முந்தைய பதிவு

இனவிருத்தி விஷயத்தில் ஆணை பொறுத்த வரையில் இயற்கை அளப்பறிய சக்தியை கொடுத்துள்ளது. ஒரு ஆண் ஒருமுறை வெளியேற்றும் 2 மிலி முதல் 3 மிலி (ஒரு டீஸ்பூன் அளவுள்ள ) விந்து திரவத்தில் சற்றேறக் குறைய 40 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு பெண்ணின் முட்டையை கருவுறச் செய்ய முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஆண்களின் குறைபாடு, என்பது, ஆண்குறி விறைப்பு, விந்தின் தன்மை,விந்தணுவின் எண்ணிக்கை, விந்தணுவின் இயக்கம் ஆகியவை சார்ந்து இருக்கும். பொதுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும் காரணிகள் விந்துப் பையின் வெப்ப நிலை மற்றும் பரம்பரைக் கோளாறாகும்.

மனிதனுக்கு உடல் முழுவதற்குமான பொதுவான வெப்ப நிலைக் கட்டுப்பாடு (Centralised Temperature Control) உள்ளது. அது உடலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 37 டிகிரி செல்ஸியஸில் வைத்திருக்கும் ஒரிரு டிகிரி கூடினால் காய்ச்சல், ஒரிரு டிகிரி குறைந்தால் ஜன்னி என்று அலாரத்துடன் தன்னைத் தானே ஓரளவுக்கு சரிசெய்து கொள்ளும் வகையில் இருக்கிறது.

அதெல்லாம் போதாது என்று இன்னும் சிறிய அளவில் விதைப்(Testicles) பைகளுக்கென்று தனியாக ஒரு வெப்ப நிலைக் கட்டுப்பாடும் (Temperature Control) உள்ளது. மனிதனின் பரிணாம வரலாற்றில் அதற்கு ஒரு முன் கதைச் சுருக்கம் உள்ளது. அதை என்னவென்று பார்ப்போம்.

ஒற்றைச் செல்களின் சங்கமத்தில் இருந்து உருவான இந்த மனித உடலை, அதே போன்றுள்ள பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும்,ஒற்றைச் செல்களும் எளிதில் தாக்கி அழிவுக்கு உள்ளாக்கும் நிலையில் இருந்து தப்பிக்க, பரிணாமத்தின் போக்கில் கையில் எடுத்த ஆயுதம்தான் இந்த "உயர்ந்த வெப்பநிலை". தானே உருவாக்கிய வெப்பநிலையை தானே தாங்கிக் கொள்ளலாம். ஆனால் மற்றைய பூஞ்சைகள் அதற்கு தாக்குப் பிடிக்க முடியாது.

உடலுக்கு எவ்வளவுக்கு அதிகமாக வெப்பநிலை தேவையோ அந்த அளவிற்கு அதை நிர்வகிக்க அதிகமான (எரிபொருள்) உணவு உண்ண வேண்டும். அதாவது சாப்பிடுவதைத் தவிர வேறு வேலை ஏதும் பார்க்காமல் இருந்தால் மிக உயர்ந்த வெப்ப நிலையை உருவாக்க முடியும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாது முடியாது. சரி இப்பொழுது எழும்பக் கூடிய முக்கியமான கேள்வி என்னவென்றால், மனிதன் சாதரணமாக உண்ணக் கூடிய உணவினால் அதிக பட்ச பூஞ்சைகள்,செல்களை ஒழிக்க, மனித உடல் வைத்துக் கொள்ளக் கூடிய மிக அதிகபட்ச வெப்ப நிலை என்ன?. அதாவது கஷ்டப் படாமல் தேடக்கூடிய அல்லது கிடைக்கக் கூடிய உணவினால், வைத்துக் கொள்ளக் கூடிய அதிகபட்ச வெப்பநிலை என்னவாக இருக்கும்.? இதை ஆராய்ந்த மனித உடல், 37 டிகிரி ஃபாரன்ஹீட்டை தேர்ந்தெடுத்து உள்ளது. அதனால்தான் மனிதன் தன்னை வெப்ப இரத்த பிராணி என்று சொல்லிக் கொள்கிறான்.

