எனது முந்தைய பதிப்பின் பின்னூட்டமாக நாட்டாமை இட்ட கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்

கேள்வி
//இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது.//

இதற்கு உங்களிடம் உள்ள விளக்கம் என்ன?

துருப்புச் சீட்டு சமயத்தில் ஜோக்கராக இருக்கும்.

ஒன்றைப் போல் மற்றொன்றை, ஒருமுறையல்ல பல்லாயிரக்கணக்கான முறை இடைவிடாமல் உருவாக்கும் தொழிநுட்பம் கல் தோன்றி செல் தோன்றா காலத்துக்கு முன்னே இயற்கைக்கு கை வந்த கலை. இதைக் காண்பதற்கு நாம் காடுமலை எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.
ஒழுகும் குழாயில் உற்பத்தியாகும் நீர்த்துளி சொல்லும், இந்த வித்தை மிகப் பழமையானது என்று. நீங்கள் சற்று மாறுபட்ட கோனத்தில் யோசிக்க கூடியவராக இருந்தால் இந்த நீர்த் துளியின் அற்புதம் உங்களை ஆச்சிரியத்தில் முழ்கடிக்கும். அது ஏன் ஒழுகும் நீர் ஒரு குறிப்பிட்ட அளவு வந்தபின் கீழே விழுகிறது. அதுவும் ஒவ்வொரு நீர்த்துளியும் அளவிலும், எடையிலும், உருவத்திலும் ஒன்று போல் இருக்க என்ன காரணம். முப்பரிமாணத்தில், வண்ணத்தில் ஜெராக்ஸ் எடுக்கும் இந்த கலையை அதற்கு யார் கற்றுக் கொடுத்தது.




காரணத்தை ஆராய்ந்தால் அது ஈர்ப்பு , பரப்பு இழுவிசை. போன்றவைகளின் கூட்டு முயற்சியே. ஆகவே பிரதி எடுக்கும் (Replicate) வேலை என்பது இது போன்ற குட்டி விசைகளின் விளையாட்டுதான். இது மட்டுமா? உப்புக்கல் உருவாகும் உப்பளங்களும் ஜெராக்ஸ் மிஷின்கள்தான்.

உப்புக் கரைசலில் உள்ள நீர் ஆவியாகும் போது உப்பு எடுக்கும் அவதாரங்கள் எத்தனை விதங்கள் என்பது தெரிந்தால் அசந்துவிடுவீர்கள். அது பற்றி படிப்பதற்கே ஒரு அறிவியல் பிரிவும் (Crystalization) உள்ளது.

உப்பும் மிளகும்.உப்பின் சதுர வடிவம்




உப்பு மட்டுமல்ல காற்றிலுள்ள நீராவி உறையும் போது வெண்பனியாய் படர்ந்தும், துராலாய் கொட்டியும், ஆலங்கட்டியாய் அடித்தும் சொல்லும் உன்மைகள் பிரதி எடுத்தலின் திறமை பற்றிதானே. ஆச்சரியப் பட வைக்கும், மனிதன் வரையமுடியாத வடிவங்களில் இயற்கை பிரதி எடுக்கும் வித்தையை பார்த்தால் தலை சுற்றும்.

சாவுப் பள்ளத்தாக்கு ஒருகாலத்தில் கடலாக இருந்து நீர் வற்றிய பின் உப்பு எடுத்த தோற்றத்தைதான் கீழே பார்க்கிறீர்கள்.



வெண்பனி


இது போன்ற பனிக்கட்டியின் படிகங்களை எளிதாக உருவாக்கலாம்





நீர்த்துளியைப் பற்றி கவிஞனின் மொழியில் கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அறிவியல் மொழியில் கேட்டால் சாதாராண இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாகும். சமதூரத்தில் பொருட்கள் அமைந்து, குறைந்த பரப்பளவுடன் உருவாகும் வடிவம் (கோளம்)உருண்டை என்பது ஜியோமிதியின் பாலபாடம்.

ஆகவே பிரதி எடுத்தலுக்கான ”அறிவுஜீவியின் படைப்பில்” (Intellectual Creation) அக்கறை உள்ளவர்களின் கேள்வி பற்றி நாம் கவலைப்படாமல் நாம் மேலே தொடருவோம்.

நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். அந்த போராட்டத்தின் வழியில் ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகளுக்கு மேல் தோன்றியிருக்கலாம்.


அவைகளில் பிரதானமானவை அமீபா (Ameoba), பாரமசியம் (Paramecium), யூக்ளினா (Euglena), வால்வாக்ஸ் (Volvox) ஆகியவை ஆகும். இயற்கை விட்டு வைத்த மிச்சங்களில், ஆற்றல் சமநிலைக்கு எனது வழிதான் சிறந்தது என உயிரிகள் செல்லும் பாதைதான் நமக்கு போராட்டமாகத் தெரிகிறது. இன்றும் நிலைத்து நிற்கும் நமது மூதாதையர்களான ஓரணுவுயிர்களில், முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

அமீபா (Ameoba),




அமீபா நிறமற்ற பாகு உருண்டை போன்றது, திரவம் போன்றிருப்பதால் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். புரோட்டோபிளாசம் என்ற புரோட்டீன் வகைசார்ந்த உயிர்ப்பொருள் மற்றும் அல்புமென் கூழ்ப் பொருளால் ஆனது.

இவைகள்.
1)உணவு உட்கொள்ளும்,
2)மூச்சுவிடும்,
3)கழிவு வெளியேற்றும்,
4) தூண்டலுக்கு துலங்கும்,
5) கிளர்ச்சியுறும்,
6) இரண்டுபடுதலால் இனப்பெருக்கம் செய்யும்.

மேலே சொல்லப்பட்ட விஷயங்களை வேதியல் முறையில் சொன்னால்,

1)சிலபொருட்கள் குறிப்பிட்ட பொருட்களுடன் (உணவு) தான் வினை புரியும்.
2) வினையின் விளைவாக காற்று (மூச்சு)உருமாற்றப்படுகிறது.
3) வினையின் விளைவாக பொருட்களும்(கழிவு) உருமாறுகிறது.
4)வினையின் போது சக்தியை கிரகிக்கவோ வெளியிடவோ ( இயக்கம்) செய்கின்றன.
5) சக்தியை உள்வாங்கி அசாதாரண நிலையில்(கிளர்ச்சி) இருப்பது.
6) பரப்பு இழுவிசை (Surface Tension , Osmosis, Diffusion, Viscosity) போன்றவைகளால் உருமாறுவது (இனப் பெருக்கம்).

அமீபா ஒளி ஊடுருவதால் கிளர்ச்சியுற்று இடம் பெயரும் தன்மையுடையவை. நாளடைவில் பாதுகாப்பிற்காக தனது திரவ வடிவத்திற்கு ஒரு உறை ஏற்பாடு செய்து கொண்டன.

இனப்பெருக்கத்தை இவ்வாறு விளக்கலாம். நீர்த்துளி ஒரு குறிப்பிட்ட அளவு வந்தவுடன் பிரிந்து எவ்வாறு வெளியேறுகிறதோ அது போன்றே உருவத்தில் பெரிதாகும் போது இரண்டு படுகிறது. ஆக அடிப்படையாக இரண்டுபடுதலில் தான் இனப் பெருக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நீர்த்துளியின் உருவாக்கமே இனப்பெருக்கத்தின் வழிகாட்டி.

பாரமசியம் (Paramecium)



பாரமீசியம் நீரில் மிதக்கும் பல்வகைத் துணுக்குகளை உண்டு நீந்தி வாழ்கிறது. உடல் முழுவதாலும் ஆக்சிஸனை சுவாசிக்கிறது. இருபத்துநான்கு மணி நேரத்தில் இளம் பாரமீசியங்கள் பிளவுற்று இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகள் கலவியிலா இனப்பெருக்கம், மற்றும் கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன. ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே கலவி இன்பத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தியது பாரமீசியமே. முத்தம் கொடுக்கும் முறையில் உட்கரு பரிமாற்றத்தை நிகழ்த்தி கலப்பு முறையிலும் இனப்பெருக்கத்தை தொடங்கி பூமியில் நிலைத்திருக்கும் போராட்டத்தை ஒற்றை செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்த பாரமீசியமே வாழ்க!

யூக்ளினா (Euglena),




அமைதியான நீர் நிலைகளில் தண்ணீர் சில நேரங்களில் பச்சையாக ஒளிரும். பச்சைக்கு காரணம் அதிலுள்ள யூக்ளினா எனப்படும் ஒற்றைச் செல் உயிரிகள் தான். தன் மீது உள்ள சிவப்பு புள்ளியினால் ஒளியை உணர்ந்து ஒளியை நோக்கி செல்லும். அதே போல் தன் மீது உள்ள பச்சையம் மற்றும் ஒளியின் உதவியால் கரியமில வாயுவை உட்கொள்கிறது. ஒளி இல்லாத இடத்திலும் அமீபா போல் உணவு உட்கொள்ளவும் முடியும். விலங்குகளும் தாவரங்களும், ஒரே பொது முன்னோர்களின் மூதாதையின் வழிவந்தவை என்பதற்கு யூக்ளினா ஒரு உயிருள்ள சான்று.

வால்வாக்ஸ் (Volvox)




ஒற்றை அணுச்செல்களிலிருந்து பல்லுயிரணுப் பிராணிகள் எவ்வாறு தோன்றின என்பதற்கு வால்வாக்ஸ் எனப்படும் பல்லுயிரணு செல்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். வால்வாக்ஸ் ஒரு பச்சை உயிரணுவிலிருந்து பிறக்கிறது. இது ஒற்றை செல்லாக வாழ்க்கையை தொடங்கி தொகுப்பான அமைப்பில் வாழ்கிறது. இவைகளும் கலவியிலா இனப்பெருக்கம் தவிர கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன. இந்த உயிரணு பிளவுரும் போது பிளவுற்ற உயிரிகள் தனியாகப் பிரிந்துவிடாமல் சேர்ந்தே வாழ்கின்றன. அடுத்தடுத்து நிகழும் பிளவுருதல் மூலம் தாய் உயிரணுவிலிருந்து நாளடைவில் 50,000 க்கும் மேற்க்கொண்ட உயிரணுக்கள் தோன்றி பிரிந்து செல்லாமல் சேர்ந்து வாழும் தொகுப்புயிர் உருவாகிறது. அப்போது அது குண்டூசித் தலை அளவான பச்சை உருண்டையாக தோற்றமளிக்கிறது.

இதில் முக்கியமாக கவணிக்க வேண்டிய விஷயம், தொகுப்புயிராக அமைந்தபின் தனி உயிரிகளின் நீண்ட வால் போன்ற கசைகள் (மயிர்க்கால்கள்) கூட்டத்தோடு சேர்ந்தவுடன் மற்றவைகளுடன் ஒத்திசைவாக அசைகின்றன!. அதனால் தான் இயக்கத்தில் தடையில்லாமல் கூட்டமாக இயங்க முடிகிறது. ஒரே தொகுப்பாக மாறிய பின் சொந்த விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிக் கொள்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அவ்வாறு தொகுப்பாக வாழும் போது தேர்ந்தெடுக்கப் பட்டு தலைமைப் பதவி கொடுக்கப் பட்ட செல்கூட்டமே பின்னாளில் உயர் நிலை பிராணிகளுக்கு ”தலை”யாக மாறியது.

வால்வாக்ஸ் போன்ற தொகுப்புயிர்கள் பல்லுயிரணுப் பிராணிகளின் வளர்ச்சியில் முதல் கட்டமாக விளங்குகின்றன. ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கொள்கைக்கு அடித்தளம் அமைத்த வால்வாக்ஸைப் போற்றுவோம்.

கலவி இல்லா இனப்பெருக்கம் இருக்கும் போது ஏன் கலவி இனப் பெருக்கத்தை நாடின? கலவி இனப்பெருக்கத்தால் தோன்றியவைகளுக்கு தாங்குதிறன்(Survival Capacity) அதிகமாக இருந்ததுதான் காரணம். ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே செல்களுக்கிடையே இருந்த தாங்குதிறன், நிலைத்து வாழும் பண்பு, இவற்றையெல்லாம் உற்று, உணர்ந்து மரபணுவில் கட்டளை(Traits) எழுதப் பழகிவிட்டன. உலகின் முதல் மென்பொருள் எழுத்தர்!!! (Software Programmer !!!.)

ஓரணுவுயிர்கள் உலகில் சுமார் 1000 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன. கடல் முழுவதும் பல்கிப் பெருகி பூமியை முழுவதுமாக ஆக்கிரமிக்க போட்டி ஏற்பட்டது. அவற்றில் எவை அதிக விரைவாக உணவைப் பெற்றும் ஆபத்திலிருந்து அதிக நிச்சயமாக விலகிச்சென்றும் வந்தனவோ, அவை உயிர் பிழைக்கவும் தங்கள் சிறப்பு இயல்புகளைச் சந்ததிகளுக்கு வழங்கவும் அதிக வாய்ப்புகள் பெற்றன. இவற்றில் ஒன்றை ஒன்று அழித்து, விழுங்கி, இணைத்து சற்றேக்குறைய 10000 உயிரிகள் இருக்கின்றன. இவைகளுக்குள்ளே ஒரு மறைமுக யுத்தம் ஒன்று நடந்து கொண்டுதான் இருந்தது. பொதுவான நோக்கம் உறுதிப்பாட்டை நோக்கிய சமநிலை. (Stablity through Equalibrium)

வெப்ப நீர்நிலைகளில் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாழ்நிலை பல்லுயிரணுப் பிராணிகள், கால இடைவெளியில் உயர்நிலை பல்லுயிரணுப் பிராணிகளாகிய ஹைட்ரா, கடற்பஞ்சுகள் என உருமாறி பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றன.
எல்லா உயிரினங்களும் தங்கள் இனவிருத்தியை பல கோணங்களில், பல சூழ்நிலைகளில், கணக்கிட்டு வரையறுக்க முடியாத, ஆச்சரியப்பட வைக்ககூடிய, அதிர்ச்சியூட்டக்கூடிய, கோமாளித்தனமான, பயங்கரமான முறைகளில் செயல்படுத்துகின்றன. மேலும் இனவிருத்தியுடன் கூடிய அழியாத்தன்மைக்கும் ஏற்ற செயல்பாடுகளை கற்றுக் கொண்டு செயல் படுத்துகின்றன. இவற்றையெல்லாம் அவைகள் ஓர் இரவுக்குள் சிந்தித்து செயல் படுத்தியது இல்லை.

இங்கு தனிநபர் செயல்திறனுக்கு தேவையான தகவல்களை ஒரு பிறவியில் கற்றுத் தேர்வது கிடையாது. அந்த திறமை வளராத பிரானிகளிடம் இல்லை. ஆகவே ஒட்டு மொத்தமாக, பரம்பரை பரம்பரையாக படிக்கும் பாடங்களில் முக்கியமானவற்றையும் அதனால் ஏற்படும் விளைவுகளில் முக்கியமானவற்றையும் எதிர் கொள்ள வேண்டிய வழிமுறைகளுக்கு அடிப்படையான தேவைகள் ரகசிய குறியீட்டு முறையில் தலைமுறை தலைமுறையாக சுருக்கமாகக் கட்டளைகளாகப் (Traits) பதிந்து, அந்தக் கட்டளைகளை ("Programmes" in computer language) அவைகளின் வாரிசுகள், கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுகின்றன. அவ்வாறு கண்களை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டுமென்பதும் முன்னர் எழுதி வைத்த கட்டளையில் முக்கியமான ஒன்று.

கம்ப்யூட்டர் மொழியில் சொன்னால் மதர் போர்டில் உள்ள பயாஸ் போன்றது. புதிதாக வரும் ஒவ்வொரு மதர் போடும் பயாஸில் அப்கிரேடு செய்யப்படுவது போல் உயிரிகளும் வரும் தலைமுறைக்கு தேவையான வகையில் மாற்றங்களை செய்து கொள்கிறது.

