இவையெல்லாம சமநிலை எய்துவதற்கான ஏற்பாடுதான். அது சரி இந்த சமநிலை எய்தும் ஏற்பாட்டில் உயிரினத்துக்கு என்ன வேலை? அல்லது உயிர் எப்படி வந்தது?

பரிணாம முறைப்படி பருப் பொருள்தான் உயிர்ப் பொருளாய் ஆனது.
புதிய பொருட்களின் தோற்றத்திற்கு காரணம், அடிப்படைத் தனிமங்களின் அணு அமைப்பில் எஞ்சி நிற்கும் சக்தியை இழந்தோ அல்லது தேவைப்படும் சக்தியை பெற்றோ ஒன்றுடன் ஒன்று இணையும் போது சமநிலை எய்தும் முயற்சிதான். பொருட்கள் சமநிலை நோக்கி செல்லும் வழியில் தோன்றிய வழிப் பொருள்தான் (By product) உயிர் எனப்படும் வேதியல் வினை.

முதலில் உயிர் என்றால் என்ன?. பருப்பொருளுக்கு உயிர் வந்தது எப்படி?.

சார்லஸ் டார்வின் கூற்றுப்படி கடலில்தான் முதன் முதலில் உயிரோட்டம் தோன்றியது என்று அறிவியலார் ஒத்துக் கொள்கிறார்கள். உயிர்கள் தோன்றிய காலகட்டத்தில் கடல் நீர் இவ்வளவு உப்பாக இருந்திருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிலும் டார்வினின் கனவுத்தீவான கலாபகாஸ்க்கருகில் தான் உயிர் உருவானதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஏனென்றால் அங்குதான் அதிக வெப்ப நிலையிலுள்ள எரிமலைக் குழம்பு, கரி மற்றும் கந்தக வாயுக்கள், நீருடன் கலந்து மிகவும் சிக்கலான பிரம்மாண்டமான மூலக்கூறுகள் உருவாகி உயிர் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டது. எரிமலை, நன்னீர்கடல், மிதமான வெப்பம், காற்று, இடி, மின்னல் ஆகியவையின் கலவைதான் உயிர்ப்பாகு உருவாகுவதற்கு முக்கியமான காரணிகள். உயிர் உருவான கதை இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்ற போதிலும் அறிந்து கொண்ட அறிவியல்படி அன்றாட அறிவை பயன்படுத்தி யூகித்துக் கொள்ள முடிகிறது

அணுவிலிருந்து முக்தி தேடி மூலக்கூறு நிலைக்கு சென்ற பின்னும் திருப்தி இல்லாமல் மிகவும் சிக்கலான கட்டமைப்பு கொண்ட (complex molecule) மூலக்கூறு நிலைக்கு மாறி, கரியின் தீராத தவத்தினால் பின் பலவிதமான அங்ககப் (Organic compounds) பொருட்களாகி (Alkanes. Ethers,Carboxylic Acids,Esters,Oils,Ureides, Carbohydrates, Amino Acids,Proteins) அங்ககப் பொருடகள் புரதப் பொருட்களாகி, முடிவில் மூலக்கூறுகளின் பெரிய வடிவங்களில் ஒற்றை செல்லான பாரமசியமாக பரிணமித்து, பின்னர் ஒற்றைசெல்கள் வால்வாக்ஸ் போன்ற குழுமத்தொகுப்பு உயிரிகளாக மாறி, அவை பின் கடற் பூஞ்சையாய், மீனாய், ஆமையாய், பன்றியாய், விலங்காய், வாமனனாய். மனிதனாய் மாறிய வரலாற்றில் சிக்கலான புரோட்டீன் மூலக்கூறுக்கும் (complex molecule)ஒற்றை செல்லுக்கும் இடையில் தேடினால் உயிர் கிடைக்கும்.