இன்றைய அறிவியல் மூலம் மனித எடை, அவனுக்கு கிடைக்கும் சராசரி உணவு, மனிதனின் மெட்டபாலிச ரேட், குளுக்கோஸ் உற்பத்தி, பூஞ்சைகளின் வாழ்க்கை முறை, அவைகளின் வாழும் வெப்ப நிலை ஆகியவை மூலம் அந்த ஆப்டிமம் டிகிரி என்னவாக இருக்கும் என்று கம்ப்யூட்டரின் துணை கொண்டு கண்டு பிடிக்கப் பட்டது. அதுவும் 36.7 டிகிரி என்று வந்தது. மனித உடம்பு இயற்கையாகவே வைத்திருக்கும் வெப்ப நிலையும் கிட்டத்தட்ட 37 டிகிரியாக இருப்பதுதான் ஆச்சரியம். மனித உடம்பில் இருக்கும் நிபாவுக்கு (யாரிவர்?)  தெரியாத கணக்கும் அறிவியலும் உண்டா என்ன?.

ஆனால் இப்பொழுது பிரச்னை என்னவென்றால் நமது உடம்பில் தயாராகும் விந்தணுவும் ஒரு வகையில் பூஞ்சை மாதிரி நுண்ணுயிரிதான். அதற்கு இந்த உடம்பின் வெப்ப நிலை ஆகவே ஆகாது. மீண்டும் படிக்கவும் அதற்கு இந்த உடம்பின் வெப்ப நிலை ஆகவே ஆகாது எனவே அவை உருவாகுவதற்கும் பத்திரப் படுத்துவதற்கும் தனியான வெப்ப நிலையை நிர்வகிக்க வேண்டும். விந்து உருவாகுவதற்கும், உயிர்ப்புடன் இருப்பதற்கும் இந்த அதிகபட்ச உடம்பின் வெப்ப நிலையாகிய 37 டிகிரியை விட சுமார் 5 டிகிரி வரையாவது  குறைவாக இருக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இந்த தனித்துவமான விந்துப் பைகள்.

20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
40–69 வயதில், 60% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
70-90 வயதில்,10% ஆண்களுக்குத் தான் ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும்.

இந்த விந்துப் பைகளில் தினசரி 120 மில்லியன் விந்தணுக்கள் உருவாகுகிறது அவை முழுமையாக வளர்ச்சியடைவதற்கு 10 லிருந்து 12 வாரங்கள் தேவைப்படுகிறது. இவ்வளவு நாட்கள் வளர்ந்தாலும் அதனுடைய ஆயுள் என்னவோ அற்பம்தான். ஆணுறுப்பிலிருந்து பீச்சி வெளி யேற்றப் படும் விந்தணுக்கள் அதிகபட்சமாக பெண்ணின் கருப்பையில் உள்ள வெப்ப நிலையில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அதற்குள் அது உயிருள்ள முட்டையை கண்டு பிடித்து அதனுடன் சேர வேண்டும்.

விந்து பை அதிகமாக வெப்பமடையும் பொழுது தானாக விந்து பை விரிந்து நீளமாக தொங்கி புறத்தோலின் கனத்தை குறைத்து உள்ளே நிலவும் அதிகமான வெப்பத்தை வெளியேற்றுவதுடன், புறத்தோலின் பரப்பளவை அதிகப்படுத்தி அதன் மூலம் வியர்வையை ஆவியாக்கி தனது வெப்ப நிலையை குறைத்துக் கொள்ளும். அதிகமாக குளிர்ச்சி அடையும் போது விந்துப் பைகள் சுருங்கி புறத்தோலின் கனத்தை அதிகரித்து வெப்பத்தை வெளி விடாமலும் குளிர்ச்சியை உள்ளே விடாமலும் ஒரு குறிப்பிட்ட வெப்ப
நிலையில் வைத்திருக்கிறது.


