Previous
கேள்வி:
ஆண்மகனின் ஜாதகத்திற்கும் அதிலுள்ள கிரகங்களுக்கும், செஸ்ஸில் வெள்ளைப்பக்கம் மற்றும் வெள்ளைக்காய்கள் என்றும் கூறியிருந்தீர்கள், ஓரளவிற்கு நம்பும் படியாக இருக்கிறது. ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் தானே உள்ளது. ஆனால் செஸ்ஸில் ஒரு பக்கத்திற்கு 16 வெள்ளைக்காய்கள் மட்டும் உள்ளன. இவைகள் கிரகத்தின் எண்ணிக்கைக்கும் அல்லது நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கும் எந்த வகையிலும் ஒத்து வரவில்லையே? ஆகவே இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது தெரியவில்லையா?
பதில்:
ஆணுக்கு வெள்ளைக்காய்தான் என்று நம்பித்தான் ஆகவேண்டும் ஏனென்றால் எப்பொழுதும் கேம் ஆரம்பிக்கும் போது வெள்ளைக்காய் தான் முதல் மூவ் செய்யவேண்டும். இதிலிருந்து தெரியவில்லையா, இது ஒரு ஆணுக்கு முக்கியத்துவம் தரும் பழங்கால விளையாட்டு என்று.

நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். கிரகங்கள் வேறு, நட்சத்திரங்கள் வேறு. கிரகங்களுக்கு இயக்கம் உண்டு, ஆனால், கிரகங்களைப் பொறுத்தவரை நட்சத்திரங்களுக்கு இயக்கம் கிடையாது. ஜோதிடத்தை பொறுத்தவரை நட்சத்திரங்கள் வெறும் திசைக் கற்கள்தான். அல்லது வெறும் திசைகாட்டிகள்தான். அவைகள் திசை சொல்வதற்கு மட்டும்தான் பயன் படுத்தப் படுகிறது. இது தெரியாமல் சில அறிவிலிகள் நட்சத்திரங்கள் எப்படி மனிதன் வாழ்வை பாதிக்கும் என்று நக்கல் நையாண்டியுடன் கேள்வி கேட்கும் போது அந்த அரைவேக்காடுகளின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கத்தான் வேண்டியதிருக்கிறது.

நாம் பூமியில் திசைகளை எட்டாகப் பிரித்திருக்கிறோம். வானத்தில் சூரியனை ஒரு மாதத்திற்கு ஒரு திசையில் இருப்பதாக கொண்டு 12 திசைகள் வைத்துள்ளனர். அதன் பெயர்தான் ராசி. ராசி என்பது வானத்து திசைகளின்(12) எளிமையான வடிவம். அதை விட சற்று நுட்பமாக திசை அறிய உதவுவது நட்சத்திரம்.(27) அதை விட நுட்பமானது பாதம் (108) எனப்படும்.

நட்சத்திரங்களை விட எளிமையான ராசி தான், செஸ்ஸில் கட்டங்களாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என ஏற்கனவே பார்த்தோம்.

டிகிரி, பாதம், நட்சத்திரம், ராசி, மாதம், சூரிய அயணம், ஆகியவற்றை விளக்கும் ஒரு அற்புதமான படம். கீழே கொடுத்துள்ளேன். போடோஷாப் பயன்படுத்தி வரைந்த சித்திரம். இதை முழுமையாக புரிந்து கொண்டால் ஜோதிடம் எளிமையாகிவிடும். பூமியை மையமாகக் கொண்டு மற்ற கிரகங்களின் திசைகளான டிகிரி, இராசி, நட்சத்திரம் ஆகியவற்றை பூமியிலிருந்து வரையப் படும் ஒரு நேர் கோட்டால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். படத்தை அவசியம் கிளிக் செய்து பாருங்கள்.
படம்:1

டிகிரி, பாதம்,  நட்சத்திரம், இராசி, அயணம்

காய்கள் பதினாறாக இருந்தாலும், காய்களின் வகைகள் என்று பார்க்கும் போது ராஜா, ராணி, மதகுரு, குதிரை, யானை, சிப்பாய் என ஆறு வகைகள்தான் உள்ளது. இவற்றை முறையே சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், சனி, உபகிரகங்கள் என இந்த ஆறு வகைகளுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