அஸோஸ்பைரிலம், அடுமனை ஈஸ்ட் (Bakery Yeast)ஆகியவற்றை உங்கள் கையில் கொடுத்து அவைகள் நுண் உயிரிகளா என்று கேட்டால் இல்லவே இல்லை பருப்பொருள் தான் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்வீர்கள். குருணை வடிவில் உள்ள இயக்கமற்ற மாவுப் பொருளை எப்படி உயிர்ப் பொருள் என்று கூறமுடியும்.


ஈஸ்ட்


அசோஸ்பைரிலம்


ஆனால் உன்மையில் அவைகள் நீரில் கலந்து, உறக்கம் கலைந்து, உயிர் பெற்று விடும் நுண் உயிரிகள்தான். இது எப்படி?. இதுமட்டுமா இவைகள் போன்று உயிரா? பொருளா? என்று விளங்கிக் கொள்ள முடியாத லட்சக் கணக்கான இரண்டும் கெட்டான்கள் இப்புவியில் ஏராளம் உள்ளது. "அறிவு ஜீவியின் படைப்பில்" (Intellectual Creations) அக்கறை உள்ளவர்களை வெறுப்படைய வைப்பதும் அவைகள்தான். உதாரணமாக ஈஸ்ட்டை குறிப்பிட்ட சூழலில் 250 வருடங்கள் கூட உறங்க வைக்க முடியுமாம். . இது போன்று பல மில்லியன் வருடங்கள் உறங்கிய பாக்டீரியாக்களை சமீபத்தில் எழுப்பிய சான்றுகள் உள்ளன. இங்குதான் உயிரின் கோட்பாடு நொறுங்குகிறது

உறங்கிக் கொண்டிருக்கும் உயிரை பல்லாயிரக்கணக்கான விதையில் காணலாம், கொசு முட்டையில் காணலாம். வெட்டி நட்டு வைத்தால் தளிர்க்கும் மரக் குச்சியில் உயிரைக் காணலாம். உயிர் என்பது ஒரு வேதியல் வினைதான். ஆனால் அந்த வினையில் ஈடுபடும் வேதிப் பொருட்களின் கலவையும், சூழ்நிலையும்தான் முக்கியம். முட்டையில் உறங்கும் உயிரை எழுப்ப வெப்பம் தேவைப்படுகிறது ஒரு சில சமயம் நீரும் எழுப்பி விடுகிறது. அது பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன் உயிர்ப் பொருட்களுக்கும் பருப் பொருட்களுக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்வோம்.

ஆக முடிவில் தற்போதைய நிலைப்படி உயிரின் இலக்கணம் என்ன? உயிருக்கும் உயிரற்றதற்குமான தெளிவான எல்லைக் கோடு கிடையாது. அப்படியே இருந்தாலும் அது பிரம்மன் போன்றவர்களுக்குத்தான் கோடாக காட்சி அளிக்கும். ஏனென்றால் அக்கோடு மிகவும் அகன்றது. குறுகிய முறையில் வரையறுத்துக் கூறவே முடியாதது. இந்த எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு இயற்கை எடுத்துக் கொண்ட காலமும் (1500,000,000 வருடங்கள் )மிகவும் பெரியது. இயற்கை விட்டு வைத்த மிச்சங்களிலோ விடையை கண்டுபிடிக்க இன்றைய தொழில்நுட்பம் கை கொடுக்க வில்லை. அதில் ஏதும் சூட்சுமம் பெரிதாக இருக்கப் போவதில்லை.

தமிழன் தனக்குத் தெரிந்த வகையில் அந்த எல்லைக் கோட்டை ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உள்ள உயிரிகளாக அதாவது ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

1) தாவரம் 2) புழு,பூச்சிகள், 3)ஊர்வன, 4) பறப்பன,5) நடப்பன 6) ரூம் போட்டு யோசிப்பவை.