வெப்பமான சூழ்நிலையில்.குளிர்ச்சியான சூழ்நிலையில்


வியர்வையினால் நமது உடம்பு, வெப்ப நிலையை சுமார் நான்கு டிகிரிக்கும் மேல் குறைக்கிறது. புது மண் பாணையும் இதே தொழில் நுட்பத்தில் தான் சூழ்நிலையைக் காட்டிலும் நான்கு டிகிரி குறைவாக தண்ணீரை வைத்திருக்கிறது. பொதுவாக திறந்திருக்கும் தண்ணீரின் வெப்பநிலையும் சற்று குறைவாகத்தான் இருக்கும்.அதிலும் புதுப்பாணையாக இருந்தால் மட்டுமே குறைவான வெப்ப நிலையில் வைத்திருக்கும். பாணையிலுள்ள நுண் துளைகள் வழியே வெளியேறும் தண்ணீர் ஆவியாகும் போது ஆவியாவதற்கு தேவையான வெப்பத்தை பாணையில் இருந்து எடுத்துக் கொள்கிறது. அதனால் பாணைத் தண்ணீர் குளிர்ச்சி அடைகிறது. அது போல் உடம்பு தோலின் மூலம் வியர்வையை வெளியேற்றுகிறது. அவ்வியர்வை ஆவியாகத் தேவையான வெப்பத்தை உடலிருந்து எடுத்துக் கொள்கிறது. அதனால் உடலின் வெப்பம் குறைகிறது. பழைய பாணையில் அந்த நுண்துளைகள் அடைபட்டு விடுவதால் நீரில் குளிர்ச்சி இருக்காது.

அது சரி, நீர் ஏன் ஆவியாக வேண்டும்?. நீர் மட்டுமல்ல எல்லாத் திரவங்களும் எல்லா வெப்ப நிலைகளிலும் ஆவி ஆகிக் கொண்டேதான் இருக்கிறது. உயர்ந்த வெப்ப நிலையில் அதிகமாகவும் தாழ்ந்த வெப்ப நிலையில் குறைவாகவும் நடக்கிறது. ஒவ்வொரு திரவமும், சாதாரண காற்றழுத்தத்தில் ஒவ்வொரு வெப்ப நிலையிலும் திரவமும், ஆவியும் நீ இவ்வளவு இருக்க வேண்டும் நான் இவ்வளவு இருக்க வேண்டும் என எல்லை பிரித்துக் கொள்கிறது. காற்றில் ஒரு குறிப்பிட்ட டிகிரியில் நீராவி இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. நீர் ஆவியாகி தன் அளவை எட்டி விட்டால் ஆவியாதல் குறைந்து விடும். அப்பொழுதான் நமது உடம்பு வியர்த்தாலும் வியர்வை ஆவியாகாமல், வெப்ப நிலை குறையாமல் “உப்புசம்” என்ற நிலை ஏற்படுகிறது. சிலசமயம் நீடித்த “உப்புச” நிலை ஸ்ட்ரோக்கை உருவாக்கிவிடும்.

விந்துபை ஒரு பயோ தெர்மல் ஃப்ளாஸ்க் மாதிரி அதன் உள்ளே இருக்கும் விந்தணுவின் வெப்ப நிலையை ஒரே டிகிரியில் வைத்திருக்கும். ஆக ஆணின் உடம்பில் குறைந்த வெப்பநிலை உள்ள பகுதி தொடை இடுக்குதான் அதனால் தான் அங்கு எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு விடுகிறது.

விந்தணுக்கள்(Sperm) விதைப் பையில், உற்பத்தியாகி விந்து (Semen) திரவத்துடன் கலந்து ஒரு நீண்ட சுருண்ட குழாயில் தங்கி இருக்கிறது. கலவியின் போது, உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் சுருண்ட குழாய் நேராக்க முயற்சிக்கும் போது அழுத்தம் ஏறப்ட்டு பீச்சி அடிக்கப்படுகிறது.அவ்வாறு பீச்சி அடிக்கப்பட்ட விந்தணுக்கள் பெண்ணுறுப்பின் உள்ளே சென்று, கர்ப்பபையில் இருக்கும் முட்டையை தேடிச் சென்று அடைவதை ஒரு வீடியோ கேம் உடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு ஸ்கிரினிலும் ஒவ்வொரு விதமான தடைகள், ஒரு சில தடைகளை வெல்லும் போது வீடியோ கேம் போன்று லைஃபும், ஆயுதமும் கிடைக்கிறது.


