட்டு ”அன்றைய அறிவியலை”க் காட்டிக் கொண்டு கட்டுரை எழுதிய பேராசிரியரை முட்டாளாக்கி விட்டது.

ஒன்றுக்குள் ஒன்றாக சம்பந்தப்பட்ட இருபுள்ளிகள். இதை சரியான முறையில் உருவகப் படுத்தி ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் ஆச்சிரியப் படவைக்கிறது. ஒரு அறிவியல் நிகழ்ச்சியை ஒட்டி இவ்வளவு அற்புதமாக கதை பன்ன முடியுதே அதுதான் விஷயம். நீங்கள் முயற்சி செய்யுங்கள் அப்பொழுதான் இந்தக் கதையை புனைந்தவன், கொண்டுவந்து சேர்த்தவர்களின் அருமை புரியும். இன்றைய காலத்தில் ஊடகங்கள் என்று இண்ட்ர்னெட், டி.வி. ரேடியோ, செய்திதாள், போன் என பலதரப்பட்டவை உள்ளன. அனால் ஒரு 500 வருடங்களுக்கு முன்பெல்லாம் வாய்மொழிப் பாட்டும் கதையும் தான் ஊடகங்கள். ஆக கதை பன்னும் விதமும் கதையிலுள்ள ஈர்ப்பும்தான் அதனுடைய அமரத்துவத்திற்கு உத்திரவாதம்.

கிரகங்களையோ சூரியனையோ வைத்து அவைகளின் நிலையை சோதிடன் கணக்கிடவில்லை.பல ஒளிவருடங்கள் தொலைவிலுள்ள நட்சத்திரங்களை வைத்து, அருகிலுள்ள சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களை கணக்கிட்டால் எல்லாவகையான சித்தாந்தங்களும் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ளும்.

அவனைப் பொறுத்த வரை அக்காலத்தில் வானியல் என்பது சோதிடத்திற்கான படிக்கட்டுதான். வானியல் அவனுக்கு அத்துப்படி என்பதற்கு ராகு கேதுவின் உருவாக்கமே சான்று. இந்த வானியல் அறிவை பாமரனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்தும் ஆராய்ச்சி தான் சோதிடம். சோதிடம்தான் அவனது இலக்கு. உலகெங்கும் கி.பி 1500 களில் இந்தியாவின் சோதிடம்தான் நவீன அறிவியலுக்கான படிக்கட்டாக மட்டுமல்ல, நுழைவுச் சீட்டாகவும் இருந்தது என்பது நமது உள்ளுர் பகுத்தறிவுப் பகலவன்களது புத்தியில் ஏறவே ஏறாது.

உங்களுக்கு ஒரு தந்தி வந்தால், அதிலுள்ள தகவல் தான் முக்கியம். தகவலின் தன்மையை ஒட்டி, கொண்டு வந்த போஸ்ட்மேனை அடிக்கிற முட்டாளாகி விடக்கூடாது. மகிழ்ச்சியை மட்டும் அவனுடன் பங்கிடும் ”உயர்ந்த” மனிதனாக இருக்க வேண்டும். ஆகவே இதிகாசங்களும், புராணங்களுமாகிய போஸ்ட் மேனைப் போற்றுங்கள்.

மகாபாரதம் என்ற போஸ்ட்மேன் கொண்டுவந்த ஒரு தகவலைத்தான் எனது ’உயிரும் உயிரின் பிரிவும்” என்ற பதிப்பின் மூலம் ஆராயப் போகிறேன். எவ்வளவு பெரிய அறிவியல் தத்துவத்தை, எளிதாக போற போக்கில் சொல்கிறார்கள் என்பதை படித்து பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...!
பூமியில் பொருட்கள் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும், இன்னும் ஒன்றுடன் ஒன்று வேதியல் வினைகளில் ஈடுபட்டு புதிய பொருட்கள் தோன்றுவது, நிற்காமல் நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். ஒரு பொருளை எரித்தால் அது அழிவதில்லை அது காற்றாகவும் திரவமாகவும் மாறி இந்த பூமியில்தான் சுற்றிக் கொண்டிருக்கும். எப்பொருளுக்கும் அழிவில்லை. இதன் மூலம் ”பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம்” தோன்றியது.



இந்த படத்திற்கான கவிதை

காற்றால் வந்தது
வீழ்ந்தது எப்படியோ

தீயினால் சுட்டபோது
மண்ணில் இருந்து

எடுத்ததை மண்ணிற்கு
விட்டு விட்டு

காற்றால் வந்தது
காற்றாய் போனது.


மேலும் தனிமங்களை (Elements) ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் இந்த 92
தனிமங்களும் (Elements) மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்று அறிந்தனர். அனைத்துப் பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. ஆக அடிபடையாக தொன்னூற்றி இரண்டு என இருந்தது சுருங்கி இரண்டில் வந்து நின்று விட்டது. இந்த அண்டமும் அனைத்துப் பொருட்களும் பெரும்பாலும் இந்த இரண்டு துகள்களினால் உருவாக்கப் பட்டவை என நிறுவப் பட்டது. அவைகள் எலக்ட்ரான்,புரோட்டான் எனவும் இவை இரண்டும் கலந்துள்ள கலவைக்கு நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.

இந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் என்பவரால் விளக்கப் பட்ட மாடலுக்குப் பெயர் ”நீல்ஸ் போர் மாடல்” எனப் படுவதாகும். அதாவது சூரிய மண்டலம் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான் புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச்சுற்றிக் கொண்டே இருக்கின்றன.



                                         அண்டத்தில் உள்ளது பிண்டமானது.
 

                                          பிண்டத்தில் உள்ளது அண்டமானது. 


                                         பிண்டத்தில் உள்ளது அண்டமானது. 

                                                                      லிதியம் அணு
 
                 மேலே உள்ளது லிதியம் என்ற தனிமத்தின் அணு அமைப்பு. 



இதுதான் அமெரிக்காவின் அணுசக்தி அமைப்பின் அடையாளமாக வைக்கப் பட்டுள்ளது


ஏதோ ஒரு பிரளய அழிவினால் இன்றுள்ள அனைத்து உயிரினமும்,அறிவியல் அறிவும் அழிந்து போய்விட அடுத்து தோன்றும் உயிரினத்துக்கு, மிகக் குறைந்த வார்த்தைகளில் சொல்லப்படும் அதிகளவில் தகவல்கள் உள்ள அறிவியல் செய்தி என்னவாக இருக்கும் என்று ரிச்சர்டு ஃபெய்மன் என்ற அறிவியலாரிடம் கேட்டதற்கு அவர் கூறிய செய்தி இது தான்,

”அனைத்துப் பொருட்களும், அழுத்தினால் எதிர்க்கும், விலக்கினால் ஈர்க்கும் இடையறா இயக்கம் உள்ள ஒருவகை துகள்களினால் ஆனவையே”


அழிவுக்குப் பின்னும்


கடந்த 200 வருடங்களில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள், சில சமயங்களில் உயிரைக் கொடுத்து கூட கண்டுபிடித்தவற்றை இதைவிட சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூற முடியாது. இந்த ஒரு கண்டுபிடிப்புதான் எல்லாவற்றிற்கும் திறவுகோல்.

ஆக இந்த அண்டத்தில் கானப்படும் பொருட்களுக்கும் இயக்கத்திற்கும் காரணம் சில துகள்களும், சில விசைகளும், சிலவிதிகளும் தான் என்பது முடிவாயிற்று. அதில் சில முக்கியமான விசைகள் என்னவென்று பார்ப்போம்.


விசைகள்

1) ஈர்ப்பு விசை

2) மின் காந்த விசை

3)அணுக் கருவிசை(வலியது)

4)அணுக் கருவிசை(மெலியது)

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

1) ஈர்ப்பு விசை

எடையுள்ள பொருட்களெல்லாம் தங்களது எடைக்குத் தக்கவாறு எடையின் மையத்தை நோக்கி மற்ற பொருட்களை இழுக்கும் ஈர்ப்பு விசை கொண்டுள்ளது. இது பொருட்களின் எடையையும் இடையேயுள்ள தூரத்தையும் மட்டும் பொறுத்துள்ளது. இருப்பதிலே மிகவும் பலமற்ற விசை இதுதான்.ஆனாலும் இதனுடைய பிரமாண்டத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணம், சுமார் எட்டு கோடி மைல் தொலைவில் மணிக்கு சுமார் 70,000 மைல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தையும் நிலவையும் இழுத்து பிடித்து தனது வட்டபாதையில் சூரியன் வைத்திருப்பதற்கு காரணம் இந்த பலமற்ற விசைதான். இந்த விசைக்கு தூரம் ஒரு பொருட்டல்ல எடை இருந்தால் போதும்.

2) மின்காந்த விசை

முதலில் காந்த விசை, மின்விசை என தனித்தனியாக வகைப்படுத்தப் பட்டிருந்தது. ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளதால் இரண்டும் ஒன்றாக்கப்பட்டது. காந்தத்தில் வடதுருவம் தென் துருவம் உள்ளது போல் மின்விசை இரு வகைப்படும். அவை முறையே நேர் மின்னோட்டம், எதிர் மின்னோட்டம் ஆகும். இதன் முக்கிய பண்பு ,ஒத்த மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் மாறுபட்ட மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும். காந்தத் துண்டுகளிலும் மாறுபட்ட துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கவும் செய்யும், இந்த பண்பை பார்த்திருப்பீர்கள்.இது ஒரு பலமான விசைதான்.

