தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3
காற்றாலைகளினால் கிடைக்கும் மின்சாரம் 6000 மெகா.வாட் . அதுவும் ஆறுமாதத்திற்குத் தான் முழுவீச்சில் செயல்படும் .அவை அணைத்தும் வணிகமுறையில் தனியாரால் நிறுவப்பட்டது. அதன் விலையும் அதிகமாக வரலாம். தமிழக அரசு அவர்களிடமும் கடன் வாங்கி முறையாகப் பணம் செலுத்தாததால் அவர்களும் நிறுத்தி வைத்துள்ளனர். இன்றைய நிலையில் அவர்களிடம் எற்பட்ட 10,000 கோடி கடன் தொல்லையினால், தமிழக அரசின் வாங்கும் அளவு, 150மெகா வாட் ஆக குறைந்து விட்டது.
![]() |
காற்றாலை மின்சாரம் |
ஆகவே இன்றைய நிலைமையில் தினமும் 50 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே வருடத்திற்கு 15,000 கோடி கடனாகி விடும். ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது.
இந்த லட்சணத்தில் தற்போதைய முதல்வர் மின்விசிறி (60 watts), கிரைண்டர் ( 450 watts), மிக்ஸி (750watts) என்று, அதற்கான மின் ஆதாரம் இல்லாமல் முட்டாள் தனமாக வழங்குகிறார். நன்றாகப் படித்த சமூக அக்கறையுள்ளவன் (என்னைப் போல் ஒருவன்) முதல்வரானால் இந்தத் தவறுகள் நடக்காது. (ஆமாம் கல்யாணம் ஆகி 30 வருஷமாச்சு ஒரு வீட்டக் கட்ட முடியலை ஆட்சியைப் பிடிக்கப் போறாராம், இது பேக்கிரவுண்ட் நாய்ஸ் கண்டுக்காதீங்க)
![]() |
கூடங்குளம். |
கூடங்குளம்:
தற்போதுள்ள நிலையில் கூடங்குளத்தின் மொத்தமுள்ள இரண்டு உலைகளிருந்து பெறப்போகும் 2000 மெகவாட் மின்சாரத்தில்,
தமிழ்நாடு .................925 மெ.வாட்
கர்நாடகம்.............. ..442
கேரளம் ............... 266
பாண்டிச்சேரி ........ ...67
கையிருப்பு........... ...300
எனப் பிரித்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது .உம்மன்சாண்டி(கேரளா) இதிலயேயும் கட்டையைக் கொடுத்து 500 மெ.வாட் கேட்கிறாராம்.
தமிழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்
எண் மின் திட்டம் மதிப்பீடு மெகா.வாட்
கோடியில்
1 வடசென்னை (நிலை 3) 4800 800
2 உடன்குடி 2 யூனிட்கள் 9083 1600
3 செய்யூர் (மத்திய அரசு) 18000 1600 (TN share)
4 உப்பூர் 9600 1600
5 உடன் குடி விரிவாக்கம் 4800 800
6 எண்ணூர்(மாற்று) 3600 650
7 தூத்துக்குடி (நிலை-4 ) 4800 800
மொத்தம் 50683 7850
கிட்டத்தட்ட 50,000 கோடி செலவில் 8000 மெகாவாட் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதிலிருந்து, தெரிவது என்னவென்றால் ஒரு மெகாவாட் தயாரிக்க சுமார் ஆறு கோடி ரூபாய் முதலீடு தேவைப் படும் எனத் தெரிகிறது . தயாரிப்புச் செலவு ,ஒரு யூனிட்டுக்கு இரண்டு ருபாயிலிருந்து மூன்று ரூபாய்தான்
.
![]() |
போர்ட்டபிள் ஜென்செட் |
ஆனால் டொமஸ்டிக் போர்ட்டபிள் ஜென்செட் 1 கிலோவாட் திறனுள்ளது, சுமார் இருபதாயிரத்துக்குதான் விற்கப் படுகிறது,ஆனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் தயாரிப்பு செலவு 30 ருபாயிலிருந்து 60 ரூபாய் . அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கல்லு மூன்று வேண்டும். டிஜி எனப்படும் டீசல் ஜெனரேட்டர்களில் தயாரிப்புச் செலவு வேண்டுமானால் குறைவாக இருக்கும்.