விந்தணுக்கள் உருவாகி விந்துவுடன் கலந்து மூத்திரக்குழாய் வழியாக  பீச்சியடிக்கப்படுதல்

ஆணுறுப்பில் இருந்து விந்து பீச்சி அடிக்கப்படும் போது ஏற்படும் அழுத்தத்தினால் செயலிழந்தவை போக மீதம் 25 சதவீதம் விந்தணுக்கள் தான் வலிமையுடன் இருக்கின்றன. அவற்றில் விந்தின் அமிலத்தன்மை மற்றும் வெப்ப நிலை ஆகியவற்றாலும், பெண்ணுறுப்பில் இருக்கும் திரவத்தின் வேதியல் பண்புகளாலும், அழிக்கப்பட்டவை போக 400 அணுக்களே எஞ்சிருக்கின்றன. சாதாரண சூழ்நிலையில் விந்தணுக்கள் கர்ப்பபையின் நுழை வாயிலில் உள்ள சளி போன்ற சுவற்றுப் பகுதியை துளைக்க முடியாது ஆனால் முட்டை உருவாகும் தருணத்தில் மட்டும் ,அவை மென்மையாகி வழிவிடும். அந்தத் தடையை கடந்து சுமார் 400 அணுக்களே செல்ல முடிகிறது. இன்னும் நான்கு நாட்கள் தாக்கு பிடித்து போராட வலிமை உள்ளவையே முட்டையை அடைய முடியும். அவ்வாறு வலிமை உள்ள சுமார் 40 அணுக்களே கடைசியில் போராடி கர்ப்ப பையை அடைகின்றன. 


கர்ப்பபைக்குள் சென்றவுடன் அங்கு அதற்கு பூர்ணகும்ப மரியாதையுடன் புதிய சக்தியும் ஒரு சிறப்பான ஆயுதமும் அளிக்கப் படுகிறது. ஆயுதம் என்றால் திரிசூலம், வேல் என்றும், சக்தி என்றால் மின்னலையும் நினைத்துக் கொள்ளக்கூடாது. மைக்ரோ லெவலில் யோசிக்க வேண்டும். சக்தி என்றால் குளுக்கோஸ் சொட்டும், ஆயுதம் என்றால் துப்பாக்கி குண்டில் ஒட்டப் பட்டிருக்கும் கேப் போல் விந்தணுவின் தலையில் தடவப்படும் சிறிய பொட்டு போன்ற மையும்தான். அங்கு தரப்படும் சக்தியினால் புதிய வேகம் எடுத்து, அதன் தலையில் தடவப்பட்ட ஒரு வித வேதியல் கலவையினால் அது முட்டையை துளைத்து உள்ளே செல்ல முடிகிறது. பொதுவாக முதலில் துளைக்கும் அணுவுக்கே வெற்றி கிடைக்கிறது.லட்சத்தில் ஒரு நிகழ்வாக இரண்டு அணுக்கள் கூட வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. மற்றவற்றிற்கு கதவு மூடப்பட்டுவிடும். எஞ்சியவை அழிக்கப் படுகின்றன. முட்டையும் விந்தணுவும் கலந்து ஒரு ஒற்றை செல்லாக மாறுகிறது பின்னர் இது "இரண்டுபடுதல்" மூலம் பெருகி வளர்ந்து குழந்தையாக மாறுகிறது.

சில சமயங்களில் ஒற்றை அணுவின் மூலம் கருவுற்ற முட்டை இரண்டாக பிளவு பட்டு, தனித்தனியாக வளர்ந்து ஒற்றுமைகள் அதிகமுள்ள இரட்டைக் குழந்தைகளாக பிறக்கின்றன. இவைகள்தான் சர்வ சாதரணமாக காணப் பெறும் ஒரு வகையாகும். ஆனால் லட்சத்தில் ஒரு நிகழ்வாக, ஒரே ஆணின் இரண்டு அணுக்கள் அல்லது வெவ்வேறு ஆண்களின்!!! ஆமாம் வெவ்வேறு ஆண்களின் இரண்டு அணுக்கள் ஒரே முட்டையை துளைத்து வெற்றி பெறும் சந்தர்ப்பமும் ஏற்படுவதுண்டு. அது இரட்டைக் குழந்தைகளில் வேற்றுமைகள் அதிகமுள்ள அபூர்வ வகையாகக் கருதப்படும்.

தொடரும்.........

2 comments:

VELU.G said...

நான் கடந்த இரண்டு நாட்களாகத் தான் உங்கள் வலைப்பூவை படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவு அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

VELU.G said...

நான் கடந்த இரண்டு நாட்களாகத் தான் உங்கள் வலைப்பூவை படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவு அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

top