கேள்வி:
உங்கள் கருத்துக்கு சௌகரியமாக, உங்கள் வாதத்திற்கு ஆதரவாக புதன், வியாழன், ராகு கேது ஆகியவற்றை விட்டு விட்டீர்களே ஏன்?. அதுவுமில்லாமல் ராஜா, ராணியைத் தவிர மற்ற காய்கள் இரண்டிரண்டாக உள்ளதே அதற்கான விளக்கமும், சிப்பாய்களுக்கான விளக்கமும் முழுமையாக இல்லை. ஜோதிடத்தில் கண்டிப்பாக இதற்கு விளக்கம் இருக்காது.

பதில்:
ராகு கேது என்பவைகள் நிழல் கிரகங்கள் ஆதலால் அவைகளுக்கு உருவமே இல்லை. உருவம் இல்லாதவற்றை எப்படி விளையாட்டில் சேர்க்கலாம். ஆகவே அவற்றை மறந்து விடுவோம்.அவை பற்றி மேலும் விவரம் அறிய இதை சொடுக்கி படியுங்கள்.
சுட்டி
http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html


புதன் கிரகத்தை சேர்க்காமல் இருப்பதற்கு அதன் இருப்பிடம்தான் காரணம். பூமியைப் பொறுத்தவரை (Relative to Earth) சூரியனை சுற்றிக் கொண்டே, சூரியனுடன் சேர்ந்து பூமியைச் (Relatively) சுற்றும் கிரகங்கள்தான் புதனும் சுக்கிரனும். கீழே உள்ள படத்தில் விளக்கம் உள்ளது.
படம்.2


பூமியைப் பொறுத்து ஐந்து வருடசுழற்சியில் சூரியன்,புதன் மற்றும் சுக்கிரனின் பாதை கீழ்க் கண்ட படத்தில் இருப்பது போல்தான் இருக்கும்.நடுவில் பூமியும் மஞ்சள் நிறத்தில் சூரியனும், நீலவண்ணத்தில் புதனும் ரோஸ் நிறத்தில் சுக்கிரனும் காட்டப்பட்டுள்ளது.
படம்.3


புதன் ,சுக்கிரன், சூரியனின் சுழற்சி
இதில் சுக்கிரன் பூமிக்கு மிகவும் அருகில் வரும் நிலை நன்றாகத் தெரிகிறது பாருங்கள். (உடனே அதில் பிள்ளையார் தெரிகிறார் என்றெல்லாம் பூ சுற்றக் கூடாது.) ஆதலால் அதை விட்டு விட முடியாது. மேலும் நிலவை அடுத்து பூமிக்கு அருகில் வரும் மிகப் பெரிய வான் பொருள் சுக்கிரன்தான். ஆகவே சந்திரனுக்கு அடுத்த இடம் சுக்கிரனுக்குத்தான் அதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. அசுரர்களின் குருவாகக் கருதப் படும் சுக்கிரச்சாரியார் (மதகுரு) இல்லாத யுத்தமா?.

இந்த முக்கியத்துவம் ஜோதிடத்தில் தெளிவாக உள்ளது. களஸ்திர காரகனான சுக்கிரனை விட்டுவிட்டு ஜாதகமோ பொருத்தமோ பார்க்கமுடியாது என்பது ஜோதிடத்தின் பால பாடம். வியாழனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் "அவன் இதுக்கு சரிப்பட மாட்டான்" என்பதுதான். திருமணத்தைப் பொறுத்தவரை வியாழனின் பார்வைதான் தேவை. அவன் யுத்தத்திற்கு லாயக்கு  படமாட்டான். "கெட்டவர்கள்"  தான் யுத்தத்திற்கு லாயக்கு. "இவர் ரொம்ப நல்லவர்" லிஸ்டில் இருக்கிறார். ஆகவே திருமண பொருத்தமாகிய சதுரங்கத்தில் அவருக்கு வேலை இல்லை.