மனிதன் தீவனங்களைப் போட்டு தனக்கு தேவையான முட்டைக் கோழி, கறிக் கோழி, எலும்புக் கோழி என கோழியை தனது தேவைக் கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டான். அதாவது பொருட்களை தயாரிப்பது போல் தயாரிக்கிறான். கறிக் கோழி இனமான கெண்டக்கி சிக்கனை அமெரிக்க அரசு கோழி லிஸ்ட்டில் வைக்கவில்லை என சில தகவல்கள் கூறுகிறது.ஆமாம் இந்த படத்தில் உள்ளது போல் இருந்தால் கோழி என்றா சொல்லமுடியும்.
ஆனாலும் உயிருக்கு இலக்கணம் என்று ஒன்றை மிகக் குறுகிய முறையில் வரையறுக்க சில முக்கிய பண்புகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை முறையே

1) தூண்டலுக்கு துலங்குவதும்,
2) இம்மண்ணில் நிலைத்து இருப்பதற்குமான யுக்திடன் இருப்பதும்,
3) அதற்குத் தேவையான இனப்பெருக்கம் செய்வதும்.
ஆகிய மூன்று குணங்களே. அதையும் நெருங்கி ஆராயும் பொழுது கீழ்க் கண்டவைகள் மிக முக்கியமாக கருதப் படுகின்றன.

உயிர்ப்பொருளின் தன்மைகள்
தூண்டலுக்கு துலங்கல்,
வளர்சிதை மாற்றம்
இனப்பெருக்கம்.

இதில் முதலாவது குணம், பருப்பொருட்களின் பொதுத்தன்மை. வெப்ப நிலைக்குத் தக்கவாறு தனது தோற்றத்தை மாற்றிக் கொள்கிறது. இயக்கம் என்பது சில வகை பொருட்களின் தன்மையாகும். அதற்கு ஈர்ப்பும் வெப்பமும் காரணமாகும். ஆனால் இந்த வகையான துலங்கலையும் இயக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் நுண்ணிய துலங்கல் கொண்ட உயிர்ப் பொருளாய் மாறுவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தின் அளவும், உருமாற்றங்களும் கணக்கிலடங்கா. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய அந்த இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள லட்சக் கணக்கான பொருட்களும் டார்வினுக்கு சாட்சிகளாக உள்ளன.

இனபெருக்கம் ஒன்றுதான் உயிர்ப் பொருட்களின் தலையாய பண்பு. உயிரிகள் சர்வாதிகாரத்திற்கான யுத்தத்தை ஒற்றைச் செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்து விட்டன. ஆரம்பித்த உடன் இனப்பெருக்கத்தில் தீவிர அக்கறை கொண்டன. அதில் உருவானாதுதான் சிக்கலான அணுத்தொகுப்புகளின் கூட்டமைப்பு(Complex Molecule).

உயிரின் ஆரம்பம் படிகமாதல் அல்லது உறைதலில் தொடங்கியிருக்க வேண்டும். படிகமாதலில் தொடங்கி மனிதனாக உருமாறியுள்ளது. ஏனென்றால் இங்குதான் வெப்ப நிலை மாற்றத்தால் ஒன்றுபடுதல் ஒன்றுபடுதலில் நிறைவு நிலை அடைந்தவுடன், இரண்டுபடுதல், பின்னர் அடுக்கடுக்காக இரண்டுபடுதல், இணைதல், உருப்பெறுதல், உருமாறுதல் என்ற துலங்கலுடன் கூடிய மிகவும் அடிப்படையான இனப் பெருக்க நிகழ்வுகள் காணப் படுகின்றது. தூண்டலுக்கு துலங்கல் என்பதில் தான் உயிரின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

தூண்டலுக்கு துலங்கல் என்றால் என்னவென்று கொஞ்சம் தெளிவாக பார்ப்போம். அந்த வேதியல் வினைக்கும் கண், காது, மூக்கு, வைத்து அதை உயிராக எப்படி மாற்றிச் சொல்லி ஆச்சரியப் படவைப்பது என்றும் பார்ப்போம்..