உதாரணமாக மான்குட்டி பிறந்தவுடன் அதனுடைய அடிப்படைத் (Basic Input&output Operating System BIOS) தேவை உணவைத் தேடுவது அது தானாகவே பால் காம்புகளை கண்டுபிடித்து பாலை அருந்துகிறது அது பயாஸில் உள்ள விஷயம். அடுத்த தேவை ஓட்டம். அது மிகவும் எளிதாக உடனடியாக இன்ஸ்டால் செய்யப் படுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுக்கு உடனடித் தேவை பாதுகாப்பு தரும் கடலாகிய இருப்பிடம்தான், அதைக் கண்டுபிடிக்கும் மென்பொருள் அதன் பயாஸில் உள்ளது. அதனாலதான் மண்ணுக்குள் இருக்கும் முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் வேறு எந்த திசையிலும் செல்லாமல் கடலை மட்டும் தேடி ஓடுகிறது. கங்காரு குட்டிக்கு அதன் தாயின் வயிற்றிலுள்ள தனது இருப்பிடமாக மாறப்போகும் பையைத் தேடுவதுதான் பயாஸில் உள்ள விஷயம்.

மன்னிக்கவும், இடையில் வைரமுத்துவின் கவிதை பிரேக்.

அம்மாதிரியான கட்டளைப்படி செயல்படும் ஒரு உயிரினத்தின் இனப்பெருக்கச் செயல்பாட்டை தனது கவிதையின் இடையில் செருகி காதலியை வர்ணிக்கும் வைரமுத்துவின் பாட்டொன்றைப் பார்ப்போம்.

”விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”

என்று ஆரம்பித்து

"நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்"என்று பாடிச்செல்வார்.
பட்டுப் பூச்சிகள் எப்படி மோட்சம் பெறும். இதற்கான விளக்கம் தெரிந்தால்தான் புலவனின் அறிவியலோடு கலந்த கவிதை நுட்பம் நமக்குப் புரியும். அதை அடுத்த பதிவில் காண்போம்.

  தொடர்வோம்.....................

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
இவையெல்லாம சமநிலை எய்துவதற்கான ஏற்பாடுதான். அது சரி இந்த சமநிலை எய்தும் ஏற்பாட்டில் உயிரினத்துக்கு என்ன வேலை? அல்லது உயிர் எப்படி வந்தது?

பரிணாம முறைப்படி பருப் பொருள்தான் உயிர்ப் பொருளாய் ஆனது.
புதிய பொருட்களின் தோற்றத்திற்கு காரணம், அடிப்படைத் தனிமங்களின் அணு அமைப்பில் எஞ்சி நிற்கும் சக்தியை இழந்தோ அல்லது தேவைப்படும் சக்தியை பெற்றோ ஒன்றுடன் ஒன்று இணையும் போது சமநிலை எய்தும் முயற்சிதான். பொருட்கள் சமநிலை நோக்கி செல்லும் வழியில் தோன்றிய வழிப் பொருள்தான் (By product) உயிர் எனப்படும் வேதியல் வினை.

முதலில் உயிர் என்றால் என்ன?. பருப்பொருளுக்கு உயிர் வந்தது எப்படி?.

சார்லஸ் டார்வின் கூற்றுப்படி கடலில்தான் முதன் முதலில் உயிரோட்டம் தோன்றியது என்று அறிவியலார் ஒத்துக் கொள்கிறார்கள். உயிர்கள் தோன்றிய காலகட்டத்தில் கடல் நீர் இவ்வளவு உப்பாக இருந்திருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிலும் டார்வினின் கனவுத்தீவான கலாபகாஸ்க்கருகில் தான் உயிர் உருவானதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஏனென்றால் அங்குதான் அதிக வெப்ப நிலையிலுள்ள எரிமலைக் குழம்பு, கரி மற்றும் கந்தக வாயுக்கள், நீருடன் கலந்து மிகவும் சிக்கலான பிரம்மாண்டமான மூலக்கூறுகள் உருவாகி உயிர் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டது. எரிமலை, நன்னீர்கடல், மிதமான வெப்பம், காற்று, இடி, மின்னல் ஆகியவையின் கலவைதான் உயிர்ப்பாகு உருவாகுவதற்கு முக்கியமான காரணிகள். உயிர் உருவான கதை இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்ற போதிலும் அறிந்து கொண்ட அறிவியல்படி அன்றாட அறிவை பயன்படுத்தி யூகித்துக் கொள்ள முடிகிறது

அணுவிலிருந்து முக்தி தேடி மூலக்கூறு நிலைக்கு சென்ற பின்னும் திருப்தி இல்லாமல் மிகவும் சிக்கலான கட்டமைப்பு கொண்ட (complex molecule) மூலக்கூறு நிலைக்கு மாறி, கரியின் தீராத தவத்தினால் பின் பலவிதமான அங்ககப் (Organic compounds) பொருட்களாகி (Alkanes. Ethers,Carboxylic Acids,Esters,Oils,Ureides, Carbohydrates, Amino Acids,Proteins) அங்ககப் பொருடகள் புரதப் பொருட்களாகி, முடிவில் மூலக்கூறுகளின் பெரிய வடிவங்களில் ஒற்றை செல்லான பாரமசியமாக பரிணமித்து, பின்னர் ஒற்றைசெல்கள் வால்வாக்ஸ் போன்ற குழுமத்தொகுப்பு உயிரிகளாக மாறி, அவை பின் கடற் பூஞ்சையாய், மீனாய், ஆமையாய், பன்றியாய், விலங்காய், வாமனனாய். மனிதனாய் மாறிய வரலாற்றில் சிக்கலான புரோட்டீன் மூலக்கூறுக்கும் (complex molecule)ஒற்றை செல்லுக்கும் இடையில் தேடினால் உயிர் கிடைக்கும்.

அஸோஸ்பைரிலம், அடுமனை ஈஸ்ட் (Bakery Yeast)ஆகியவற்றை உங்கள் கையில் கொடுத்து அவைகள் நுண் உயிரிகளா என்று கேட்டால் இல்லவே இல்லை பருப்பொருள் தான் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்வீர்கள். குருணை வடிவில் உள்ள இயக்கமற்ற மாவுப் பொருளை எப்படி உயிர்ப் பொருள் என்று கூறமுடியும்.


ஈஸ்ட்


அசோஸ்பைரிலம்


ஆனால் உன்மையில் அவைகள் நீரில் கலந்து, உறக்கம் கலைந்து, உயிர் பெற்று விடும் நுண் உயிரிகள்தான். இது எப்படி?. இதுமட்டுமா இவைகள் போன்று உயிரா? பொருளா? என்று விளங்கிக் கொள்ள முடியாத லட்சக் கணக்கான இரண்டும் கெட்டான்கள் இப்புவியில் ஏராளம் உள்ளது. "அறிவு ஜீவியின் படைப்பில்" (Intellectual Creations) அக்கறை உள்ளவர்களை வெறுப்படைய வைப்பதும் அவைகள்தான். உதாரணமாக ஈஸ்ட்டை குறிப்பிட்ட சூழலில் 250 வருடங்கள் கூட உறங்க வைக்க முடியுமாம். . இது போன்று பல மில்லியன் வருடங்கள் உறங்கிய பாக்டீரியாக்களை சமீபத்தில் எழுப்பிய சான்றுகள் உள்ளன. இங்குதான் உயிரின் கோட்பாடு நொறுங்குகிறது

உறங்கிக் கொண்டிருக்கும் உயிரை பல்லாயிரக்கணக்கான விதையில் காணலாம், கொசு முட்டையில் காணலாம். வெட்டி நட்டு வைத்தால் தளிர்க்கும் மரக் குச்சியில் உயிரைக் காணலாம். உயிர் என்பது ஒரு வேதியல் வினைதான். ஆனால் அந்த வினையில் ஈடுபடும் வேதிப் பொருட்களின் கலவையும், சூழ்நிலையும்தான் முக்கியம். முட்டையில் உறங்கும் உயிரை எழுப்ப வெப்பம் தேவைப்படுகிறது ஒரு சில சமயம் நீரும் எழுப்பி விடுகிறது. அது பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன் உயிர்ப் பொருட்களுக்கும் பருப் பொருட்களுக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்வோம்.

ஆக முடிவில் தற்போதைய நிலைப்படி உயிரின் இலக்கணம் என்ன? உயிருக்கும் உயிரற்றதற்குமான தெளிவான எல்லைக் கோடு கிடையாது. அப்படியே இருந்தாலும் அது பிரம்மன் போன்றவர்களுக்குத்தான் கோடாக காட்சி அளிக்கும். ஏனென்றால் அக்கோடு மிகவும் அகன்றது. குறுகிய முறையில் வரையறுத்துக் கூறவே முடியாதது. இந்த எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு இயற்கை எடுத்துக் கொண்ட காலமும் (1500,000,000 வருடங்கள் )மிகவும் பெரியது. இயற்கை விட்டு வைத்த மிச்சங்களிலோ விடையை கண்டுபிடிக்க இன்றைய தொழில்நுட்பம் கை கொடுக்க வில்லை. அதில் ஏதும் சூட்சுமம் பெரிதாக இருக்கப் போவதில்லை.

தமிழன் தனக்குத் தெரிந்த வகையில் அந்த எல்லைக் கோட்டை ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உள்ள உயிரிகளாக அதாவது ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

1) தாவரம் 2) புழு,பூச்சிகள், 3)ஊர்வன, 4) பறப்பன,5) நடப்பன 6) ரூம் போட்டு யோசிப்பவை.


மனிதன் தீவனங்களைப் போட்டு தனக்கு தேவையான முட்டைக் கோழி, கறிக் கோழி, எலும்புக் கோழி என கோழியை தனது தேவைக் கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டான். அதாவது பொருட்களை தயாரிப்பது போல் தயாரிக்கிறான். கறிக் கோழி இனமான கெண்டக்கி சிக்கனை அமெரிக்க அரசு கோழி லிஸ்ட்டில் வைக்கவில்லை என சில தகவல்கள் கூறுகிறது.ஆமாம் இந்த படத்தில் உள்ளது போல் இருந்தால் கோழி என்றா சொல்லமுடியும்.




ஆனாலும் உயிருக்கு இலக்கணம் என்று ஒன்றை மிகக் குறுகிய முறையில் வரையறுக்க சில முக்கிய பண்புகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை முறையே

1) தூண்டலுக்கு துலங்குவதும்,
2) இம்மண்ணில் நிலைத்து இருப்பதற்குமான யுக்திடன் இருப்பதும்,
3) அதற்குத் தேவையான இனப்பெருக்கம் செய்வதும்.
ஆகிய மூன்று குணங்களே. அதையும் நெருங்கி ஆராயும் பொழுது கீழ்க் கண்டவைகள் மிக முக்கியமாக கருதப் படுகின்றன.

உயிர்ப்பொருளின் தன்மைகள்
தூண்டலுக்கு துலங்கல்,
வளர்சிதை மாற்றம்
இனப்பெருக்கம்.

இதில் முதலாவது குணம், பருப்பொருட்களின் பொதுத்தன்மை. வெப்ப நிலைக்குத் தக்கவாறு தனது தோற்றத்தை மாற்றிக் கொள்கிறது. இயக்கம் என்பது சில வகை பொருட்களின் தன்மையாகும். அதற்கு ஈர்ப்பும் வெப்பமும் காரணமாகும். ஆனால் இந்த வகையான துலங்கலையும் இயக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் நுண்ணிய துலங்கல் கொண்ட உயிர்ப் பொருளாய் மாறுவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தின் அளவும், உருமாற்றங்களும் கணக்கிலடங்கா. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய அந்த இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள லட்சக் கணக்கான பொருட்களும் டார்வினுக்கு சாட்சிகளாக உள்ளன.

இனபெருக்கம் ஒன்றுதான் உயிர்ப் பொருட்களின் தலையாய பண்பு. உயிரிகள் சர்வாதிகாரத்திற்கான யுத்தத்தை ஒற்றைச் செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்து விட்டன. ஆரம்பித்த உடன் இனப்பெருக்கத்தில் தீவிர அக்கறை கொண்டன. அதில் உருவானாதுதான் சிக்கலான அணுத்தொகுப்புகளின் கூட்டமைப்பு(Complex Molecule).

உயிரின் ஆரம்பம் படிகமாதல் அல்லது உறைதலில் தொடங்கியிருக்க வேண்டும். படிகமாதலில் தொடங்கி மனிதனாக உருமாறியுள்ளது. ஏனென்றால் இங்குதான் வெப்ப நிலை மாற்றத்தால் ஒன்றுபடுதல் ஒன்றுபடுதலில் நிறைவு நிலை அடைந்தவுடன், இரண்டுபடுதல், பின்னர் அடுக்கடுக்காக இரண்டுபடுதல், இணைதல், உருப்பெறுதல், உருமாறுதல் என்ற துலங்கலுடன் கூடிய மிகவும் அடிப்படையான இனப் பெருக்க நிகழ்வுகள் காணப் படுகின்றது. தூண்டலுக்கு துலங்கல் என்பதில் தான் உயிரின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

தூண்டலுக்கு துலங்கல் என்றால் என்னவென்று கொஞ்சம் தெளிவாக பார்ப்போம். அந்த வேதியல் வினைக்கும் கண், காது, மூக்கு, வைத்து அதை உயிராக எப்படி மாற்றிச் சொல்லி ஆச்சரியப் படவைப்பது என்றும் பார்ப்போம்..

1) ஒரு பாத்திரத்தில் பாலை ( Complex molecule in colloidal state) விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற பால் பொங்கி எழுந்து நெருப்பை அணைக்கிறது.பால் தப்பி பிழைத்து மிச்சமும் இருக்கிறது. பொங்குவதன் மர்மம் என்ன? முதலில் ஒரு காப்பு உறை (பாலாடை)தயாரிக்கிறது. அந்த உறையில் அடக்கப் பார்க்கிறது முடியவில்லை, அடக்கிய வேகத்தில் பொங்குகிறது

2) இப்பொழுது மண்ணென்னெயை (Complex molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுறவில்லை. மாறாக ஜோதியில் ஐக்கியமாகி,அதாவது தானும் நெருப்புடன் சேர்ந்து எரிந்து மறைந்து விடுகிறது.

3) இப்பொழுது பாலுக்கு பதில் தண்ணீரை (Simple Molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற நீர் கொதிக்கிறது ஆனால் பொங்கி எழுவில்லை. ஆகவே அப்பாவியாக ஆவியாய் மாறி அலைகிறது.

பாலுடன் ஒப்பிடும் பொழுது, வெப்பத்திற்கு கொதித்து எழுந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த நீர் குளிர் காலத்தில் கடலில் அமைதியாய் அஹிம்சை முறையில் மேற் பரப்பு மட்டும் பனிக் கட்டியாய் மாறி வெப்பத்தைக் கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல், கடலில் உள்ள உயிர்கள் உறையாமல் பாதுகாக்கிறது.

இதில் நான குறிப்பிட்ட சிறு பிள்ளைத் தனமான, கோப தாபமெல்லாம் நமது மாத்தி யோசித்த கற்பனை. அதற்கு உயிர் உள்ளதாக நினைத்தால் நான் பொறுப்பல்ல. மற்றபடி நிலைமாறுதல் என்பதுதான் முக்கியம். அதற்கு என்ன கதை சொன்னாலும் பொருந்தினால் சரிதான். ஒன்றை வைத்து ஒன்றை புரிந்து கொள்வது எளிது என்பதற்காக சொல்லப் பட்டது. அந்த நிலை மாற்றத்திற்கு பெயர்தான் துலங்கல். இங்கு வெப்பத்தினால் ஏற்பட்ட துலங்கல்தான்.

