பலராலும் தப்பாக உரை சொல்லப் பட்டுள்ள குறள் 140

 http://www.thirukkural.com/search/label/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

கலைஞர் உரை:

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

 எனது கருத்து:

இந்த உரை கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது. ஏனென்றால் "உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழ்வது " என்பது பல நூல்களை கற்றோருக்கு இயல்பானதுதான். பலகற்றும் தெளிந்தவருக்கு தனியாக, உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி ஏன் சொல்ல வேண்டும். அதைத் தனியாகக் குறிப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு  இல்லை, ஆனாலும் வள்ளுவர் ஏன் சொல்கிறார் என்று ஆராய வேண்டும்.

 மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். எனது கருத்து: இதுவும் கிட்டத்தட்ட அதேமாதிரியான மழுப்பல்தான். "உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர்" இதுவும் எல்லாருக்கும் தெரிந்த நியாயம்தான் இதைப் போய் தனியாக ஒரு குறளில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

சாலமன் பாப்பையா உரை:
முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

எனது கருத்து:
இவர் நெருங்கி வந்துவிட்டார். இன்றைய காலகட்டத்திற்கு தகுந்த மாதிரி என்பதை விட வள்ளுவரின் உன்மையான கருத்தை உரையாக எழுதியுள்ளார் . சரியான வார்த்தைப் பிரயோகம். வள்ளுவரே வந்து விளக்கமளித்தது போல் இருக்கிறது.

பரிமேலழகர் உரை:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

எனது கருத்து:
வள்ளுவரை உணர்ந்தவர் போல் பொருள் சொல்கிறார். வார்த்தைகளைச் சரியாகப் பொருத்தி உலகத்தோடு ஒட்ட ஒழுகலை கல்லாதவர் எனப் பொருள் கொள்ளும் முறையை காண்பித்தாலும், "உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து", என்று உயர்ந்தோரை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆகவே இவரும் கடைசியில் திசை மாறி விடுகிறார்.

 மணக்குடவர் உரை:
அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.

எனது கருத்து:
இது சுத்தமான மழுப்பல்தான். "அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் " என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் அர்த்தப் படுத்துவது மாதிரி இருக்கிறது. நூல் என்பதற்கு வாரியார் ஒரு விளக்கம் சொல்வார். அதாவது தச்சர்கள் பெரிய மரங்களை (தடிகளை) அறுத்துப் பலகை மற்றும் "சட்டங்கள்" எடுப்பதற்கு நூலைப் பயன் படுத்துவர். அதாவது நூலில் சாயத்தை நனைத்து நீளவாக்கில் பிடித்து ஒரு சுண்டு சுண்டினால் நேர்கோடாக அடையாளம் செய்து மரத் தடிகளை அறுத்து சீர் படுத்துவர். அது போல் மனிதனை சீர்படுத்துவதற்கு புத்தகங்கள் என்ற "நூல் " பயன் படுகிறது அதனால்தான் அந்தச் சொல்லாடல் வழக்கில் உள்ளது. ஆகவே நிறைய நூற்களை கற்றாலே அறிவுடையவராகி விடுவர் என வாரியார் சொல்வார். அப்படியெல்லாம் இருக்கும் பொழுது பலநூல்கள் கற்பதினால் அறிவு கிடைக்காது என்பதை வள்ளுவர் ஒத்துக் கொண்ட மாதிரி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அது போன்ற அறிவு கிடைக்காதவர்கள் இருக்கலாம் அவர்கள் ஆயிரத்தில் ஒருவனாக அல்லது லட்சத்தில் ஒருவனாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்காக வள்ளுவர் குறள் எழுதியிருக்கமாட்டார். ஆகவே மணக்குடவர் உரையும் செல்லாது  செல்லாது.