1) ஒரு பாத்திரத்தில் பாலை ( Complex molecule in colloidal state) விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற பால் பொங்கி எழுந்து நெருப்பை அணைக்கிறது.பால் தப்பி பிழைத்து மிச்சமும் இருக்கிறது. பொங்குவதன் மர்மம் என்ன? முதலில் ஒரு காப்பு உறை (பாலாடை)தயாரிக்கிறது. அந்த உறையில் அடக்கப் பார்க்கிறது முடியவில்லை, அடக்கிய வேகத்தில் பொங்குகிறது

2) இப்பொழுது மண்ணென்னெயை (Complex molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுறவில்லை. மாறாக ஜோதியில் ஐக்கியமாகி,அதாவது தானும் நெருப்புடன் சேர்ந்து எரிந்து மறைந்து விடுகிறது.

3) இப்பொழுது பாலுக்கு பதில் தண்ணீரை (Simple Molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற நீர் கொதிக்கிறது ஆனால் பொங்கி எழுவில்லை. ஆகவே அப்பாவியாக ஆவியாய் மாறி அலைகிறது.

பாலுடன் ஒப்பிடும் பொழுது, வெப்பத்திற்கு கொதித்து எழுந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த நீர் குளிர் காலத்தில் கடலில் அமைதியாய் அஹிம்சை முறையில் மேற் பரப்பு மட்டும் பனிக் கட்டியாய் மாறி வெப்பத்தைக் கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல், கடலில் உள்ள உயிர்கள் உறையாமல் பாதுகாக்கிறது.

இதில் நான குறிப்பிட்ட சிறு பிள்ளைத் தனமான, கோப தாபமெல்லாம் நமது மாத்தி யோசித்த கற்பனை. அதற்கு உயிர் உள்ளதாக நினைத்தால் நான் பொறுப்பல்ல. மற்றபடி நிலைமாறுதல் என்பதுதான் முக்கியம். அதற்கு என்ன கதை சொன்னாலும் பொருந்தினால் சரிதான். ஒன்றை வைத்து ஒன்றை புரிந்து கொள்வது எளிது என்பதற்காக சொல்லப் பட்டது. அந்த நிலை மாற்றத்திற்கு பெயர்தான் துலங்கல். இங்கு வெப்பத்தினால் ஏற்பட்ட துலங்கல்தான்.

இதைப் போன்று ஒளி, ஒலி, நறுமணம், தொடுதல், ஆகியவற்றிற்கு வெவ்வேறு விதமாக எதிர் வினை புரியும் பொருட்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உரசினால் பற்றிக் கொள்வது, தட்டினால் வெடிப்பது, ஒளியில் கறுப்பது, இருட்டில் ஒளிர்வது, தொட்டால் சுருங்குவது, பட்டால் அரிப்பது ஆக பட்டியலுக்குள் அடக்க முடியாத எண்ணிலடங்காத சமாச்சாரங்கள் உள்ளன. இவைகளின் கலவையில் உயிர் தோன்றுவது என்பது, எடுத்துக் கொண்ட காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு ஆச்சரியமல்ல.

இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது. மேலும் உயிரிகளின் கண்களை ஒரு பேராச்சிரியமாக கற்பனை செய்து பேசுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. எதுதான் ஆச்சரியமில்லை?.( Truth is stranger than fiction) . உங்களது கற்பனைக்கு எட்டாத விஷயத்தை இயற்கை படைத்தால் அது ”அறிவு ஜீவியின்” கைவேலை என எண்ணலாமா?. அப்படி எண்ணுபவர்கள் காலத்தின் போக்கில் அவமானத்தை சந்திக்கப் போகிறார்கள்.