இதைப் போன்று ஒளி, ஒலி, நறுமணம், தொடுதல், ஆகியவற்றிற்கு வெவ்வேறு விதமாக எதிர் வினை புரியும் பொருட்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உரசினால் பற்றிக் கொள்வது, தட்டினால் வெடிப்பது, ஒளியில் கறுப்பது, இருட்டில் ஒளிர்வது, தொட்டால் சுருங்குவது, பட்டால் அரிப்பது ஆக பட்டியலுக்குள் அடக்க முடியாத எண்ணிலடங்காத சமாச்சாரங்கள் உள்ளன. இவைகளின் கலவையில் உயிர் தோன்றுவது என்பது, எடுத்துக் கொண்ட காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு ஆச்சரியமல்ல.

இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது. மேலும் உயிரிகளின் கண்களை ஒரு பேராச்சிரியமாக கற்பனை செய்து பேசுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. எதுதான் ஆச்சரியமில்லை?.( Truth is stranger than fiction) . உங்களது கற்பனைக்கு எட்டாத விஷயத்தை இயற்கை படைத்தால் அது ”அறிவு ஜீவியின்” கைவேலை என எண்ணலாமா?. அப்படி எண்ணுபவர்கள் காலத்தின் போக்கில் அவமானத்தை சந்திக்கப் போகிறார்கள்.

ஒளிபட்டவுடன் உருமாறி நின்று, கழுவிய உடன் கதைசொல்லும் செல்லுலாய்டு சுருள்களில் (Film Reel) உள்ள பொருட்கள்,
எலக்ட்ரான கற்றையின் வீச்சுக்கு தகுந்த படத்தை வரைய மின்னணுக் குழாய்களில்(CRT) தடவப் பட்ட பொருட்கள்.
காந்தவிசையின் தாக்குதலில் சுழலும் சக்கரங்கள்(Motors) எல்லாமே தூண்டலுக்கு துலங்கல்தான்.அதுவும் முக்தி நிலைக்கான எளிய முயற்சிதான்.

பல்லாயிரக்கணக்கான பருப்பொருட்கள் தூண்டலின் போது பல்வேறு விதமாக எதிர்வினை புரிகின்றன. இது போன்ற பல்வேறு தூண்டுதல்களுடன் ஒத்த பொருட்கள் சரியான முறையில் தற்செயலாக இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. பல மூலக்கூறுகள் இணைந்து ஒற்றைச் செல் உயிரிகள் உருவாகியுள்ளன.

பூமி என்ற ஆராய்ச்சி சாலையில் இயற்கை என்ற விஞ்ஞானி 1500 மில்லியன் வருடங்கள் பாடுபட்டு உருவாக்கிய விஷயத்தை கடந்த நான்கு வரிகளில் கூறிவிட்டேன். நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகளுக்கு மேல் தோன்றியிருக்கலாம்.

அவைகளில் முக்கியமானவற்றை அடுத்தபதிவில் பார்ப்போம்.


முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
என்னுடைய ”உயிரும் உயிரின் பிரிவும்” தொடரின் வரிசையான பதிவுகளின் சுட்டிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 3)உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 4)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 5)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 6)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 7)

நான் மூலகங்களின் அட்டவணையைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதால் அந்த அட்டவணை பற்றி இன்னும் விளக்கமாக கூறுமாறு என் நன்பர் கேட்டார்.

அட்டவணை பற்றி எழுத ஆரம்பித்தால் அது தனித்தொடராக மாறிவிடும். ஆகவே சுருக்கமாக பார்த்தால், விரிவாக தகவல் கொடுக்கக் கூடிய தளங்கள் வலைத்தளத்தில் நிறைய உள்ளது. அதில் (Dynamic and Interactive Periodic table) ஒன்றிற்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்। இதை புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளவும்.
http://www.ptable.com/

அதில் தகவல் எவ்வாறு பெறலாம் என்பதற்கான ஒரு சிறிய விளக்கமும் கொடுக்கிறேன். உங்களுக்கு நேரமும் ஆர்வமும் இருந்தால் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.


இதில் குறிப்பிடப் பட்ட இடது மேல் புறம் உள்ள நான்கு ஜன்னல்(window)களில் முதல் ஜன்னலில் wikipedia என்று தேர்வு செய்து விட்டு ஏதாவதொரு மூலகத்தை கிளிக் செய்தால் அது உங்களை விக்கிபீடியாவிற்கு அழைத்துச் சென்று அம்மூலகத்தைப் பற்றி அங்குள்ள விவரங்களைத் தரும்.

வீடியோ என்று தேர்வு செய்தால் அந்த மூலகம் பற்றிய வீடியோ விவரங்களைத்தரும். அது போல் Web Elements, Videos, Photos, Podcasts என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் தகவல் பெறலாம். மவுஸை நகர்த்தி தேவைப் பட்ட இடத்தில் வைத்தும் தகவலைப் பெறலாம்.

Orbitals தேர்ந்தெடுத்தால் ஷெல்கள், எலக்ட்ரான்கள் அமைந்த விதம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இங்கே (Au) தங்கத்திற்கான எலக்ட்ரான் அமைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.



Isotopes தேர்ந்தெடுத்தால் அந்த மூலகத்திற்கு எத்தனை ஐசோடோப்புகள் உள்ளன என்பதை அறியலாம்.
அது போல் (Property) தேர்வு செய்தால் அதற்கு ஒரு துணை மெனு ஒன்று உருவாகும். அதில் கீழ்கண்டவாறு விரியும்.



இதில் உதாரணத்திற்கு ஹைட்ரஜன் மூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டதை பச்சை நிறத்தில் காணலாம். ஹைட்ரஜனின் 16 குணங்களின் அளவுகளும் தரப் பட்டுள்ளது. அதிலும் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால் மேலதிகத் தகவல் கிடைக்கும். உதாரணத்திற்கு Universe Abundance தேர்ந்தெடுக்கப் பட்டதை மஞ்சள் நிறம் காட்டுகிறது . அண்டத்தில் ஹைட்ரஜன் 75% சதவீதம் உள்ளதை தெரிவிக்கிறது. நமது உடலில் எத்தனை சதவீதம் என்பதை தெரிந்து கொள்ள வலது ஓரத்தில் உள்ள Human என்பதை கிளிக் செய்தால் போதும். அது போல் முறையே சூரியமண்டலம், விண்கல், பூமிப் பரப்பு, கடல் ஆகியவற்றில் நாம் தேர்ந்தெடுத்த மூலகம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Density என்று தேர்ந்தெடுத்தால் அந்த மூலகம் திட, திரவ நிலைகளில் உள்ள அடர்த்தி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதிக அடர்த்தியான ஒரே மாதிரியான மூலகங்கள் ஒரே இடத்தில் சுற்றி இருப்பதை அட்டவணையை முழுமையாகப் பார்த்தால் புரியும். அது போல் எல்லாக் குணங்களும் அட்டவணையை சார்ந்து இருப்பதை ஒவ்வொன்றாக கிளிக்செய்து அட்டவணையை லாங்ஸாட்டில் பார்த்து, நிறத்தின் அடர்த்திக் கேற்ப குணங்கள் கூடுவதைக் காணலாம்.



Discovered தேர்ந்தெடுத்தால் மூலகம் எந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது, என்பதுடன் வலது ஓரம் உள்ள ஸ்லைடர் ஒன்று இருக்கிறது. அதை நகர்த்தி ஆண்டுவாரியாக எந்தெந்த மூலகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை பற்றி சொன்னது கொஞ்சம், சொல்லாமல் விட்டது அதிகம். அதை கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த பதிவில் 4 டிகிரிக்கு கீழ் குளிர்வித்தால் நீரின் அடர்த்தி குறைகிறது என்று சொல்லியிருந்தேன். அதற்கான விளக்கப்படம். கீழே கொடுத்துள்ளேன்.



பனிக்கட்டியாக மாறும் போது, படிகத் தன்மைக்காக ஹைட்ரஜனின் இணைப்பினால் அணுக்கள் அதிக இடம் எடுத்துக் கொள்வதால் அடர்த்தி குறைந்து நீரில் மிதக்கிறது.

கெமிஸ்டரியை முடித்துக் கொள்வோம்.

தொடரும் பதிவில் சந்திப்போம்.......................


முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
ஆக்ஸிஸன் அணுவின் கடைசி அடுக்கான L அடுக்கில் ஆறு எலக்ட்ரான்கள் தான் உள்ளன.சமாதி நிலை அல்லது உன்னத நிலை அடைவதற்கு இன்னும் இரண்டு எலக்ட்ரான்கள் தேவைப்படுகிறது. ஆகவே ஒரு எலக்ட்ரான் உள்ள இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து தனது கடைசி செல்லில் எட்டு எலக்ட்ரான்கள் வருமாறு பார்த்துக் கொண்டு H2O என சொல்லப்படும் எளிதில் பிரிக்க முடியாத தண்ணீராக உருவானது. அந்த தண்ணீரின் சிறப்புக் குணமே திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளிலும் இப்பூமியில் காணப்படுவது தான். தண்ணீருக்கு இந்த ஒரு சிறப்புக் குணம் மட்டுமில்லை பல உண்டு. தண்ணீரின் சிறப்பு பற்றி வைரமுத்து ஏற்கனவே ஒரு கவிதை பாடியுள்ளார்.

”நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே”.

முழுப்பாடலையும் கேட்டால் நீரின் மற்றொரு பரிமாணமாகிய நதியின் பெருமைகள் தெரியும். உண்மையிலே அருமையான பாடல்.




ஹைடிரஜன், ஆக்ஸிஸனுடன் இணைந்து நீர் உருவாகும்। Hydro என்றால் நீர் சம்பந்தப் பட்டது। Hydrogen என்றால் ”நீரை உருவாக்கும்” என்று பெயர் மேலே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும் ஹைட்ரஜன் தனது ஒற்றை எலக்ட்ரானுக்கான பாதையை ஆக்ஸிஸனுடன் பங்கிட்டுக் கொண்டு, சேர்வதால் அந்தப் பாதைச் செலவில் மிச்சமாகும் சக்தி வெப்பமாக வெடிச் சத்தத்துடன் வெளியேறுகிறது.

இந்த வினை விளக்க சமன்பாட்டை கடந்த பாகத்திலும் கொடுத்திருந்தேன். அதே சமன் பாட்டை இங்கே இன்னும் சற்று விளக்கமாக இங்கே கொடுத்துள்ளேன் இந்த சமன்பாட்டில் காணப்படும் அந்த மஞ்சள் முக்கோணம்தான் எதிர்கால விடிவெள்ளி. இந்தியா போன்ற நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம்.ஆகவே அதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

வேதியல் வினைகள் பலமுறையில் நடக்கும். சில பொருட்களை சேர்க்கும் போது வெப்பம் உண்டாகும். சில வினைகள் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டுதான் நடைபெறுகிறது. உதாரணமாக ”மிக்ஸிங்”(ஆல்கஹால் + நீர் சேர்ப்பு) இன் போது சொற்ப அளவில் வெப்பம் உண்டாவதை மிகுந்த அனுபவசாலிகள் உணர்ந்திருப்பார்கள். பெட்ரோல் காற்றுடன் கலந்து தீப்பிடிக்கும் போது வெப்பம் உண்டாகும். வினையின் போது உருவாகும் வெப்பத்தை குறிப்பிடத்தான் சமன்பாடுகளில் அந்த முக்கோணம் பயன்படுத்தப் படுகிறது.

நமது வாகனங்களை இயக்க பெட்ரோலை எரித்துக் கிடைக்கும் வெப்பத்தை பயன்படுத்துகிறோம்। இன்னும் சில ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்துவிடும் நிலை வந்து விட்டதால் மாற்று எரிபொருளாக ஆல்கஹாலும், ஹைட்ரஜனும் தான் வருகிறது. ஆல்கஹால் தயாரிப்பு நமது உணவுத் தேவைக்கான இடத்தை அபகரித்துக் கொள்வதால் அதைவிடச் சிறந்ததாக ஹைட்ரஜன் வாயுதான் நம்பப்படுகிறது. ஹைட்ரஜன் கார்கள் ஏற்கனவே வந்துவிட்டன. ஆனாலும் இன்னும் அந்த தொழில் நுட்பம் பரவலாக்கப் படவில்லை அல்லது எளிதாக்கப் படவில்லை. இனிமேல் இடையில் ஏதும் அற்புதங்கள் நிகழாத வரையில் ஹைட்ரஜன் தான் எதிர்கால எரிபொருள். ஆகவே இப்பொழுது தொடங்கி நமது விஞ்ஞானிகள் அதில் கவனம் செலுத்தினால் இத்துறையில் நாம் முன்னோடிகளாக இருப்போம். முன்பு விளையாட்டாக சொல்வார்கள் கார் என்ன தண்ணீரில் ஓடுகிறதா?, என்று. தண்ணீரில் ஓடும்காலம் விரைவில் வந்துவிடும்.ஏனென்றால் தண்ணீரில் தான் ஹைட்ரஜன் எளிதாக கிடைக்கிறது.

சரி இப்பொழுது நீரின் மற்றொரு சிறப்புக் குணம் என்னவென்று பார்ப்போம்। எல்லாப் பொருட்களும் கன அளவில் குறைந்துதான் திட நிலைக்கு மாறும்,ஆனால் தண்ணீரானது திரவ நிலையில் இருக்கும் பொழுது குளிர்வித்தால் 4 டிகிரி வரை சுருங்கி விட்டு பின் விரிவடைகிறது. அதனால் தான் திட நிலையில் உள்ள பனிக்கட்டி திரவ நிலையில் உள்ள நீரில் மிதக்கிறது. அவ்வாறு மிதக்காவிட்டால் ஒவ்வொரு குளிர் காலத்திலும் கடல் நீர் தொடர்ந்து பனிக் கட்டிகளாக மாறி கடலுக்கடியில் சென்று நிரந்தரமாக தங்கிவிடும். பூமியில் தட்ப வெட்ப மாற்றம் என்பது புறப்பரப்பு சம்பந்தப்பட்டது என்பதாலும் பூமியின் புறப்பரப்பில் கிட்டதட்ட 80 சதவீதத்தைக் கொண்ட கடல் விரைவில் பனிக்கட்டியாக மாறி முழ்கிக் கொண்டே இருப்பதால் கடல் முழுவதும் பனிக்கட்டியாக மாறி உயிரினம் வாழ அருகதை அற்றதாக மாறிவிடும். கடலுக்கடியில் சென்ற பனிக்கட்டி உருகுவதற்குள் அடுத்த குளிர்பருவகால பனிக்கட்டிகள் அதன் மீது படர்ந்து விடும். இவ்வாறு சிலவருடங்களில் கடல் முழுவதும் நீரோட்டமும் உயிரோட்டமும் இல்லாத பனிக்கட்டியாக மாறிவிடும்.




ஆனால் அப்படி மாறாமல் மேற்பரப்பு மட்டும் பனிக்கட்டியாய் மாறி வெப்பத்தைக் கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல் பாதுகாக்கிறது. இந்த தன்மைக்கு, H2O மூலக்கூறுகளின் ஈர்ப்பும், அமையப்பட்ட விதமும் தான் காரணம்

இந்த நீரின் தனிப்பட்ட குணத்தினால் ( Anamalous behaviour of water) தான் பூமியில் உயிரினம் தோன்றி, நிலை பெற்றிருக்கிறது..


திரவங்களை சூடேற்றும் போது பாத்திரத்திற்கு அடியில் நெருப்பை வைக்க வேண்டும், குளிரூட்டும் போது குளிர்ச்சியை பாத்திரத்திற்கு மேல் வைக்கவேண்டும். அப்பொழுதுதான் கடத்தல் (Conduction) முறையில் வெப்பம் பரவும்.

அதனால் தான் ப்ரிட்ஜ்ஜில் ப்ரீசர் மேலே வைக்கப்பட்டுள்ளது.



ஹீட்டரில் காயில் கீழே வைக்கப்பட்டுள்ளது.