ஆக தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஏற்கனவே 72,000 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் அந்த முதலீடு 1,20,000 கோடியாகிவிடும். எல்லாம் திட்டமிட்ட படி நடந்தால் இன்னும் ஆறு மாதங்களில் 2000 மெகாவாட் கிடைக்கலாம். இன்னும் 5 வருடங்களில் தன்னிறைவை எட்டும் என நம்பலாம்.
இதில் கவனிக்கப் பட வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் மின் பகிர்மான இழப்பில்,கடந்த ஆண்டு மட்டும் 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது. கிட்டதட்ட மக்கள் பயன்படுத்தும் (1,634 கோடி யூனிட் மின்சாரம்) அளவிற்கு இணையான மின்சாரம் வீணாகுகிறது. இதனால் சென்ற வருடம் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை, அரசின் அறிக்கை வெளிப் படுத்தியுள்ளது. அதாவது தயாராகும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு விற்கப் படுகிறது, மூன்றில் ஒரு பங்கு பாகம் வீணாகுகிறது, மூன்றில் ஒரு பங்கு இலவசமாக வழங்கப் படுகிறது.
இதில் சுமார் இருபது லட்சம் விவசாய இணைப்புகள் உள்ளதாக அறிக்கையில் உள்ளது. அத்தனை இணைப்புகளும் 3 ஹெச் பி மோட்டார் (2000 வாட்ஸ்) என்று வைத்துக் கொள்வோம், ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஓடுவதாக கணக்கிட்டாலும் வருடம் முழுவதும் ஓடினால் கூட 720 கோடி யூனிட்டுகள் தான் செலவாகும்.
20,00,000 இணைப்புகள் X 5 மணி நேரம் ஒரு நாளைக்கு X 30 நாட்கள் X 12 மாதங்கள் X 2 யூனிட்டுகள் = 720 கோடி யூனிட்டுகள்.
ஆனால் அறிக்கையில் 1220 கோடி யூனிட்டுகள் செலவாகியுள்ளதாக கூறப் படுகிறது.கணக்கு தெரியாதவன் வீட்டில் நித்தம் சண்டை என்ற கதைதான்.ஒரு இணைப்புக்கு ஒரு மீட்டர் என்றில்லாவிட்டாலும் ஒரு ஊருக்கு ஒரு மீட்டராவது வைக்க வேண்டாமா?.
தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் :
நாம் இதையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவதன் காரணம், தமிழக மின்வெட்டால் ஷாக் அடித்தது போல் துவளும் நமது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப் பெற்றால் நல்லது நடக்கும் என்ற பேராசை தான்.
இத்தனை (8000 ஆயிரம் கோடி)ஆயிரம் கோடிகள் அனாமத்தாக போகும் போது, மின்வாரியத்திற்கும் மட்டுமான தனியான ஆராய்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏன் சில கோடிகள் செலவழிக்கக் கூடாது. ஒரு 500 கோடியில் இதற்காக, மின்வாரியத்திற்கு தேவையான உயர் நிலை ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் நிறுவி, திறமைக்கு முதலிடம் என்ற வகையில், அர்ப்பணிப்புடன் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, திறமையான பொறியாளர்களை உருவாக்கலாமே. வெளியேறும் பொறியாளர்கள் கண்டிப்பாக மூன்று வருடம் ராணுவ சேவை முடித்த பின்பே பணி அமர்த்தப் பட வேண்டும்.
புளூம்பாக்ஸ் (Bloom Box) போன்றதொரு புதிய கண்டு பிடிப்புக்களுக்கு அடிக்கல் நாட்டலாம். மின் உற்பத்திக்கும் , மின் சேமிப்பிற்கும், மின் சிக்கனத்துக்கும், ஆன புதிய கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கலாம்.