3)அணுக்கருவிசை(வலியது)

இது துகள்களுக்கிடையேயான ஈர்ப்பு விசைதான்.வலுவான விசை என்பது நியூட்ரான், புரோட்டான் இவைகளுக்கிடையேயான ஈர்ப்பு விசையாகும். மிக நெருக்கத்தில் அதாவது அணுவுக்குள் மட்டும் தான் இந்த விசை செயல்படும். இதை மைக்ரோ மில்லிமீட்டரில் செயல்படும் ஈர்ப்பு விசையாக கூட கருதலாம்.ஆனால் ஈர்ப்பு விசையை விட பல பில்லியன் பில்லியன் மடங்கு பலமானது இவ்விசைக்கு பலம் ஒரு பொருட்டல்ல தூரம் தான் பொருட்டு.


4) அணுக்கருவிசை(மெலியது)

இது பொதுவாக கதிர் வீசும் இயல்புடன் சம்பந்தப் பட்டது. கதிரியக்கத்துடன் தொடர்புடையது. பின்னர் பார்க்கலாம்.

துகள்கள்

இப்பொழுது துகள்கள் பற்றி பார்ப்போம். அந்த இரண்டு அடிப்படை துகள்களும் முறையே புரோட்டான், எலக்ட்ரான் ஆகும். புரோட்டான் ஓர் அலகு எடையும் ஓர் அலகு நேர் மின்னோட்டமும் கொண்டது. எலக்ட்ரான் எடையற்றது, ஆனால் ஓர் அலகு எதிர் மின்னோட்டம் மட்டும் கொண்டது. புரிதலின் எளிமை கருதி ஒரு உருவகத்திற்காக புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் இவற்றை முறையே சிவன்(ஆண்), சக்தி (பெண்), அர்த்த நாரீஸ்வரராக (ஆண்+பெண்) குறிப்பிடுகிறேன். அப்பொழுதான் சிவசக்தியை பார்க்கும் போது ஒரு ஹைட்ரஜனும் , அர்த்தநாரீஸ்வரரை பார்க்கும் போது நியூட்ரானும் ஞாபகத்திற்கு வரும்.

ஒரு அணுவுக்குள் புரோட்டானும், எலக்ட்ரானும் எப்பொழுதும் சம எண்ணிக்கையில்தான் இருக்கும். புரோட்டான் மையத்தில் இருக்கும்.ஆகவே எலக்ட்ரானின் எண்ணிக்கையும் இருப்பிடமும் தான் பொருட்களின் தன்மையை தீர்மானிக்கின்றது.
 

புரோட்டானும் (நேர் மின் துகள்) எலக்ட்ரானும் (எதிர் மின் துகள்) அருகருகே இருந்தால் ஒன்றை ஒன்று ஈர்த்து சிவன், சக்தியாக இருந்தவர்கள் சக்தியாக மாறி மறைந்து விடுவதைப் போல் சக்தி வெளிப்பாட்டுடன் மறைந்துவிடும். ஆனால் எலக்ட்ரான் சுற்றிக் கொண்டு இருப்பதால் ஒன்றை ஒன்று நெருங்குவது தடுக்கப்படுகிறது.

                                                          சிவசக்தி (ஹைட்ரஜன்)

                                                அர்த்தநாரீஸ்வரார் (நியூட்ரான்)

நியூட்ரானைத் தனிமைப்படுத்தினால் அது நிலையற்றது. (ஏதோ பக்தர்கள் விரும்பினால் மட்டும் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்து மறைவது போல்) சில நிமிடங்களில் சிதைவுற்று எலக்ட்ரான். புரோட்டான் நியூட்ரினோ என மூன்று துகள்களாக மாறிவிடும். நியூட்ரினோ ஒரு அடிப்படை துகள் இல்லையா எனக் கேட்கலாம், இந்தக் கேள்வி நியாயமானது. ஆனால் தற்பொழுது அது நிலையற்றது என கருத்தில் கொள்ளுங்கள் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
 

ஒரு புரோட்டானும்,  ஒரு எலக்ட்ரானும் உள்ள, பொருட்களுக்கெல்லாம் ஆதிமூலமாக கருதப்படும் ஹைட்ரஜனுக்கு  சரியான உதாரணமாக சிவசக்தியைத் தான் குறிப்பிட வேண்டும். மேலும் நமக்கு இப்போதைக்கு, நமது சிற்றறிவுக்கு குழப்பத்தை விளைவிக்க கூடிய, முழுமையாக அறியப் படாத ஏறத்தாழ 30(முப்பது) துகள்கள் (அவைகளை சிவ கணங்களோ என நீங்கள் கருதிக் கொண்டால் அது உங்களது விருப்பம்), மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள கதிர்கள் பற்றிய கருத்துக்கள் உள்ளன. அவற்றைப் பற்றி விஞ்ஞானிகள் என்ன மாதிரி சரடு (String) தி(ய)ரிக்கிறார்கள் என்று பின்னர் பார்ப்போம். இப்பொழுது ”முதலில் வந்தது முதலில்” என்ற ரீதியில் பார்ப்போம்.

விதிகள்

இயற்பியல், வேதியல்,தாவரவியல்,விலங்கியல் ஆகிய எல்லாவற்றிற்கும் விதிகளும், மாறிலிகளும் ஏராளம் உள்ளன. இயற்பியலில் நமக்கு தேவையான விதிகளை மட்டும் பார்ப்போம்.

1)” இயங்கும் இயங்காப்பொருட்கள் அனைத்தும் வேறெரு விசை தாக்காத வரை அதே திசையில் தனது நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.” இந்த விதியை மட்டும் நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் பிற்காலத்தில் நீங்கள் ஒரு ஐன்ஸ்டீன்தான். இயற்பியலின் மூலாதாரம் இதுதான். எல்லா இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம் இதுதான்

2) ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டு.

3) ஈர்ப்பு விசை எடைக்கு நேர் விகிதத்தில் கூடுகிறது, தூரத்தின் அடுக்கிற்கு எதிர் விகிதத்தில் குறைகிறது என சுமாராக அறிந்து கொள்ளலாம்.

4) ஒத்த மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் மாறுபட்ட மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும்.

ஒரு பொருளின் வேகத்தை எது வரைக்கும் அதிகப் படுத்தலாம்?.வேகத்தை கூட்ட கூட்ட கூடிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் வேகம் கூட ஆரம்பித்தவுடன், அது காலத்தோடு போட்டுக் கொண்ட உடன்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு காலத்தை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளும். வேகம், எனக்கு ஒரு வரம்பு உள்ளது அதற்கு மேல் கூடமாட்டேன் ஆகவே நீ உன்னை குறைத்துக் கொள் என்று காலத்திடம் கூறிவிடும்.(Time dilation)

அது என்ன உடன்படிக்கை?

எப்பொருளாயிருந்தாலும் அதன் வேகத்தின் எல்லை, ஒளியின் வேகத்திற்கும் குறைவுதான், ஃபோட்டான் போன்ற துகளால் மட்டும்தான் அந்த வேகத்தை அடைய முடியும். அதற்கு மிஞ்சிய வேகம் கிடையாது. எந்த பொருளாவது ஒளியின் வேகத்தை அடையும் போது (அடைய முடியாது என்பதுதான் உன்மை, நெருங்கும் போது) அந்த இடத்தில் காலம் தன்னை மிகவும் அதீதமாக சுருக்கிக் கொள்ளும். எடையோ எல்லையில்லாத அளவுக்கு கூடிவிடும், பொருளின் நீளமும் எல்லையில்லாத அளவுக்கு குறைந்துவிடும்,ஒரே தொகுப்பில் எதிரெதிர் திசையில் சென்றாலும் ஒன்றை ஒன்று சார்ந்து எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் ஒளியின் வேகத்தை மீற முடியாது.(லாரன்ஸ் டிரான்ஸ்பார்மேஷன்கள்)(Lorentz Transformations)

வேகம், காலம், எடை, வெளி ஆகிய நான்கும் பெரு வெடிப்புக் காலத்தில் பிறக்கும் போது போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. நான்கும் ஒரு தொகுப்பை (Frame of reference) பொறுத்தவரை ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் அது. அதனால்தான் அதற்கு சார்பியல் தத்துவம் எனப் பெயரிடப் பட்டுள்ளது.

எடுத்துக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட தொகுப்பில் (frame of reference) ஒன்று மீறும் போது ஒளியைத் தவிர மற்ற மூன்றும் தங்களை மாற்றிக் கொண்டு ஏதோ ஒருவகையில் ஈடுகட்டிக் கொள்கிறது.