உத்தம புத்திரரின் உரை
 ( http://kuralamutham.blogspot.in/2009/11/140.html)
கால, தேச மற்றும் வர்த்தமானம் என்னும் நடப்பிற்கேற்ப, மாற்றங்களுக்கு உட்பட்டு, உடன்பட்டு, அனுபவ அறிவுக் கண்களால் உய்த்துணர்ந்து, நல் ஒழுக்க வழி நின்று நயந்தரும் உயர்ந்தோரைச் சார்ந்து, இணங்கிச் செயலாற்றுதலே உலகோடு ஒத்து வாழுதல் எனும் அறிவுடையோர் வாழும் முறைமையாகும்.

 எனது கருத்து:  உத்தம புத்திரரின் உரையிலும் மழுப்பல் இழையோடுவதைக் காணலாம். "நல் ஒழுக்க வழி நின்று நயந்தரும் உயர்ந்தோரைச் சார்ந்து, இணங்கிச் செயலாற்றுதலே " இதைச் சொல்வதற்கு வள்ளுவர் தேவையில்லை. எல்லா அறநூல்களின் பால பாடமே அதுதானே.

Translation: Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well. Explanation: Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

குறுகச் சொல்லி பொருள் விளங்கச் சொல்லப்பட்டுள்ளது.சரியான முறையில் அர்த்தம் சொல்லப் பட்டுள்ளது.

நிபா: இதெல்லாம் சரி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்.

எனது கருத்து: மிகுந்த அறிவுடையோர் முதல் எல்லோரும் ஏன் இப்படித் தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அதாவது தெய்வப் புலவராகிய திருவள்ளுவருக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தங்கள் பாணியில் சிறிது மழுப்பி, மாற்றி பொருள் கொள்ளச் சொல்கிறார்கள்.

வள்ளுவர் தலை சிறந்த பகுத்தறிவாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஊழையும் உப்பக்கம் காணாலாம் என்பதிலும், தெய்வத்தான் ஆகாது என்றாலும் விடக்கூடாது என்று சொல்வதாலும் பகுத்தறிவாளர்தான். இன்னொரு புறம் அவரும் ஒன்றல்ல பல இடங்களில் கடவுளை சம்பந்தப் படுத்தி எழுதுவதால் இன்றைய தமிழக பகுத்தறிவுவாதிகளின் கூற்றுப் படி முட்டாளாகவும் கருதப் பட வேண்டியவராவர்.

ஆனாலும் தமிழகப் பகுத்தறிவுவாதிகள் வள்ளுவரைத் தலையில் தூக்கி வைத்து ஆடுமளவிற்கு , அவரது கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன்?. கருணாநிதி, வள்ளுவர் கடவுளைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் நேரடியாக பொருள் கொள்ளாமல் மழுப்புவதை காணலாம். உதாரனத்திற்கு மூன்று குறள்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

 கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

எனது கருத்து:
இங்கு இறைவன் என்ற வார்த்தையைப் பயன் படுத்தாமல் "தலையானவன்" என்று சொதப்புகிறார். இறைவனுக்கு இவரது பாணியில் தலையானவன் என்று புதுப் பெயர் வைக்கிறாரா?. மாற்றுத் திறானாளி என்று பெயர் சூட்டியது போல்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்பதற்கிணங்க இறைவனை வணங்காதவர்  பிறவிப் பெருங்கடல் நீந்தார், என்ற அர்த்தத்தை எப்படி எல்லாம் குழப்புகிறார்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
 மிச்சில் மிசைவான் புலம்

கலைஞர் உரை:
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.

எனது கருத்து:
இதுவும் ஒரு மாதிரியான மழுப்பல்தான். வள்ளுவர்தான் தெளிவாகச் சொல்கிறாரே "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ" என்றால் எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்கிறார் வள்ளுவர். ஆனால் கருணாநிதி குழப்புகிறார் "தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?."அப்படி பயன் படுத்தினால் விளைச்சலுக்கு என்ன செய்வான் என்கிற கேள்வி தொக்கி நிற்கிறதே அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

அதை இப்படிச் சொல்லியிருந்தால் முழுமை பெறும். "விதைநெல்லையும் விருந்தோம்பலுக்கு பயன் படுத்தினால் அது கடவுளுக்கு செய்யும் தொண்டாக நினைத்து செய்வதால் உன் நிலத்தில் விதைக்காமலே விளையும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்.