ஆனால் இந்த பிரியானிக்கு மட்டும் பாத்திரத்திற்கு மேல் நெருப்பை போட்டு ”தம்” போடுவதில் உள்ள தத்துவம் சத்தியமாக எனக்கு புரியவில்லை. பாலைவன மக்களின் வழக்கத்தை குருட்டுத்தனமாக பின்பற்றும் முட்டாள்தனமா? அல்லது இது ஒரு வேளை குருகுலத்தில் சீடர்கள் பூனை வாங்கி கட்டிப் போட்டு விட்டு பாடம் நடத்திய கதை மாதிரியோ?

ஒரு ஆக்ஸிஸன் அணு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து H2O என சொல்லப்படும் தண்ணீர் உருவானது. இந்த மூன்று அணுக்களும் கூட்டணி முறையில் தங்களிடம் உள்ள எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு பின்னர் பொதுவில் பங்கிட்டு ஒவ்வொன்றும் தங்களுக்கு தேவையான எட்டை எட்டிவிடுகிறது. ஹைட்ரஜன் ஒரு அணுவை கொடுத்து எட்டை எடுத்துக் கொள்கிறது.ஆக்ஸிஸன் ஆறு எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு பின்னர் எட்டை எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு தான் புளுரினும், ஹைட்ரஜனும் முறையே ஏழு, ஒன்று, எலக்ட்ரான்கள் தங்களது கடைசி ஸெல்லில் உள்ளதால் இவையிரண்டும் சேர்ந்த கூட்டுப் பொருளாகிய ஹைட்ரஜன் புளுரைடு என்ற உலகிலேயே அதிகபட்ச பிணைப்பு கொண்ட பொருள் உருவாகிறது.

கார்பன் எனப்படும் கரி தனது கடைசி ஸெல்லில் நான்கு எலக்ட்ரான்கள் உள்ளன.






எட்டின் விதிப்படி தனது முக்தி நிலை அடைவதற்கு இன்னும் நான்கு எலக்ட்ரான்களை அடைய வேண்டும் அல்லது இழக்க வேண்டும். எட்டில் சரி பாதியாக இருப்பதால் இதுவே ஒரு சிறப்புத் தன்மை ஆகிவிட்டது. ஆகவே எல்லாவிதமான யுக்திகளையும் பயன்படுத்தி கார்பன் (தனக்குத் தானே கூட சேர்ந்து), உன்னால் என்மனம் இழந்தது பாதி, உன்னால் என்மனம் அடைந்தது பாதி என்று பாடிக்கொண்டே ஆக்ஸிசன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியவற்றுடன் குறைந்தது 2 அணுக்களிலிருந்து 100000 அணுக்கள் வரை கூட ஒன்றாக இணைந்து இலட்சக்கணக்கான அங்கக கூட்டுப் பொருட்கள்(Organic Compounds) உருவாயின.

வேதியல் உலகில் கார்பன் தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய சில சொற்ப நன்பர்களுடன் தனியாக ஒரு பெரிய (Organic Chemistry) சாம்ராஜ்ஜியத்தையே நடத்துகிறது. உதாரணத்திற்கு கார்பன் ஹைட்ரஜன் கூட்டில் உருவான புரதப் பொருட்களாகிய முட்டைக் கரு சுமார் (Egg Albumin) 45000 மூலக்கூறு எடை கொண்டது. அது போன்று இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin) 68000 மூலக்கூறு எடை கொண்டவை. (Casein-190000, Urease-480000, Bushy stunt virus-10600000 Mwt) தாவரங்கள், மிருகங்கள், மனிதன் ஆகிய அனைத்தும் இந்த மாதிரியான அங்ககக் கூட்டுப் பொருட்களால் ஆனவையே. ஆகவே உயிரோட்டத்திற்கு கார்பன், ஆக்ஸிஸன், ஹைட்ரஜன், ஆகியவை மிகவும் முக்கியம் என்று தெரிகிறது.கார்பன் குடும்பத்திலுள்ள கார்பன் கூட்டாளிகளான (அட்டவணையில் 4G குரூப்பை பார்த்தால் தெரியும் ), சிலிக்கானும், ஜெர்மேனியமும் கடைசி செல்லில் நான்கு எலக்ட்ரான்களுடன் மனிதகுலத்திற்காக அதுவும் குறிப்பாக மின்னனு,கணினி துறைக்காக மிகவும் பாடுபடுகிறார்கள்.

அட்டவணையில் G1ல் உள்ளவர்களை காரவகையினர் (Alkali) என்றும், G2ல் உள்ளவர்களை கார மண் (Alkali Earths) வகையினர் என்றும், G3ல் உள்ளவர்களை ”ஏழை உலோகங்கள்” என்றும் G7 ல் குளோரின் கூட்டாளிகளுக்கு ”ஹாலஜன்” என்றும் G8 ஹீலியம் கூட்டாளிகளுக்கு ”உன்னத வாயுக்கள்” (Noble Gases) என்றும், குடும்பப் பெயர்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸன் G5 மற்றும் நைட்ரஜனின் G6 கூட்டாளிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுடன் யாரும் கெமிஸ்ட்ரி பேசினால் சமாளித்துக் கொள்ள உதவும்.

பொருட்களின் அணுக்கள் மூன்றுவிதமாக இணைந்து புதிய பொருட்கள் உருவாகுகின்றன.

1) தங்களிடமுள்ள எலக்ட்ரான்களை விட்டுக்கொடுத்தும், பெற்றுக் கொண்டும் ஒருவித இணைப்பு (Electrovalent bond), இணைகின்றன. இந்த இணைப்புதான் மிகவும் பலமானது. விட்டுக்கொடுத்து சேருவதில்தான் பலம் அதிகமாக இருக்கும்.

2) தங்களிடமுள்ளதை பங்கிட்டுக் கொண்டு ஒருவித இணைப்பு (Covalent bond), இணைகின்றன. பங்கிடுவதில் பலம் குறைவுதானே.

3) விட்டுக் கொடுக்காமலும், பங்கிடாமலும் பக்கத்து வீட்டுக்காரனைப் போன்ற பந்தமும் உண்டு (Weak bond like Hydrogen Bonding) . இந்த மாறுபட்ட பந்தத்தில்தான், கரியானது கிராபைட், வைரம் என்று உருமாறுகிறது. கூழ்மம் (collaidal), படிகம் (Crystal), ஒற்றைசெல் இவைகளின் தோற்றத்திற்கு இந்த இணைப்பும் ஒருவகையில் காரணம்.

இணைப்பிற்கு காரணம் எஞ்சி நிற்கும் சக்தியை இழந்தோ, அல்லது தேவைப்படும் சக்தியை பெற்றோ சமநிலை எய்தும் முயற்சிதான்.
இவையெல்லாம சமநிலை எய்துவதற்கான ஏற்பாடுதான்।

அது சரி இந்த சமநிலை எய்தும் ஏற்பாட்டில் உயிரினத்துக்கு என்ன வேலை?

பதிலை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
இந்த பதிவை தொடரும் முன், எனது கடந்த பதிவிற்கு பின்னூட்டமாக வந்த விஜயராகவன், மற்றும் நாட்டாமை ஆகியோரின் கேள்விக்கு பதில் சொல்லியாகவேண்டும் . கேள்விகள் இவைதான்.

கேள்வி
//அது சரி ஒருவேளை ஸ்ட்ரிங் தியரி ஏற்றுக் கொள்ளப் பட்டால் இந்த ”எட்டை எட்டி விடும் எலக்ட்ரானின்” நிலை என்ன? என்ற கேள்வி எழும். கவலையில்லை அப்பொழுதும் எட்டு என்பது அந்த நுண்ணிய ஆற்றல் ஸ்ட்ரிங்கின் நீளம் அல்லது அதிர்வெண் சார்ந்து ஒரு அலகாக அமைந்துவிடும். ”எட்டு” என்பதன் பெயர்தான் மாறியிருக்கும்.//என்று கூறியுள்ளீர்கள்

ஈதர் மாதிரி எலக்ட்ரானும் சீக்கிரம் காலை வாரிவிட்டா என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையா?


பதில்
அப்படியும் வைத்துக் கொள்ளுங்கள். ஈதர் என்பது இல்லாத ஒன்றைப் பற்றியது.ஆனால் எலகட்ரான் இருப்பது கடந்த நூறு வருடங்களாக நிறுவப்பட்ட உண்மை. அதனுடைய அமைப்பிலும் உருவத்திலும் தான் மாற்றம் கண்டுபிடிக்கப் பட்டது. அதனுடைய என்னிக்கை என்பதும் இது வரை மாற்றமில்லாத ஒன்றாக இருக்கிறது.

கேள்வி 2

எலக்ட்ரான் புரோட்டான் இவையெல்லாம் கிடையாது. இவைகளும் போஸான்ஸ், பெர்மியான்ஸ் போன்ற துகள்களின் கலவை என்று 3 ஆம் பாகத்தில் சொல்லிவிட்டு மீண்டும் அவைகளை வைத்து ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறீர்கள் இது எப்படி?”

பதில்

நாம் சிறுவயதில் சூரியன் உதிக்கும் திசைதான் கிழக்கு என்று படித்தோம். பின்னர் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றும் அது 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது என்றும் படித்ததால் சூரியனை வைத்து கிழக்கை சொல்வதில் 47டிகிரி தவறு ஏற்பட வாய்ப்புள்ளது என அறிகிறோம். பூமியில் இருந்து கொண்டே, சூரியனை வைத்து பார்த்தால் கிழக்கு என்பது ஆறு மாதத்தில் 47 டிகிரி மாற்றமடைகிறது. இவையெல்லாம் சூரியனை வைத்து திசை சொல்லும் போது டிகிரி கணக்கில் ஏற்படும் மிகப் பெரிய குழப்பங்கள்.

காந்தம் கண்டு பிடிக்கப்பட்ட பின்பும் அல்லது துருவ நட்சத்திரத்தை வைத்து திசை சொல்லும் போதும்தான் கிழக்கு மாறாமல் இருக்கிறது.

ஆனால் பூமியைவிட்டு விட்டு வேறொரு தொகுப்பில் (frame of reference) இருந்து பார்த்தால் கிழக்கு என்பது அன்றாடம் 1 டிகிரி மாறி ஒரு வருட காலத்தில் கிழக்கு மேற்காக மாறி பின் மீண்டும் கிழக்காக மாறி விடுகிறது என்பதை அறியலாம்.

ஆனால் திசை காட்டும் கருவி இல்லாத போதும், துருவ நட்சத்திரம் இல்லாத பகல் பொழுதிலும் ஒரு தெருவையோ சாலையையோ அடையாளம் சொல்ல சூரியனை வைத்துத்தான் இன்னும் கிழக்கு தீர்மாணிக்கப் படுகிறது. அதில் நமது அன்றாட கணக்கீடுகளில் பெரிதாக தவறேதும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதுதான் என் கட்சி வாதம். ஆனால் சேட்டிலைட் டிஷ் மாட்டும் போது சூரியனை கணக்கிட்டு மாட்ட முடியாது. இது போன்றதுதான் என்னுடைய ”உயிரும் உயிரின் பிரிவும்பாகம் 5 “ல் எலக்ட்ரானைப் பற்றிய விவரிப்பும்.
சிலர் இடையில் படித்துவிட்டு கருத்துகளைக் கூறுகிறார்கள். ஆகவே எனது பதிப்புக்களை வரிசைக்கிரமமாக படித்தால் சில சந்தேகங்களை தவிர்க்கலாம்  நன்றி.

தொடர்வோம்.............

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
இந்த பாகம் கெமிஸ்ட்ரியை அதிகம் போதிப்பதால் ஒருமுறைக்கு இருமுறை படிக்கலாம்.

மாண்ட்லீவ் அணு எடையை வைத்து, வரிசைப் படுத்தப்பட்ட தனிமங்களை ஏழின் மடங்கில் அட்டவணைப் படுத்தினார். அவ்வாறு அட்டவணைப் படுத்தும் போது ஒத்த குணமுள்ள தனிமங்கள் நெடுக்கிலும், சமயத்தில் குறுக்கிலும் தங்களது இருப்பிட அமைப்பை நியாயப் படுத்தின. இடையில் நிறைய வெற்றிடங்கள் ஏற்பட்டது.

அட்டவணையை ஏழின் விதிப்படி மாண்ட்லீப் அமைத்ததும் கண்டு பிடிக்கப் படாமல் இருந்த பொருட்கள் அணைத்தும் தங்கள் தங்கள் இடங்களில் வந்து உட்கார்ந்து கொண்டு தாங்கள் மொத்தம் எத்தனை பேர் உள்ளோம், எந்த கூட்டத்தை, மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள், என்ன குணநலன் உள்ளவர்கள் என்று பாட்டு பாட ஆரம்பித்து விட்டன உன்மையில் அது ஒரு அற்புதமான மாயக்கட்டம் தான் ஆமாம், அந்த அட்டவணையும் கூட பல தனிமங்களை கண்டுபிடித்து கொடுத்தது என்பதுதான் உண்மை.


இதில் முக்கியமான விஷயம், உயர்ந்த அல்லது மந்தமான வாயுக்கள் என்று அழைக்கப்படும் தனிமங்கள் அதுவரை அறியப்படவில்லை. ஆனாலும் அவைகளின் தாமதமான கண்டுபிடிப்பு இந்த அட்டவணையில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவை ஆறும் ஒட்டு மொத்தமாக வில்லியம் ராம்சே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு அட்டவணையில், வரிசைகளில் கடைசி இடம் (அதாவது எட்டாவது குழுவாக), ஏற்கனவே தங்களுக்காகவே ரிசர்வ் செய்யப்பட்டது போல், இடம் கொடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. அறிவியலாருக்கே வியப்பை கொடுத்த நிகழ்ச்சி இது. அன்றிலிருந்து எட்டின் விதிப்படி அமையப்பெற்ற அட்டவணையாகிவிட்டது.

இந்நிகழ்ச்சியை இயற்கை மனம் திறந்து பேசிய சம்பவமாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இசைக்கு மயங்கி, இயற்கை தனது ரகசியத்தை உளறி விட்டதோ?. மாண்ட்லீவ் ”சரிகம” என்று ஆரம்பித்த உடன் இயற்கை மீதிப்பாட்டை பாடி முடித்து விட்டதோ?. அறிவியல் ஆர்வலர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வீட்டின், சுவற்றில் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டிய அட்டவணை. இந்த அட்டவணையை நன்றாகத் தெரிந்து கொண்டால் வேதியலில் பாதி தெரிந்து கொண்டதற்கு சமம். மாண்ட்லீவ்க்கு மரியாதை செய்யும் விதமாக அவர் பெயரை ஒரு தனிமமத்திற்கு சூட்டியுள்ளனர். அதன் பெயர் மாண்டிலீவினியம்.

இங்கு காணப் படும் அட்டவணை கடந்த நூறு வருடங்களாக பற்பல மாற்றங்களுடன் மேம்படுத்தப் பட்டுள்ளது.ஆனாலும் அடிப்படையில் எந்தமாற்றமும் இல்லை. G1 லிருந்து G8 வரை குழுக்கள் உள்ளன. எலக்ட்ரானின் அமைப்புக்குத் தகுந்தவாறு ”டிரான்ஸிஸன்” மூலகங்கள் எனப்படும் நான்கு d ஷெல்லுக்கான (10 X 4)தனிமங்கள் தனியாக (Transition Elements) நடுவில் திணிக்கப் பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் அதற்கு நடுவில் இரண்டு f ஷெல்லுக்கான லாந்தனைடுகளும், (14) ஆக்டினைடுகளும்(14) திணிக்கப் பட்டுள்ளது. தனிம வரிசையில் 92 க்கு மேலுள்ளவை நிலையற்றவை அல்லது செய்ற்கை முறையில் உருவாக்கப் பட்டவை.



அட்டவணை.