குறைந்த பட்ச வெப்பநிலை என்பது -273 பாகை செல்சியஸ் என்றும் அதற்கு கீழ் கிடையாது என்பதுவும் விதி. ஏனென்றால் பொருளில் அணுக்களின் இயக்கம்தான் வெப்பமாக உணரப் படுகிறது.அணுக்களின் (துகள்கள் அல்ல) இயக்கம் நின்றுவிட்டால் வெப்பம் சூன்யம் எனப்படும். அந்த சூன்ய வெப்ப நிலைதான் 0 டிகிரி கெல்வின்(-273 டிகிரி செல்ஸியஸ்). உலகில் வெப்பம் என்பது மட்டும்தான் உள்ளது குளிர் என்று ஒன்று அறிவியலைப் பொறுத்தவரை இல்லை. அந்த மைனஸ் என்பதெல்லாம் ”பனிக்கட்டியைப் பொறுத்து” என்கிற மனிதக் கற்பிதக் கணக்கு. (இங்கேயும் ஃப்ரேம் ஆப் ரெபரன்ஸ் தான்). மனிதன் எப்படி காலத்தை கி.மு, கி.பி என்று பிரித்து குழப்பியடிக்கிறானோ அது போன்றதுதான். (இந்த கி.மு, கி.பி பற்றி இன்னும் சில பட்டதாரிகளுக்கே சரியாகப் புரிய வில்லை என்பதுதான் யதார்த்த நிலை).

ஆகவே தற்பொழுது கூறப்பட்டுள்ள அமைப்பில், அணுவுக்குள் இருக்கும் புரோட்டான், எலக்ட்ரான் நிலைமை பற்றி சில கேள்விகள் எழுகிறது. உங்களுக்கு எழுகிறதா?

1) அணுவுக்குள் புரோட்டனும் எலக்ட்ரானும் ஒன்றை ஒன்று ஈர்த்து (நியூட்ரலாக) ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து சமன் செய்து சூன்யமாக மாறி விடாமல் எவ்வாறு தனித்தனியே இருக்கின்றது?




பதில் : சூரிய மண்டல மாதிரியான அமைப்பில்தான், ஈர்க்கும் பொருட்களாகி சூரியன், பூமி ஒன்றை ஒன்று ஈர்த்தாலும் ஒன்றுக்குள் ஒன்று முழ்கிவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் சுற்று வட்டப்பாதையில் பூமியின் வேகம் சூரியனின் ஈர்ப்பை சமன் செய்து விடுகிறது. ஆகவே அது போன்ற அமைப்பில் தான் நியூட்ரான், புரோட்டான் அடங்கிய நியூக்கிளியஸை மையமாக கொண்டு எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் மையத்திலிருந்து இருக்கும் தூரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதாக கூறலாம். இங்கு எலக்ட்ரானின் சுற்றும் வேகம்தான் ஈர்ப்பை வென்று பிரித்தே வைக்கிறது. ஆகவே அணுவுக்குள் இடையறாத இயக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.


2) ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் ஒத்த தன்மையுள்ள புரோட்டான்கள் எவ்வாறு மையத்தில் ஒற்றுமையாக சேர்ந்து இருக்க முடியும்?



பதில் : ஹைட்ரஜனை தவிர மற்ற எல்லா தனிமங்களிலும் புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது கூடுதலாகவோ நியூட்ரான்கள் உள்ளன. நியூட்ரான்களின் அணுக்கருவிசை புரோட்டான்களின் தள்ளுவிசையை மிஞ்சி புரோட்டான்களை ஈர்த்து வைத்துள்ளது. ஆகவே நியூக்கிளியசில் அமைதி நிலவுகிற்து.

இங்கே காட்டப் பட்டுள்ள லிதியம் அணுவில் 3புரோட்டான்கள், 4 நியூட்ரான்கள், 3 எலக்ட்ரான்கள் உள்ளது. இதிலுள்ள அதிகப்படியான நியூட்ரான்கள், புரோட்டான்களை இழுத்துப் பிடித்து வைத்துள்ளது.

ஹைட்ரஜனில் ஒரே ஒரு புரோட்டான் இருப்பதால் தள்ளுமுல்லுக்கு இடமில்லை. ஆகவே நியூட்ரானின் தயவு தேவை இல்லை.ஆகவே நியூட்ரானும் இல்லை.

3) நியூட்ரானையும் ஏன் தனி ஒரு துகளாகக் குறிப்பிடவில்லை?

புரோட்டனும் எலக்ட்ரானும் சேர்ந்த கலவைதான் நியூட்ரான்,ஆகவே அடிப்படைத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சிவனையும் சக்தியையும் கணக்கில் கொண்டதால் அர்த்தநாரீஸ்வரரை தனியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை அல்லவா அது போன்றதுதான்.

துகள்கள் பருப்பொருளா (குறிப்பிட்ட உருவம் கொண்டதா) ?

சூரிய மண்டல ஈர்ப்பு விசையும் அணுவுக்குள் இருக்கும் மின்விசையும் வெவ்வேறு விதமாக செயல்படும். சாதாரணமாக உபயோகத்தில் உள்ள மின் இயக்கவியல் விதிகள் எதுவும் அணுவுக்குள் உள்ள துகள்களுக்கு ஒத்து வரவில்லை. ஏனென்றால் அது துகளா அல்லது அலையா என பிரித்தறிய முடியவில்லை.அதாவது குறிப்பிட்ட உருவம் கொண்டதா அல்லது உருமில்லா ஆற்றலா எனக் கூறமுடியாத இரண்டும் கெட்டான் நிலை. காந்தத் துண்டுகளை சுற்றிலும் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதைத் தான் காந்த புலம் என்கிறோம். இது காந்த அலைகளால் ஏற்பட்டதானாலும் அதுவும் ஒருவகைத் துகள் சம்பந்தப்பட்டது தான். அதனால்தான் மின்காந்த அலைகள் என்கிறோம். மின்துகள்கள் தான் காந்தஅலைக்கு காரணம்.

தொடர்வோம்..................................................... 


முந்தையபதிவு

மேலும் படிக்க...!
பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செரித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். பாம்புக்குத் தெரியும் முட்டையில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன என்று. ஆகவே முட்டையின் மீது அதற்கு ஒரு விதமான ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.

பறவைகள் தங்களது செரிமானத்துக்கென்றே சில கடினமான முனைகளை கொண்ட கற்களை தேடி எடுத்து விழுங்குகின்றன. நாளடைவில் அவைகளின் கூர் மழுங்கிய பின்னர் அவைகள் உண்மையிலே நன்றாக பளபளப்பாக இருக்கும்.அவை இனிமேலும் பயன்படப் போவதில்லை என்பதை அறிந்து அவற்றை தங்களது எச்சத்துடன் வெளியேற்றி விடுகின்றன. அவற்றில் கோடியில் ஒன்று மரகதமாகவோ, மாணிக்கமாகவோ, இரத்தினமாகவோ இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு வெளியேற்றப்படும் கற்களில் உள்ள எச்சத்தின் வாடையால் முட்டையோ என நினைத்து பாம்புகள் விழுங்கி விடும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அவற்றை செரிக்க முடியாமல் கக்கி விட்டுச் சென்றுவிடும். பறவைகள் வாழும் இடங்களில் கிடக்கும் கற்களைத்தான் விழுங்குகின்றன.

இவ்வாறு தான் பாம்பு போற போக்கில் முட்டை என நினைத்து முட்டை போல உள்ள பளபளப்பான கற்களையும் விழுங்கிவிடும். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து சிறிது நேரங்கழித்து அதை கக்கிவிடும். அவ்வாறு கக்கும் முன் அகப்பட்ட பாம்பை போஸ்ட் மார்ட்டம் செய்த காட்டுவாசிகள், ஆஹா நாகமாணிக்கமாக இனிமேல்தான் மாறும் என கதை கட்டி விடுவார்கள்.

ஆனால் கக்குவதற்கு சிறிது சிரமப் படும், நேரமும் எடுத்துக் கொள்ளும். சில சமயங்களில் பாம்பு விழுங்கும் கற்களில் மாணிக்கம் போன்ற மதிப்புள்ள கற்களாக இருந்து விட வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு அது விலையுர்ந்த கல்லென்று கண்டிப்பாகத் தெரியாது. ஆதலால் அதையும் கக்கிவிடும். இதை தற்செயலாக பார்ப்பவர்கள் பாம்பு நாக மாணிக்கம் வைத்திருப்பதாகவும் அதை வைத்துதான் அதில் இருந்து வரும் ஒளியினால் இரவில் இரை தேடுவதாகவும் கதை கட்டி விடுகிறார்கள்.

எந்தவித உயர்ந்த கற்களுக்கும் சுயமாக ஒளிவீசும் தன்மை கிடையாது என்பதை படித்தவர்களும் மறந்துவிட்டு கற்களை தேடி அலையும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது. ஒளியின் ஏதாவது ஒரு கீற்றாவது இருந்தால் தான் கற்கள் அதை தனக்குள் சேதாரம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான முறை பிரதிபலித்து தன்னைக் காட்டிக் கொள்ளுமே தவிர அதிலிருந்து ஒளி கிடைக்கவே கிடைக்காது. இதில் கல்லின் மதிப்பு என்பது அதன் நிறத்தையும் அதன் பிரதிபலிக்கும் தன்மையையும் அது ஏற்படுத்தும் ஒளி விலகலின் கோண(Refractive Index) அளவையும் பொறுத்துத் தான் மதிப்பிடப்படுகிறது.