 கலைஞர் மிக மோசமாக உரை எழுதிய குறள் ஒன்று உள்ளது.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

மு.வ உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

 சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

 பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

 மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

கலைஞர் உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப் படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

எனது கருத்து:

ஆக கருணாநிதி திரித்துப் பொருள் கூறியுள்ளார் என்பது வெளிப்படை. "வழிதவறிச் செல்லும் மனிதனுக்கு சான்றாக இந்திரன் விளங்கி " என்று ஏதோ உள்குத்து வைத்து எழுதியுள்ளார். இயற்றியவரின் வழியில் நின்று  உரை எழுதுவதுதான் முறை. இவருடைய கொள்கைகளை திணித்து   உரை எழுதுவது இயற்றியவருக்குச் செய்யும் துரோகம்.

சரி நமது குறளுக்கு வருவோம்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றிய பழமொழி உண்டு "ஊரோடு பகைக்கின் வேறொடு கெடும்". உலகத்தில் இருந்து ஊருக்கு வந்துவிட்டார்கள்.

இதையே எனது அப்பத்தா வேறுவிதமாகச் சொல்வார்கள். "நண்டு திங்க்கிற ஊருக்குப் போயிட்டா நடுத்துண்டு நமக்கு " அதாவது இது நண்டை உணவாகக் கருதாதவர்களின் மத்திய தமிழ் நாட்டு ஊரில் பேசப் படும் பழமொழியாக யோசித்தால் வள்ளுவர் இந்த விஷயத்தை குறளாக படைக்க எடுத்துக் கொண்ட சிரத்தை தெரியும்.

 மனதுக்கும் சமூகத்துக்கும்  ஒவ்வாத முட்டாள்தனமான காரியமென்றாலும், தேவை கருதி செய்யப் பழகாதவன் அறிவில்லாதவன் என்று தைரியமாகச் சொல்கிறார். ஆனால் உரை எழுதும் இவர்கள் அர்த்தம் சொல்லும் போது ஏன் மழுப்ப வேண்டும்.ஒரு வேளை எல்லாச் சமயங்களிலும் விதி மீறுபவர்கள் தங்களுக்கு சாதகமாக இந்தக் குறளைப் பயன் படுத்தக் கூடாது, என்பதற்காக சான்றோர்கள் அடக்கி வாசிக்கிறார்களா?.