புளூம்பாக்ஸ் (Bloom Box) : http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server
செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு தேவைப் படும் ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் உல்டாவாக செய்து ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார். இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்திருக்கும் புளூம் பாக்ஸ் ஒரு அமெரிக்க வீடு அல்லது இரண்டு ஐரோப்பிய வீடு அல்லது , நான்கு ஆசிய வீட்டிற்கு மின்சக்தி அளிக்கக் கூடியதாம். ஆயிரக்கணக்கான சோலார் பேனல் வைத்து தயாரிக்க கூடிய மின்சக்தியை ஐந்தே ஐந்து புளூம் பாக்ஸ் மூலம் தயாரிப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
ஒன்றுமில்லைங்க கடற்கரையில் மித மிஞ்சி கிடக்கும் மணலைத்தான் பயன்படுத்தி கண்ணாடித் தகடு மாதிரி ஒரு சின்னத் தகடை வச்சு அதில் ஒருபக்கம் பச்சை மை மறுபக்கம் கறுப்பு மை தடவி ஏதோ மேஜிக் பன்றார். அது ஒரு லைட் எரிக்க தேவையான மின்சக்தியை கொடுக்குதாம். அந்த மாதிரி கிட்டத்தட்ட 64 அடுக்குகளை பயன்படுத்தி ஒரு வீட்டுக்கு தேவையான மின்சக்தியை தயாரிக்கலாமாம்.சொல்வதற்கு எளிதாகத்தான் இருக்கிறது. உள்ளே என்ன ரகசியமோ?. அவர் கடந்த 2010 பிப்ரவரியில், பத்து வருடமாக பாதுகாத்த ரகசியத்தை முதன் முதலாக மீடியாவில் பகிர்ந்து கொண்டார்,
ஸ்ரீதருக்கு, ஒரு தனிமனிதர் ( John Doerr) 2000 கோடி ரூபாய் கொடுத்து அவரது கண்டுபிடிப்பை பிஸினஸாக மாற்றும் போது 1,20,000 கோடி செலவழிக்கும் தமிழ் நாடு ஏன் அவரிடம் டீல் பேசக் கூடாது.
நாம் உருவாக்கும் பல்கலை கழகத்தின் மூலமாக, அமெரிக்காவில் வாழும் ஸ்ரீதருக்கு வாய்த்தது மற்றொருவருக்கு வாய்க்காதா?. அல்லது அதையும் விட சிறந்ததாக கிடைக்காதா?. ஒரு பத்தாண்டுகளில் காற்றாலை மின்சக்தி , மலைகளில் மழை நீரைச் சேமித்து அதனால் நீர் மின்சக்தி, சூரிய சக்தி யிலிருந்து மின்சக்தி, கடலலையில் இருந்து மின்சக்தி, இரசாயன மின்சக்தி, என ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கலாமே.
உற்பத்தியை விட சேமிப்பு என்பதுதான் மிகவும் முக்கியமானது. மின் திருட்டைக் குறைக்க அடியாத மாடு படியாது என்பதற்கிணங்க தண்டனையை அதிகப் படுத்தலாம்.
அரசியல்வாதிகளும், அரசும் ஆடம்பரங்களில் செலவிடும் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாம். மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களூக்கு அடிக்கடி மின் சிக்கனத்தைப் பற்றிய அறிவுரை கொடுக்க வேண்டும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
இலவசமாக எதையும் கொடுக்கக் கூடாது. அதையும் மீறிக் கொடுப்பேன் என்று முட்டாள்தனமாக கொடுத்தால், மின்சாதனங்களைக் கொடுக்க கூடாது. அதையும் மீறி படு முட்டாள்தனமாகக் கொடுத்தே தீர்வேன் என்று திமிரோடு கொடுத்தால் மின்காந்த அடுப்பு, சிறுகுழல் விளக்கு, எக்ஸாஸ்ட் ஃபேன் இவற்றைக் கொடுக்கலாம்.
மின்சாதனங்களைப் பற்றிய அறிவை பள்ளிப் பாடங்களிலிருந்து தொடங்கலாம்.