ஒரு கல்லின் மதிப்பு அதற்கு பட்டை தீட்டப் படும் தரத்தின் தன்மையைப் பொறுத்தும் பட்டைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும்தான் உயருகிறது. வைரத்திற்கும் சொந்தமாக ஓளி கிடையாது. வைரம்தான் உலகத்திலேயே மிகவும் கடினமான பொருள் என்பதால் அதன் பட்டை பரப்பு எளிதில் சேதமாகாததால் நீண்ட காலத்திற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மை மாறாமல் இருக்கிறது.

மேலும் வைரத்திற்குத்தான் ஒளிவிலகலின் கோண அளவும் அதிகம். அதாவது அதனூடே ஒளி செல்லும் வேகம் குறைவாக இருக்கிறது.
கோழிக்கல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மேலும் படிக்க...!

இறவாமை ( IMMORTALITY). பாகம் 4


இறவாமை ( IMMORTALITY). பாகம் 1
இறவாமை ( IMMORTALITY). பாகம் 2
இறவாமை ( IMMORTALITY). பாகம் 3
 
இறவாமை ( IMMORTALITY). பாகம் 4
அல்லது
பெரியாருக்கும் டரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலாவிற்கும் என்ன சம்பந்தம் ?

பிரம்மச்சாரிகளின் ஆயுள் எப்படி?
பிரம்மச்சாரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விஷயம் சொல்லப் போகிறேன். பொதுவாக பிரம்மச்சாரிகளின் ஆயுள், சம்சாரிகளின் அதாவது கல்யாணமானவர்களின் ஆயுளை விட 15% குறைவுதான் என ஆராய்ச்சியும் தகவல்களும் சொல்லுகின்றன. இதற்கு மாறாக நீங்கள் யாரையாவது குறிப்பிட்டால் அதற்குன்டான காரணத்தை இக்கட்டுரை முடிவதற்குள் தெரிந்து கொள்வீர்கள்.

லாகிரி வஸ்துக்கள்.

நூற்றுவர்களில் 90% பேர் லாகிரி வஸ்துக்களான, பீடி, சிகரெட், உபயோகிப்பவர்கள்தான். அதனால் அளவான உபயோகம் தவறில்லையோ எனத் தோன்றுகிறது. அல்லது அவர்களெல்லாம் தேர்ந்தெடுக்கப் பட்ட வித்துக்களாக இருப்பதால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடிகிறது போலும்.

மது

குடியைப் பற்றி பேசினால் அது 35 வயதினருக்கு மேல் உள்ளவர்களது சமாச்சாரமாக கருத வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால அந்த காயகல்ப மருந்தான அமிழ்தமே நஞ்சாகும் போது, பற்றி எரியும் ஆல்ஹகால், அளவுக்கு மிஞ்சினால் கேட்கவும் வேண்டுமா?. குடிப்பவர்களை

1) தீவிர குடிகாரர்கள்,
2) குடிகாரர்கள்,
3)மிதமான குடிகாரர்கள்

என மூன்று வகையாகப் பிரிக்கலாம். மது அருந்துவதில் நல்லதும் கெட்டதும் உண்டு. கெட்டதை முதலில் சொல்லிவிடுகிறேன். முதல் வகை தீவிர குடிகாரர்கள், மற்றும் இரண்டாவது வகை குடிகாரர்களின் ஆயுள், மது அருந்தாதவர்களின் ஆயுளை விட பாதிதானாம்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் மிதமான குடிகாரர்கள் மது அருந்தாதவர்களை விட 15% நீண்ட ஆயுளுடன் இருப்பதாக 25 வருட ஆராய்ச்சியின் முடிவாகும்

இங்கு இந்த 104 வயது இளைஞரின் கைகளில் உள்ளவற்றைப் பாருங்கள்.இவர் மிதமான குடிகாரராகத் தான் இருக்கமுடியும்



ஆக நீண்ட ஆயுள் விஷயத்தில் இது வரை எழுதியதில் உள்ள முக்கிய குறிப்புக்களை பார்ப்போம்.உலகம் முழுவதும் எடுக்கப் பட்ட தகவல்களின் படியும், மனிதனது நீண்ட ஆயுள் என்பது 120 வயது என்பது எனத் தெரிய வருகிறது.

தாவரங்களின் நீண்ட வயதுக்கு காரணம்?.

தாவரங்களின் வாழ்வாதாரம் என்ன?.
மரங்களின் செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப் படுவதாலும், மாறாத சூழலில் கிடைக்கும் ஆக்ஸிஸனும் தான் காரணிகள்.

விதி என்ன சொல்கிறது?

சோதிடம் நீண்ட ஆயுள் எனச் சொல்வது சாதாரணமாக 95 வயது வரைதான் ஆனால் அதிகபட்சமாக 120 வயது வரைக்குமான கணக்கீட்டிற்கு வழி வகுத்து உள்ளது..குழந்தை மரணம், கான்சர், விபத்து, முக்கிய உறுப்புக்களில் திடீரென ஏற்படும் சேதாரம் ஆகியவைக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது.அதைத்தான் விதி என்பதா?

உணவு

நமது உடம்பில் ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free Radicals)அதிகரிப்பதால் செல்கள் நோய் எதிர்ப்புத்தன்மை இழக்கிறது. இதற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் (Anti Oxidant) பொருட்கள் உணவில் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாதுளம் பழம், டீ, வால்நட் இவைகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும். அவ்வப்பொழுது மருந்தாக, சுக்கு, மிளகு, திப்பிலி, அமுக்ரா, ஜின்செங், ஆவாரை, வெள்ளைப் பூண்டு, நெல்லிக்காய், மீன் எண்னெய், இவற்றை ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் . ”உறுப்புக் கறி” (Organ meat) சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள். அதாவது இரத்தப் பொறியல், மூளை வறுவல், கால் சூப், குடல் குழம்பு, தலைக்கறி சாப்ஸ், இத்யாதி என எல்லாவற்றையும் சாப்பிடச் சொல்கிறார்கள்.

மக்களின் உணவுப் பழக்கங்கள் எதுவும் அதிமுக்கிய காரணிகளாக இல்லை. ஆனால் ”டீ”மட்டும் நீண்ட ஆயுள் கொண்ட எல்லாராலும் சாப்பிடப் பட்டிருக்கிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, நடப்பது ஒன்றுதான் முக்கியமானதும், எளிமையானதும் எனத் தெரிய வருகிறது.

மூச்சுப் பயிற்சி.(வாசி யோகம்)

மூச்சடக்கி வாழ்ந்தால் முன்னூறு வருஷம் வாழலாம் என்பது ஆமை, முதலை இவைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.இரண்டுக்கும் பொதுவான குணம் மூச்சடக்கி சுமார் 2 மணி நேரம் கூட தண்ணீருக்குள் இருக்கும் திறமை உள்ளவை. உடலுக்கு கெட்டியான தோல் அமைப்பு உள்ளது.

120 வயதுக்கு மேல் வாழ்ந்த ஹ்பீப் மியானின் தொழில் இசைக் கருவி, கிளாரினெட் (துளைக்கருவி) வாசிப்பது ஆகும். (3)அவரது உணவுப் பழக்கங்களில் ஏதும் தனிச் சிறப்பு இல்லை. ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 15 டீ குடிப்பாராம்.(4)ஒரு வேளை துளைக் கருவிகள் வாசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கலாம். ஏனெனில் நுரையீரல் சம்பந்தப் பட்ட விஷயமாக இருப்பதால் தானோ? அதனால்தான் சித்தர்களும் யோகிகளும் பிரணாயாமத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் போலும்.

வேறு காரணங்கள்.

”இனவிருத்திக்கான ஹார்மோன்களின் சுரப்புத்தான், செல் புதுப்பித்தலை கட்டுப் படுத்துகிறது.அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.” என்று முந்தைய பகுதியில் சொல்லியிருந்தேன்.

டரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலா (Turritopsis nutricula) என்னும் ஜெல்லி ஃபிஷ் வளர்ந்து பருவம் அடைந்து இனப் பெருக்கம் செய்த பின் மீண்டும் பருவம் எய்த தயாரான நிலைக்கு (கன்னித்தன்மைக்கு) வந்துவிடும். இவ்வாறு மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பருவங்களில் இருப்பதால் இதுதான் உலகிலேயே உயிரியல்படி சாகா வரம் பெற்ற உயிரினமாக கருதப் படுகிறது என்றும் சொல்லியிருந்தேன் .இதில் உள்ள சூட்சுமம் எப்படி என்று ஆராயுங்கள் உங்களுக்கு நோபல் பரிசுதான்.

இதைத்தான் நன்பர் நிலவன் பாகம் 1ன் பதிவின் பின்னூட்டத்தில் விளக்கமாக சொல்லும்படி கேட்டிருந்தார். இனவிருத்திக்கான ஆர்வமும் அதற்கான ஹார்மோன்களின் சுரப்பும்தான் சாகா வரத்திற்கான கன்னித்தன்மைக்கு காரணிகளாகும். இங்கும் ”காதுக்குள் ஓதும் நித்திய பரமானந்தத்தின்” கைவரிசை உள்ளது அதையும் பின்னர் பார்ப்போம்.