இதை டார்வினின் பரிணாமத்தில் வரும் சூழ் நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் (ஒட்ட ஒழுகல்) கொள்ளுவதற்கான பாடத்தைச் சொல்லும் குறளாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒட்டிய கதை ஒன்று உள்ளது. புதிதாக திருமணம் ஆன, ஆண் தனது மாமனார் ஊர்த் திருவிழாக் கொண்டாட தனது புது மனைவியுடன் சென்றார்.கோயில் திருவிழாவில் புது மனைவியுடன் கலந்து கொண்டு கடவுளை வணங்கினார். அவ்வாறு வணங்கி வரும் பொழுது அவ்வூரில் உள்ள வழக்கப் படி ஒருமரத்தில் உள்ள தெய்வத்தை கல்லால் எறிந்து கும்பிட வேண்டும் என்று அவரது மாமியார் வீட்டார் சொன்ன பொழுது அவருக்கு இது என்ன பைத்தியக் காரத்தனமாக இருக்கிறது. கடவுள் என்பது வணங்குவதற்குத் தானே அவரைப் போய் கல்லால் அடிக்கலாமா என்று கேள்வி கேட்டு மறுத்து விட்டார். ஆனாலும் கல் எறிய வில்லை என்றால் கெட்டதுதான் நடக்கும் எனவே எறிந்து விடுங்கள் என்ற புது மனைவியின் வற்புறுத்தலுக்காக கல்லை எடுத்தார், ஆனாலும் கடைசி நிமிடத்தில், மனது கேட்காமல் கடவுள் இருப்பதாகக் கருதப் படும் அந்த மரத்தை விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த மரத்தின் மீது கல்லை எறிந்து விட்டு வீட்டிற்கு வந்தார். வரும் பொழுதே அவருக்கு கண் சரியாகத் தெரியாமல் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தார். இரவில் தெய்வத்தை நினைத்து வருந்தி "கல்லால் அடித்தவனை எல்லாம் ஒன்றும் செய்யாமல், கல்லால் அடிக்க மறுத்து பக்கத்து மரத்தில் எறிந்த எனக்கு கண் பார்வையை பறித்து இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தது என்ன நியாயம் தெய்வமே" என அழுது மன்றாடிக் கேட்டார். தெய்வம் கனவில் வந்து "ஏனப்பா நானே எல்லாரும் கல்லால் அடிக்கிறானுக, இவர்களை எவ்வளவு செய்தும் திருத்த முடியாது என்று நினைத்து அவர்களது வழியிலே வழிபடுபவனுக்கு அருளுவோம் என்று பக்கத்து மரத்தில் உட்கார்ந்து எறிபவர்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை எப்படி நீ குறி பார்த்துக் கல்லால் அடிக்கலாம் " என்று கேட்டது. தெய்வமே நான் வெளியூர்க்காரன் எனக்கு இந்த விவரம் தெரியாதே என்றானாம். இதுக்குத்தான் நிறையப் படிக்கனும் அதிலும் திருவள்ளுவரை நன்றாகப் படி, அதிலும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி எழுதியுள்ள குறளை படித்துப் புரிந்து கொள் என்று சொல்லிவிட்டு கண் பார்வையை அருளி விட்டுச் சென்றதாம்.

அப்பா, நாத்திக வாதிகளே நீங்கள் நீதியைப் (குறளைப்) புரிந்து கொண்டால் சரி அதுக்காக கடவுளாம் கண்தெரியாமப் போச்சாம், என்று விவாதத்திற்கு வராதீர்கள். இதுக்குதான் சொல்வது நாத்திகனுக்கு நீதி சொல்லனும் என்றால் கூட முடிவதில்லை. அப்புறம் எப்படி தேறுவார்கள். நீதியை விட்டுவிட்டு கடவுளுக்கு விளக்கம் கேட்பார்கள். அதனால்தான் உங்களுக்கு வித்தியாசமா வேற கதை வைத்திருக்கிறேன்.

இப்படித்தான் ஒரு முறை இரவில் வெகுதூரம் பேருந்தில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. உட்கார இடமில்லை என்றாலும் பரவாயில்லை நின்று கொண்டெ செல்லலாம் என்று கூட்டம் நிறைந்து வந்த பேருந்தில் பின்புறவழியில் ஏறினேன். எனக்குப் பின்னால் ஒருவரும் ஏறினார். பேருந்தும் கிளம்பியது.நான் பேருந்தில் நோட்டமிட்டேன் ஒரு ஐந்தாறு இருக்கைகளுக்கு முன் ஒரு இருக்கை காலியாக இருந்தது. ஆனால் எனக்கு முன் பத்துப் பதினைந்து பேராவது இருப்பார்கள், அவர்கள் நெருக்கியடித்து நின்று கொண்டிருக்கிறார்கள். மூளை ஒருகணம் யோசித்தது. அவர்களே உட்கார முயற்சி செய்ய வில்லை என்றால் அதற்கு ஒரு முன்கதைச் சுருக்கம் இருக்க வேண்டும் எனவே அவ்ர்களது வழியைப் பின்பற்றி இருப்போம் (உலகத்தோடு ஒட்ட ஒழுகல்) என்று நின்று விட்டேன். ஆனல் எனக்குப் பின்னாடி வந்தவர், அந்தக் காலியாக இருந்த இருக்கையை கண்டு, முண்டியடித்து எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த ஆட்களை நெட்டித் தள்ளிவிட்டு அவசர அவசரமாகப் போய் வெற்றிகரமாக உட்கார்ந்து விட்டார்.