அணுவுக்குள் எலக்ட்ரான்கள் K,L,M,N,O,P, என்ற வரிசையில் அடுக்கடுக்காக அமைந்துள்ள கோள வடிவ அமைப்புகளில் சுற்றுகின்றன. ஒவ்வொரு கோளத்திற்க்கும் குறிபிட்ட எண்ணிக்கையில் தான் எலக்ட்ரான்கள் உள்ளன. அவை முறையே 2, 8, 18, 32, 32, 32 ஆகும். வட்டப்பாதை ஒவ்வொன்றிலும் s,p,d,f என உட்பிரிவுகளும் உள்ளன. உட்பிரிவில் முறையே 2,6,10,14 எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்கமுடியாது. இப்படத்தில் வரையப் பட்டுள்ள வட்டங்களை கோளத்தின் ஒரு பகுதிகளாக 3D யில் கற்பனை செய்து கொள்ளுங்கள்



இங்கு கீழே அட்டவணையில் கடைசியாக வரும் செயற்கையில் உருவாக்கப் பட்ட லாரன்சியம் எனப்படும் தனிமத்தைப் பற்றி பார்ப்போம். இந்த தனிமத்தில் 103 எலக்ட்ரான்கள் உள்ளன. இந்த அணுவுக்குள் எலக்ட்ரான்கள், K,L,M,N,O,P, என்ற வரிசையில் அடுக்கடுக்காக அமைந்துள்ள கோள அமைப்புகளிலுள்ள, உள் வட்ட பாதைகளில் அமைந்த விதத்தை கீழே உள்ள அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம். எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் வரிசை முறையும் (Filling order) குறிப்பிடப்பட்டுள்ளது.



இங்கு நிரப்பும் வரிசை முறை மாறியுள்ளதை கவணிக்கவும்.முதல் 5 வரை ஒழுங்காக வரிசைப்படி நிரப்பிவிட்டு 05 க்குஅடுத்து 07 என்றும் அதையடுத்து தொடர்ச்சியா மாறி மாறி வருகிறது.அதாவது 1, 2, 3, 4, 5, 7, 6, 8, 10, 13, 9, 11, 14, 17, 12, 15, 18, 16 என்று வரிசை மாறி உள்ளது. அதைத்தான் எட்டை எட்டி விடும் அவசரம் என்கிறேன். கீழே உள்ள அட்டவணை, மந்தவாயுக்களின் (Inert gases or Noble gases ) அணு அமைப்பை விளக்குகின்றது.அல்லது எட்டாவது குழுவின் அணு அமைப்பை பற்றிய விவரம்.



மேற்கண்ட அட்டவணைப்படி பொருட்களுடைய அணுவின் கடைசி அடுக்கு K அடுக்காக (ஷெல்) இருந்து அதில் 2 எலக்ட்ரான்களும், அல்லது கடைசி அடுக்கு L,M,N,O,P, ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்து அதில் 8 எலக்ட்ரான்களும் அமையப் பெற்றால் அவைகள் எந்த விதமான வினைகளிலும் ஈடுபடுவதில்லை. அவை ஒரு மாதிரியான ஆற்றல் சமநிலையை அடைந்து விடுகிறது. இதனால்தான் அவற்றை ஒரு விதத்தில் உயர்ந்த வாயுக்கள் என்றும் மற்றொரு விதத்தில் மந்தவாயுக்கள் என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் இந்த மாதிரி கடைசி அடுக்கில் எட்டு எலக்ட்ரான்கள் அமைந்து விட்டால், அவைகள் எந்த வினைகளிலும் ஈடுபடுவதில்லை. ஆகவே அந்த சம நிலையை அடையவே பொருட்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கின்றன.



இதில் ஸெனான் எட்டை எட்டுவதற்கு காட்டும் அவசரத்தைஅந்த வரிசையைப் பார்த்தாலே புரியும். அதாவது N அடுக்கில் 32 எலக்ட்ரான்களை 2,6,10,14 என்ற வரிசையில் நிரப்பி விட்டுத்தான் அடுத்த O அடுக்குக்கு போக வேண்டும். ஆனால் எல்லாத் தனிமங்களும் 2,6,10 ஐ நிரப்பி விட்டு அடுத்து நிரப்ப வேண்டிய 14 ஐ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அதற்கு அடுத்த O அடுக்கிற்கு சென்று எட்டை நிரப்பி விட்டு, முக்தி நிலை அடைந்து விட போட்டி போடுகின்றன.

கடைசியில் ஸெனான்தான் வெற்றி பெறுகிறது.அதற்கு பின் வரும் தனிமங்களாகிய சீசியம், பேரியம் முதலில் Pஅடுக்கின் உள் அடுக்கான 6s அடுக்கில் 2 எலக்ட்ரான்களை நிரப்பி பார்த்து விட்டு முயிற்சியை கைவிட்டன. அதற்கு பின் வந்து முயற்சி இல்லாமல் சிவனே என்று 4f ல் 14 ஐயும் நிரப்பியவர்களை லாந்தனைடுகள் என்று பெயரிட்டு சோம்பேறிகள் என்று தனியாக கட்டம் கட்டி வைத்து விட்டனர். அதற்கு பின் வருபவர்கள் 5d யில் 10ஐ நிரப்புகிறார்கள். பின் P அடுக்கிற்க்கான எட்டை எட்டி விடும் போட்டியை ஆரம்பிக்கின்றன. இந்த முறை வெற்றியை ரேடான் பெற்றது. இம்முறை 5f ல் கட்டம் கட்டப்பட்ட 14 பேருக்கு ஆக்டினைடுகள் எனப் பெயரிடப்பட்டது.

எட்டை எட்டி விட்டால் முக்தி நிலை, மோனநிலை, நிரந்தர அமைதி ஆகியவை கிட்டி விடும் என்பதற்கு ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், ஸெனான், ரேடான் ஆகிய மந்த வாயுக்களே உதாரணம். ஆற்றலின் சமநிலை ஏதோ ஒரு வகையில் எட்டால் நிறுவப் படுகிறது. இவைகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. உலகில் எந்த விதமான பொருட்களுடனும் இவைகள் கலப்பதில்லை. வேதியல் வினைகளுக்கு அப்பாற்பட்டவை. நிறைகுடம் கூத்தாடுவதில்லை என்பதற்கு சரியான உதாரணம். இவைகளுக்கு நிறம், மணம், சுவை விருப்பு, வெறுப்பு கிடையாது. முற்றும் துறந்த யோகிகள் போன்றவர்கள். உயர்ந்த நிலைப்புத் தன்மை பெற்றவை. மிகவும் குறைந்த அளவில் காணப்படுபவை. அணு நிலையில் (எப்படி முனிவர்கள் நிர்வாண நிலையில் காணப் படுவார்களோ அது போன்ற நிலையில்) காணப்படுபவை.

அப்படி ஒரு மோன நிலை எய்துவதற்கான, எட்டை எட்டி விடும் எலக்ட்ரான்களின் முயிற்சியில் தான் எத்தனை தில்லுமுல்லு, கூட்டணி, பொதுவுடைமை, வேற்றுமை, விட்டுக்கொடுத்தல், பிரித்தாளுதல் அடேங்கப்பா சொல்லி மாளாது. எட்டை எட்டி விடும் எலக்ட்ரான்களின் முயற்சியில் ஏற்பட்டவைதான் நான், நீங்கள்,எனது எழுத்து, மாறுபட்ட பொருட்களின் உருவாக்கம், குறைந்தபட்ச நிலைப்புத் தன்மைக்கு ஏற்ற, பொருட்களின் இணைப்பு வகைகள், இயக்கம், காற்றோட்டம், நீரோட்டம், உயிரோட்டம் என கணக்கிலடங்காது. அதனால்தான் எட்டுக்குள்ளே உலகம் இருக்கிறது என்பதை நானும் ஆதரிக்கிறேன்.

பொருட்கள் எந்த நிலையில் இருந்தாலும் அமைதி நிலை அல்லது ஆற்றல் குறைந்த நிலையை எட்டிவிடும் வரை ஆற்றலை இழந்தோ, பெற்றோ சமநிலையை (Equalibrium) அடைவதற்க்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்த உலகில் எத்தனை வகையான பொருட்கள் உள்ளனவோ, கிட்டத்தட்ட அத்தனை வகையான யுக்திகளைப் பயன்படுத்தி எலக்ட்ரான்கள் எட்டை அடைகின்றன. எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு இருப்பது போல் இங்கும் ஆதிமூலமான ஹைட்ரஜனுக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது. ஹைட்ரஜன் மட்டும் தனது கடைசி K அடுக்கில் ஒரே ஒரு எலக்ட்ரான் தான் கொண்டுள்ளது. இரண்டு எலக்ட்ரான்கள் அதாவது கூடுதலாக ஒரு எலக்ட்ரான் கிடைத்தாலே ஹீலியம் அடைந்த மோன நிலையை பெற்றுவிடும். ஆகவே ஹைட்ரஜன் சாதாரணமாக அணு நிலையில் இருப்பதில்லை. மூலக்கூறு (Molecule) நிலையில் தான் காணப்படும். அதாவது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் தங்களது எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு ஒவ்வொன்றும் தனது கடைசி அடுக்கில் இரண்டு எலக்ட்ரான்கள் வருமாறு இணைந்து கொண்டு இரட்டையர்களாகவே திரிகின்றன. அதாவது குறைந்தபட்ச மோனநிலை அல்லது முக்தி நிலை அடைந்தாக காட்டிக் கொள்கின்றன. இதனால்தான் உலகத்தில் மந்த வாயுக்களைத் தவிர எதுவுமே அணு நிலையில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எட்டை எட்டி விடும் தத்துவத்தில்தான் இந்த அண்டத்தின் அனைத்துப் பொருட்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமான சூட்சுமம் அடங்கியுள்ளது.

நியானில் உள்ள எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் அமைப்பை ஆராய்ந்தால் எல்லாவற்றிற்குமான காரணம் கிடைத்துவிடும். இயற்கையின் முழுமை அதில்தான் இருக்கிறது.அது சரி ஒருவேளை ஸ்ட்ரிங் தியரி ஏற்றுக் கொள்ளப் பட்டால் இந்த ”எட்டை எட்டி விடும் எலக்ட்ரானின்” நிலை என்ன? என்ற கேள்வி எழும். கவலையில்லை அப்பொழுதும் எட்டு என்பது அந்த நுண்ணிய ஆற்றல் ஸ்ட்ரிங்கின் நீளம் அல்லது அதிர்வெண் சார்ந்து ஒரு அலகாக அமைந்துவிடும். ”எட்டு” என்பதன் பெயர்தான் மாறியிருக்கும்.

ஆக்ஸிஸன் அணுவின் கடைசி அடுக்கான L அடுக்கில் ஆறு எலக்ட்ரான்கள் தான் உள்ளன. முக்தி நிலை அல்லது உன்னத நிலை அடைவதற்கு இன்னும் இரண்டு எலக்ட்ரான்கள் தேவைப்படுகிறது. ஆகவே ஒரு எலக்ட்ரான் உள்ள இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து தனது கடைசி அடுக்கில் எட்டு எலக்ட்ரான்கள் வருமாறு பார்த்துக் கொண்டு H2O என சொல்லப்படும் எளிதில் பிரிக்க முடியாத தண்ணீராக உருவானது.



அந்த தண்ணீரின் சிறப்புக் குணமே திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளிலும் இப்பூமியில் காணப்படுவது தான். தண்ணீருக்கு இந்த ஒரு சிறப்புக் குணம் மட்டுமில்லை பல உண்டு. தண்ணீரின் சிறப்பு பற்றி நூறு காரணம் சொல்வேன் என்று வைரமுத்து ஏற்கனவே ஒரு கவிதை பாடியுள்ளார். அந்தப் பாடலுடன் அடுத்து தொடருவோம்...............................



முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)



முன்பதிவுச் சுருக்கம்

அண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை

உயிரின் தோற்றம் பற்றி விளக்குவது டார்வினின் பரிணாமக்(Evolution) கொள்கை.

பெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா? ஆம் அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(BlackHoles) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள்,(சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பினால் தோன்றிய முதல் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயுதான் எங்கும் இருந்தது, இருக்கிறது. பெரு வெடிப்பின் வெப்பத்தினால் சேர்க்கையும், பிரிவும்( Fusion & Fission) ஏற்பட்டு ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பூமியும் அதன் பொருட்களும் அவ்வழித் தோற்றம்தான்.

பூமியும் அதிலுள்ள பொருட்களும் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும் புதிய பொருட்கள் தோன்றுவதும், பொருட்களின் மாற்றமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். எப்பொருளுக்கும் அழிவில்லை என்பதால் பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம் தோன்றியது. பொருட்களின் தோற்றமும், மாற்றமும், இயக்கமும் ஏன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்ற காரணத்தை ஆய்வோம்.

பொருட்களை ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் உலகில் மொத்தமே 92 பொருட்கள்தான் உள்ளன என்றும் அவற்றின் மாறுபட்ட கலவையினால் எண்ணிலடங்கா பொருட்கள் தோன்றின எனவும் கண்டு கொண்டனர். ஆராய்ச்சியின் தொடர்ச்சியினால் அந்த 92 பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்றும் அறிந்தனர். உலகத்திலுள்ள 92 பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. . அவைகள் எலக்ட்ரான், புரோட்டான் எனவும் இவை இரண்டும் சேர்ந்து உருவான மற்றொறு துகள் நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.

பொருட்களில் இந்த துகள்கள் அமைந்த விதத்தை கண்டறிந்து பலர் (ஜேஜே தாம்ஸன், டால்டன், ரூதர் போர்டு) கூறினர். அதில் முக்கியமாகக் கருதப்படுபவர் நீல்ஸ் போர் என்பவராவர். அது பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது அந்த நுண்ணிய துகள் பற்றிய கருத்துக் கோட்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் நீல்ஸ் போர் அறிவித்த அணு அமைப்பின் மாதிரியில் (Bohr's Model) இது வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புத்தம் புதிதாக வந்த ஸ்ட்ரிங் கொள்கையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், அதுவும் நீல்ஸ் போர் மாதிரியில் பெரிதாக எந்த மாற்றமும் எற்படுத்தப் போவதில்லை. ஆகவே அதை அடிப்படையாகக் கொண்டே தொடருவோம்.

Bohr's Model




இந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் வரைந்து விளக்கிய அமைப்புக்கு பெயர் ”போர் மாதிரி” (Bohr's Model) எனப் படுவதாகும். அதாவது சூரியமண்டலத்தில் சூரியனும், கிரகங்களும் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான், புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. சுற்றிக் கொள்வதிலும் தங்களுக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டுள்ளன. அதை என்னவென்று அறிவோம்.இதுவரை நான் எழுதியது உங்களுக்கு சரியென்று பட்டால் நமக்குள் ”கெமிஸ்ட்ரி”ஒத்துப் போகிறது என்று அர்த்தம். ஆகவே இனிமேல் கெமிஸ்ட்ரியைப் பார்ப்போம். போன பதிவில் வைரமுத்து கவிதை ஒன்றைப் பார்ப்போம் என்று கூறியிருந்தேன். அதைத்தான் கீழே கொடுத்துள்ளேன்


எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமைய்யா
நான் புட்டு புட்டு வைக்கப் போறேன் கேளய்யா
………..கவிஞர் வைரமுத்து.

எட்டு எட்டாக பிரித்துப் பார் என்று மனிதனின் வயதை பிரித்து வாழ்க்கையை புட்டு புட்டு வைத்தார். அவர் பார்த்த பார்வை வேறு . நாம் பார்க்கப் போகும் பார்வை வேறு. அவர் மனித வாழ்க்கையைப் பார்த்தார், நாம் பொருட்களைப் பார்க்கப் போகிறோம். இந்த உலகம் மற்றும் பொருட்களையும் எட்டு எட்டாக பிரித்து ஆராயப் போகிறோம். நமது கவிஞருக்கு முன்பே எட்டின் மகத்துவம் எல்லோரையும் எட்டி விட்டது போலும்.

ஆங்கிலேயர்கள் இசையை சுரம் பிரிப்பது எட்டாகத்தான் பிரிக்கிறார்கள் (Octaves). சதுரங்க கட்டத்தில் கூட கட்டங்கள் எட்டுக்கு எட்டாகத்தான் உள்ளது. திசைகள் எட்டு. சித்திகள் எட்டு, ஜாதகத்தில் எட்டாமிடத்தை (ஆயுளை) பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்லவே ஆரம்பிக்கிறார்கள்.