தாயாருக்கு தலைமகனையும் தந்தைக்கு கடைசி மகனையும் பிடிக்கும் என்பார்கள். தாயுக்கு தான் மலடியல்ல என்பதை நிரூபிக்க பிறந்தவன் முதல் மகன். தகப்பனுக்கோ தனது “ஆண்மையை” நிரூபிக்க பிறந்தவன் கடை மகன் . ஆக இருவருக்கும் இனவிருத்தியின் மீதுள்ள ஆர்வம்தான் பாசத்திற்கான காரணம்.

இதனுடைய தத்துவத்தைத்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ பின் பற்றுகிறான். சாகக் கிடக்கும் கிழடுகளுக்கு இளம் கன்னிப் பெண்களை திருமணம் செய்துவித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். காரணமில்லாமல் காரியமில்லை. அந்த திருமணம் கணவன் என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும். (தொடுப்பு எல்லாம் கணக்கில் வராது என நினைக்கிறேன்.) இது நமது புராணங்களிலும் காணப் படுகிறது. மன்னர்களும் வயதான காலத்தில் திருமணம் செய்வதும் இதற்குத்தான்.

இதை ஒட்டிய பழமொழி ஒன்றும் உள்ளது. ”கிழவன் பிள்ளை கிழங்கு போல” என்று.இது பற்றி நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.அல்லது உங்களுக்கு தோன்றியதை அல்லது தெரிந்ததை எனக்கு எழுதுங்கள்.

அந்த முறையில்தான் பெரியார் தள்ளாத வயதிலும் யாரோ தீட்சிதர் சொன்னார் என்று பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர் ஆயுள் கூடியது. வயோதிகத் திருமணத்தை மிக மிகக் கடுமையாக எதிர்த்தவர், ஒருகட்டத்தில் உயிர் பயத்தினால் தான் செய்த வயோதிக திருமணத்தின் காரணத்தை தன் தொண்டர்களுக்கு அவரால் சொல்ல முடியவில்லை. பாவம் அவரது தொண்டர்கள் இது தெரியாமல் அவருக்காக பலவிதமான சப்பைக் கட்டு கட்டினார்கள், கட்டுகிறார்கள்.

வயோதிகர்கள் திருமணம் செய்து கொண்டதால் இனவிருத்திக்கான ஹார்மோன்கள் அவர்களுக்குத் தெரியாமலே சுரக்க ஆரம்பிக்கும் போது செல்களின் புதுபித்தல் தொடர்கிறது.அதனால் ஆயுள் கூடுகிறது. ஆகவே பேராசைப் படும் இளம் பெண்களே கிழடுகளை கட்டிக் கொண்டால் விரைவில் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம் என தப்புக் கணக்கு போட்டு ஏமாந்து விடாதீர்கள்.

ஜப்பானின் ஒகினோ மக்களின் பழக்க வழக்கங்களை பின் பற்றுங்கள். இது தனி மனிதனுக்கானவை அல்ல. நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் உள்ள ஒரு சமூகத்திற்கான வழிமுறைகள்.

1) உணவு முறை. தாணியங்கள், மீன், தாவர வகை, முட்டை பால், மற்றும் சிறிது இறைச்சி.
2) குறைந்த மனவழுத்தம் கொண்ட வாழ்க்கை முறை.
3)வயதானவர்களிடம் அதிக அக்கறையும், மரியாதையும் கொடுக்கும் சமூகமாக வாழும் முறை.
4) பொது விஷயங்களில் ஈடுபாடும் அக்கறையும், தினசரி நடையும், தாவரம், மிருகங்கள் ஆகியவற்றை பேணுதலும்.
5) தெய்வீக நம்பிக்கையும், பிரார்த்தனையும்.

சரி இப்பொழுது அந்த, காதுக்குள் ஓதும் ”நித்திய பரமானந்தரை”ப் பற்றிப் பார்ப்போம், முதலில் அவருக்கு பெயர் சரியில்லாததால் அவர் பெயரை மாற்றி விடுவோம்.. இனிமேல் சுருக்கமாக ”நிபா” என்று அழைப்போம்.அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள ஒரு விளக்கம் தேவைப் படுகிறது.

வேக்ஸின் அல்லது தடுப்பூசி என்றால் என்னவென்று எல்லாருக்கும் தெரியும் ஆனாலும் அது பற்றிய செய்தியை புதுப்பித்துக் கொள்வோம். சில தொற்று நோய்க் கிருமிகள் மனித உடம்பில் தொற்றியவுடன் அபாரமாக பரவி விடும். உடம்பிலுள்ள செக் போஸ்ட்கள் (immune centers) எனப்படும் இம்யூன் செண்டர்கள் அவைகளை ஆராய்ந்து ,அடையாளம் கண்டு, அவைகளுக்கேற்ற ஆயுதம் தயார் செய்யவும், அதை கொண்ட அதிரடிப் படையை உருவாக்கும் முன்பே , பல்கிப் பெருகி அதிரடி படையை முழுங்கி ஏப்பம் விட்டுவிடும். அது போன்ற தொற்று நோய் கிருமிகளுக்கு சரியான மாற்று மருந்து கண்டு பிடிக்க முடியாததால் அவற்றிற்கு வந்தபின் காப்போம் என்ற வித்தை செல்லுபடியாகாது. ஆகவே வருமுன் காப்போம் என்பதுதான் சரியான தீர்வு. முள்ளை முள்ளால் எடுக்கும் நுட்பம்தான் வேக்ஸின்.

ஈன்றெடுத்த கன்று இறந்து விட்டால் மாடு பால் சுரப்பதை நிறுத்திவிட்டு அடுத்த கன்றைப் பெறுவதற்கான கலவிக்கு விரைவில் தயாராகிவிடும் ஆனால் அதனிடமிருந்து பாலை கறப்பதற்கு மனிதன் இறந்த கன்றை பாடம் செய்து வைக்கோல் கன்றாக மாற்றி, மாட்டிடம் கான்பித்து அதை ஏமாற்றி பாலை கறந்து விடுகிறான். வேக்ஸினும் கிட்டதட்ட இது மாதிரிதான்.

அபாயகரமான தொற்று நோய்க் கிருமிகளை பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்த்து, அவற்றின் உயிரைமட்டும் எடுத்துவிட்டு அதாவது வைக்கோல் திணிக்கப் பட்ட கன்றுகள் போல் ஆக்கி, அவற்றை மனித உடலுக்குள் செலுத்திவிடுவார்கள். அதாவது சாதரணமாக நோய் தொற்றுவதற்கு 20 கிருமிகள் போதுமென்றால் இவர்கள் பில்லியன், டிரில்லியன் கணக்கில் செலுத்துவார்கள். இப்பொழுது நம் உடம்பிலுள்ள செக் போஸ்ட்டுகளில் இந்தக் (வைக்கோல் கன்றுகள்) கிருமிகள் தடுத்து நிறுத்தப் பட்டு, நிர்வாணமாக்கப் பட்டு, போட்டோ எடுக்கப் ப்ட்டு, ஸ்கேன் செய்யப் பட்டு, எதிரிகள் என்ற முத்திரை குத்தப் படுகிறது. இவர்களது எண்ணிக்கை மற்றும் போட்டோவுடன் கூடிய ஸ்கேன் ரிப்போர்ட் தலைமைச் செயலகத்துக்கு அதாவது மூளைக்கு அனுப்பப் படுகிறது. அங்கு ஒரு பெரிய் (Research and Development) ஆராய்ச்சி சாலையில் அவைகள் ஆராயப் பட்டு எந்தமாதிரி வெட்டி, எத்தனை துண்டுகள் போட்டால் ஆபத்தில்லாத எதிரியாகவும், அபாயமில்லாத கழிவுகளாகவும் மாற்றி வெளியேற்ற முடியும் என ஆராய்ந்து அதற்கான மருந்தை தயார் செய்து அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருப்பார் செயலக அதிகாரியும், மருத்துவக் குழுத்தலைவரும் ஆனவர். பத்து கிருமிகளுக்கான மருந்தென்றால் இரண்டு நாட்களில் தயாராகிவிடும். பல்லாயிரம் கோடி கிருமிகளுக்கு தனியாக ஒரு தொழிற்சாலையே நிறுவப் பட்டு பல வாரங்கள் இயங்கிக் கொண்டே இருக்கும். கோடிக்கணக்கான உயிரற்ற கிருமிகளுடன் யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும். இந்த சந்தடியில் உள்ளே நுழையும் உயிருள்ள சில கிருமிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். நார்நாராக் கிழித்து எறியப்படும். இவ்வாறுதான் நோய் தடுக்கப் படுகிறது. நிறுவப் பட்ட தொழிற்சாலையும் தயாரித்து அனுப்ப பட்ட மருந்தும் பல வருடங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. இந்த மருந்தை மனிதனால் இதுவரை தயார் செய்ய முடியவில்லை.

