இராகுவும் கேதுவும்

திரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம்?

மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகைமை உண்டாயிற்று. இதனால் இருவருக்கும் எப்பொழுதுமே ஒத்துப் போகாது. கடுமையான யுத்தங்களும் ஏற்படும். தேவர்களுக்கு குரு பிரஹஸ்பதி . அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் . சுக்கிராச்சாரியார் சண்டையில் இறந்த அசுரர்களை தன்னிடமுள்ள சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் உயிர்ப்பித்து தேவர்களுக்கு இடையூறு செய்துவந்தார். தேவர்களின் குரு பிரஹஸ்பதியிடம் அப்படி ஒரு மந்திரம் இல்லை. இவ்வாறன சூழ்நிலையில் தேவர்கள் பிரஹஸ்பதி மகனாகிய கசனிடம், சுக்கிராசாரியாரும் அவர் மகளான தேவயானியும் மகிழ்வடையும் படி நடந்து கொண்டால் சஞ்சீவி மந்திரத்தை பெறுவது எளிது என்று கூறி சுக்கிராசாரியாரிடம் அனுப்பினர். அது வேறுகதை. அதுதான் மகா பாரதத்தின் தொடக்கம் .அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்கிடையில் தேவர்கள் சஞ்சீவி மந்திரம் வேண்டி பிரம்மனிடம் சென்றார்கள். பிரம்மன் தேவர்களிடம்,”உங்களுக்கு அந்த மந்திரத்தை விட அற்புதமான வழி ஒன்றுள்ளது அதைச் சொல்கிறேன்”என்றார்.தேவர்களும் சரி கூறுங்கள்,என்றனர். உங்கள் அனைவருக்கும் சாகா வரம் கிடைக்க திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் தேவாமிர்தம் கிடைக்கும் அதை உண்டால் சாகா வரம் தான் ஆகவே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

பாற்கடலை கடைவதற்கு நாரதரிடம் வழி கேட்டபோது," அதற்கு அசுர பலம் வேண்டுமே! ஆகவே நீங்கள் எம் பெருமான் திருமாலை பாற்க்கடலை கடைவதற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டு, அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு எம் பெருமான் உதவி செய்வார்" என்றார்.

தேவர்களும் அசுரர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதென்றும், அதனால் கிடைக்கும் அமுதத்தை இருவரும் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்தனர். நாகராஜன் எனப்படும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், , மேரு மலையை மத்தாகவும், அந்த மத்தாகிய மேரு மலையை தாங்கும் ஆதாரமாக (Fulcrum) இருக்க ஆமை வடிவெடுத்து தன் முதுகில் தாங்கி உதவுவதாகவும் திருமால் உறுதிஅளித்தார்.


ஒரு சுக்கில பட்ச (வளர்பிறை) தசமி திதி யன்று பாம்பின் வால் பக்கம் தேவர்களும் தலைப்பக்கம் அசுரர்களும் இருந்து கொண்டு கடைய ஆரம்பித்தனர். அவ்வாறு கடையும் பொழுது இலட்சுமி, ஐராவதம், காமதேனு, அட்சயபாத்திரம் ஆகியவை கிடைத்தன. அதில் இலட்சுமியை திருமாலும், மற்றவற்றை இந்திரனும் பங்கிட்டுக் கொண்டனர்.

இரண்டாவது நாளான ஏகாதசியன்று பாற்கடலில் நீல நிறத்தில் திரவ வடிவில் ஒரு பொருள்
தோன்றியது. அதனுடன் வாசுகி மெய்வருத்தம் மிகுதியால் உமிழ்ந்த. நஞ்சும் கலந்து இரண்டும் சேர்ந்து ஆலகாலமாகியது. அந்த விஷமானது கடலில் தோன்றியதால் முதலில் ஆமை வடிவில் இருந்த திருமாலைத் தாக்கியதால் நீல வண்ண மேனியனாக மாறிவிட்டான். அதைக்கண்டதும் நாரதர் ஏதோ பிளாக் மேட்டரைக் கண்டது போல், ஐயோ அது தான் ஆலகால விஷம் என்று அலறி ஓடினார்.