நடு இரவில் வானத்தில் ஏன் சூரியனை பார்க்கமுடியாதோ அதே காரணம்தான் புதன் மற்றும் சுக்கிரனை எந்தக் காலத்திலும் நடு இரவில் வானத்தில் பார்க்கவே முடியாது.சுக்கிரன் சூரியனுடன் 47 டிகிரி அளவில் இணைந்தே காணப்படும். அவை இரண்டும் சூரியனுடன் இருப்பதால் ஒன்று கீழ்வானத்தில் விடியலிலும், மற்ற சமயங்களில் மேற்கில் அந்தியிலும் தான் காட்சி அளிக்கும். இன்னொரு விஷயம் புதன் அடிக்கடி அஸ்தங்கத்தில் சிக்கி விடுவதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.சூரியனுடன் 27 டிகிரி அருகில் இருப்பதால் அடிக்கடி அஸ்தங்கத்தில் சிக்கி விடுகிறார். அல்லது ஒரு வேளை பிற்காலத்தில் விளையாட்டில் இல்லாமல் போயிருக்கலாம். (12 கட்டங்களை 8 கட்டங்களாக மாற்றியதால்). மேலும் புதன் தான் இருக்கும் இடம் அல்லது சேர்ந்திருக்கும் கிரகத்தின் பலனைத்தான் தரும் என்பார்கள். சுயபுத்தி இல்லாதவர். அதுவும் ஒரு காரணம்தான்.

நான் அடிக்கடி "பூமியைப் பொறுத்து" என்று சொல்வதை சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பூமியைப் பொறுத்து கணக்கிடுவதும் வரைவதும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்பதால் தான் அக்காலத்திலிருந்து ஜோதிடர்கள் பூமியைப் மையமாக வைத்து கணக்கிடுகிறார்கள். (நாம் ராக்கெட் விடும் போது வேண்டுமென்றால் சூரியனைப் பொறுத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்).

பூமியை மையமாக கொண்ட ஒரு படம் தருகிறேன் பாருங்கள் அதில் கடந்த மார்ச் (2012) மாதம் 8ஆம் தேதியன்று கிரகங்கள் உள்ள நிலையை குறிப்பிட்டுள்ளேன். அதில் பூமியில் காலை பத்துமணி ஆகும் இடத்தை அம்புக்குறியால் குறிப்பிட்டுள்ளேன். மாலை 6 மணிக்கான இடத்தில் பூமியில் இருந்து பார்த்தால் 5 கிரகங்கையும் காணமுடியும் என்பது தெரிகிறது. அதில் செவ்வாய், சந்திரன் (பௌர்ணமி) உச்சியிலும் அந்தி வானத்தில் புதன், சுக்கிரன், வியாழன் தெரிவதைக் காணலாம். கீழ் வானத்தில் சனியையும் பார்க்கலாம்.
 படத்தை கிளிக் செய்து பாருங்கள்.
படம் 408-03-2012 ல் கிரகங்களின் நிலை

ஜோதிடத்தில் ”ஆட்சி” (Ruling ) என்றொரு சொல் பயன் படுத்தப்படுகிறது. செஸ்ஸிலும் ஆட்சிக்காகத்தான் யுத்தம் நடக்கிறது என்பதும் குறித்துக் கொள்ளத்தக்கது. ஓவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி வீடு (ஸ்தானம்) என்று இராசிகள் பிரித்தளிக்கப் படுகிறது. கீழே அதன் விளக்கப் படம் உள்ளது.
படம் 5
 ஜோதிடத்தில் ஆட்சி வீடுகள் வழங்கப் பட்ட விதம்.