சில சமயங்களில் ஆபத்தான அந்த எதிரியின் ( கிருமியின்) ஆபத்தில்லாத உடன் பிறப்புகளை அனுப்பினாலும் மருந்து ரெடியாகிவிடும் அல்லது அந்த எதிரியின் ”பாடி” கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அவன்(ள்) போட்டிருக்கும் சட்டையை அனுப்பினால் கூட மருந்தை தயாரித்து அனுப்பக் கூடியவர் நமது மருத்துவ அதிகாரி. சட்டையை வைத்தே ஆளை அளவெடுத்துக் கொள்ளும் திறமை படைத்தவர். இது வரை வாழ்ந்து, இறந்த நமது முன்னோர்களின் அனைத்து அனுபவ அறிவையும் கொண்டவர். அவர் ஒரு சிறந்த தத்துவ ஞானி. சிறந்த நிர்வாகி. சர்வகலா வல்லவர். அவர்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட நித்திய பரமானந்தர் என்ற ”நிபா”. அவர் நம்மில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மிகச் சிறந்த அறிவுஜீவி, புத்திமான் எனக் கூறுகிறீர்கள். ஆனால் உயிரற்ற கிருமிக்கும் உயிருள்ள கிருமிக்கும் வித்தியாசம் தெரியாமல் மருந்தை தயார் செய்கிறாரே ஏன்? வைக்கோல் கன்றைப் பார்த்து பால் சுரக்கும் மாட்டைப் போல் ஏமாற்றப் பட்டாரா?

இல்லை இல்லை அவரைப் பொறுத்தவரை, நமது உடலின் பாதுகாப்பை பொறுத்தவரை ”தலையில்லாத எதிரிதான் தொந்திரவு இல்லாத எதிரி” அதற்காகத்தான் விழிப்புடன் இருக்கிறார்.

சரி இப்பொழுதாவது சொல்லுங்கள் அவர் காதுக்குள் ஓதும் செய்திதான் என்ன?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்........................................

மேலும் படிக்க...!
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது

............கவிஞர் வைரமுத்து.

ஆமாம் மனிதன் உணர மறுக்கிறான், ஏனென்றால் இந்த யுத்தம் மனிதனாக இருக்கும் போது ஆரம்பித்தது அல்ல. ஒரு செல் உயிரிகளாக பூமியில் பரிணமித்த நாளில் ஆரம்பித்தது இந்த ஆக்கிரமிப்பு யுத்தம்.

இது முதலில் சாகா வரத்திற்கான போராட்டமாக ஆரம்பித்து, அதை அடைந்தும் திருப்தி இல்லாததால் பின்னர் பூமிபரப்பின் மீதும், பரப்பின் மீதுள்ள அனைத்து நகரும், நகராப் பொருட்களின் மீதான சர்வ அதிகாரத்திற்கான யுத்தமாக மாறிவிட்டது.

இது தனி மனித போராட்டம் அல்ல. மேலும் கவிஞர் கூறியது போல் மண், ஜெயிப்பதற்கு இது ஒன்றும் கடைசி யுத்தமும் அல்ல. மண்ணின் மீதான யுத்தத்தில் என்றாவது ஒரு நாள் தனது வாரிசுகளால் வென்று விடலாம் என்று மனிதன் தொடர்கிறான்.


ஒரு செல் உயிரியாக இருந்தது முதல், மனிதனாக வளர்ந்த பின்னும் போராடிக் கொண்டிருக்கிறான். இதற்கிடையில் போட்டியில் உடன் வளர்ந்த உயிரினங்களுடன், வெற்றிக்காக தான் எடுத்த, விட்டு வைத்த, அவதாரங்களின் மிச்சங்களும், எச்சங்களும் இப்போராட்டத்தில் நன்பனாகவும், எதிரியாகவும் களத்தில் உள்ளன.

இந்த யுத்தத்தின் போக்கு மனிதனுக்கு சாதகமாக போய்க் கொண்டிருப்பதை உணர மறுத்துவிட்டு அத்தனை உயிரிகளும் தாவரங்களும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றன. இருந்த போதிலும் மனிதன், போராட்டத்திற்கு இடையிலும் தோற்றுப் போன எதிரிகளையும் நன்பர்களையும் வரலாற்று மிச்சங்களாகவும் சான்றுகளாகவும் பாதுகாக்கக் கற்றுக் கொண்டான்.


வரும் தலைமுறைக்கு காட்டுவதற்கு
உலகில் தோன்றியது முதலில் காற்றோட்டம், பின் நீரோட்டம் அதற்கு அடுத்துதான் உயிரோட்டம். அந்த உயிரோட்டத்தின் நிகழ்கால அத்தியாயத்தின் கதாநாயகன் மனிதன் தான். அந்த மனிதனின் பிறப்பிலுள்ள,  இதுவரை யாரும் சொல்லாத ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். ஆனால் அதற்கு முன் சிறிது பெளதிகம், வேதியல், உயிரியல், ஆகியவற்றை மேலோட்டமாக தெரிந்து கொண்டால் எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள். ஆகையால்தான் நான் பயணித்த அதே பாதையில் உங்களையும் அழைத்து செல்ல விழைகிறேன்.


காற்றோட்டம் மட்டும் உள்ளது.
நீரோட்டம் உருவாகிவிட்டது.
ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும், சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பிக்பாங்
இதனால்தான் "கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே" என்றான் போலும். ஏனென்றால் "பலன்" என்ற பெயரில் தான் தலையிட வேண்டிய திருக்குமே என்றுதான் அப்படிக் கூறினான் போலும். அவ்வெடிப்புதான் (BIG BANG) எனும் பெரு வெடிப்பாகும். இது எப்படி இருக்கு!. அப்பழுக்கில்லா கடவுள் கொள்கை வந்துவிட்டது. படைப்பு விஷயத்தில் தான் எல்லா மதங்களும் கோட்டை விடுகின்றன. இதில் (தமிழ்நாட்டு) பகுத்தறிவு வாதிகளின் அடுத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

ஆண்டவன் இருக்கிறரா? எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? இதற்கு பதிலே ஒரு கேள்வியாகத்தான் அமையும். உங்கள் கற்பனையில் உள்ள ஆண்டவனா? அல்லது என்னுடைய அனுமானத்தில் உள்ள ஆண்டவனா? என்ற வகையில் கேள்வி அமையும்.

ஏனெனில் அவரவர் அறிவுக்கும், கற்பனாசக்திக்கும், தகுதிக்கும் தக்கவாறுதான் கடவுளை நினைத்துக் கொண்டு சமயத்தில் அசட்டுத் தனமாகக் கேள்விகள் கேட்பார்கள். சிலருடைய ஆண்டவன் ரொம்ப எளிமையாக இருப்பார். ஆதலால் மற்றவர்களின் கேள்விகளுக்கு தாக்கு பிடிக்கமாட்டார். ஆனால் என்னுடைய ஆண்டவனின் வரையறை இதுதான் ”ஆதியும் அந்தமும் இல்லாதவர். நீக்கமற நிறைந்திருப்பார். மொத்தத்தில் எந்த வரையறைக்கும் உட்படாதவர்.” இதில் உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கும். உங்களது அடுத்த கேள்வி இதுவாக இருக்கும்.

சரி அவரால் உங்களுக்கு என்ன நன்மை?
அவரை நான் உணர்ந்தது கொண்டதுதான் எனக்கு நன்மை.

உங்களுக்கு நன்மை ஏதும் செய்கிறாரா?
எனக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம், உத்தரவாதம் ஏது?.

அவரை ஏன் வணங்க வேண்டும்?
யார் சொன்னது வணங்க வேண்டுமென்று.?

எங்கள் கிராமத்தில் ஒருவர் நாய் வளர்த்தார். அவர் வீட்டின் வெளியில்தான் படுப்பார். கிராமங்களில் ஆண்பிள்ளைகளும் வயதானவர்களும் வீட்டிற்கு வெளியே திறந்த வெளி திண்ணையில்தான் படுப்பார்கள். அந்த வகையில் அவர் அருகில் அவர் வளர்க்கும் நாயும் படுத்திருக்கும். ஒருநாள் காலையில் அவர் எழுந்து பார்த்த போது, அவர் அருகில் அவரது நாயும் ஒரு பெரிய நாகப் பாம்பும் இறந்து கிடந்தது. அவைகள் கிடந்த விதத்திலிருந்து அந்த பாம்பும் நாயும் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இரண்டும் இறந்திருக்க வேண்டுமென்று தெளிவாக யூகிக்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெகுநாட்கள் கழித்து நான் கிராமத்திற்கு சென்ற போது அவரது வீட்டின் முன் நாயின் சிலை ஒன்றை வைத்து அவர் வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் அவரைப் பார்த்து ”ஐயா, நாய் உங்களை கும்பிடச் சொல்லியதா?” என்று கேட்க வில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும், ஒவ்வொரு மனிதனும் நாய்க்கோ, மனிதனுக்கோ, கடவுளுக்கோ,  நன்றியறிதலை,  தனக்குத் தெரிந்த வகையில் எப்படியாவது கான்பிக்கிறான். அதில் வணக்கமும் ஒரு முறைதான். கருணாநிதியும் வீரமணியும் அடுத்தவர்களிடம் என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும் கற்சிலைக்கு மாலையிடும் போது பகுத்தறிவை அடகு வைத்து விட்டு அதைத்தான் செய்கிறார்கள்.

