Previous
ஜோதிடம் இந்தியாவிலிருந்துதான் பரவியது என்கிற உண்மையை வரலாறு மறைத்தாலும் அதற்கு இன்றளவும் சாட்சியாக நின்று உலகுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி இந்தியனுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான் சதுரங்கம்.

செஸ் விளையாடுவதற்கு எவ்வளவு அறிவு தேவையோ அதே அளவுக்கு உண்மையாகவே ஜோதிடம் சொல்வதற்கும் அறிவு தேவை. ஜோதிடத்தில் உள்ள கணிதம் அவ்வளவு சிக்கலானது. அது மட்டும் இல்லாமல் ஒருவருக்குப் பலனைச் சொல்ல கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு விஷயங்களை,

கணக்குப் போட்டு,

மதிப்பிட்டு,

பிரதியிட்டு

சொல்ல வேண்டும்.

ஆகவே ஜோதிடத்தை கண்டுபிடித்தவன் தான் சதுரங்க விளையாட்டையும் கண்டுபிடித்திருக்க முடியும். அதனால்தான் கணித வல்லுனர்கள் பலர் ஜோதிடத்தில் வித்தகர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் ராமானுஜன், பாஸ்கரா, ஆரியபட்டா ஆகியோர் ஆவார்கள்.

முன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஐந்து வயதாகும் போதுதான் ஜாதகத்தை கொடுப்பார்கள். ஏனென்றால் அதில் அவ்வளவு கணிதம் இருக்கிறது. இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டதால் உடனே அடித்துக் கொடுக்க முடிகிறது.

ஒருவர் பிறக்கும் போது இருக்கும் அவருடைய லக்கனம், இராசி, ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு ராசிகளுக்கான (பொறுப்புகள்) காரகங்கள், அதற்கான காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட (ஸ்தான ), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி, அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும், மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு, உபகோள்கள், பஞ்சபட்சி, பஞ்ச பட்சியின் நிலைகள் இவற்றையும் பிரதியிட்டு கூட்டிக் கழித்து பிரச்சன்ன, இட, கால, வர்த்தமானம் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

ஜோதிடத்தில் இவ்வளவு விஷயங்கள் (Variables) இருக்கும் போது ராசிபலன் பார்த்தேன், பலிக்கவில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அடிமுட்டாள்தனம். உலகத்தில் உள்ள சுமார் 700 கோடி பேருக்கு அவன் வாழ்க்கையில் உள்ள விஷயங்களில் 12 பிரிவுக்குள் பலன் சொல்ல வேண்டும் என்றால் அது எளிமையாகவும் சாதாரணமானதாகவும் மேம்போக்காகத்தான் இருக்கும் என்பது அடிமுட்டாளுக்கு கூட புரியும். ஆனாலும் ஏன் பார்க்கிறான் என்று ”பகுத்தறிவுகள்” கேட்கலாம். அதில் விஷய ஞானம் உள்ளவனுக்குத் தான் அதை எவ்வளவு தூரம், எப்பொழுது, எப்படி நம்ப வேண்டும்  என்று தெரியும் அதனால் அவன் பார்க்கிறான்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜோதிடத்தையும் சதுரங்கத்தையும் எவ்வாறு பொருத்தப் போகிறீர்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழும். ஆகவே கேள்வியும் பதிலாகவும் இருந்தால் எனக்கும் ஆர்வமாக இருக்கும், ஆனால் இதில் முக்கியமான விஷயம் உங்களுக்கு சதுரங்கமும் ஜோதிடமும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்களா அல்லது நானே கேட்டு கொள்ளட்டுமா?


என்னது? நானே கேக்கனுமா? சரி சரி .....
ஸ்டார்ட் த மியூசிக்...........

கேள்வி:
ஏன் கறுப்பு வெள்ளை காய்கள் மற்றும் கட்டங்கள்?. ஜோதிடத்திற்கும் கறுப்பு வெள்ளைக்கும் என்ன சம்பந்தம்.?




பதில்:
ஜாதகத்தை இப்பொழுதெல்லாம் திருமணத்தின் போதுதான் தூசி தட்டி எடுக்கிறார்கள். திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது ஜோதிடர்களுக்கு சவாலான விஷயம். ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டே ஜோதிடர்கள் லக்கனம், (சூரியஇராசி) இராசி(சந்திரராசி), ஆகிய இவற்றில் எது அவர்களுக்கு சரியாகப் பொருந்துகிறது அன்று அறிந்து அதற்கு தக்கவாறு ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு காரகங்கள், அதற்கான பன்னிரண்டு காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட(ஸ்தான), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும் மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு போன்றவற்றை கணக்கிட திணறுகிறார்கள்.