இந்தப்படத்தில் பூமியை மையமாக வைத்துதான் வீடு அளிக்கப் படுகிறது. கடக ராசிக்கும் சிம்ம ராசிக்கும் இடையில் பூமி இருப்பதாக அனுமானம் செய்து கொள்ளலாம். கிரகங்கள் அணைத்தும் பொதுவாக நீள்வட்டப் பாதையில் சுற்றும் அதிலும் பூமியும் நீள் வட்டத்தில் சுற்றுவதால் அதனுடைய இருப்பிடத்தை வைத்து பார்க்கும் பொது அதனுடைய நிலைகளுக்கு தக்கவாறு மற்ற கிரகங்களின் நீள்வட்டம் இன்னும் அதிகமாக நீளும். அதனல்தான் இந்த உச்ச, நீச நிலைக்கு முக்கியத்துவம் தரப் படுகிறது. இந்த அதீத நீள் வட்டத்தால் ஒருசமயம் அருகிலும் அதற்கு நேர் எதிரான இடத்தில் தூரத்திலும் செல்வது இயல்பு. இதைத்தான் ஜோதிடத்தில் உச்சம்,(Perihelion), நீசம்(Aphelion) எனச் சொல்கிறார்கள். சூரியன் பூமிக்கு அருகில் அதாவது தமிழ்நாட்டிற்கு மிக அருகில் வரும் மாதமாகிய சித்திரை அதாவது சூரியன் மேஷராசியில் வரும் பொழுதுதான் உச்சமடைகிறது என ஜோதிடம் கூறுகிறது. அந்த அர்த்தத்தில் தான் தமிழிலும் ”உச்சி” வெயில் மண்டையை பிளக்கிறது என்கிறார்கள்.
படம் 6
கிரகங்களின் ஆட்சி  வீடு என்றால் என்ன?


கிரகங்களின் ஆட்சி, உச்சம், நட்பு, பகை என்பது பற்றிய பாடல் ஒன்றை கி.பி.1665 ல் வரகவி கீரனூர் நடராஜன் தனது ”ஜாதக அலங்காரம்” எனும் நூலில் இயற்றி உள்ளார்.  இந்நூல் ஆசிரிய விருத்தம், கலித்துறை, கலிவிருத்தம், வெண்பா முதலிய யாப்பு வகைகளையும், பல இடங்களில் அந்தாதியும் பயன் படுத்தி 1145 பாடல்களால் பாடப் பெற்றுள்ளது. இதை ஒட்டிதான் நாடி ஜோதிடர்களின், நாடி ஜோதிடப் பாடல்கள் பெரும்பாலும் அந்தாதி வகையில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

வெள்ளியும் புதனும் நட்பு
விளங்கிய செவ்வாய் ஆட்சி
ஒள்ளிய கதிரோன் உச்சம்
உயர்சனி நீசம் ஆகும்
தெள்ளிய மதியோன் பொண்ணன்
சீரிய இராகு கேது
உள்உறும் பகையாம் என்று
ஓதினர் மேடத்தோர்க்கே

இப்பாடலின் விளக்கம் எளிதானது.
மேஷத்தில்
 சூரியன் உச்சம்,
சனி நீசம்,
செவ்வாய் ஆட்சி,
வெள்ளி, புதன் நட்பு, என்றும்
சந்திரன், வியாழன், இராகு, கேது ஆகியோர் பகை.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படம் 7
டைக்கோனியன் சிஸ்டம்

இதை இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் கி.பி 1600 களில்தான் டைக்கோபிரா, கோப்பர்நிக்கஸ், கலிலியோ, கெப்ளர் ஆகியோர் வானியலுக்கே புதியவர்களாக அறிமுகம் ஆகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் டைக்கோபிராவின் கருது கோளில் உருவானதுதான் மேலே உள்ள படம். டைக்கோனியன் சிஸ்டம் எனப்படுகிறது.

இதைத்தான் நமது முன்னோர்கள் அவர்களை விட தெளிவாக குறித்துக் கொடுத்துள்ளனர். கெப்ளர் நீள் வட்டப்பாதையில் சுற்றுவதாக அந்தக் கால கட்டத்தில்தான் அறிவித்தார். இதற்கு பல்லாயிர வருடங்களுக்கு முன்பே இதையெல்லாம் இந்தியர் அறிந்து இருந்தனர் என்கிற உண்மையை இந்தியாவை அடிமைப் படுத்தியவர்கள், மறைத்துவிட்டனர்.
தொடரும்...............................................
இரா. சந்திரசேகர்,
பழனி.
அடுத்த பதிவுபாகம் 6

3 comments:

guna said...

good intersting

ஷர்புதீன் said...

interesting

Unknown said...

ஜோதிடத்தில் உள்ள உச்சம் நிச்சம் வக்கிரம் போன்றவை சதுரங்கத்தில் இருக்கிறதா ?

top