எதுகை மோனையுடன் எட்டு நட்டம் என்பார்கள். வாகனத்தின் பதிவு எண்ணின் கூட்டுத் தொகை எட்டு வரக்கூடாது என்பார்கள். இறந்தவருக்கு எட்டாம் நாள் காரியம் செய்வதை ”எட்டுக்கு” என்பார்கள்.
.
கம்ப்யூட்டரின் அடிப்படை மெமரி அளவு 1 பிட்டில் ஆரம்பித்து 64 பிட்டாக வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கூட எட்டு பிட்டுகளை அடுக்கி வைத்து கொண்டு அதைத்தான் மெமரியின் அளவுகோலான பைட் (Byte) என்று கூறுகிறார்கள். ஆக ஏதோ நன்மை தீமை எல்லா வகையிலும் எட்டு முக்கியத்துவம் அடைந்து விட்டது.

முதன் முதலாக 1789 இல் லாவாய்சியர் என்பவர், அதுவரை அறியப்பட்ட 33 மூலகங்களைப் (தனிமங்களை) பற்றி ஆய்ந்து தகவல் வெளியிட்டார். கண்டுபிடிக்கப் பட்ட அந்த மூலகங்களூக்குள் ஏதோ ஒரு வகையில் ஜாதி பிரிக்காவிட்டால் மனிதன் அவை முழுமை அடைந்ததாக நினைக்கமாட்டான் போலும். ஆகவே அவற்றையும் வகைப் படுத்த முதலில் மூன்று மூன்றாகப் (Triads) பிரித்துப் பார்த்தான். பின்னர் ஏழுஏழாக பிரித்தான் ஏழை அடிப் படையாக கொண்ட ஒருவித ஒற்றுமையைக் கொண்டு பிரித்தான். அதற்குப் பின் மூலகங்களின் இயல்பிற்கும் ஏழுக்கும் உள்ள தொடர்பு வலுப் பெற ஆரம்பித்தது. கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்கள் கொண்ட மூலகங்களாகப் பிரிக்கும் போது தங்களுக்குள்ளும் சில குழுக்கள், கூட்டங்கள், உள்ளதை காட்டிக் கொண்டன. அதிலும் உயர்ந்தவை (Noble Metals), அபூர்வமானவை (Rare Earths), இடைப்பட்டவை (Transistion elements), மந்தமானவை (Inert Gases), உக்கிரமானவை (Alkali metals),உலோகமற்றவை(Non-metals) என குழுக்கள் உள்ளன.

அதிலும் ஒவ்வொரு குழுவிலும் குணங்கள் படிப் படியாக தீவிரமாகி இருக்கக் கண்டனர். அந்த அடிப்படையில், இருக்கின்ற மூலகங்களை வரிசைப் படுத்தும் போது ஏழுக்கு அடுத்து, வரிசையில் முதலாவதாக அமையும் மூலகத்தினால் சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் எட்டை அடிப்படையாக வைத்து பிரித்தவுடன் குழப்பங்கள் மறைந்து விட்டது. ஆனால் அவைகளோ எட்டை அடிப்படையாக கொண்ட பிரிவினையை ஏற்கனவே தமக்குள் வைத்துள்ளன என்று பின்னர் அறிந்து கொண்டான். உலகத்தில் இருக்கின்ற மூலகங்களை அதாவது தனிமங்களை எட்டு எட்டாக வகைப் படுத்தினர்.

மேலை நாட்டவரின் ஸ்வரங்கள் எட்டு (Octaves) என்பதாலும் எட்டை அடிப்படையாக கொண்டு மூலகங்களின் புதிய அட்டவணை (Periodic Table) தயார் செய்யப்பட்டதால் இந்த அட்டவணையை எட்டின் விதிப்படி அமையப்பெற்ற அட்டவணை என்றனர்.

இந்தியர் சுரத்தை ஏழாகப் பிரித்தாலும் சொல்லும் போது என்னவோ ச,ரி,க,ம,ப,த,நி,ச என்கிறார்கள். எண் வரிசையில் சூன்யத்தை இடையில் செருகி 0,1,2,3,4,5,6,7,8,9 ஒன்பது வரை சொல்லி ஒன்று இல்லாதது போல் தோன்றினலும் இருக்குமாறு செய்தது போல் ச,ரி,க,ம,ப,த,நி,ச என்று பகுத்து சப்த ஸ்வரங்கள் என்றான்.ஆக ஸ்வரங்களின் அடிப்படையிலும் அட்டவணை அமையப் பெற்றதாகக் கருதலாம். ஆக இசைக்கும் எட்டுக்கும் சம்பந்தமுண்டு. அல்லது இசைக்கும் இயற்கைக்கும் பந்தமுண்டு.

முதலில் அந்த எட்டாவது மூலகத்தை மனிதன் அடையாளம் கண்டு, பிரித்து வைக்க மிகவும் சிரமப் பட்டுவிட்டான். ஏனென்றால், அது எவ்வகை குணமும் காட்டவில்லை. அதுதான் ”நியான்” எனப்படும் வாயு. இதை அடையாளம் கண்ட பின் அதன் அண்ணன்மார்களை எளிதில் கண்டு கொண்டனர்.

இந்த இடத்தில் மாண்ட்லீப் என்னும் ஆராய்ச்சியாளரைப் பற்றி கூறாவிட்டால் என்னுடைய உடம்பிலுள்ள ரசாயானத்திற்கு கூட கோபம் வந்துவிடும். உலக மக்கள் அனைவராலும் இன்றும் போற்றப்படும் அந்த அட்டவணையை வடிவமைத்ததில் முக்கிய பங்கு மாண்ட்லீவ் என்பவர்க்குத்தான். அதுவரையிலும் உலகத்தில் கிட்டதட்ட ஐம்பது தனிமங்கள்தான் அறியப்பட்டிருந்தது. இயற்கை தனது ரகசியங்களை அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்டி விடாது போலும். ஏனென்றால், இயற்கையின் ரகசியங்களை கண்டுபிடிப்பதற்குள் ஏராளமானவர்கள் உடல், பொருள், உயிர் இழந்திருந்தனர்.

தொடரும்.............

மேலும் படிக்க...!
எனது ஆத்திகன் vs நாத்திகன் என்ற பதிவிற்கு நன்பர் ரகுநாத் என்ற நறுமனம்-அன்பன் பின்னூட்டமாக பலகேள்விகள் எழுப்பியுள்ளார் அங்கேயே பதிலளிப்பதைவிட அதையே ஒரு பதிவாக பதிவிட்டேன்

கேள்வி: கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
நன்றாக எழுதியுள்ளீர், அலசல் என்றும் சொல்லாம் ஆயினும் தங்களின் முடிவு / பதிவின் நோக்கம் நிதர்சனம் போல் பிம்பத்தை தான் உருவாக்குகின்றது.

பதில்: ”நிதர்சனம் போல் பிம்பத்தை ” இதில் முதலாவதாக முரண்படுகிறீர்கள்

கேள்வி: தங்களின் பதிவை ஒரு முறைக்கு இருமுறை படித்தபின்பே இங்கு எனது பதிவை வைக்கின்றேன்.
தாங்கள் பதிவின் இறுதியில் வரையறுத்த தங்களின் நம்பிக்கையில் முரண்படுகின்றீர்,
கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.
ஆனால் தங்கள் பதிவிலே வரையறுத்து விட்டீர்
கடவுளை நம்பாமல் கோவிலைப் பூட்டி வைப்பவன்.
கோவிலில் சிலையாக இருப்பவன் என்று வரையறுக்கிறீர்.
கதவை பூட்டும் பூசாரி என்று சொல்லாமல் கோவிலை புட்டும் பூசாரி என்று சொல்லும் போதே, தெளிவாக கடவுளை வரையறுக்கிறீர்.

பதில்:கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்” என்று முடிவில் சொல்வதால் அதையே முடிவாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று புரியாதா?

கேள்வி: “for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya

பதில்: உங்களுடைய ரகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே இதைப் பற்றிய கேள்வி எதற்கு?

கேள்வி: குரங்கிலிருந்து வந்த மனித இனத்தின் பரிணாமம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு மேலானது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளது அதில் சந்தேகம் வேண்டாம்.
நிறைய ஆதரங்கள் உள்ளது சந்தேகம் வேண்டாம் என்கிறீர், இளமை பருவத்தை கடந்த பின் மனிதனை கடவுள் படைத்தான் என்று ஒருவன் நம்புதல் வேண்டும் அல்லவா ?
ஒருவன்
கடவுள் இருக்கு என்பதற்கு ஆதாரத்தை காட்டு
கடவுள் இல்லை என்பதற்க்கு ஆதாரத்தை காட்டு
மற்றொருவன் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதரத்தை காட்டு
இங்கு ஆதாரம் எனத் தாங்கள் முன்வைப்பது யாது ?
இதனை ஒரு முறக்கு இருமுறை படித்து நான் கூற விழைவதை புரிந்து விளக்கம் அளிக்கவும்.

பதில்: எழுதியவன் ஒரு முறைக்கு இருமுறை படிக்கவேண்டிய அவசியமில்லை.. நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டு சரியாக கேள்வி கேட்டால் போதும்.

கேள்வி: இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களும் தானாகத் தோன்றியது
கடவுளை நம்புவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் கடவுள் மட்டும்தான் தானக தோன்றினார்
பதிவின் முடிவில் தாங்கள் ஆத்திகன் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். கடவுள் மட்டும் தானாக தோன்றினார், மற்றவைகள் தானக தோன்றாமல் பிறரால் தோற்றுவிக்கபட்டது, தோற்றுவித்தவர் கடவுள், அவ்வாறு தானே ! குரங்கை கடவுள் தோற்றுவித்து மனிதனை மட்டும் பரிணாமவியல் என்ற நிகழ்வில் விட்டுவிட்டார் கடவுள் !

பதில்: கேள்வியில் தெளிவில்லை. நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல. சமூக அக்கறைக்காக யாரை வேண்டுமானாலும் தட்டிக் கேட்க தயாராக உள்ள மனிதன்.
கேள்வி: தங்களின் பதிவின் "முடிவு" அது தானே, வரையறைக்கு உட்படாதவரை தாங்கள் கடவுள், கடவுள் இவ்வாறு என பல இடங்களில் வரையறுகீற்கள்.

பதில்:பல இடங்களில் கடவுளைப் பற்றிய வரையறை நான் அரை குறையாக சொல்வதாக உங்களுக்கு தோன்றினாலும் முடிவாக சொல்லப்படுவதுதான் முழுமையானது. ஆகவே அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:அதைச் சார்ந்த தங்களின் ஒரு பின்னுட்டம்
Quote:
//தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்//

பதில்: ஆமாம் அந்த பதில் அவருக்கு.
கேள்வி ஒன்றாயினும் ,கேட்கப் படும் நபரை பொறுத்துதான் பதிலும் அமையும்.காலம் மாறி கேட்கப் படும் கேள்விக்கும் பதில் மாறுபடும் என்பதையும் குழந்தையின் கேள்விக்கான பதிலும் முதியவரின் கேள்விக்கான பதிலும் மாறுபடும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதை இங்கே குறிப்பிடவேண்டாம்.
உங்களுடைய தன்விவரம் கொடுத்தால், பொத்தாம் பொதுவாக பேசாமல் தெளிவாக விவாதிக்கலாம். ஏனெனில் விவாதமும் விவாஹமும் சம அந்தஸ்தில் இருந்தால் தான் முழுமை ஏற்படும். நீங்கள் நாத்திகரா அல்லது ஆத்திகரா? நாத்திகர் என்றால் பெரியார் பாசறையில் இருப்பவரா? கடவுள் மறுப்பு மட்டுமா அல்லது மூடநம்பிக்கை ஒழிப்புமா? எவையெல்லாம் மூட நம்பிக்கை? உங்களுடைய வயதென்ன? நீங்கள் என்ன மதம்? இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். சொல்லாவிட்டாலும் தொடருங்கள். முதலில் தலைப்பை படியுங்கள் இது ஆத்திகம் vs நாத்திகம் அல்ல ஏனென்றால் அது தீராத பிர்சனை. நாசாவின் கேண்டீனிலும் இந்தப் பிரச்னை உள்ளது. நம்மாலும் தீர்க்க முடியாது. ஆனால் இந்த உளுத்துப்போன நாத்திக வாதத்தால் கால விரயமும், சமூக ஒழுக்கக் கேடும் தான் மிச்சம் என்பது இந்த சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.ஆகவே
”ஆத்திகன் vs நாத்திகன்” என்று மனிதனைப் பற்றி விவாதிப்போம் .


கேள்வி: ”//பூசாரியாய் இருப்பவனும் கடவுளை நம்புவதில்லை” என்பதில் என்ன வரையறைக் குழப்பம்?//

கோயிலை பூட்டுவதால் அவர் நாத்திகராவார், ஏன் ? கடவுளை நம்பாமல் கோயிலை பூட்டுகிறார்... கடவுள் என்பதை தங்களால் விளக்க முடியவில்லை explain / define, ஏனெனில் அது நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது, தனி மனிதனின் மனநிலைக்கு ஏற்ப, அவ்வாறு தானே.

பதில்: கடவுள் என்பதை விளக்கமுடியாது என்பதைத்தான் விளக்கியுள்ளேன். புரிந்து கொள்ளாமலே விவாதம் பன்னுகிறீர்கள். I explained by my definition.

கேள்வி: நான் ஒன்றை பதிவிட்டேன், அதை மீண்டும் பதிவிடுகின்றேன்... தாங்கள் அதில் என்ன புரிந்துக் கொண்டீர் என்பதனை தெளிவாக்கவும்

“for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya
இதை விட்டுவிட வேண்டாம், மறவாமல் இது பற்றிய தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

பதில்: நீயே யாவுமாகி நின்றபின் ,ஆண்டவனே
எனக்கென்ன வேலை ?
என்கிறான் தேவார தாசிமய்யா

அவ்வாறு தெளிவாக உணர்ந்துவிட்டநிலையில் ,ஆண்டவனே ,கொல்லுவதும் கொல்லப்படுவதும் நீயாகிவிடுவதால் அந்த முதல்பாதி வேலையை நான் செய்கிறேன் என்பான் லொள்ளு பிடித்தவன். அதனால்தான் மனிதனை நல்வழிப்படுத்த ”நீ இயல்பாய் செயலாற்று பலனை நான் ஏற்றுக் கொள்கிறேன் ” என்கிறது பகவத் கீதை.

கேள்வி: இந்த பகுத்தறிவை விட்டுவிடுவோம், அது அரசியல் சார்ந்த பகுத்தறிவு, இயல்பாக அறிவை எடுத்துக் கொள்வோம், 40 வயதுக் மேல் நாத்திகம் பேசினால் அது எவ்வகையில் மூளை குன்றிய நிலை, ஏனெனில் தாங்கள் நாத்திகனாக இருந்து ஆத்திகனாக அந்த நிலையில் தெளிவை உணர்ந்திருக்கிறீகள் என்பது தங்களின் பார்வை, அதனால் தானோ தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள். இங்குள்ள சமூக மன நிலையை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் அனுகினால் அவ்வாறு தான் தெரியும்... இதைச் சார்ந்து
தங்களுக்கு பதில் கிடைக்காத கேள்விகள் எவை அதாவது நாத்திகனா இருந்தபோது, தற்போது தெளிவான பதில் கிடைத்து ஆத்திகனாக உள்ளீர்கள், கேள்விகள், பதில்கள் இரண்டையும் பகிர்ந்துக் கொள்ளவும்.