அது முழுவதுமாக வந்து எல்லோரையும் விரட்டி தாக்கத் தொடங்கியது. ஈஸ்வரனை இவர்கள் வலமாகச் சுற்றினால் விஷம் இடமாகச் சுற்றி விரட்டியது. இவர்கள் இடமாகச்சுற்றி ஓடினால் அது வலமாகச்சுற்றி விரட்டியது.ஆகவே இப்பொழுதே ஏதாவது செய்தாக வேண்டும். என்று அலறினார்கள். உடனே தேவர்கள் ஈஸ்வரனை வேண்டி நின்றனர்.அவரும் பரிவுடன் வந்து, ஆலகால விஷத்தை அப்படியே வாரியெடுத்து விழுங்கி........... விழுங்கவில்லை தொண்டை வரை சென்றவுடன் நிறுத்தி விட்டு முழித்தார். ஏனென்றால் அங்கு உமா மகேஷ்வரி விழியை உருட்டி, மிரட்டினார் அதானால் தான் நிறுத்திக் கொண்டார். மிரட்டியதோடு அல்லாமல் உனக்கு ஏனய்யா இந்த வீண் வேலை என்று கடிந்து கொண்டு விஷத்தை தொண்டைக்கு கீழே இறங்க விடாமல் கழுத்தை அழுத்தியதால் விஷமானது கழுத்து முழுவதும் பரவி நின்றது. நீலநிற ஆலகாலம் அந்த ஆலமர்ச் செல்வனை, தட்சிணாமூர்த்தியை ஏதும் செய்யமுடியாமல் கண்டத்தில் நின்றுவிட்டது. ஆகவே அன்று முதல் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.

ஒரு வழியாக தேவர்களும், அசுரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வேலையை தொடர்ந்தனர். துவாதசியன்று அமுதம் வெளிவந்தது. அமுதத்தை வாரியெடுத்து குடத்தில் வைத்தனர்.அமுதம் முழுவதும் எடுத்தபின்பு தேவர்கள் ஈஸ்வரனை மறந்து ஆட்டம் போட்டனர். ஆதலால் ஈஸ்வரன் அமுதம் கிடைக்காமல் போக சாபம் இட்டார். சாபத்தின் பலனாகத்தான் தேவர்களின் கையிலிருந்த அமுதக் குடத்தை சமயம் பார்த்து அசுரன் ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஒடி விட்டான். இதனால் தேவர்கள் தங்களது தவற்றை உணர்ந்து சாப விமோச்சனம் வேண்டி நின்றனர். அதனால் ஈஸ்வரன் ,”நாளை நான் நந்தி தேவனுடன் இருக்கும் போது என்னை வந்து தரிசனம் செய்யுங்கள் உங்கள் கவலை மறையும்” என்றார். மறுநாள் திரயோதசி அன்று தேவர்கள் ஈஸ்வரனை விஷேமாக வழிபட்டனர் அதைத்தான் பிரதோஷ வழிபாடு என்கிறார்கள்.

இந்த இடத்தில் பிர என்பதன் மகத்துவத்தை சொல்லியே ஆக வேண்டும். சவம் என்பதற்கு பிர போட்டால் பிரசவம், தோஷம் என்பதற்கு பிர போட்டால் பிரதோஷம் ஆக ”பிர” அதாவது "Bra"போட்டால் அர்த்தம் எதிர்மறை ஆகி, மோசமானது சிறப்பானதாகி விடுகிறது.

இப்பொழுது தேவர்கள் திருமாலை வேண்டி நின்றனர். திருமாலும் மோகினி வேடம் எடுத்து ஒரு வழியாக அசுரனிடம், தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் எனப் பேசி,.தானே பரிமாறு வதாகவும் கூறி அமுதத்தை, வாங்கிக் கொண்டு வந்தார். தேவர்களும் அசுரர்களும் இருபுறமாக அமர்ந்தனர்.

மோகினி வேடத்தில் இருக்கும் திருமால் தனது சக்கர ஆயுதத்தை கரண்டியாக மாற்றி அமுதம் பரிமாறிக் கொண்டிருந்தார். ஸ்வர்ணபானு என்ற அசுரன் தேவர்கள் நம்மை அமுதம் தராமல் ஏமாற்றி விட்டாலும் விடுவார்கள் என்ற பயத்தில் தேவராக உருமாறி தேவர்கள் வரிசையில் சூரிய சந்திரர்களுக்கு அருகில் உட்கார்ந்து விட்டான். உருமாறும் கலையாகிய மாயை அசுரர்களுக்கு கைவந்த கலைதானே. அமுதத்தையும் வாங்கி அருந்தி விட்டான். ஆனால் சூரிய சந்திரர்கள் ஸ்வர்ணபானுவை இவன் அசுரன் என திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர் . திருமாலும் தனது கையில் வைத்திருந்த சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை வெட்டியதால் தலை வேறு முண்டம் வேறாக வீழ்ந்தான்.