எதைஎதையோ படிக்கிறார்கள் ஆனால் வீட்டு உபயோக சாதனங்களைப் பற்றிய அறிவே இல்லாமல் இருக்கிறார்கள். வீட்டு உபயோக சாதனங்களைப் பற்றி, படிப்பு முடிவடையும் காலத்திலாவது பாடம் நடத்தலாம். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
எனது வாடிக்கையாளர் ஒரு மின்வாரிய பொறியாளர். அவரது மனைவியோ அறிவியல் பட்டதாரி, அவர் ஒரு நாள் மிக்ஸி வேலை செய்யவில்லை என கணவரிடம் சரி செய்து கொண்டுவரும்படி எடுத்துக் கொடுத்து விட்டார் அவர் எனது அலுவலகத்துக்கு (ஸ்டுடியோ) அருகில் இருக்கும் மெக்கானிக்கிடம் கொடுக்க வந்தவர் ,மெக்கானிக் இல்லை என்பதால் என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அடுத்து இரண்டு நாட்கள் எனக்கு வேலை. அதற்கடுத்து இரண்டு நாட்கள் அவர் வரவில்லை .
ஐந்தாவது நாள் இருவரும் சந்தித்தோம், "சார் வீட்டில் பெரிய கலவரமே நிகழ்ந்து விட்டது. இன்றைக்கு ஒன்று, புது மிக்ஸி வாங்கிப் போக வேண்டும் அல்லது பழைய மிக்ஸியை சரி செய்து கொண்டு செல்லவேண்டும் .மெக்கானிக் வேறு இல்லை என்ன செய்யலாம்" என்றார்.என்ன பிரச்னை என்று நாமே பார்த்து விடலாமா என்றேன் .
இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு வந்த கையும் சும்மா இருக்காது என்பார்கள், அது போல் வீட்டில் ஏதாவது ரிப்பேர் என்றால் எனக்கு கழட்டிப் பார்த்து, காரணத்தை அறிந்து கொண்டு, மூட்டை கட்டி ஓரமாக வைக்கா விட்டால் எனக்கு தூக்கம் வராது. அதிலும் வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு அவல் கிடைச்ச மாதிரி மிக்ஸி கிடைத்தால் விடுவேனா?.
மிக்ஸியை எடுத்து மின் இணைப்பை கொடுத்தேன். ஆகா டெட் ஃபால்ட்!!!.. உடனே மிக்ஸியை திருப்பி அடியில் பார்த்தேன். பார்த்தவுடன் புரிந்தது,. ஓவர்லோட் பட்டனை ரீசெட் செய்துவிட்டு மீண்டும் இணப்புக் கொடுத்து ஆன் செய்த உடன் வேலை செய்தது. என்ன சார் உங்கள் கை பட்டவுடன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்றார் அசடு வழிய!!!
![]() |
1.ஓவர் லோட் புரடக்சன் ஸ்விட்ச் அல்லது ரீசெட் ஸ்விட்ச் 2.சாதாரண நிலை,3.ஒவர் லோட் நிலைமை |
மிக்ஸி, ஒரு அதிக கரண்ட் இழுக்கும் குறுகிய கால பயன்பாட்டிற்கு உண்டான சாதனம். அது அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு மேல் ஓட்டக்கூடாது. ஆகவே மிக்ஸியின் அடியில் ஓவர்லோட் புரடக்சன் ஸ்விட்ச் ஒன்று இருக்கும். மிக்ஸியின் லோடு அதிகமாகி அதன் காயில் அதிக மின்சாரத்தை இழுத்தால் காயில் வெப்பமாகி கருகி விடாமல் தடுக்க ஒரு ஸ்விட்சு உள்ளது. இதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள், அறிந்து ஞாபகத்தில் வைத்து உபயோகித்து இருப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. அதை அறியாமல் காயில் போச்சு என்று மிக்ஸியை மாற்றிய படிப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ட்யூப் லைட்:
![]() |
ட்யூப் லைட் |
"நண்பன்" பாணியில் எனக்கு தெரிந்த சில பழைய, புதிய பொறியியல் பட்டதாரிகளை ட்யுப் லைட் எவ்வாறு வேலை செய்கிறது என்று கலாய்த்த போது மேலோட்டமாகச் சொல்லி சொதப்பினார்கள். அதற்கான வயரிங் எப்படி என்றவுடன் பலர் காணாமல் போய்விட்டார்கள்.