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சில ஐ.டி இளைஞர்கள் ரொம்பத் இறுமாப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தாய் தகப்பனுக்கோ மற்ற யாருக்கும் கீழ்படிதலுடன் கூடிய மரியாதை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்கள். ஆனால் கடைசியில் கோபிநாத் “அப்படி மரியாதை செலுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் யாருக்கு செய்வீர்கள்” என்று கேட்டதற்கு தங்களுக்கு தாங்கள் செய்து கொண்டிருக்கும் அந்த வேலை கிடைக்க காரணமாயிருந்த நபர்களுக்கு மட்டும் மரியாதை செய்வார்களாம். நன்றியறிதலைக் காட்டுவதில். அரசியல் வாதிகளை விட கேவலமாக இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள்

எனது புரியாத கேள்விகளுக்கு அவன் தீர்வாக இருக்கிறான். கணக்கில் தெரியாத மதிப்பிற்கு X எனக் கொள்வதில்லையா அது போல் எனக்கு X ஆக இருந்து தீர்வுகளைத் தருகிறான். ஆகவே தற்போது அவனை X ஆக கொள்(கிறேன்)வோம். எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகிச் சொல்வது போல் தெரிவதால் மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

உயிருக்கும், அண்டத்திற்கும் தோற்றம் உண்டு என்பது அறிவியலின் உறுதிப்பாடு. அண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை.

                          BigBang
உயிரின் தோற்றம் பற்றி விளக்குவது டார்வினின் பரிணாமக் (Evolution) கொள்கை.

பெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா? ஆம் ஐன்ஸ்டீன், டீசிட்டர், எட்வின் கப்பிள், ஜார்ஜ் லாமாய்ட்ர் போன்ற அறிவியல் அறிஞர்களால் விரியும் அண்டமா? அல்லது நிலையான அண்டமா? என்ற இருபது வருட வாதப் போராட்டத்திற்கு பின் விரியும் அண்டம் தான் என நிரூபிக்கபட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள், (Black Holes) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், (சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

ஒரு பலூனை ஊதும் போது அது எவ்வாறு மையத்தை விட்டு விலகிச் சென்று விரிவடைந்து கொண்டிருக்கிறதோ அது போன்று அண்டம் விரிவதை (3D) முப்பரிமானத்தில் யோசித்துக் கொள்ளுங்கள். தூரத்திலுள்ளவை அதி வேகமாகவும் அருகிலுள்ளவை குறைவான வேகத்திலும் விலகிச் செல்கின்றன.

ஆகவே வெடிப்பு ஒரு மையத்தில் தான் ஏற்பட்டது என்பது வெளிப்படையான உன்மை. சரி வெடிப்பு எப்பொழுது ஏற்பட்டது? அதையும் எளிதாக சிறிய கணக்கீட்டின் மூலம் கண்டுபிடித்து விடலாம். எப்படி என்றால் அவை விலகிச் செல்லும் வேகத்தை இன்றைய வானியல் கருவிகளின் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். வேகத்தின் மூலம் தூரத்தை அளவிடலாம் என்பது பாலபாடம் நாம் இன்று மையத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளோம் என்பதையும் கண்டுபிடிக்கலாம். இவற்றை வைத்து பெருவெடிப்பு ஏற்பட்டதிலிருந்து என்ன நடந்தது என்பதை தோராயமாக கூறி விட்டனர். ஆனாலும் முதல் மூன்று வினாடிகள் என்ன நடந்தது எனச் சொல்லுவதற்கு விஞ்ஞானம் தினறுகிறது. அதைக் கண்டு பிடித்து விட்டால் இப்பிரபஞ்சத்தின் சூட்சும முடிச்சு அவிழ்ந்துவிடும்.

இது எப்படி இருக்குது என்றால் துப்பாக்கியிலிருந்து வெடிச் சத்தத்துடன் குண்டு வெளி வருவது தெரிகிறது, ஆனால் அதற்கு முன் துப்பாக்கியின் சேம்பரில் என்ன நடந்தது என்பது தெரியாது. துப்பாக்கியின் சேம்பரில் ட்ரிக்கர் பட்டவுடன் வெடிமருந்து பற்றிக் கொண்டு வெடித்து குண்டை வேகத்துடன் வெளியேற்றுகிறது. அது போல் இந்த பெருவெடிப்பில் எது ட்ரிக்கர்? யார் அழுத்தியது? எவ்வாறு பற்றியது? என்ற சமாச்சாரங்கள் தான் இன்றைய இயற்பியலரின் தலையாய பிரச்னை.

துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறுகிறது.

அதற்காகத்தான் Large Hadron Collidor என்னும் அதிவேகத் துகள் முடுக்கியும் அதற்கான பரிசோதனைச் சாலையும் சுவிட்ஜர்லாந்தில் உள்ள செர்ன் என்னுமிடத்தில் துவக்கப் பட்டுள்ளது. அது ஆரம்பித்த உடனே தகராறு செய்துவிட்டது. அது ஒரு தனிக்கதை. தற்போதைய அவர்களது முடிவுகள், (Neutrino,Muon,Kuon,Tau) நியூட்ரினோ, முயுவான், குயான் போன்ற சில துகள்கள் பற்றிய சில கொள்கைகளை உறுதி படுத்தியுள்ளது. இன்னும் அந்த அதிவேகத் துகள் முடுக்கியின் வேகம் முடுக்கப் பட வேண்டியதிருக்கிறது. அதன் பின்தான் மிகவும் எதிர்பார்த்த பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

வெடிப்புக்கு பின் தான் அண்டத்தில் வெளியும், காலமும் (Space, Matter & Time) உருவானது, உடனே காலம் இயங்கத் தொடங்கி விட்டது.

என்னது வெளி (Space) உருவானதா? வெளி எதற்குள் உருவானது?,

ஆமாம் வெளி உருவானது அதற்கு முன் திசையற்ற ஒருமைப் (Singularity) புள்ளிதான் இருந்தது.

ஒருமைப் புள்ளி என்றால் என்ன? அது எதனுள் இருந்தது?

ஒருமைப் புள்ளி மட்டும்தான் இருந்தது, ஆளை விடுங்க.

சரி காலம் இயங்கத் தொடங்கியதா? அப்படி என்றால் அது வரை காலம் உறங்கியதா?

காலம் உறங்கவில்லை, காலமே அப்பொழுதான் உருவானதாம்.

எடுத்தவுடனே இத்தனை குழப்பமா?, ஆமாம் இவைகளுக்கு எல்லாம் எடுத்துக் காட்டு சொல்ல முடியாத ஒற்றை நிகழ்வுகளாக இருப்பதால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. இவைகளெல்லாம் கணக்கீடுகளின் படிதான் விளக்க முடியும். ஏனெனில் கணக்கீட்டின்படி எல்லாம் ஒத்துப் போகிறது. ஆனாலும் இவையெல்லாம் நமது அன்றாட அறிவின் கற்பனைத் திறனுக்கு அப்பாற்பட்டதுதான்.

எப்பொழுதும் காலத்திற்கு உள்ளேதான் வரலாறு இருக்கும். இப்பொழுது காலத்திற்கே வரலாறா? முரண்பாடாகத் தெரிந்தாலும் இப்பொழுது ஏற்றுக் கொள்ளுங்கள் வேறு வழியில்லை. பிற்காலத்தில் இன்னும் புரியுமாறு விளக்கங்கள் வரலாம்.

காலத்தைப் பற்றி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ”காலத்தின் சுருக்கமான வரலாறு” (Brief History of Time) எனும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். உலகில் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட அறிவியல் புத்தகங்களில் அதுவும் ஒன்று. நானும் படித்தேன், படிக்கும் பொழுது கணக்கின்படி புரிகிறது ஆனால் விளக்கிச் சொல்லும் அளவுக்கு புரியவில்லை. முடிந்தால் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டவர்கள் தமிழில் (பிளாக்) எழுதி தமிழுக்குப் பெருமை சேருங்கள்.

ஆற்றல், விதிகள், விசைகள், இவைகளின் கலப்பினால் பெருவெடிப்புக்கு பின் நிகழ்வுகள் ஒன்றுக்குகொன்று சம்பந்தபட்டு தொடர் வினையாக (Chain reaction) நிகழ்ந்து கொண்டு இருப்பதால் ஒவ்வொன்றுக்கும் அணு அளவேணும் தொடர்பிருக்க வேண்டும் (Chaos theory). இதில் சில முக்கியமான நிகழ்வுகள் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு தெரியும் வகையில் பதிவு செய்யப்படுகிறது. அல்லது அந்த பதிவுகளின் சூட்சுமம் மட்டும் நமக்குப் புரிகிறது. இங்கு கமலின் தசாவதாரம் நினைவுக்கு வந்தால் நீங்களும் இது விஷயம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

இடைவிடாத இந்த வினையின் வேகம் ஒரே சீராக இல்லாமல் தாறுமாறாக இருக்கிறது. இதிலுள்ள சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டால் அண்டத்தின் நிகழ்வுகள் அத்தனைக்கும் அதுவே காரணமாகிவிடும். அதை நான் கண்டு பிடிக்காமல் விட மாட்டேன் என்று இருபத்திரண்டு வயதில் மரணத்தை சந்திக்க வேண்டியவர் கடந்த 37 வருடங்களாக மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறார். அவரது உதவிக்கு, உலகின் கம்ப்யூட்டர் ஜாம்பவான்களாகிய மைக்ரோசாப்ட்டும், இண்டெல்லும் இணைந்து அவருடைய மெளனமான சைகளை மொழியாக மாற்றி, அவர் கூறும் கருத்துகளை உலகுக்கு அளிக்கத் தேவையான கருவிகளை செய்து கொடுத்துள்ளனர். வாய் பேச முடியாமல், எழுதமுடியாமல், நடமாட முடியாமல் அதி நவீன கண்டு பிடிப்புகளின் உதவியால் கருத்துக்களை மட்டும் பரிமாறிக் கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் என்னும் முதன்மை அறிவியலார் ”காலத்தோடு” அறிவாலும், உடம்பாலும், பலவழிகளில் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். என்னுடைய முயற்சியும் அந்த சூட்சுமத்தை கண்டு பிடிப்பதுதான். படித்து முடித்த பின் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.ஒரு வேளை எல்லாவற்றிற்கும் முற்றிலும் மாறான ஒரு கருத்தை நீங்கள் வைக்கலாம். பொறிதட்டினால் நீங்களும் ஐன்ஸ்டீன் தான்.