சில நொடிகளில் உட்கார்ந்த வேகத்தில் எழுந்து "அட அறிவு கெட்டவனுகளா எவனோ சீட்ல வாந்தி எடுத்து வைத்திருக்கிறான் சொல்லக் கூடாதா? என்று அவருக்கு தெரிந்த வகையில் அந்தக் கருமத்தைப் போக்கி கொண்டிருந்தார். அப்பொழுது நின்று கொண்டிருந்தவர்களில் ஒரு பெரியவர் சொன்னார் நாங்களெல்லாம் உட்காராம கேணத்தனமாக நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாயோ? என்றார்.

 நல்ல வேளை அங்கே பல பேருந்துகளில் இருப்பது போல் உட்கார இருக்கை இல்லாமல் ஒட்டையாக இருந்திருந்தால் என்ன நிலைமை என்று யோசித்தேன்.

பிணம் தின்பதை சாஸ்திரமாக ஏற்றுக் கொள் என்கிறான் ஒருத்தன். எப்பொழுது? பேய் ஆட்சி செய்தால், இதுவும் ஒருவகை ஒட்ட ஒழுகல்தான்.

 நன்றி

இரா. சந்திரசேகர்,

 பழனி.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்...

ஆனால் இந்தளவு திருக்குறளைப் பற்றி பேசுவோர் மிக மிக குறைவு...

அவரவர் சிந்தனையின் படி உரைகள் எழுதலாம்.
அதை ஒப்பிடுவது என்பது என்னைப் பொறுத்தவரை :

(1) தேவையில்லாத ஆராய்ச்சி.
(2) திருக்குறளை முழுமையாக அறிந்து, தெரிந்து, புரிந்தவர்கள் யாரும் இல்லை எனலாம்.

நன்றி ஐயா !

மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ?

அரவிந்த் குமார்.பா said...

அய்யா,

உங்கள் விளக்கத்தைப் படிக்கும் முன்பு வரை நானும் மற்ற உரைகள் சரியாகதான் இருக்கிறது என நினைத்தேன்.. ஆனால் நீங்கள் சொன்னவாறு இதை இந்தப் பொருளில் சொல்ல வள்ளுவர் தேவையில்லையே..

அருமை.. ஆர்வமாக இருக்கிறேன் உங்கள் எழுத்துகளைத் தொடர..!!

Anonymous said...

நல்ல பதிவு சகோ. பலவேளைகளில் நானும் குறளைப் புரிந்துக் கொள்ள ஆங்கில மொழிப் பெயர்ப்புகளைப் படிப்பேன். ஏனெனில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்களுக்கு இருந்த அறிவுக் கூட தமிழ் உரையாசியர்கள் பலருக்கு இருக்கவில்லை என்பதே உண்மை ... குறிப்பாக உரையாசியர்களைக் குழப்பிவிட்டவர் பரிமேலழகரே ஆவார் .. அவரின் உரையை அடியொற்றியே பிறரும் உரை எழுதுகின்றார்கள், இத்தோடு தத்தமது சொந்தக் கருத்துக்களையும் சேர்த்துவிடுகின்றார்கள் ...

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் - என்பது எளிமையான தமிழில் தான் இருக்கு ... !!! உலக நியதிகளுக்கு ஏற்ப நாமும் வாழ்ந்தாகவேண்டியக் கட்டாயம் இருக்கு !!!

ஒருக் காலத்தில் பெண்ணுரிமை என்பது ஒன்றுமே இல்லாமல் இருந்தது, ஆனால் இன்று உலகில் பல நாடுகளிலும் பெண்ணுரிமை தேவையான ஒன்று என ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் .. இப்போ இதை எதிர்ப்போர் என்ன செய்ய முடியும் உலகத்தோடு ஒட்ட ஒழுகித் தான் ஆகவேண்டும் .. இதனை எதிர்த்தால் என்ன ஆகும், என்னத்தப் படிச்சு என்னத்தக் கிழிச்சான் இந்த நியாயம் கூட இவனுக்குத் தெரியலை மடச்சாம்பிராணி எனத் திட்டுவார்கள் அல்லவா . இதைத் தான் வள்ளுவர் கூறுகின்றார்.