![]() |
கலாய்க்கிறது யார்? |
உண்மையில் ட்யுப் லைட் பல உன்னதமான டெக்னாலஜிகளின் கலவை என்றுதான் கூறவேண்டும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப் பட்டது இன்றும் நீக்கமற எல்லா வீடுகளிலும் பயன் பட்டுக் கொண்டிருப்பது, விரைவில் விடுதலை பெறப் போகிறது. அதைப் பற்றியும் அறிந்து கொள்வோம். ஏனென்றால் தமிழ்நாட்டில் நிறையப் பேர் அதைத்தான் சாப்பிடுறானுகளாம்.
ஏதோ சுருக்கமாக எனக்குத் தெரிந்த வகையில் சொல்லுகிறேன். நீங்கள் டெவலப் பண்ணிக் கொள்ளுங்கள்.
படம் 1
இதை ஆன் செய்த உடன் சோக் (1) வழியாக மின்சாரம் சென்று பின் முதல் டங்க்ஸ்டன் சுருள் (2) வழியே சென்று, ஸ்டார்ட்ர் (3) வழியாகச் சென்று இரண்டாவது டங்க்ஸ்டன் சுருள் (4) வழியே சென்று, மின் சுற்று பூர்த்தியாகிறது. இதிலுள்ள ஸ்டார்டரும் சாதாரணமானதல்ல அதுவும் ஒரு சிறந்த கண்டு பிடிப்புதான். இதன் விலையோ பத்து ரூபாய்தான், இதுக்குள்ளேயும் பெரிய டெக்னாலஜி இருக்குது, அதற்கே ஒருதனி பதிவு போடனும். ஆதலால் காலம் கருதி, ஆரம்பித்த மேட்டரை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். மின் சுற்று பூர்த்தி அடையும் போது ஸ்டார்டர் தன்னுடைய இயல்பில் ஒரு செகண்டுக்கு சிலமுறை தொடர்பை துண்டிக்கிறது.
படம்2
இந்த மின் தொடர்பு துண்டிப்பபானது (Pulses), சோக்கில் (ஆட்டோ ட்ரான்ஸ்பார்மர்) தூண்டப்பட்டு ஒரு அதிக மின் அழுத்த ஓல்ட்டை உருவாக்குகிறது. அதிக மின்அழுத்தம் ஏற்பட்டு விட்டதால், ட்யூபில் உள்ள குறைந்த அழுத்தமுள்ள வாயு, மின்னூட்டம் பெற்று ஒரு கடத்தியாக செயல்படுகிறது. அந்தக் கடத்தியின் மூலம் வெப்பமடைந்த முதல் டங்க்ஸ்டன் சுருள் (2) லிருந்து வெப்பமடைந்த இரண்டாவது டங்க்ஸ்டன் சுருளு( 4)க்கு நேரடியாக குறுக்கு வழியில் மின்சாரம் தாவி, ஸ்டார்டரை மின்சுற்றிலிருந்து ஓரங்கட்டி, ஏற்றிவிட்ட ஏணியை மறந்த கதையாக விலக்கி விடுகிறது.
மின்னூட்டம் பெற்ற வாயுவின் மூலம் மின்சக்தியின் ஏற்றம், மற்றும் இறக்கம் நடைபெறும் போது வெளியிடப் படும் புற ஊதாக் கதிர்கள், ட்யூபின் உட்புறத்தில் தடவப் பட்ட இரசாயண பூச்சின் மூலம் கண்ணுக்கு புலப்படும் கதிர் வீச்சாக மாற்றி ஒளிரவைக்கிறது.
ட்யுப் லைட். என்னவோ 40வாட்ஸ் என குறிப்பிட பட்டிருக்கும். ஆனால் அதனுடைய சோக் எப்படியும் 10 லிருந்து 20 வாட்ஸ் எடுத்துக் கொள்ளும் எனவே ட்யுப் லைட்டை மொத்தமாக 60 வாட்ஸ் எனக் கணக்கிட்டு உபயோகியுங்கள்.
எலக்ட்ரானிக் சோக்:
![]() |
சோக், ஸ்டார்டர் |
இதிலுள்ள சோக், ஸ்டார்டர் இவைகளை இணைத்து அவைகளின் வேலையை ஒரு எளிய எலக்ட்ரானிக் முறையில் செய்யவைத்து எலக்ட்ரானிக் சோக் என்று விற்கிறார்கள்.