ஒளிபட்டவுடன் உருமாறி நின்று, கழுவிய உடன் கதைசொல்லும் செல்லுலாய்டு சுருள்களில் (Film Reel) உள்ள பொருட்கள்,
எலக்ட்ரான கற்றையின் வீச்சுக்கு தகுந்த படத்தை வரைய மின்னணுக் குழாய்களில்(CRT) தடவப் பட்ட பொருட்கள்.
காந்தவிசையின் தாக்குதலில் சுழலும் சக்கரங்கள்(Motors) எல்லாமே தூண்டலுக்கு துலங்கல்தான்.அதுவும் முக்தி நிலைக்கான எளிய முயற்சிதான்.

பல்லாயிரக்கணக்கான பருப்பொருட்கள் தூண்டலின் போது பல்வேறு விதமாக எதிர்வினை புரிகின்றன. இது போன்ற பல்வேறு தூண்டுதல்களுடன் ஒத்த பொருட்கள் சரியான முறையில் தற்செயலாக இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. பல மூலக்கூறுகள் இணைந்து ஒற்றைச் செல் உயிரிகள் உருவாகியுள்ளன.

பூமி என்ற ஆராய்ச்சி சாலையில் இயற்கை என்ற விஞ்ஞானி 1500 மில்லியன் வருடங்கள் பாடுபட்டு உருவாக்கிய விஷயத்தை கடந்த நான்கு வரிகளில் கூறிவிட்டேன். நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகளுக்கு மேல் தோன்றியிருக்கலாம்.

அவைகளில் முக்கியமானவற்றை அடுத்தபதிவில் பார்ப்போம்.


முந்தைய பதிவு

10 comments:

guna said...

good

Unknown said...

மாமஸ், மசால் தடவின மாதிரியே வளருமா? அதுக்கும் தீவனத்தில ஏதாவது கல்ந்துவிட்டால் வேலை கம்மி பாருங்க.

நாட்டாமை said...

//இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது.//

இதற்கு உங்களிடம் உள்ள விளக்கம் என்ன?

Chandru said...

Guna தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

Chandru said...

விஜி
மாப்ஸ்! அதற்கும் ஒரு வழி இருக்கு, ஒரு முட்டையை வாயில் போட்டு விழுங்கி விட்டு 2 கிலோ கோழித்தீவனம் வாங்கி அதையும் மசாலோடு ழுழுங்கிவிட்டால் சரியாகிவிடும்.முட்டை உள்ளேயே பொரித்து, அதைச்சாப்பிட்டு வளர்ந்துவிடும். இது எப்படி?

Chandru said...

நாட்டாமை
உங்கள் கேள்விக்கு எனக்குத்தெரிந்த வரை அடுத்தபதிவில் பதில் அளிக்கிறேன்

இந்துமதி.சி.பா said...

வணக்கம்,

அருமையான பதிவு. தங்களின் சென்ற சில பதிவுகள் எனக்கு புரிந்துகொள்வதற்க்குச் சற்று கடினமாக இருந்தது. இந்தப் பதிவில் அனைத்தையும் சுலபமான முறையில் அனைவருக்கும் புரியும் விதமாக எழுதியுள்ளீர்கள்.

தொடருங்கள்....

இர.கருணாகரன் said...

மிக அருமையான சிந்தனை !

தாங்களே ஆய்வு கொண்டதா ?

ஆம் என்றால் மிகப் பெரிய ஆய்வு.

எதிர்கால வழித்தோன்றல்களுக்கு முன்னோடி.

உயிரைப்பற்றிய ( மனித தோற்றம்) எனது ஆழ்மன சந்தேகத்திற்கு விளக்க சிறு விளக்கு.

நன்றி சந்த்ரு.

Chandru said...

இந்துமதி, கருணாகரன் ,தங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

உங்களது பின்னூட்டங்களில்தான் எங்களது(பதிவர்களின்) மகிழ்ச்சி இருக்கிறது.

Unknown said...

அருமையான பதிவு

top