பதில்: பதில் கிடைக்காத கேள்விகளை எழுத 4० வருடங்களுக்கு மேலாகும். உதாரணத்துக்கு விருமாண்டி பாணியில், உங்களுக்கு எங்கே எப்பொழுது அரிக்கும் என்று என்னால் ஏன் சொல்ல முடியவில்லை. இதற்கான நேரடியான பதில் கிடைக்கும் வரை நான் நாத்திகனல்ல

கேள்வி: நன்று, ஆதாரம் என்பது என்ன, அதன் அவசியம் பற்றிய தங்களது கருத்து?

பதில்: இந்தக் கேள்வி கேட்கப்பட்டதன் அர்த்தம் விளங்கவில்லை.

கேள்வி://ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும்,சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.//
இது முன்முடிவு... a premise.

பதில்: அறிவியலின் ஆரம்பம் அனுமானம்


மேலும் படிக்க...!

வாங்க டீ சாப்பிடலாம்.

இரண்டு தொடர்களுக்கு அடுத்த பாகங்களை எழுத நேரமில்லை. இந்தச் சூழலில் ஒரு மாதம் ஒடிவிட்டது. நவம்பர் மாத பதிவிற்காக சுறுசுறுப்பாக ஏதாவது எழுதலாம் என்று யோசித்து முதலில் டீ சாப்பிடலாம் என்ற நினைப்பில் தோன்றியவைகளை பதிந்துள்ளேன்.

நான் இங்கு டீ, எந்தநாட்டிலிருந்து வந்தது , எப்படி வந்தது,எப்படி செய்வது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை .அதனுடைய வேறொரு பரிமானத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன்
"நான் டீ,காபி சாப்பிடுவதில்லை "என்று பெருமையாகச் சொல்பவர்களின் பின்னனியை ஆராய்ந்தால் சில உண்மை புலப்படும். அவை

1) அவர்களுக்கு நன்பர்களே இருக்கமாட்டார்கள்
2)சோம்பேறியாய் இருப்பார்கள்.
3)இளைஞர்களாக இருந்தால் அவர்களுக்கு முகத்தில் பரு இருக்கும்
4) வயதானவர்களாக இருந்தால் அவர்களுக்கு வயிற்றில் அல்சர் இருக்கும்.
5) ஏழ்மையான குடுபத்தில் இருப்பார்கள்.
6)மொத்தத்தில் கஞ்சர்களாக இருப்பார்கள்.
7)24 மணிநேர குடிகாரர்களும் டீ சாப்பிடமாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை டீ,காபி சாப்பிடுவதில் தவறேதுமில்லை. ஏழைகளின் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் புத்துணர்ச்சி பானமாக இருக்கிறது. ஆண்களுக்கு” டீ ”என்றால் பெண்களுக்கு காப்பி என்று ஆகிவிட்டது. பொதுவாக சைவர்கள் காபியை விரும்பி சாப்பிடுவதால் சிலரால் டீ அசைவமாக கூட கருதப் படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் அது ஒரு பொருளாதாரப் பிர்ச்னையாக மாறிவிட்டது.2008ல் ஒரு டீ 2 ரூபாயாக இருந்தது, கலைஞரின் புண்ணியத்தில் 5 ரூபாய்க்கு வந்து விட்டது. அவர் தனது பேரப் பிள்ளைகளின் டீச் செலவை வைத்து டீயின் விலையை 15 ரூபாயாக தீர்மானித்தார். அதில் இந்த குறைந்தபட்ச உத்திரவாதத்துடன் கூடிய உபசரிப்பு பானமான டீயின் விலை ஏறியதால் ஏழைமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

ஒரு திரைப்படத்தில் .
கவுண்டமணி ஒரு கிராமத்தில் வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரிடம் ஒருவர் தலையை சொறிந்து கொண்டு வருகிறார்..
வ‌ந்த‌வ‌ர் இளிக்கிறார்..
"நான் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணுங்க‌..அதுக்கு நீங்க‌ தான் ஒரு ம‌ருந்து சொல்ல‌ணும்.."
"சொல்லீருவோம்...மொத‌ல்ல‌ இங்க‌ வா. நீ காபி டீ.. குடிப்பியா?"
”இல்லைங்க”
”பீடி , சிகரெட் குடிப்பியா”
"அந்த‌ ப‌ழ‌க்க‌மே ந‌ம்ம‌க்கிட்ட‌ இல்லீங்க‌.."
"மது மாது பழக்கம் உண்டா?.."
"அய்ய‌ய்யோ..இல்ல‌வே இல்லீங்க‌.."
........................
"அப்ப‌ என்ன‌த்துக்குடா நீயெல்லாம் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணும்..ம‌வ‌னே நீ நாளைக்கே செத்து போயிரு..இல்ல நானே ம‌ருந்து குடுத்து கொன்னுடுவேன்..காலைலேயே வ‌ந்துட்டானுங்க‌டா ”

இது கொஞ்சம் அதிகம் தான்.
ஆனால் டீ சாப்பிடுவதில் தப்பில்லை . டீ என்பது இன்றைய காலகட்டத்தில்
நீண்ட ஆயுளுக்குத் தேவைப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட் (Anti Oxidant) அதிகமுள்ள பொருட்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. அதுமட்டுமில்லாமல் டீ அதிகமாகச் சாப்பிட்டு இறந்தார்கள் என்பதற்கு புள்ளி விபரம் ஏதுமில்லை.

உழைப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கான புத்துணர்ச்சி பானமாக டீ யை பாவிக்கிறார்கள்.
மூளை வேலைக்காரர்களுக்கு வேலை செய்யும் போது தலையில் சூடு ஏறுகிறது . அவர்கள் டீ அருந்த எடுத்துக் கொள்ளும் கால இடைவெளியில் அது தன்னை ஆசுவாசப் படுத்துகிறது. புற உறுப்புகள் வேலைசெய்யும் போது அக உறுப்புகள் அமைதி காத்து பொறுமை இழந்து விடுகிறது. உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அந்தச் சிறிது நேர இடைவெளி, ஓய்வையும், அமைதியாக இருந்த வாய், நாக்கு, குடல் ஆகியவற்றிற்கு சிறிது வேலையும் கொடுக்கும் போது உடல் சமநிலை எய்துகிறது. இந்த நாக்கு இருக்கிறதே அது மிகவும் பொல்லாதது. அதற்கு கண்டிப்பாக வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வெகு நேரம் நமது உறுப்புகள் அசையாமல் இருந்தால் மரத்துவிடும். அதிலும் வயிறோ தனக்கு உணவில்லை எனில் குடலையே சாப்பிட்டுவிடும்.

இப்படித்தான் சுனாமியால் பாதிக்கப் பட்ட குழந்தை ஒன்று ,முகத்தில் பட்ட அடியினால் வாயைத் திறந்தால் வலிக்குமென்று பல்லிடுக்கு வழியாக திரவ ஆகாரமாக சாப்பிட்டு வந்தது.மூன்றுமாத காலத்தில் கீழ்த்தாடை எலும்பு மூட்டுகள் இறுகி தாடை திறக்க முடியாத அளவுக்கு அதைச்சுற்றிலும் எலும்பு வளர்ந்து விட்டது.. பின்னர் இந்திய அளவில் பெரிய நிபுனர் குழு வந்து அறுவைசிகிச்சை செய்து தாடை எலும்புகளை சரி செய்ய வேண்டியதாயிற்று.

இந்த இடத்தில் உடலியலில்”சந்துருவின் தங்க விதி”(Chandru's golden rule)யைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ”அடிக்கடி பயன்படுத்தாதது எதுவும் விரைவில் பயன் படாமல் போய் விடும்.”என்பதுதான்.

ஆகா ஒரு டீ க்கு இவ்வளவு வீடுகட்டணுமா(Build up) என்று கேட்கிறீர்கள். அது ஒரு புத்துணர்ச்சி பானமட்டுமில்லை அது ஒரு ஆரோக்கியமான மருந்து என்பதால்தான் இவ்வளவு கட்ட வேண்டியதிருக்கு. நகரத்தில் சொல்வார்கள்,” தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்குடா இல்லைன்னா உயிர் போய்விட்டதாக எடுத்து புதைச்சிருவானுக “என்று அந்தக் கதைதான் அடிக்கடி டீ குடிப்பதும். வாய், வயிறு,குடல் இவற்றை அடிக்கடி வேலை வாங்க வேண்டும்.

கிராமத்தில் கஞ்சர்களைப் பற்றி பேசும் போது சொல்வார்கள் ”அவன் உமுறுக் குடிச்சுக்கிட்டே உலகத்தை சுத்திவருவான்” ஆக எப்படியோ ஒன்றைக் குடித்தால்தான் புத்துணர்ச்சி என்பது நிச்சயம் (உமுறு - எச்சில்)

இந்த டீ உங்கள் ஆரோக்கியத்திற்கான டானிக் மட்டுமில்லை. நட்பை வளர்க்கும் காம்ப்ளான். பாசமான பசங்க முன்பெல்லாம் (இப்ப உஜ்ஜாலாவுக்கு மாறிட்டாங்க).நன்பர்களைப் பார்த்துட்டா வாடா மாப்பு டீ சாப்பிடலாம் என்று கூப்பிட்டு போய் ”ஒன் பை டூ ”என்று சொல்லி டீக்கடைக்காரரை இழுத்து கட்டுவாங்க (டென்சன் படுத்துறது) .கடைசியில் “ஒன் பை டூ தானே, மாப்பு காசை நீ கொடுத்துரு” என்று சொல்லும் போது நட்பு தடுமாறினாலும் பிற்காலத்தில் மலரும் நினைவுகளில் ஒன்றாகிவிடும்.

சிலர் இருக்கிறார்கள் அவர்கள் ”வாங்க மாமா டீ சாப்பிடுங்க” என்று சொல்லி கூட்டிப் போய் டீக்கடைக்காரரிடம் ”மாஸ்டர் மாமாவுக்கு ஒரு டீ “ என்று சொல்லி வாங்கி கொடுத்துவிட்டு நீங்கள் பரிதாபமாக டீக் குடிப்பதை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள்.ஆகவே அவர்களிடம் ஏமாந்து அந்த டீயைக் குடிக்காதீர்கள். ஆளைப் பொறுத்து அவர்களிடம் மாப்பிள்ள நான் பூஸ்ட் தான் சாப்பிடுவேன் என்றோ அல்லது சாப்பிட்டா இரண்டும் பேரும் சாப்பிடுவோம் என்றோ அல்லது என்னிடம் காசு இருக்கிறது இரண்டும் பேரும் சாப்பிடலாம் என்று சொல்லியோ சமாளித்துக் கொள்ளுங்கள்.

கலைவாணர் என் எஸ் கே, தன் காதலைச் சொல்ல தனது காதலியின் வீட்டிற்குச் சென்றாராம் அவரை விருந்தோம்பும் விதமாக அவரது காதலி ”என்ன சாப்பிடுகிறீர்கள் டீயா காபியா?” என்று கேட்டாராம்..அதற்கு கலைவாணர் ”எனக்கு டீ ஏ மதுரம்” (T.A.Mathuram)என்றாராம். (மதுரம் என்றால் இனிமை என்று பொருள்மட்டுமல்ல அவரது காதலியின் பெயரும் அதுதான்).

நீங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியை அடிக்கடி டீ கேட்டு வாங்கிப் பருகுங்கள், கேட்டால் ”உன்னைப் போல் யாரும் டீ போடமுடியாது என்று சொல்லுங்கள்,அது என்னமோ தெரியலை நீ டீ போட்டா நல்லாருக்கு ”என்று சொல்லுங்கள். ஏனென்றால் பிற்காலத்தில் சன்டையைத் தீர்க்கும் சமாதானக் கொடியாக இந்த டீயை இருவருமே பயன்படுத்தலாம்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்க டீ கொடுங்கள். எப்பொழுதும் வீட்டில் நல்ல டீத்தூள் வைத்திருங்கள். பால் இல்லை என்றாலும் பரவாயில்லை கறுப்பு டீயாக கொடுங்கள்.வீட்டில் இதெல்லாம் நடைமுறைப் படுத்த நீங்கள் ஒருநாளைக்கு இரண்டு டீ யாவது சாப்பிட வேண்டும். உங்களது நன்பர் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் டீ வரவில்லை என்றால் நன்பரை அழைத்து ”வாப்பா வீட்டுல தொந்தரவு பன்னாம வெளிய போய் டீ சாப்பிட்டு வரலாம் ”என்று சொல்லி அவருக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள்.

இப்படித்தான் சமீபத்தில் எனது வேலைக்காக ஒரு ஆளை வெளியூரிலுள்ள எனது நெருங்கிய உறவினரை பெருமையாகப் பேசி அவர் வீட்டிற்கு அனுப்பினேன். அவர் போய்விட்டு வந்து என்னங்க ஒரு டீ கூட வாங்கித் தரவில்லை என்று குறைபட்டார். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள்.அனுப்பியவர் பெயரையும் உங்கள் பெயரையும் காப்பாற்றுங்கள்.

உங்களுக்கு டீ பிடிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையாவது சாதித்து ஒரே ஒருமுறையாவது ”அணுவுடன் காப்பி” (Coffee with Anu )சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

என்னுடைய இந்தப் பதிப்பில் உங்களுக்கு முற்றிலும் முரண்பாடு இருந்தால் பீருடன் வாருங்கள் ”சந்துருவுடன் பீர்” சாப்பிட்டுக் கொண்டே விவாதிக்கலாம்.

மேலும் படிக்க...!
மனித மூளை கம்ப்யூட்டரை விட சிக்கலான ஒரு அமைப்பு கொண்டது. காட்சிகள் சம்பந்தப் பட்ட விஷயத்தை நினைவு கொள்ள அதற்கு அதிக நினைவிடம் தேவை என்பது கம்ப்யூட்டர் கண்டுபிடித்த பின்புதான் தெரிய வந்தது. ஏனென்றால் 1980 வரை ஒரு போட்டோவை கம்ப்யூட்டரில் பார்ப்பது அரிதாக இருந்தது. இன்றைக்கு மோட்டிகன் என்ன சைஸில் இருந்ததோ அதுதான் அன்று அனிமேஷன் விண்டோவின் சைஸ். அன்றைக்கு ஒரு ஹார்ட் டிஸ்க்கின் மெமரி சைஸ் 640 MB என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இன்று செல்போனுக்குள் வைக்கும் விரல் நகம் அளவு உள்ள சிப்பில் 2 ஜிபி உள்ளது

ஆனாலும் நமது மூளை கம்ப்யூட்டரை போல் அல்லாது சில விஷயங்களை எளிதாக நினைவிலிருந்து எடுத்து வர ஒருவித யுக்தியை கையாள்கிறது. ஒரு நினைவை இன்னொன்றுடன் சம்பந்தப் படுத்தி வைத்துக் கொள்வதன் மூலம் எளிதில் நினைவுக்கு (Data access or Retrieve) கொண்டுவர முடிகிறது.ஒரு விஷயத்தை இன்னொன்றுடன் தொடர்பு படுத்துவதால், அதை வேண்டும் பொழுது நினைவுக்கு கொண்டு வரமுடிகிறது. இதற்காகத்தான் ஒரு விஷயத்தை ஒரு கதையுடன் பின்னிச் சொல்வார்கள். அல்லது உவமானத்துடன் சொல்வார்கள்

பொதுவாக எல்லோரும் சில வரிகளை படித்துக் காண்பித்துவிட்டு திரும்பவும் சொல்லச் சொன்னால் திணறுவார்கள். அதையே ராகத்துடன் பாடி சொன்னால் எளிதாக யாரும் திருப்பிச் சொல்லிவிடுவார்கள். கச்சேரியில் பார்த்து இருப்பீர்கள் நாதஸ்வரக்காரர் எவ்வளவு நேரம் வாசித்தாலும் தவில்காரர் தனது தவிலில் அதே சங்கதியை பிட்டு விடாமல் அடித்து கான்பிப்பார். இதெல்லாம் ராகம் சம்பந்தப் பட்ட விஷயம். திருமண வீட்டில் பெண்கள் நலுங்குப் பாடல்களை எவ்வளவு நீளமாக பாடினாலும் நம்ம நாதஸ் அப்படியே முழுவதையும் ராகமாக நினைவு படுத்தி, தனது வாத்தியத்தில் பாடிக் காண்பிப்பார்.