இவர் மட்டும் சராசரி மனிதராக இருந்திருந்தால்?
ஒரு வேளை இயற்கை தனது ரகசியங்களை கூற முற்படுவோரை கண்மூடித்தனமாக தாக்குகிறதோ என்று கூடத் தோன்றுகிறது. அதுவும் தியரி ஆப் ரிலேட்டிவிட்டியை கையில் எடுத்துக் கொண்டதோ என சந்தேகமாக இருக்கிறது. இங்கே வயதும் ஞானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதோ என்பது போல் ஒன்று கூடினால் மற்றொன்று குறையும் என்பது போல் தோன்றுகிறது. தொலைபேசிக்கு வித்திட்ட கிரகாம் பெல்லின் வாரிசுகள் செவிடர்களாம். அறிவு ஜீவிகள் சிறிய வயதிலேயே காலமாகி விடுகின்றனர் என்பதற்கு ராமானுஜம், பாரதியார், விவேகானந்தர், ஏசுகிறிஸ்து ஆகியோரை உதாரணமாக கொள்ளலாம். இவர்களெல்லாம் ஏதோ ஒரு ரகசியத்தை சொல்லுவதற்கு முன்பே இயற்கை சதி செய்து விட்டது போலும். ஐன்ஸ்டீன் பற்றி நீங்கள் கேட்பது தெரிகிறது, அவர் என்ன சொல்ல வந்தார் என்று இயற்கைக்கே புரியவில்லை போலும்! அதனால் தான் அவரை பழிவாங்காமல் விட்டு விட்டது. ஐன்ஸ்டீன் சொன்னதை ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஏற்றுக் கொண்டார். எளிய நடையில் எல்லோருக்கும் (இயற்கைக்கும்) புரியும்படி விளக்கியது தான் அவரது தவறோ ?.  ஒருவேளை ஹாக்கின்ஸ் ஒரு சராசரி மனிதராக இருந்திருந்தால் இன்றுள்ள பல குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்திருக்குமோ?.

வெடிப்பினால், தோன்றிய முதல் முழுப் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயு தான் எங்கும் இருந்தது. பின்னர் வெப்பத்தினாலும் சேர்க்கையினாலும் ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பின்னர் சேர்க்கையினாலும், பல வகை விசைகளினாலும் காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(Black Holes) நட்சத்திரங்கள், கிரகங்கள், தனிமங்கள், கூட்டுப் பொருட்கள் உருவாயின.

நடுவில் புரோட்டான், வட்டப் பாதையில் எலக்ட்ரான் உள்ள ஹைட்ரஜன் அணு

மனிதன் பொருட்களை மூலப்பொருட்கள் (தனிமங்கள்), கூட்டுப் பொருட்கள் என்று எப்பொழுது பிரித்து அறிந்தானோ அப்பொழுதே பொருட்களைப் பற்றிய அறிவு வேகமெடுக்கத் தொடங்கியது.
கூட்டுப் பொருட்கள், தனிமங்கள், என்றால் என்ன? இங்கு கூறப்போகும் உதாரனம் விஷயத்தை புரிந்து கொள்வதற்கானது. இது சாதாரண கண்களைப் பொறுத்த வரைதான் சரியாக இருக்கும். உதாரணமாக பென்சில் என்பது கூட்டுப்பொருள், அதைப் பிரித்து ஆராய்ந்தால் அதில் இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று கரித்தண்டு, மற்றது மர உருளை. மரத்தை மேலும் பிரிக்க முடியாது பிரித்தால் மரம் தான் மிஞ்சும். கரியை பிரித்தாலும் அதே நிலைதான். ஆகவே பிரித்தால் வேற்றுமை இல்லாமலும் தன்மை மாறாமலும் இருப்பது தான் மூலப்பொருளாகிய தனிமம். ஆக பென்சிலுக்கு மூலப்பொருளாக இருப்பவை கரியும், மரமும் தான். (ஆனால் மர உருளையை வேதியல் முறைப்படி ஆராய்ந்தால் அது ஐந்துக்கும் மேற்ப்பட்ட தனிமங்களால் ஆனது. அது போன்று கரித்தண்டில் கரி மற்றும் பசைப் பொருட்கள் உள்ளது).

நீர் ஒரே பொருளால் ஆனது போல் தோன்றினாலும் வேதியல் முறையில் பார்த்தால் அது ஹைட்ரஜன், ஆக்ஸிசன் எனும் இரண்டு தனிமங்களால் ஆனது.

சமையல் உப்பை நீங்கள் சாதாரண முறையில் எவ்வளவுதான் பிரித்தாலும் கடைசி துகள் வரை உப்பாகத்தான் இருக்கும், ஆனால் வேதியல் முறையில் பிரித்தால் சோடியம், குளோரின் என்னும் இரு தனிமங்களால் ஆனது எனத் தெரிய வரும். ஆகவே நீர், சமையல் உப்பு இவை இரண்டும் (Compounds) கூட்டுப் பொருட்கள். ஹைட்ரஜன், ஆக்ஸிசன், சோடியம், குளோரின் ஆகியவை அவைகளின் மூலப் பொருட்கள்.

உப்பு நீரில் கரைந்திருக்கும் போது
சமையல் உப்பின் படிக அமைப்பு.
பொருட்களை ஆராய்ந்த வேதியல் அறிவியலார்கள் அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் 92 (மூலப் பொருட்களால்) தனிமங்களால் தான் உருவாகியது என்று அறுதியிட்டுக் கூறிவிட்டனர். அதிலும் சில முக்கியமான ஒன்பது தனிமங்களின் கலப்பினால் தான் பூமியிலுள்ள 99 சதவீதப் பொருட்கள் உருவாகியுள்ளன. அந்த ஒன்பது தனிமங்களும், அவை பூமியில் உள்ள விகிதாச்சாரமும் இவைதான்,

இரும்பு 35.0%
ஆக்ஸிசன் 28.0%
மக்னீசியம் 17.0%
ஸிலிக்கான் 13.0%
நிக்கல் 2.7%
சல்பர் 2.7%
அலுமினியம் 0.6%
கால்சியம் 0.4%
மற்றவை 0.6%

மற்றவை என்றால், மீதமுள்ள கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம், பொட்டாசியம், குளோரின் மற்றும் எஞ்சியுள்ளவை அனைத்தும் சேர்ந்து 1% க்கும் குறைவுதான்


மேலும் படிக்க...!
சாப்பிட்டவுடன் ஏன் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுக்க வேண்டும்?

சாப்பிட்டவுடன் சிறிது நேரம் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வய்துக்கு மேலானவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிட்டவுடன் இரைப்பை மற்றும் குடல் முழுவீச்சில் செயல் படுகிறது. அது அவ்வாறு வேலை செய்வதற்கு இதயமும் முழுவீச்சில் செயல் படவேண்டும். இவ்வாறு இதயம்100% இரைப்பைக்காக வேலை செய்வதால் அதற்கு எந்த அதிகப்படியான வேலை எதுவும் கொடுக்கக்கூடாது என்பதால் மூளை தூக்கத்தை வரவழைக்கிறது.

அதையும் மீறி சிலர் அதிக உடல் உழைப்பு செய்வார்கள் எனில் சிலசமயங்களில் மாரடைப்பு ஏற்படும். சாப்பிடுவது, குளிப்பது ஆகியவை இருதயத்திற்கு அதிகப் படியான வேலை கொடுக்க கூடிய விஷயங்கள்.குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நமது உடம்பின் மேற்பரப்பு முழுவதும் வெப்பநிலையை சரி செய்ய அதிக இரத்த ஓட்டம் தேவைப் படுகிறது.ஆகவே இருதயம் அதிக வேலை செய்கிறது. அதனால்தான் சாப்பிட்டவுடன் குளிக்ககூடாது என்பார்கள். குளித்தவுடன் சாப்பிடலாம் ஆனால் சாப்பிட்டு விட்டு குளிக்ககூடாது இருதயம் பலவீனமானவர்களுக்கு மரணத்தை கூட ஏற்படுத்தி விடும்.

ஆகவே சாப்பாட்டுக்குபின் 2 மணிநேரம் ஓய்வு தேவை.


மேலும் படிக்க...!
top