![]() |
எலக்ட்ரானிக் சோக் |
இதன் உபயோகத்தால் சிறிய அளவிலான, குறைந்த மின்செலவில் நிறைய ஒளிதரக் கூடிய CFL ட்யூப்கள் 10 வாட்டிலிருந்து கிடைக்கிறது.
![]() |
CFL ட்யூப்கள் |
.
ஒரு ட்யுப் லைட் மாட்டுவதற்கு 40,000 ரூபாயாம்!!
இதென்ன கொடுமை முருகேசா? (சரவணனுக்கு ஈக்குவலண்ட்). வீட்டில் எது ரிப்பேர் ஆனாலும் தானே பார்த்துக் கொள்வது என்ற மெண்டாலிட்டி சிலருக்கு இருக்கும். நானெல்லாம் இப்ப திருந்திட்டேங்க. இதைப் போய் "நண்பன்" பாணி என்று சொல்லி நக்கலடிச்சீங்க ,பிச்சுப் புடுவேன். இப்படித்தான் ஒருத்தர் ட்யூப் லைட்டை தானே மாற்றுகிறேன் பேர் வழி என்று ஸ்டூலுக்கு கல்லு அண்டைக் கொடுத்து ஏறி மாட்டி விட்டு திரும்பும் போது தடுமாறி கீழே விழுந்து ஆஸ்பத்திரிக்கு போய் காலை 40,000 ரூபாய் கொடுத்து சரி பண்ணிட்டு வந்தாராம்.
மின்காந்த அடுப்பு: Indution Stove, Indution cooktop
என்னைக் கவர்ந்த மின்சாதனங்களில் இதுவும் ஒன்று. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு.ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய சாதனம்.
இதனுடைய சிறப்பையும், பெருமையையும் எழுத தனியாக ஒரு பதிவிட வேண்டும். அப்படியா? . அப்ப அடுத்த பதிவு இன்டெக்சன் ஸ்டவ் தான்.
14 comments:
எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் விளக்கியமைக்கு நன்றி.இப்பணி தொடர வாழ்த்துக்கள்!
எளிமையான விளக்கத்துடன் கூடிய அலசல். புள்ளிவிபரங்களையும் சேர்த்துக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
very nice
இண்டக்சன் ஸ்டவூ நல்ல கண்டுபிடிப்பாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில்...
அது காந்தத்தை பயன்படுத்துது.. காந்தத்தால் செறிவூட்டப்பட்ட உணவு உடல் நலத்துக்கு கேடுன்னு கேள்விப்பட்டேன்... ?
அப்புரம் அந்த ஆயுர் பாவம் செல்லுங்க தல...
நன்றி..
வினொத்
தல ..
நீங்க எனர்ஜி செவர் லின்க் வெலை செய்யல...
.
பயனுள்ள அருமையான பதிவு
அனைவருக்கும் புரியும்படி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
suppudu அவர்களுக்கு, தங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. பாலோயர் ஆகிவிடேன்.
Ramani
அவர்களுக்கு தங்களது வருகைக்கும், பதிவிற்கும், வாழ்த்துக்கும் நன்றி. எனக்கு மிகவும் பிடித்த வரிகள். எந்தப் பகாசுரப்
பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கென ஒரு தீர்வு உண்டு.
Vinoth Kumar
அவர்களுக்கு தங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. இப்பொழுது ஒரு URL கொடுத்துள்ளேன். ஒரு வீடியோவும் இணைத்துள்ளேன். பாருங்கள்.ஆயுள் பாவத்திற்கு விரிவான பதில் தேவை என்பதால் பின்னர் கூறுகிறேன்
வே நடன சபாபதி அவர்களுக்கு தங்களது வருகைக்கும் பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி. தங்களது "பாஸ்கள் பலவிதம் " படித்தேன், அருமையான நடை.
வணக்கம் ஜி...
முழுமையான தகவல் கொடுத்தற்கு நன்றி...
நன்றி
Now people are encouraged to use LED lamps with Solar PV to meet Power cuts. These type of lamps are now available in all TN post offices -http://articles.timesofindia.indiatimes.com/2012-03-02/chennai/31117422_1_solar-lamps-post-offices-solar-panels
Gnana அவர்களுக்கு தங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
Post a Comment