இவ்வளவு விஷயங்கள் இருக்கும் போது, இரண்டு ஜாதகத்தை சம்பந்தப் படுத்தி, மேற்கூறிய விஷயங்களையும் அதற்கும் அப்பால், திருமணப் பொருத்தத்திற்கு தேவையான தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி, யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடி, விருட்சம், கோத்திரம், பஞ்சபூத பொருத்தம் ஆகிய இவற்றோடு கிரகப் பொருத்தம், திசாசந்தி, மற்றும் செவ்வாய்தோஷம், புத்திரதோஷம், களஸ்திரதோஷம், லக்கினதோஷம், சந்திரதோஷம், சுக்கிரதோஷம், ராகுதோஷம் ஆகியவற்றை பார்ப்பது என்பது திருமன பொருத்த கணிதத்தை உண்மையிலே மிகவும் கடினமான வேலையாக மாற்றி விடுகிறது.

திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஆண், பெண் ஆகியோரின் ஜாதகக் கட்டங்களை வைத்து ஆராயும் பொழுது ஒரு புத்திசாலி ஜோதிடரின் மூளையில் தோன்றியதுதான் இந்த சதுரங்க விளையாட்டு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே வெள்ளை, கறுப்புக் காய்களை வைத்து பக்கம் பிரித்து சமமான மதிப்பீடுகள் கிடைக்கும் பொழுதே இணைக்கிறார்கள். பதினான்கு விதமான பொருத்தங்களில் முக்கியமான சில பொருத்தங்களை வைத்து,அதாவது குறைந்த பட்சம் ஆறு பொருத்தம் வரைக்கும் அவசியம் என்றுணர்ந்து அதன் படி பார்க்கிறார்கள்.

அதுவும் அல்லாமல் இராசிகளை வரிசையாக எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து ஆண் இராசி, பெண் இராசி என பிரித்து வைத்துள்ளனர். உதாரணமாக முதலில் வரும் மேஷம் ஆண் ராசியாகவும் அதற்கடுத்த ரிஷபம் பெண் ராசியாகவும் வைத்துள்ளனர். அதனால்தான் முறையே ஆண்ராசிக்கு வெள்ளையும், பெண்ராசிக்கு கறுப்பும் என மாறி மாறி வைக்கப்பட்டுள்ளது. அது போல் ஆணின் ஜாதக்கத்தில் உள்ள கிரகங்கங்களுக்கு ஈடாக வெள்ளைக் காயும் பெண்னின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கு ஈடாக கறுப்புக்காயும் என வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி:
ஏன் எட்டு X எட்டு கட்டங்கள்?
பதில்:
ஒருகாலத்தில் 12 கட்டங்களில் விளையாடி இருக்கலாமோ?. திருமணத்திற்கு இராசிக் கட்டங்களைப் பார்க்கும் பொழுது லக்கனத்தில் இருந்து 2,4,5,6,7,8,9,12 ஆகிய 8 கட்டங்களுக்குத் தான் (ஸ்தானங்களுக்கு) முக்கியத்துவம் கொடுத்து பார்க்கின்றனர். ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்வது ஒரு கலை என்றால் அதை சரியாக கட்டங்களின் வரிசைப் படி பலனைக் கேட்டறிவதும் ஒரு கலைதான்.
இப்பொழுது 12 கட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் உள்ள பொறுப்புகள் (காரகங்கள்) என்னவென்று பார்ப்போம். லக்கனத்தை ஒன்றாக வைத்துக் கொண்டு கடிகாரவலமாக(Clockwise) எண்ணவும்.
1. பொதுவான வாழ்க்கை, உடல், ஆகியவை பற்றியது.
2. வாக்கு,குடும்பம்,சொத்து, தனம்,கண்
3. பின்சகோதரம், அறிவுத்திறன்,
4. தாய், வீடு, வாகனம், சுகம், சயன சுகம்.
5. குழந்தை பாக்கியம்
6. எதிரிகள், நோய்கள்
7. மனைவி,கணவன்,போகம்,மரணம்
8. ஆயுள், துக்கம், மர்ம ஸ்தானம்
9. தந்தை, குரு, பூர்வ ஜென்மம், குழந்தை
10. கர்மம், ஜீவனம், வியாபாரம்.
11. லாபம், வித்தை, முன் சகோதரம்
12. சயனம், சுகபோகம்
மேலே கூறப்பட்டுள்ள இராசிகளின் பொறுப்புகளில் திருமண வாழ்விற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் இராசிகளை(1,3,10,11) அல்லது கட்டங்களை தவிர்த்து விட்டால் மீதி இருப்பது எட்டு கட்டங்கள் தான் என்பது புலப்படும். ஆகவே தான் எட்டு கட்டங்களை வைத்துள்ளனரோ என்பது புரியும். உதாரணத்திற்கு சில மாதிரிகளை ஆராய்வோம்.

1) பொதுவாக மேலோட்டமாகப் பார்க்கும் போது பெண் ஜாதகத்தில் முறையே 6, 7, 8 ஆம் இடங்களில் எந்த கிரகங்களும் இல்லாமல், சுத்தமாக இருந்தால் சுத்த ஜாதகம் எனப்படும். அதாவது அந்த பெண் நல்ல பெண்ணாகவும் கணவனுக்கு நீண்ட ஆயுளைத் தருபவளாகவும், சந்தோஷத்தை கொடுப்பவளாகவும் கருதுவார்கள். இந்த மாதிரி அமைப்புள்ள ஜாதகிக்கு பொருத்தமே பார்க்க வேண்டியதில்லை என்பார்கள்.