ஆனால் அமுதம் பருகிய காரணத்தினால் சாகா வரம் பெற்றதால் தலையும் உடலும்
தனித்தனியே உயிருடன் இருந்தது.திருமாலின் சக்ராயுதத்தால் வெட்டினால் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான் அதற்கு மாற்று கிடையாது.ஆகவே ஒட்டுவதற்கும் வாய்ப்பு கிடையாது. ஆனால் திருமாலின் பாற்கடலில் கடையப்பட்ட அமுதத்திற்கும் அதே மரியாதைதான். மரணமும் கிடையாது. இப்பொழுது அசுரனின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகி விட்டது.
அசுரன்(கள்) திருமாலிடம் சரணடைந்து தனக்கு விமோச்சனம் வேண்டி நின்றான்.திருமாலும் அண்டி வந்தவனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு பாம்பை அதே அமுதம் பரிமாறிய சக்ராயுதத்தால் இரண்டாக வெட்டி அசுரனின் தலைக்கு பாம்பின் உடலையும், பாம்பின் தலைக்கு அசுரனின் உடலையும் சேர்த்துக் கொள்ளுமாறு அருளினார். இங்கு அமுதத்தின் பலன் பாம்புக்கும் கிட்டியது.

ஒருவனாக இருந்த அசுரன் இருவராக மாறிவிட்டான். ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு ,கேது என சாகா வரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.இப்பொழுது அவர்கள் சூரிய சந்திரர்களை பழி வாங்கும் பொருட்டு தவம் இருந்தனர்.முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும் சூரியனையும் சந்திரனையும் விழுங்கு வதற்கான வரத்தைப் பெற்றனர்.

இதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் நீங்கள் வெளிவந்துவிடலாம் என்று அருளினார்.

ஆகவே அது முதல் அந்த அசுரன் இருவராக மாறி ராகு, கேது என இரு பெயர் பெற்றான். எப்பொழுது எல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுதெல்லாம் சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடு வார்கள். அந்த விளையாட்டுக்கு பெயர்தான் சூரிய, சந்திர கிரகணம். அமிழ்தத்தால் சாகா வரம் பெற்றதால் சூரிய சந்திர தேவர்களைப் போல் அசுரனாகிய ஸ்வரணபாணுவும் அழியாப் புகழ் பெற்றான்.

திரும்பவும் ஒருமுறை இந்தக்கதையை முதலில் இருந்து படியுங்கள்,இதில் ஏதாவது மாற்றி எழுதியிருந்தால் அந்த இடத்தை சுட்டிக் காண்பியுங்கள். ஏனென்றால் நான் இந்தக் கதையை செவி வழியாக கேட்டதுதான்.அதிலும் வானியல் அறிவு குறைந்தவர்களிடம் இருந்துதான் கேட்டது.ஆனாலும் இந்தக் கதையின் தோற்றம் கண்டிப்பாக 2000வருடங்களுக்கு முந்தியதாகத் தான் இருக்கும்.

இக்கதை பற்றிய உங்களது கருத்துக்களை பதியுங்கள் அதற்குப் பிறகு எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு இதன் இரண்டாவது பாகத்தையும் அதைப் பொறுத்து அதன் பிறகு மூன்றாவது பாகத்தையும் பதிக்கிறேன். ஆகவே உங்களது பொன்னான கருத்துக்களை அவசியம் பதிவு செய்யுங்கள்.


தமிழில் பதிவு செய்ய
NHM Writer என்று கூகிளில் தேடவும். அல்லது இந்த தொடர்பை சொடுக்கவும்.


 http://software.nhm.in/products/writer

இந்த மென்பொருளை தரவிறக்கம் ( Download ) செய்து உங்களது கணினியில் நிறுவவும் (install). நிறுவும் போது தமிழ் மொழியை தேர்வு செய்யவும். இப்பொழுது bell போன்ற ஒரு சின்னம் task barல் கடிகாரம் அமைந்துள்ள இடத்தில் தோன்றும். அதைச் சொடுக்கி அதில் தேர்வு செய்யலாம். அல்லது Alt + 1, Alt+2, Alt+3, Alt+4 என்று இதில் ஏதாவது ஒன்றை சொடுக்கி உங்கள் விருப்பமான கீபோர்டு முறையை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். மீண்டும் அதையே (Toggle)சொடுக்கினால் ஆங்கிலத்திற்கு மாறிவிடும்.


இரா.சந்திரசேகர்,
பழனி.
இரண்டாவது பாகம்

மேலும் படிக்க...!
top