அடுத்தது இறைவன் அடிசேரா தார் - என்பது இதுவும் மிக எளிது . பலர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் வள்ளுவர் சமண மதத்தை ஆட்கொண்டே குறள் எழுதி உள்ளார். சமணத்தில் கடவுள் இல்லை. ஆனால் கடவுளர்கள் உள்ளார்கள் .. என்னக் குழப்புகிறதா .. சமணத்தின் படி படைப்புக் கடவுளோ, சூப்பர் மேன் கடவுளோ எதுவும் இல்லை .. ஆனால் தேவர்கள், தேவதைகள் இருக்கின்றார்கள் அவர்களும் நம்மை போல பிறந்து வாழ்ந்து மடிந்து போகக் கூடியவர்கள் என்றக் கருத்து இருந்தது ....

இந்தக் குறளில் வள்ளுவர் இறைவன் எனக் கூறுகின்றார். இந்த இறைவன் யார்.. இறைவன் என்ற சொல்லே போதுமானது. இது ஒருவரைக் குறிக்கின்றது. அதுவும் ஒரு ஆணைக் குறிக்கின்றது. சமணர்கள் தமது மத நிறுவனரான மகாவீரரை கும்பிடக் கூடியவர்கள். அவரையே இறைவன் எனக் குறிப்பிட்டு இருக்க வேண்டும். பிறவிப் பெருங்கடல் நீந்துவார் என்பது துறவறம் ஏற்று மகாவீரரை பின்பற்றி வாழ்தலால் மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையை கடந்துவிடுவோம் என்பது தான்.

இல்லை இந்த இறைவன் மகாவீரர் அல்ல எனக் கூறுவோரும் உளர். ஆனால் அதே அதிகாரத்தில் பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் குறளை ஆய்வு செய்தால் இதற்கும் பொருள் விளங்கிவிடும்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

இங்கும் பிரச்சனை எழுகின்றது. வேத மதத்தின் படி இந்திரன் குடி, கும்மாளம், பெண் சுகம் என்று வாழ்பவன் அவன் எப்படி ஐந்தவித்தான் ஆனான் ! என்றக் கேள்வி எழுப்பினாலே இந்த உரைகள் தவிடு பொடியாகிவிடும் ..அகலியகை கற்பழித்தவன் அல்லவா இந்திரன்.

ஆனால் பௌத்த சமணத்தின் படி இந்திரன் என்பவன் ஒழுக்க நெறியானவன் எனப் போதித்தார்கள். அவ்வளவே ! இந்து மத இந்திரன் - பௌத்த - சமண இந்திரன் இரண்டும் வெவ்வேறாகப் போய்விடுகின்றன ...

கருணாநிடி போல குறளுக்கு மோசமான உரை எழுதியவர் யாருமில்லை ... ஆத்திகர்கள் வள்ளுவரை அவர் பக்கத்துக்கும் நாத்திகர்கள் வள்ளுவரை இவர் பக்கத்துக்கும் கொண்டு போகின்றனர். ஆனால் வள்ளுவர் இரண்டுக்கும் நடுவில் நிற்கின்றார் என்பது தான் உண்மை .. சமண பௌத்தங்களும் middle way மதங்களே ! அதாவது சமண பௌத்தத்தின் படி கடவுள் இருக்கலாம் ஆனால் அக்கடவுள் உலகைப் படைக்கவில்லை, நமது வாழ்க்கையை தீர்மானிக்கவில்லை, எல்லாம் வல்லவன் அல்ல, ஆதியும் அந்தமும் இல்லாதவன் இல்லை.. மனிதனை போலவே ஏனைய உயிர்களைப் போலவே கடவுள்களும் அழியக் கூடியவர்களே ... என்பது தான் அவர்களின் தத்துவங்கள் ... அவர்களின் தத்துவங்களை சிலவேளைகளில் ஒருவேளை வேற்றுக் கிரக வாசிகளைத் தான் இப்படி கூறினார்களோ என நான் நினைத்தது உண்டு ... ஏனெனில் நம்மைவிட சக்தி வாய்ந்த அறிவில் முன்னேறிய உலகங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்காக அவர்களை நாம் படைப்புக் கடவுளாக எண்ண வேண்டியதில்லை ..