தொலைகாட்சி விளம்பர பாடல்களை குழந்தைகள் அட்சரம் பிசகாமல் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள் ஆனால் பாடத்தை நினைவில் கொள்ளமாட்டார்கள். வார்த்தைகளை நினைவில் பத்திரப் படுத்த இந்த இடத்தில் வார்த்தைகள் ராகத்துடன் கோர்க்கப்படுகிறது. ராகத்துடன் பாடுவதற்கு வார்த்தைகள் ஒத்துழைக்க வேண்டும். வார்த்தைகள் ஒத்துழைக்காத பட்சத்தில் வார்த்தைகளை சிறிது மாற்றி உச்சரிக்கலாம் தப்பில்லை. முதல்வன் திரைப் படத்தில் ”முத்தல்வனே” ”வன்னே வன்னே வன்னே வன்னே” என்பது போன்று கடித்து துப்பலாம். இதுவே கொஞ்சம் அதிகம்தான். அதற்காக ஆங்கிலப் பாடல் ராகத்தில் பாடுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை அடித்து சுருக்கி, இழுத்து நீட்டி மெட்டுக்கு தோதாகக் கொண்டு வந்து என்னவென்று புரியாத மாதிரி பாடித் தொலைக்கிறார்களே அது கருமத்துக்கு ரொம்ப அதிகம்.

இங்கே சிலர் பாடுவதை கேட்டுப் பாருங்கள் புரியும்.

(இதற்குத்தான் சொல்வார்கள் ”தரத்தை தரம் அறியவேண்டும் தடிக்கம்பை நாய் அறிய வேண்டும்” என்று.நமது தரம் தெரிந்து கொண்டு மேடை ஏற வேண்டும்.இல்லாவிட்டால் இந்த கேவலத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.: இது அந்த விஜய் டிவி வீடியோவிற்கான கமெண்ட்)

எதிலும் ஒரு ரைம் இருக்கவேண்டும் அதைத்தான் எதுகை மோனை என்கிறார்கள். நன்பர்கள் பேசும் பொழுது கூட க னாவுக்கு கா னாவா என்று நக்கல் அடிப்பார்கள். உங்களுக்கு ஹிந்தியில் 1,2,3 என்ற எண் வரிசை சொல்லத் தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள் பெரும்பாலோர் தெரியாது என்பார்கள். ஆனால் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ”ஏக்தோ தீன் சார்பான்ஞ்” என்ற ஹிந்திப் பாடலை ஆரம்பியுங்கள் அவர் என்ன பாடுகிறோம் என அறியாமலே ஹிந்தியில் எண்களுக்கான வரிசையில் 13 வரை பாடி முடித்து விடுவார்.அதுதான் கவிதையின் மகத்துவம். இதை யெல்லாம் உணர்ந்த தமிழர்கள் மிகப் பழங்காலத்திலே, சொல்லும் விஷயம் எதுவாயினும் கவிதையில் சொல்வோம் என வழிவகுத்தனர். அந்த வழியில் வந்தது தான் ராகம், மெட்டு, கவிதை.அதற்கு அடுத்த கட்டமாக வந்தவைகள்தான் சீர், தளை, எதுகை மோனை என்ற யாப்பிலக்கணம்.

ஒரு கருத்தை விளக்க முதலில் உரைநடையில் விளக்குவது, பின் பழகு தமிழில் சொல்லுவது. அடுத்து பண்பட்ட தமிழில் பேசுவது அதற்கு அடுத்து எதுகை மோனையுடனும், பின் அடுக்கு மொழியிலும் பேசுவது பிறகு உவமான உவமேயங்களுடன் பேசுதலாகும். பின்னர் உவமானத்தை மட்டும் சொல்வதாகும். பாமரத்தமிழன் கூட தான் பேசும் போது ராகம் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழில் அர்த்தமற்ற சொற்களையும் அன்றாடம் பயன்படுத்துகிறான். உதாரணமாக

சத்தம் கித்தம் போடக் கூடாது,
பஸ்ஸுக்கு கிஸ்ஸூக்குன்னு அலையாம ட்ரெயின்ல வந்துரு.
பாட்டுகீட்டு ன்னு பாடுங்க ஆனா அதுல மெட்டுகிட்டு இருக்கனும்
கவிதை கிவிதைன்னுட்டு எவனாச்சும் வந்தீங்க.........
யாப்புகீப்புன்னு நீங்கதான் கழுதையா கத்துறீங்க எவன் கேக்றான்( உதாரணத்துக்குதாங்க, உடனே ஆதாரத்தோட சண்டைக்கு வராதீங்க)
நாய் கீய் வந்தா கல்லக் கில்ல கொண்டு எறிந்து விடாதே கடித்து கிடித்து தொலைந்துவிடும்.

இதுல கித்தம், கிஸ்ஸு,கீட்டு, கிவிதை,கிட்டு, கீப்பு, கீய், கில்ல, கிடித்து இவை எல்லாம் அர்த்தமற்றவை என எல்லோருக்கும் தெரியும்.ஆனாலும் ஓசைநயத்துக்காக இவற்றை சேர்த்துப் பேசுகிறான்.

தமிழன் மொழிப் பற்று மிகுந்தவன். மற்றவர்களெல்லாம் வேற்று மொழியில் திட்டினால்தான் தெரியாமல் சிரித்துக் கொண்டே இருந்து விடுவார்கள்.ஆனால் தமிழனை தமிழில் திட்டினால் பொறுத்துக் கொள்வான்.ஏனென்றால் திட்டுவது யாராக இருந்தாலும் காதில் விழும் போது தமிழாக இருப்பதால் மெய் மறந்து விடுகிறான். தமிழில் பாடினால் தலையையே கொடுத்தவனின் கதையும் கலம்பகம் பாடினால் பரலோகம் நிச்சயம் என்று தெரிந்தும் பாடச்சொல்லி கேட்டவனும் தமிழன்தான் ..காட்டு மிராண்டி என்று திட்டினால் சிலை வைப்பவனும் தமிழன்தான். அடுக்குமொழியில் பேசினால் ஆட்சிப் பொறுப்பையே கொடுத்து விடுவான்.என்பது நிகழ்கால சான்றாகும்.இங்கெல்லாம் தமிழுக்குதான் முக்கியவத்துவம் கொடுக்கிறான்.ஏனென்றால் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்.

ஹிட்டான பாடல்கள் சிலவற்றில் இதைக் கவனித்திருப்பீர்கள்.

ஒருவன் ஒருவன் முதலாளி,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற
கண்ணும் கண்ணும் பேசியது
கட்டிப்பிடி கட்டிப்பிடி டா
தீப்பிடிக்க தீப்பிடிக்க
கண்ணே கண்ணே கொல்லாதே
கண்டேன் கண்டேன்
(ஆதவன் படப் பாடல்கள் முழுவதும்)


ஒரு வார்த்தைக்கு ஒத்திசைவா (Harmony) அதே வார்த்தையைப் போட்டு பாடுகிற போது நன்றாக அமைந்து விடுகிறது. இப்படி இருக்கும் போது வரிக்கு ஒரு வார்த்தை போட்டு ஒற்றைச் சீரில்(வார்த்தையில்) கவிதை எழுதினால் அதில் என்ன சங்கதி வைக்க முடியும்.

இப்படி அநேகமாக எல்லா வார்த்தைகளுக்கும் ஒட்டும் மெட்டும் போட்டு பேசுபவர்கள் அதிகமாக இருக்கும் பொழுது கவிதை பாடுகிறேன் என்று சில பேர்வழிகள் ஓசை நயமில்லாமல் ஒற்றை வார்த்தைகளை (இதெப்படி!! ஓவன்னாக்கு ஒனா) படிக்கட்டாக அடுக்கிவிட்டு கவிதை என்றால் அதை நாம் படிக்கனுமா?


பழமொழிகள் எல்லாமே எதுகை மோனையுடந்தான் இருக்கும். அதனால்தான் சொல்ல வேண்டிய விஷயத்தை பழமொழியில் சொல்லி எளிதாக புரிய வைக்கிறார்கள்.பழமொழி கூட குறள் வடிவில் இருக்கிறது பாருங்கள்.

ஆறிலும் சாவு
நூறிலும் சாவு

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமா

ஆயிரம் பேரைக் கொன்றவன்
அரை வைத்தியன்

உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கு மிஞ்சாது

நொறுங்கத் தின்றால்
நூறு வயது

.
ஒப்பாரிப் பாட்டிலும் கேட்கலாம்.

கல்லால கோட்டை கட்டி கவணமா நீ இருக்க
காலன் வந்து பூந்திட்டானோ
இரும்பாலே கோட்டை கட்டி இறுமாப்புடன் நீ இருக்க்
ஏமன் வந்து பூந்திட்டானோ

ஏன் தாலாட்டுப் பாடல்களிலும்
இந்த எதுகை மோனை இருப்பதைக் கானலாம்.

"கானல் அடிக்கிதுன்னு
கையாலே குடை பிடிச்சு
வெய்யில் அடிக்கிதுன்னு
விரலாலே குடை பிடிச்சு

தரையிலே விட்டா
தண்டைக்கால் நோகுமின்னு
மார்மேல் தொட்டில் கட்டி
மடிமேல் நடை பழக்கி
தோள்மேல் தொட்டில் கட்டி
தொடைமேல் நடை பழக்கி..."


கவிதையில் எதுகை மோனை இல்லாவிட்டாலும் ராகம் அமைத்து மெட்டுப் போடுபவர்கள் வரிகளுக்கு, பாடும் திறமையால் உயிர் கொடுப்பார்கள்.
உதாரணமாக வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் கதையின் நாயகியான ஸ்ரீதேவி மெட்டை சொல்லி வார்த்தையை போடுமாறு கதாநாயகன் கமலிடம் கேட்க ஒரு பாடல் உருவாகும் பாருங்கள், ஆஹா என்ன மாதிரியான ஒரு காட்சி அமைப்பு.அதில் அந்த மெட்டுக்கு வார்த்தையைப் போடும் போது மனதில் உள்ள காதலையும் வார்த்தையில் கலந்து கவிதையாய் பாடும் நேர்த்தி, உன்மையில் மெட்டுடன் கூடிய கவிதையின் பிரசவத்தை நேரில் பார்த்த மாதிரியான ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அதைச் சொல்வதற்கும் வார்த்தைகள் கிடையாது.





சரி, திரையுலக பிதாமகன் அவரிடம் வித்தை இருக்கிறது என்று காட்டி விட்டார் என்று மகிழ்ச்சியும் சமாதானமும் அடையும் போது அவருடைய மாணவன் கமல் சவாலாக ”ஐயா உமது கதாநாயகன் கதைப்படி சிறந்த அறிவாளியாக காட்டியுள்ளீர்கள் அதனால் அவன் மெட்டுக்குத் தகுந்த வார்த்தைகளைப் போட்டான். அதில் ஒன்றும் சிறப்பு இல்லை, ஆனால் எனது கதாநாயகனோ ஒரு பைத்தியம். இந்த பைத்தியத்தின் வார்த்தைக்கும் தகுந்த மாதிரி கதாநாயகியினால் மெட்டு போட்டு பாடமுடியும் என சந்தானபாரதியுடன் சேர்ந்து நிரூபித்துவிட்டார் கமல்.ஆக குருவை மிஞ்சிய சீடராகி விட்டார். அதற்கு சிறந்த உதாரணம் குணாவில் வரும் பாட்டு. அந்த அரைக் கிறுக்கு சொல்லும் வார்த்தைகளை பாடலாகப் பாடிக் காட்டுவதால் பாடல் அமையும் முறை தெளிவாகப் புரியும். ஆனால் அதற்கு ஒரு மெட்டு அமைக்கும் வித்தகர் தேவைப் படுவார். இந்த இரண்டு பாடல்களையும் நன்றாக கேட்டு புரிந்து கொண்டால் போதும் கவிதையும் ராகமும் கலக்கும் விதம் தெரிந்து கொள்ளலாம்..





ஆனால் நாளடைவில் கவிஞர்களுக்கு, கவிஞர்கள் தங்கள் திறமையை காட்டும் முகமாக, சுற்றி வளைத்து பொருள் கொள்ள வைப்பது, புதிர் போடுவது போல் எளிதில் புரியாத மாதிரி எழுதுதல் என ஆரம்பித்தனர். ஆனாலும் ராகத்துக்கு மிகவும் அடிப்படையான யாப்பிலகணத்தைப் பின் பற்றினர்

மேலும் படிக்க...!
இப்பொழுதெல்லாம் மக்கள் என்ன செய்கிறோம் என்று யோசிக்காமலே காரியம் செய்கின்றனர். உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். அன்று வியாழக்கிழமை தெட்சினாமூர்த்தி சன்னதியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அங்கு எனது நன்பர் ஒருவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் கேட்டேன் ”வியாழனை பார்த்தீர்களா” என்று. அதற்கு அவர் அவன் சன்னதியில் இருந்து கொண்டே இந்தக் கேள்வியை கேட்கலாமா? என்று பதில் கேள்வியை போட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நிற்பதோ தெட்சினாமூர்த்தி சன்னதியில் இவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முழித்துவிட்டு என்ன சொல்கிறீர்கள் என்றேன். குரு பகவான் சன்னதியில் நின்றுகொண்டு ” குருவை பார்த்தீர்களா” என்று கேட்டால் என்ன சொல்வது என்றார்.
அப்பொழுதுதான் எனக்கும் புரிந்தது, தெட்சினாமூர்த்தியைத்தான் தவறாக குருபகவான் என்று சொல்கிறார் என்று.

பின்னர் அவரிடம் விளக்கம் கூறினேன். குருபகவானின் இஷ்ட தெய்வம் தெட்சினாமூர்த்தியாக இருப்பதாலும் குருபகவானுக்கு என்று தனியாக சன்னதி இல்லாததாலும் அவருடைய இஷ்ட தெய்வமான சிவபெருமானாகிய தெட்சினாமூர்த்தியை வணங்கினால் நம்மை ஒரே சாமி கும்பிடுகிற பங்காளியாக கருதி நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் ஏற்பட்டதுதான் தெட்சினாமூர்த்தியை, அவரது கிழமையில் வணங்கும் முறை என்று சொன்னேன். உன்மையில் நாம் வணங்குவது ஆதிமூலமான ஆலமர்ச்செல்வனாகிய, சிவபெருமானைத்தான் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன்.



இப்பொழுது மீண்டும் கேட்டேன் வியாழனைப் பார்த்தீர்களா? என்று. அவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். சரி அவரை மேலும் குழப்ப வேண்டாமென்று நானே சொன்னேன். கடந்த ஒருமாதமாக வானில் தெரியும் வியாழனைப் பார்த்தீர்களா? ஏனென்றால் சுமார் 75 வருடங்களுக்கு ஒரு முறைதான் அது பூமிக்கு மிக அருகில் வருகிறது. அந் நிகழ்வு தற்பொழுது நடக்கிறது. போனமாதம் செப்டம்பர் 20 தேதி பூமிக்கு மிக அருகில் வந்த விஷயத்தையும் தற்பொழுது நிலவுக்கு அருகில் மிகவும் பளிச்சென்று இருப்பதையும் வானில் காட்டினேன். நீங்கள் தினமும் உங்கள் வீட்டு மாடியில் நின்றவாறே இன்னும் பலவாரங்களுக்கு வணங்கலாம் என்று கூறி அவரை குழப்பி அனுப்பிவிட்டேன்.

அவர் வீட்டிலிருந்து வணங்குவாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் தினமும் அந்த காட்சியை கான வானத்தைப் பார்க்கிறேன். நிலவுடன் தோன்றி நிலவுடன் சென்று மறைகிறது. ஆனாலும் இந்த பருவ நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் காணக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வானத்தைப் பார்த்து மகிழுங்கள்

மேலும் படிக்க...!
top