இதே விஷயத்தை சதுரங்கத்தில் பார்ப்போம்.
கருப்புக்காயின் பக்கம் (அதாவது பெண்ணின் ஜாதகத்தில்) இருந்து பார்க்கும் போது போர்டில் 4,6,7,8 ஆகிய இடங்களில் முக்கியமான கருப்புக்காய்கள் இருந்தால் கருப்பின் ஆட்டம் தாக்குதல் ஆட்டமாக இருக்கும். அந்த ஆட்டத்தில் வெள்ளைக்காயின் (ஆண்) கேம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஆதலால்தான் அந்த கட்டங்களில் கருப்புக்காய்கள் இருக்ககூடாது என்பது பொதுவான சதுரங்க விதி. அதிலும் கருப்பின் சிப்பாய் (குளிகன்) (Pawn) எட்டாம் இடத்தில் இருந்தாலும் கெடுதல்தான்.

அது சரி பெண் ஜெயித்தால் கெடுதல் என்பது எனது கருத்தாக கொண்டு பெண்ணீய வாதிகள் சண்டைக்கு வராதீர்கள். ஐயாயிர வருடத்திற்கு முந்தைய கருது கோள். குடும்பத்தின் தலைமை ஆணுக்குத்தான் என்ற கால கட்டத்தில் உருவான விதிகள்.இங்கே ஆய்வது சதுரங்கமும் ஜோதிடமும் என்பது பற்றித்தான் என நினைவில் கொள்ளவும்.

முக்கியமாக ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்பார்கள். அதில் கெட்டவன்(எதிரி) மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு உபகிரகம் இருந்தாலும், உட்கார்ந்தாலும் ஆட்டம்(ஆயுள்) முடிந்தது. அதற்காகத்தான் எட்டு கட்டங்கள். செஸ் ஆட்டத்தில் எதிரியின் சிப்பாய் (பான்) எட்டாம் கட்டத்திற்கு வந்து விட்டால் அனேகமாக ஆட்டம் முடிந்தது அல்லது எதிரிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பார்கள். ஒவ்வொரு கிரகமும் இந்த எட்டு கட்டங்களில் இருக்கும் இடத்தைப் பொறுத்து பலன்கள் தரும்.

”அகப்பட்டவனுக்கு(checkmate) அட்டமத்தில் குரு” என்பார்கள். அதாவது ஒருவன் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு இருந்தால், தப்பு செய்தால் மாட்டிக் கொள்வான் என்பது அர்த்தமாகும்.

”எட்டு நட்டம்” (தோல்வி) என்பார்கள். தோல்விகளை சந்திக்கும் போது ”அட்டமத்தில் சனி” என்பார்கள். மேலும் எட்டைப் பற்றி அறிய சொடுக்குங்கள்.

http://chandroosblog.blogspot.in/2011/01/4.html


கொசுறு: செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள்? என்ற கேள்விக்கு 64 சதுரங்கள் என்று சொல்லி மாட்டிக் கொள்ளாதீர்கள்.உண்மையிலே கீழ்க் கண்டவாறு தான் உள்ளது.
1, 8x8 square
4, 7x7 squares
9, 6x6 squares
16, 5x5 squares
25, 4x4 squares
36, 3x3 squares
49, 2x2 squares
64, 1x1 squares என்று மொத்தம் 204. சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏண்டா நேற்று செஸ்ஸில் தோற்றாய் ?
நான் படிச்சிட்டு போனதோ ”பாபி பிஷரை எப்படி வெல்வது” என்ற புத்தகம் ஆனால் அங்கே வந்தது வேற ஆள்.

மீதிக் கேள்விகளையும், பதில்களையும் அடுத்த பதிவில் கேட்போம், படிப்போம். தொடரும்.....................................
இரா.சந்திர சேகர், பழனி

அடுத்த பாகம்5

3 comments:

MANI said...

சதுரங்கத்தையும் ஜோதிடத்தையும் ஓப்பீடு செய்து எழுதும் முயற்சி மிக அருமை.

சிறு திருத்தம்.
3-மிடம் ஜாதகருக்கு பின்பு பிறந்த இளைய சகோதரம் (தம்பி) என்றும் 11-மிடம் ஜாதகருக்கு முன்பிறந்த மூத்த சகோதரம் (அண்ணன்) என்றும் ஜோதிடம் கூறுகிறது.

தங்கள் பதிவில் மாற்றிவிடவும்.

தங்களிடம் இருந்து ஜோதிடம் குறித்தும், சதுரங்கம் குறித்தும் இன்னும் அதிகமான அரிய தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான பதிவு ! நன்றி சார் !

Chandru said...

மணி, தனபாலன் ஆகியோருக்கு வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

மணி, தாங்கள் சுட்டிய தவறு திருத்தப்பட்டது .

top