வள்ளுவரை சரியாக யாரும் புரிந்துக் கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன். எவனாவது வெள்ளைக்காரன் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்து உரை எழுதினால் ஒழிய ஏனைய உரைகள் எல்லாம் அரைவேற்காடு தான் ..

Chandru said...

நன்றி.தனபாலன்.
அவரவர் சிந்தனையின் படி உரை எழுதலாம் ஆனால் உலகத்தாருக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஒப்பிடுவதால் தான் உண்மை விளங்கும். மனிதனது வளர்ச்சியின் அடிப்படை, ஒப்பிடுவதால் ஏற்பட்டதுதான். தரமறிய ஒப்பிடுதல் என்ற ஆராய்ச்சி தேவைதான். உரசாமல் ஊடுறுவாமல் தங்கத்தை அறிய முடியாது. திருக்குறளை முழுமையாக அறியும் கூட்டு முயற்சிதான் இது போன்ற ஆராய்ச்சியும் பின்னூட்டமும்..

Chandru said...

அரவிந்த் குமார்.பா
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

Chandru said...

நன்றி இக்பால் செல்வன்.
உரையாசிரியர்களை பரிமேழகர் குழப்பவில்லை. அவர் ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தார். அவர் வழி சிறப்பாக இருந்ததால் உலகத்தார் ஏற்றுக் கொண்டார்கள் ஆங்காங்கே சில சறுக்கல்கள் அல்லது சான்றோர்களின் "அடக்கி வாசித்தல்கள்" கால வர்த்தமானத்தில் தவறாக புரிந்து கொள்ளப் பட்டவையாக இருக்கலாம்.
கடவுள் இல்லை என்றால் மதம் இல்லை . கடவுள் இல்லை என்பது திருவள்ளுவரின் கொள்கையாகக் கருதக் கூடாது. கடவுளைப் பற்றி ஒரு அதிகாரமே தனியாக எழுதியது மட்டுமில்லாமல் , ஆங்காங்கே கடவுளைப் பற்றி குறிப்பிட்டுள்ளமையால் அது அறியப் படும். இந்துத்துவம் என்னும் பூசனிக்காயை சமணச் சோற்றால் மறைக்க முயலாதீர்கள். வள்ளுவரை ஒரு உண்மையான தமிழன் புரிந்து கொள்வதை விட ஒரு வெள்ளைக்காரன் சத்தியமாக புரிந்து கொள்ளவே முடியாது.

Unknown said...

அண்ணே வணக்கம் அண்னே...

திருக்குறள் ஆய்வு சூப்பருண்ணே...
ஆனா அகர முதல எழுத்தேல்லாம்ல ஆரம்பிச்சு ஒரு குறளுக்கு ஒரு பதிவுன்னு தொடர் போட்ட பயனுள்ளதா இருக்கும். என்னா இத்தினி உறை ஆசிரியர்களையும் படிச்சு ஒப்பிட்டு உறை எழுதுதுதல் சுலபமல்ல... நனறிந்தவகையில் யாரும் செய்யவில்லை.

தயவு செய்து 2 விசயங்களை செய்யுங்க...
1) சதுரங்கம் தொடர தொடருங்க..
2) ஆயுர் பாவம் எழுதுங்க...
3) இது வரை நீங்க எழுதினத பதிவிறக்க கூடிய வகையில் பிடிஎப் கோப்பு புத்தகங்களாகக்குங்க...
உங்க பதிவுகளுக்கு கிரியேட்டிவ் காமன்சின் காப்புரிமையில் பதிவு செய்யுங்க...

நன்றி...
வினொத்

Unknown said...

ஒரு சிறிய உதவி..

மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/

நன்றி,
வினோத்.

top